ஒரு இலக்கியம் தோன்றுவதற்கு சமூக எழுச்சி மிக்க வாழ்வியலே காரணக் கர்த்தாவாக அமைகின்றன. இலக்கிய வரலாற்றின் வழியே ஒவ்வொரு காலத்தின் அடையாளமாக பொதுத் தன்மைகளை வைத்து சங்க காலம், சங்க மருவிய காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம், சிற்றிலக்கிய காலம், மறுமலர்ச்சி காலம், தற்காலமெனப் பகுத்துப் பிரித்துள்ளனர். அவ்வாறான சிறுகதை இலக்கியமும் மறுமலர்ச்சி புரட்சியில் பிறந்தது தான். தமிழ் இலக்கியத்தின் முதல் சிறுகதை தோற்றுவதற்கு முன்பே முன்னோடி கதைகள் பல இருந்துள்ளன. முதல் சிறுகதையான வரகனேரி வேங்கட சுப்ரமணி ஐயரால் (1881-1925) எழுதப்பட்ட 'குளத்தங்கரை அரசமரம்’ கதை வழியாகப் பெண்ணிய வாழ்வியலும் கதை பற்றிய விமர்சனப் பார்வையும் காண்பதாக அமைகின்றது.

பெண்ணியக் கருத்தாக்கம்

va ve su iyer 20-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி மிக்க இலக்கியப் போக்கின் காரணமாக பொதுவுடமை, நவீனத்துவம், பின்னை நவீனத்துவம், தலித்தியம் உருவாக்கத்தின் விளைவால் பெண்ணியமும் தழைத்தோங்கியது. தற்கால சமூக நிலைப் போக்கை விவரிக்கும் திறனாய்வுத் தன்மையாக அமைந்து நிற்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன்பே பெண்ணியம் குறித்த பேச்சு விதை விழுந்தாலும், தற்கால இலக்கியப் போக்கில் வளர்ந்து நிற்கின்றது. குடும்பப் பெண்ணியம், சமதர்ம பெண்ணியம், தீவிரவாதப் பெண்ணியம் என வளர்ந்துள்ள நிலையில் சமூக பொருளாதாரமும் சமூக கட்டமைப்பு சூழலும் பெண்ணைப் பேச வைத்துள்ளது. பெண்களுக்காக பெண்ணுரிமை மறுக்கப்பட்டதன் விளைவுகளால் மார்ச் எட்டு மகளிர் தினமாக வளர்ந்துள்ளது என்ற போதும் பெண்ணிய தினமாக வளரவில்லை என்றே கூற வேண்டும். சமூக மாற்றமும் சமூக உட்தளத்தின் புரட்சி மிக்க கருத்துருவாக்கங்களை வெளிப்படுத்திய விளைவுகளாலும் பெண்ணியம் சமூக தளத்தில் புதிய அமைப்பை உருவாக்கியது. 17-ஆம் நூற்றாண்டில் பெண்ணியம் என்ற சொல்லும் செயலும் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டு பின்னர் இதன் வளர் நிலை புதிய அவதானிப்பைச் செய்து கொண்டது மட்டுமின்றி பல பெண் எழுத்தாளர்களை எழுத வைத்தது. பெண்ணியம் என்பது, “பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கமாகும். அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய அரசியல் பொருளாதாரச் சூழ்நிலையிலும் அவள் ஆண்களுக்கு சமமானவள் எனும் உயர்நெறியை நிலைநாட்டும் நோக்கத்தைக் கருவாகக் கொண்டு இயங்குகின்றது” 1 என்று சண்முகசுந்தரம் கூறுகின்றார்.

