பழங்காலத்தில், நிலங்களை பாதுகாக்கவும், விவசாயத்தை வளமாக்கவும். சொத்து சேர்ப்பதற்கும், ஜாதியை நிலைநிறுத்துவதற்கும், பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கூட்டுக்குடும்ப அமைப்புகள் இருந்தன. ஆனால் இன்றைய நிலையில் தனிக்குடித்தனமே சிறந்தது என்பதற்கான விளக்கத்தைச் சற்று பார்க்கலாம்.

old age homesபெரும்பாலும் கூட்டுக்குடும்பங்களில் நிச்சயக்கப்பட்ட திருமணங்களே நடைபெறுகிறது. உறவுமுறைகளுக்குள் அத்தை மகன், மாமன் மகள், கட்டும் முறை எனச் சொல்லி, குழந்தைகள் மனதில் தேவையற்ற ஆசைகளை வளர விட்டு உறவு உடையக் கூடாது, சொத்தைக் காக்க வேண்டும் என்றும் திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் இணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பறிக்கப்படுவதோடு, நெருங்கிய உறவுமுறைகளுக்குள் திருமணங்கள் நிகழ்வதால் பிறக்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிப் பிறக்கின்றனர்

நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் ஒரு வேளை உறவுமுறைகளுக்குள் இல்லாமல் அன்னியமாக இருந்தாலும், (தற்போது) திருமணத்திற்கு முன்பு பேசிக் கொண்டாலும், சாதகமான விஷயத்தை மட்டும் பேசிக்கொள்வார்களே தவிர, எதிர்மறையான விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். அதனால் முழுமையான புரிதல் இருக்காது. பெண்கள், தன் குடும்பத்தை விட்டு இன்னொரு குடும்பத்துடன் இணைந்து பயணிக்கின்றனர். அந்த கஷ்டம் ஆணுக்கு இல்லை.

அப்படியே ஒன்றிரண்டு பேர் மனைவி வீட்டிலேயே தங்க முன்வந்தாலும், அவ்வீட்டில் உள்ள அனைவராலும் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். இல்லையேல் வீட்டோடு மாப்பிள்ளை என்பதால் தன்னைத் தாழ்வாக நடத்துகின்றனர் என்றும், தன்னுடைய கெளரவம் போய்விட்டதாகவும் நினைக்கிறார்கள். பெண்களை மட்டும் வீட்டோடு பெண் என்று அழைப்பது இல்லை.

கணவனுக்கும், மனைவிக்கும் பிரச்சனையாகி  பெண் தாய்வீட்டுக்குச் சென்றால், வாழாவெட்டி என தாழ்த்தி கூறுகிறார்கள். ஆணுக்கு அப்படிப்பட்ட சொல்லே இல்லை. ஆணுக்குப் பெண் கீழானவள், அடக்கத்துக்குரியவள் என்று உறுதிபடுத்துவதும், நிலைநாட்டுவதுமாகவே தொடர்கிறது. கணவன் மனைவி இணைந்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் பெரியவர்களுக்குப் பணிந்து  போகக்கூடிய சூழல் நிலவுகிறது. இருமனம் இணைந்து எடுக்கும் முடிவுகளில் எவர் தலையீடும் இருக்கக்கூடாது. யார் தலையிட்டாலும் நாகரீகமற்ற செயல். ஆனால் இதைத்தான் கூட்டுக்குடும்பம் கூசாமல் செய்கிறது.

பெரும்பாலும் கூட்டுக்குடும்பங்களில், மருமகள் என்ன சமைக்க வேண்டும்?  என்ன ஆடை அணிய வேண்டும்? எங்கு? எப்பொழுது வெளியில் செல்ல வேண்டும்? என்பதெல்லாம் அவர்கள் விருப்பமாக இருக்கும். கணவனுக்கும், மனைவிக்கும் தனித்திருக்கும் நேரம் அரிது. இலகுவான மனநிலை இருக்காது. சில இடங்களில் பிற்போக்கான குறுகிய சிந்தனை உடைய விஷயங்களை, தாத்தா பாட்டி குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்கும் போக்கும் இருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டுக்குடும்ப அமைப்பு பெண்களை மேலும் கூடுதல், கஷ்டங்களுக்கு  உள்ளாக்குகிறது.

