தேர்தல் நெருங்க நெருங்க காவி பயங்கரவாதிகள் பைத்தியம் பிடித்த குரங்கைப் போல மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். வளர்ச்சித் திட்டத்தை சொல்லி ஓட்டு கேட்க இந்தியாவின் எந்தப் பகுதிக்குப் போனாலும் நிச்சயம் மக்கள் துரத்தி துரத்தி செருப்பால் அடிக்கும் சூழ்நிலைதான் பிஜேபியைப் பொருத்தவரை நிலவுகின்றது. நான்கரை ஆண்டுகால மோடியின் ஆட்சி இந்திய மக்களின் சகிப்புத்தன்மையை அதன் எல்லைக்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது. இந்திய மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த பரம பிதாவாக நினைத்து மோடிக்கு வாக்களித்த கோடான கோடி சாமானிய மக்கள், இந்த நான்கரை ஆண்டுகளில் மோடி பரமபிதா அல்ல, இந்தியாவைப் பிடித்த பரம தரித்திரம் என்பதை அடிபட்டு, உதைபட்டு நடைமுறை மூலம் உணர்ந்திருக்கின்றார்கள். காவி பயங்கரவாதிகள் கால்பட்ட இடமெல்லாம் பஞ்சமும்,பட்டினியும் நிறைந்து இருண்ட பிரதேசங்களாக மாறியிருக்கின்றன.

pon radhakrishnan at sabarimalaதேர்தலுக்கு முன்பு கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றத் துப்பில்லாத தங்களுக்கு, குறைந்தபட்ச மான மரியாதை உள்ள ஒருவனும் ஓட்டு போட மாட்டான் என்பதை நன்கு உணர்ந்தே சாதிவெறியிலும், மதவெறியிலும், மூடநம்பிக்கையிலும் மூழ்கிக் கிடக்கும் இந்திய மக்களை அதை வைத்தே மீண்டும் வீழ்த்த காவிக் கும்பல் திட்டம் தீட்டி வருகின்றது. அதற்காக வடக்கிற்கு ராமனையும், தெற்கிற்கு ஐயப்பனையும் அவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பயன்படுத்தி, கேரளாவில் உள்ள பிற்போக்கு சக்திகளை எல்லாம் ஒருங்கிணைக்க பாஜக முயன்று வருகின்றது. கேரளா மட்டுமல்லாமல் ஐயப்பன் கோயிலுக்கு அதிகளவு மக்கள் செல்லும் தென் மாநிலங்களிலுள்ள பிற்போக்கு சக்திகளையும் உணர்வு ரீதியாக தட்டி எழுப்புவதன் வாயிலாக, தங்களுக்கான தளத்தை விரிவுபடுத்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதை ஓட்டுகளாக அறுவடை செய்ய திட்டம் தீட்டியிருக்கின்றது. இதற்காக கேரளாவில் உள்ள பார்ப்பனர்களுடனும் இன்னும் நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) போன்ற பிற்போக்கு அமைப்புகளுடனும் கைகோர்த்து, தனது சதிச்செயல்களை அரங்கேற்றி வருகின்றது. இதற்காக பல நூறு ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளை சபரிமலையில் இறக்கி பெரும் கலவரங்கள் செய்ய முயன்று தோற்றிருக்கின்றது.

2006ல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு போட்ட ஆர்.எஸ்.எஸ். இப்போது அதையே வைத்து அரசியலும் செய்ய முடியும் என நிரூபித்திருக்கின்றது. கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கோழிக்கோடு பகுதியில் நடந்த யுவ மோர்ச்சா இளைஞரணி கூட்டத்தில் பேசும்போது “சபரிமலை விவகாரம் நம் கட்சிக்கு கிடைத்துள்ள தங்கமான வாய்ப்பு” என இதன் அடிப்படையில் தான் பேசினார். மேலும் ஐயப்பன் கோவிலின் தலைமைத் தந்திரி கண்டராரு ராஜீவாரு கோவில் சன்னிதானத்தின் நடையை சாத்துவதாக கூறுவதற்கு முன் தன்னிடம் கலந்து பேசியதாகவும் அவர் கூறியிருந்தார். ஐயப்பன் கோயில் விவகாரத்தை வாழ்வா சாவா என்ற பிரச்சினையாக மாற்றுவதன் மூலம், வரும் தேர்தலில் அரசியல் ஆதாயம் அடைய தென்மாநில ஆர்.எஸ்.எஸ் பிஜேபி காலிகளுக்கு அதன் தலைமை வேலைத் திட்டத்தை கொடுத்திருக்கின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டமிட்டே சபரிமலைக்கு சாமி கும்பிடப் போகின்றேன் என்ற திட்டத்தோடு கலவரம் செய்யச் சென்றதும், அந்த சதித் திட்டத்தை கேரள காவல்துறையினர் முறியடித்து அசிங்கப்படுத்தி அனுப்பியதும் ஆகும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் அடிமை அரசைப் பயன்படுத்தி கன்னியாகுமரியில் பந்த் அறிவித்து ‘எங்களுக்கும் செல்வாக்கு உள்ளது’ என செயற்கையாக ஒரு பதற்றத்தை உருவாக்கி படம் ஓட்ட முயன்றார்கள். புதுச்சேரியிலும் தங்கள் கைக்கூலி ஆளுநர் கிரண்பேடியின் துணையுடன் பந்த் செய்து அடாவடித்தனம் செய்திருக்கின்றார்கள். ஆனால் கள நிலவரம் என்பது பிஜேபியைப் பொருத்தவரை காறித் துப்பும் அளவிற்கே தென் மாநிலங்களில் உள்ளது. மாநிலப் பற்றும், மொழிப் பற்றும், இனப் பற்றும், அதிகப்படியான கல்வியறிவும், பெரியாரிய, மார்க்சிய அரசியலின் நீண்ட கால தாக்கமும் உள்ள தென் மாநிலங்களை வட மாநிலங்களைப் போல அவ்வளவு எளிமையாக மூட நம்பிக்கை சார்ந்த கருத்தியலின் துணையுடன் இந்தக் கும்பலால் வென்றெடுக்க முடியவில்லை. அதனால் அவர்களின் ஒவ்வொரு வெற்று ஓலமும் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுகின்றது.