 1950-களுக்குப் பின் பொதுவுடமை இயக்கச் சாரத்தினால் சமூகவியல் ஆராய்ச்சிகள் பெருக்கம் ஆரம்பித்தன. முற்போக்குச் சிந்தனை வழியே பெண்ணிய வாழ்வு பெண்ணியக் குரல் வழியாக வெளிவர ஆரம்பித்தது. இதற்கு முன்பான காலங்களில் பெண் படைப்பாளிகள் விரல்விட்டு எண்ணும் அளவில் இருந்த போதும் முழத்தன்மையுடனும் முழவீச்சுடனும் பெண்கள் சுயம் விளங்க தனித்து பேச ஆரம்பித்துள்ளதை வரலாறுகள் அடையாளப்படுத்துகிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் ஆண்களே பெண்கள் பெயரில் படைப்புகளைப் படைத்து இதன் மூலம் ‘புனைபெயரும் இயற்பெயரும்’ எனும் தலைப்பின் கீழ்ப் புது ஆராய்ச்சியைச் செய்யலாம். வ.வே.சு “தாகூர் எழுதிய ‘காட்டேர் கதா’ என்ற வங்கக் கதையின் தழுவல். அக்கதையின் ஆங்கில பெயர்ப்பு 1914-ல் கல்கத்தாவில் இருந்து வெளிவந்த மார்டன் ரெவ்யூ இதழில் ‘The Story of the River Stair’ என்ற தலைப்பில் வெளியானது. ஐயரின் கதை 1915-ல் ‘விவேக போதினி’ யில் செப்டம்பர், அக்டோபர் வெளியானது தாகூரின் கதையில் ஆற்றங்கரைப் படிக்கட்டு கதை கூறுகிறது ஐயரின் கதையில் குளத்தங்கரை அரசமரம் கதை சொல்கிறது” 2

 இக்கதை தனது சொந்தப் பெயரில் எழுதாமல் தனது துணைவியார் பெயலான ஸீ.பாக்கியலெட்மி அம்மாள் என்ற பெயரிலே எழுதியுள்ளார். புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கையால் இவ்வாறாக இப்பெயர் வைத்துள்ளதாகக் கூறினாலும், பெண் நிலை வாதத்தை பேசும் கதையாக உள்ளதனாலும் தழுவல் கதை பாணியாக உள்ளதனாலும் தனது சொந்தப் பெயரில் வைக்கவில்லை என்றே கூற வேண்டும். தாகூரின் ‘The Story of the River Stair’ என்ற கதையில் எட்டு வயதில் விதவையான பிறகு ஒரு பாலசன்யாசியிடம் மனதைக் கொடுத்து அவரிடம் எந்தச் சலனமும் ஏற்படாததால் ஆற்றில் குதித்துத் தற்கொலைச் செய்துக் கொள்வதாக அமைகிறது. இதைப்போல வ.வே.சு ஐயரின் ' குளத்தங்கரை அரசமரம்’ கதையில் ருக்மிணி, நாகராஜனை திருமணம் செய்தும் ருக்மிணி அப்பாவான காமேசுவரையர் அருபத்து நாட்டுக் கம்பெனியாம் (வங்கியில்) நாலுகோடி ரூபாயை வட்டிக்குப் போட்டிருந்தார் . அவை ஏமாற்றிட ஒரே நாளில் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார். புகுந்த வீடு செல்ல முடியாமல் ஏழ்மை நிலையால் தன் மாமனார் ராமசுவாமி ஐயரும் மாமியார் ஜானகியம்மாளும் தன் பையனுக்கு லட்ச ரூபாய் சொத்துள்ள இன்னொரு பெண் வீட்டில் திருமணம் நாகராஜனுக்கு பேசி முடித்து கல்யாண வைபோபம் வரை வருகிறது. அன்பு பாசமான கணவனான நாகராஜன் கூட தன்னை மறந்து விடுவாரோ என்ற ஏக்கத்தில் அந்த ' குளத்தங்கரை அரசமரம்’ வாழும் குளத்தில் விழுந்து இறந்து விடுகிறாள். பின்னர் நாகராஜன் சந்நியாசம் செல்வதாக கதை முடிகிறது. முழக்க முழக்க ருக்மிணி எனும் பெண்ணின் வாழ்க்கை துன்பத்தை விவரிக்கும் கதை. இக்கதை தழுவலானதலும் சில மாறுபாடுகளுடன் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்து காட்டியுள்ளார். தாகூரின் கதையில் படித்துறை கதை சொல்லுகிறது வ.வே.சு ஐயரின் கதையில் அரசமரம் கதை சொல்லுகிறது. இக்கதை 1915முதல் 2017 வரை நூற்றிஇரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் தமிழ் இலக்கிய உலகிற்கு முதல் சிறுகதைக்கான அடையாளங்களுடன் வெளிப்பட்டதினால் முதல் சிறுகதையாகப் போற்றப்படுகிறது.