சில குடும்பங்களில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் வீட்டுவேலைகளுக்கு உதவுவதற்கும் பெண்கள் தன் தாயையோ, மாமியாரை யோ, அழைத்துச் சென்று விடுகிறார்கள்.  மாமனார் தேவையற்ற  சுமையாகக் கருதப்படுகிறார்.

பெரும்பாலும் பெற்றோர்கள் தன்பிள்ளை களிடம் சிறு வயதிலிருந்து சொல்லி சொல்லி வளர்ப்பது என்பது, நாங்கள் இவ்வளவு சிரமப்பட்டு உங்களை படிக்கவைத்து ஆளாக்குவது எதுக்குன்னா நீங்க எங்களுடைய கடைசி காலத்தில் எங்கள வச்சி காப்பத்தனும் என்றுதான் சொல்லி வளர்க்கிறார்கள் தன் பிள்ளைகள் வளர்ந்த பின்பு நம்மை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் தன் வாழ்க்கையை வாழும் காலத்தில் நிறைவானதாக வாழாமல் தனக்கென்று தனி சேமிப்பை ஏற்படுத்தாமல் பிள்ளைகளுக்காக வாழ்கிறார்கள் வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பி காலம் கடத்த வேண்டிள்ளது. பிள்ளைகளின் சூழல், காலத்திற்கு ஏற்ப வேகமாக மாறி வருவதால் பெற்றோரை கவனிக்க முடியாமல் போகிறது.

இருப்பினும் கடமைக்காக பாதுகாக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் அங்கு பெற்றோர்கள் ஒரு சுமையாக கருதப்படுகிறார்கள். இதனால் பெற்றோர்களின் சுயமரியாதை இழக்கப் படுகிறது.

சமீபத்தில் ராஜ்கோட்டில்  உதவிப் பேராசிரியர் சந்திப் என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த தன் தாயைத் தன் வீட்டில் இருந்து மொட்டை மாடிக்கு அழைத்து சென்றதாகவும், அவர் கால் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாகவும் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த காவல்துறையினர், புகார் அளித்த மகன்தான் அவருடைய தாயை கீழே தள்ளி விட்டார் என்பதைக் கண்டுபிடித்தனர். சம்பந்தபட்ட நபரின் மனைவியும் இதற்கு உடந்தையென காவல் துறை சந்தேகித்தனர்.

விசாரனையில் அவர் கூறியதாவது தன்னுடைய மனைவி தன் இரண்டு குழந்தைகளைக் கவனித்துகொண்டு இருந்ததாகவும் அவருக்கு இதில் எந்த சம்பந்தம் இல்லை என்று மறுத்துவிட்டார். “உடல்நலம் சரியில்லாத தாயைக் கவனிப்பது தொடர்பாக எனக்கும் என் மனைவிக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடந்து கொண்டே இருந்தது. பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் வேறுவழியின்றி என் தாயைக் கொன்றுவிட்டேன்” என்று கூறினார்.

இதைப்போலவே வெளிநாட்டில் பணிபுரிந்த ஒருவர், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தனியாக வசித்து வந்த தன் தாயைப் பார்க்க இந்தியா வந்தார். ஆனால் தாயோ கவனிப்பாரற்று சோபாவில் அமர்ந்தநிலையில் இறந்து எலும்புக்கூடாகக் கிடந்தார்.

மேற்கண்ட இந்த இரண்டு சம்பவங்களிலும் அவர்களுடைய தாயைக் கவனிக்க முடியாத பட்சத்தில் முதியோர் இல்லத்தில் விட்டு இருந்தால், குறைந்தபட்சம் உயிருடனாவது இருந்திருப்பார்கள். பெற்றோர்களைப் பராமரிக்க முடியாத நிலையில் முதியோர் இல்லங்களில் விடுவதற்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கமே முதியோர் இல்லங்களைப் பொறுப்பேற்று நடத்த முன்வர வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளை குற்றமாக கருதவேண்டிய அவசியம் இல்லை.

எனவே வாழும் பொழுது தன்வீடு, தன் பிள்ளை என்று வாழ்வை சுருக்கிக்கொள்ளாமல் இந்தச் சமூகத்திற்க்காகவும் வாழ வேண்டும். தனக்கென ஒரு சேமிப்பு ஏற்படுத்தி, இறுதி காலத்தில் அந்த சேமிப்பை கொண்டு தன் பிள்ளைகள் தயவின்றி வாழலாம். அடுத்த தலைமுறையாவது அவர்களது வாழ்க்கையை அவர்கள் விரும்பியபடி வாழ்வார்கள்.

Pin It