ஆனால் வட மாநிலங்களில் தென் மாநிலங்களைப் போல அவ்வளவு இயல்பாக ஆன்மீகத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கும் அளவிற்கு அங்குள்ள மக்களின் அரசியல் மட்டம் வளரவில்லை. அதனால் மிக எளிதாக அவர்கள் காவி பயங்கரவாதிகளின் சதிச்செயலுக்குள் வீழ்த்தப்படுகின்றார்கள். 1984 இல் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக இன்று அசுர பலத்துடன் மத்தியில் இருப்பதற்கு களம் அமைத்துக் கொடுத்தது பாபர் மசூதி இடிப்பு நிகழ்வாகும். பல ஆண்டுகளாக இந்துக்கள் மத்தியில் பார்ப்பன பயங்கரவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முஸ்லீம் எதிர்ப்பு என்ற மனநோய்க்கு பாபர் மசூதி இடிப்பு மருந்தாக அமைந்தது. முஸ்லீம்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று மனதளவில் வெறிபிடித்து அலைந்த கூட்டத்திற்கு, பாபர் மசூதி இடிப்பு சுதந்திரத்திற்குப் பின் முஸ்லீம்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு போராகவே தெரிந்தது. அதனால் பெரும்பான்மை இந்துமத வெறியர்களின் ஒரே நம்பிக்கைக்குரிய கட்சியாக பிஜேபி மாறியது.

shiv sena in ayodhyaஇந்திய நாட்டின் சட்ட திட்டங்களை ஒரு நாளும் மயிரளவிற்கு கூட மதிக்காத ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல், டிசம்பர் 6 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் இருந்து ராமர் கோயிலைக் கட்டுவோம் கட்டுவோம் என சொல்லியே ஒவ்வொரு முறையும் கணிசமான வாக்குகளை இந்து பிற்போக்குவாதிகளிடம் இருந்து அறுவடை செய்து வந்தது. சட்டத்தை மீறி மசூதியை இடித்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த கொலை வெறிக் கும்பல் ஒரு பக்கம் நாட்டின் அரசியல் சட்டத்தை மதிப்பது போன்று பிரச்சினையை நீதிமன்றத்திலும், இன்னொருபக்கம் சட்டத்தை மீறி ராமர் கோயில் கட்டுவோம் என்று இந்து பிற்போக்குவாதிகளிடமும் தொடர்ந்து நாடகமாடி இத்தனை வருடங்களாக காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தது.

ஆனால் 2010இல் அலகாபாத் உயர்நீதி மன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் பகிர்ந்து கொடுத்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அனைவரும் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திட்டமிட்டே நிராகரித்த உச்சநீதிமன்றம், அந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. இந்தப் பிரச்சினையை அப்படியே நீறு பூத்த நெருப்பாக வைத்திருப்பதன் மூலம் தேவைப்படும் போது எடுத்து காவி பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டே நீதி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மோடி ஆட்சி முடிவடைய உள்ள நிலையில் காவி பயங்கரவாதிகள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு, மீண்டும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என சண்டித்தனம் செய்யக் கிளம்பி இருக்கின்றார்கள். இதனால் அயோத்தியில் இருந்து இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இன்னொரு பக்கம் முதலைமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்திரப் பிரதேசத்தில் இராமன் தற்கொலை செய்துகொண்டு செத்த சரயூ நதிக்கரையில் 221 மீட்டரில் உலகிலேயே மிகப் பெரிய இராமன் சிலை வைக்கப்படும் என அறிவித்து இருக்கின்றார்.

குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் என்ன நடக்குமோ அதே தான் பரதேசிகளின் கைகளில் நாட்டைக் கொடுத்தாலும் நடக்கும் என்பதை மக்கள் இந்த நான்கரை ஆண்டுகளில் தங்களின் அனுபவத்தின் மூலம் அறிந்திருக்கின்றார்கள். நூற்றுக்கணக்கான குழ்ந்தைகளை ஆக்சிஜன் வாங்க காசு கொடுக்காமல் கொன்று போட்ட கொலைகாரக் கூட்டம், ஆயிரக்கணக்கான கோடியில் ராமனுக்கு சிலை வைக்கப் போகின்றதாம்.

இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க காவி பயங்கரவாதிகள் தங்களது மாட்டு மூளையில் உறைந்து கிடக்கும் பல அற்ப சிந்தனைகளை வெளிப்படுத்தி, எப்படியாவது கலவரம் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் இந்த முறை நாட்டு மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். வட மாநில கள நிலவரத்தை நம்மால் மதிப்பிட முடியவில்லை என்றாலும் தென் மாநிலங்களில் நோட்டாவுக்கு கீழே காவி பயங்கரவாதிகளை மக்கள் தள்ளுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

- செ.கார்கி