குளத்தங்கரை அரசமரம் கதையின் வெளிப்பாடு

 வ.வே.சு ஐயர் கம்பராமாயணத்திலும் திருக்குறளிலும் ஆய்ந்த புலமையும் மிக்கவர். இவ்விரண்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துமுள்ளார். கிரேக்க இலக்கியத்தோடு கம்பராமாயணத்தை ஒப்பிட்டு Kamba Ramayanam-A Study என்ற தலைப்பின் கீழ் நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், “கம்ப நிலையம் பதிப்பகத்தின் மூலம்1917 ஆம் ஆண்டு ' மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்' என்ற தலைப்பில் மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயம், அழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம் ஆகிய ஐந்து கதைகள் தொகுப்பை வெளியிட்டார்” 3 இதுதான் முதல் பதிப்பு. “1918 ம் ஆண்டுகளில் சுதேச மித்திரனில் எழுதிய எதிரொளியாள், லைலா மஜ்னுன், அனார்க்கலி ஆகிய மூன்று கதைகளே எழுதினார்” 4 வ.வே.சு ஐயர் மறைவுக்குப் பிறகு 1927-க்குப் பிறகு பிற மூன்று கதைகள் சேர்க்கப்பட்டு இவரின் துணைவியார் பாக்கியலெட்மி அம்மாள் சார்பாக ' சுதந்திர சங்கு' ஆசிரியர் எஸ்.கணேசன் மூலம் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை. 1953யில் மீண்டும் தொகுத்து வெளியிட்டது. “அவற்றுள் நான்கு கதைகள் மேனாட்டு இலக்கியப் பரிச்சயம் காரணமாகத் தோன்றியவை, அழேன் ழக்கே, எதிரொளியாள், அனார்க்கலி, லைலா மஜ்னுன், என்பவையே அவை” 5 உள்ளது என்கிறார் சிவத்தம்பி.

மேலே குறிப்பிட்ட முதல் தொகுப்பான மங்கையர்க்கரசியின் காதலில் ஐந்தாம் கதையாக குளத்தங்கரை அரசமரம் கதை இடம் பெற்றுள்ளது. தழுவல் கதையாக பலருக்கு தெரிந்தும் விவாத பொருளாக்கி அழுத்தம் கொடுத்தாலும் முதல் சிறுகதையாக ஏற்றுக் கொண்ட காரணத்தினால் தழுவல் தான் என்று அழுத்தி கூறாது மனம் இசையவில்லை போலும். எது எவ்வாறான போதும் தமிழ் நாட்டு சூழலியலில் அமைந்த கதை என்பதையும் தமிழ் மேட்டிமையான பார்ப்பனிய சூழலியலில் தோன்றிய கதையாகக் கூற வேண்டும். அன்றைய தமிழ்நாட்டு பிரச்சனையான பால்ய திருமணம், விதவை மறுமணம், பெண் வாழ்வியலில் பெண்கள் உரிமையுடன் பேச முடியாத நிலையினையும் காட்சிப்படுத்துகிறது. ( உதாரணமாக: கோகிலாம்பாள் கடிதங்கள், சுந்தரி அல்லது சுந்தர பிழைப்பு, மருத்துவன் மகள், நான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன், சந்திரிகையின் கதை) இது அக்காலச் சமூகப் பிரச்சனையாக இருந்துள்ளதும் மாமியாரின் ஆதிக்கம், மருமகளாக ( மாட்டுபெண்) வருபவர்கள் அடங்கி, ஒடுங்கி நடக்க வேண்டுமென்றும். எதிர்த்து கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளதையும் காட்சிப்படுத்துகிறது. 1954யில் வெளிவந்த ' மருமக்கள் வழி மான்மியம்' எனும் அங்கத சுவை கொண்ட நாஞ்சில் நாட்டு பெண் வாழ்வியல் பிரச்சனை மாமியார் மருமகள் தானே.இதைப்போல வண்ணநிலவனின் கதைகளில் திருநெல்வேலி வெள்ளாளர் சமூக கட்டமையை வெளிப்படுத்தும் கம்பா நதி, ரெனிஸ்ஐயர் தெரு போன்ற புதினங்களில் வெள்ளாளர் வீட்டு பெண்களிடம் அனுமதியோ? அல்லது எந்தச் செயல் செய்தாலும் சம்மதம் கேட்பதும் கிடையாது.20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்த கதைகளில் இவ்வாறு உள்ளது. வ.வே.சு ஐயர் காலத்தில் இன்னும் எவ்வளவு வீரியமிக்க மாமியார் அடக்கு முறை இருந்திருப்பதை ஒவ்வொருவரும் யுகித்துக் கொள்ள வேண்டியதுத் தான்.

இச்சிறுகதைக்கு முன்னோடிகள்

 ' குளத்தங்கரை அரசமரம்' கதை முதல் சிறுகதையாக ஏற்றுக் கொண்டதன் பெயரில் இலக்கிய வரலாறும் முதல் சிறுகதை எனக் கூறிப்பிடுகின்றது. வ.வே.சு ஐயரின் ' குளத்தங்கரை அரசமரம்' கதை வருவதற்கு முன்பே அவர் எழுதிய கதைகள் உள்ளது. வீரமாமுனிவரின் கொடுந்தமிழில் எழுதப்பட்ட ' பரமார்த்த குருகதை' கிறித்துவ மடாதிபதிகளின் மதப்பிரச்சாரப் போக்கினை வெளிப்படுத்துகிறது. ஹிந்து பத்திரிகையில்1910ஆம் ஆண்டில் வாரம் ஒன்றாக இருபத்தி ஏழு கதைகளை மாதவையா எழுதியுள்ளார். இதை குசிகர் குட்டிக் கதைகள் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்து பின்னர் அவரே தமிழில் மொழிபெயர்த்து செய்துள்ளார். பாரதியின் சில பல கதைகள் முன்னுதாரனமாகக் கொள்ளலாம். தற்காலத்தில் பாரதி கதைகளை அனைத்தையும் தொகுத்து வர்த்தமான பதிப்பகம் வெளியிட்டுள்ளது பாரதியின் சாந்தா மணி, ரெயில் ஸ்தானம் மிக சிறந்த சிறுகதையாகும்.

கதை கூறும் செய்தி

 தமிழில் முதல் சிறுகதை என்ற குறிப்பில் ' அழியாச் சுடர்' இணைய தளத்தில் ' குளத்தங்கரை அரசமரம்' கதையினைப் படிக்கலாம். வ.வே.சு ஐயர் தான் வாழ்ந்த ஐயர் சமூகச் சூழலை வைத்தே இக்கதையைக் கோர்த்து வடித்துள்ளார்.ருக்மிணி இறப்பிற்குப் பின் வாழ்க்கைப் பந்தம் பற்றி சொல்லும் போது காளிதாசரின் “குஸ_ம ஸத்ருசம்….. ஸதய: பதி ப்ரணயி ஹ்ரதயம்' என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே.. எனக்கு இன்மேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்” 6 பண ஆசை பிடித்த பார்ப்பன சமுகத்தில் இடையே நிகழும் வாழ்வியலை ஆறறிவு படைத்த மனிதரை விட அஃறிணையான மரம் பேசும் கண்ணீர் கதையே இந்த ' குளத்தங்கரை அரசமரம்' . அரசமரத்தின் வழியாக கதையாசிரியர் கதை வடித்து தந்துள்ளார். இதனைப் போல “1913ஆம் ஆண்டு விவேக போதினி இதழ் ஒன்றில் அம்மணி அம்மாள் என்ற ஒரு பெண் எழுத்தாளர் ' சங்கல்பமும் சம்பவமும்' என்கிற இக்கதை இரண்டு சவுக்க மரங்கள் தம்முள் பேசிக் கொள்வதாக உள்ளது. காட்டிலுள்ள சவுக்க மரம் காகிதமாகி பத்திரிக்கையாகி முடிவில் தன்னையே இழந்து அடுப்பில் சாம்பலாவதை இக்கதை சொல்கிறது” 7 இக்கதைக்குப் பின் 1915ல் வெளிவந்த குளத்தங்கரை அரசமரம் மரம்பேசும் இறந்த கால நிகழ்ச்சியே கதைக்களமாக விளங்குகின்றது. மரத்தின மனஓட்ட பேச்சில் பார்ப்பன சமூகச் சூழலியலை கதை வடிவமாக வெளிப்படுத்தியுள்ளார். ரீதி புதிது என்று தமது கதைகள் பற்றிக் குறிப்பிடும் போது “கவிதை நிரம்பியவையாய் ரஸமாவோ பேதமாய் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்” 8 என்று சிறுகதை குறித்து விளக்கமளிக்கிறார்.

முடிவுரை

 இலக்கிய சமுதாயத்தின் மறுவாசிப்பின் ஊடாகவும் பரந்துப் பட்ட இலக்கிய பார்வை மூலமாகக் கருத்துருவாக்கம் மாற்றம் காண்பதாக உள்ளது. இக்கதை தாகூரின் 'காட்டேர் கதா' வின் தழுலா? தாத்தா பாட்டி சொல்லும் கதை சாயலா? எனினும் பார்ப்பன சமூக பெண் வாழ்வியலை ஆணாதிக்க மாமியார்களிடமிருந்து மருமகளின் படும் பாடும். பண ஆசை, வரட்டு கௌரவரமும் நிறைந்த பார்ப்பன குடும்பப் பின்பலத்தை மனப்போராட்டத்தோடு விவரிக்கிறது.1944 -இல் வ.வே.சு ஐயர் இறப்பு. இவர் கதை தழுவலா? சுய புனைவா? சொல்லி இருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. காலம் கடந்த பின்னும் இன்றும் குளத்தங்கரை அரசமரம்….

குறிப்புகள்

1.சு.சண்முகசுந்தரம், பெண்ணியமும் கலைஇலக்கியப் பிரதியும், ப.11

2. www. Kootal.com/tamil/research

3.செம்மலர், பிப்ரவரி2000 (இருபதிலிருந்து (20ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கலை-இலக்கியம்) 1910-1919) ப.25

4.செம்மலர், மார்ச்2000 (இருபதிலிருந்து (20ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கலை-இலக்கியம்) 1910-1919) ப.54

5.சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப.26

6. http://azhiyasudargal.blogspot.in/

 7.செம்மலர், பிப்ரவரி 2000 (இருபதிலிருந்து (20ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கலை-இலக்கியம்) 1910-1919) ப.24

8. செம்மலர், மார்ச் 2000 (இருபதிலிருந்து (20ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கலை-இலக்கியம்) 1910-1919) ப.54

- முனைவர் மா.ச.இளங்கோமணி,

உதவிப்போராசிரியர்,

தூயசவேரியார் (தன்னாட்சி)கல்லூரி,

பாளையங்கோட்டை-2      

Pin It