கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 22வது சட்ட ஆணையம் 2023 ஜூன் 14 அன்று வெளியிட்ட பொது சிவில் சட்டம் குறித்து, அடுத்த 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் விளைவாக 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துக்கள் சட்ட ஆணையத்திற்கு வந்துள்ளன. ஏராளமான கருத்துகள் அனுப்பப் படுவதால், அதற்கான கடைசி நாளையும், ஜுலை 28 வரை நீட்டித்து, புதிய அறிவிப்பையும் சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு முந்தைய 21ஆவது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டத்திற்கான தேவையையும் விளைவுகளையும் இரண்டு ஆண்டுகள் ஆராய்ந்து, 2018 ஆகஸ்டு 31 அன்று, குடும்ப சட்ட விதிகள் சீர்திருத்தம் எனும் அறிக்கையை ஒன்றிய அரசிடம் அளித்தது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பல்பிர் சிங் சவுகான் தலைமையில் அமைந்த 21ஆவது சட்ட ஆணையம், பல்வேறு மத அமைப்புகள், அரசுசார் நிறுவனங்கள், கல்வியாளர்கள், மகளிர் அமைப்புகள், துறைசார் வல்லுனர்கள் உள்ளிட்ட பலதரப்பினரிடம் கருத்துக்களைப் பெற்றது. அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்கள், முந்தைய சட்ட ஆணையங்களின் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், ஐநா மன்ற கொள்கை அறிக்கைகள், உலக நாடுகளின் சட்டங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்தது. இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிக்கையில், ”தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் தேவையும் இல்லை, விரும்பத்தக்கதும் இல்லை” என்று குறிப்பிட்டது. uniform civil codeஏன் பொது சிவில் சட்டம் தேவையில்லை? 

பல்வேறு கலாச்சார, சமூக கட்டமைப்புகளால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சட்ட ஆணையம், பாகுபாடு கொண்ட அனைத்து குடும்பச்சட்டங்களையும் திருத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தது. வேறுபாடுகளுடன் கூடிய தனிநபர் சட்டங்களின் பன்முகத் தன்மை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடைய சட்ட ஆணையம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் சட்டங்களை முதலில் மாற்றியமைக்க வேண்டும். காலப்போக்கில் சட்டங்களில் உருவாகியுள்ள ஏற்றத்தாழ்வுகளை திருத்த வேண்டும். இவற்றை சாத்தியப்படுத்தி விட்டால், நாட்டின் பன்முகத் தன்மையும் பாதுகாக்கப்படும், குடிமக்களுக்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளும் களையப்படும். பொது சிவில் சட்டமும் தேவைப்படாது.

பெண்களை பாகுபாடுத்தும் சட்டங்கள் 

இந்தியாவில் வர்க்க, சாதி, சமூக என பலவற்றின் அடிப்படையில் பெண்கள் ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள பல சட்டங்கள் பெண்களை பாரபட்சத்துடன் நடத்துகின்றன. இந்திய சமூகத்தில் திருமணம் குடும்பத்தின் அஸ்திவாரமாகவும், குடும்பம் சமூகத்தின் அஸ்திவாரமாகவும் கருதப்படுகிறது. திருமணம் மனிதரின் தனிப்பட்ட விஷயமாகவே கருதப்படுகிறது. எனினும் தனியுரிமையை காரணம் காட்டி தனி உறவுகளுக்கு இடையில் வன்முறையும், பாகுபாடும் இருப்பதை அனுமதிக்க முடியாது.

திருமணத்தை மதம் தொடர்பான செயல் என்றும் விளக்கக் கூடாது. மதப் பழக்க வழக்கங்களால் கட்டமைக்கப்பட்ட பாலினப் பாகுபாடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் பெண்ணுரிமையின் குறுக்கே வருவதை அனுமதிக்க முடியாது.

பாலின சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் எந்தவொரு சட்டத்தின் இறுதி இலக்கு பெண்களின் தன்னுரிமைக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும்.

கலாச்சார வேறுபாடுகளை அங்கீகரிக்க வேண்டும் 

அனைத்து நாடுகளும் பலதரப்பட்ட மக்களின் கலாச்சார வேறுபாட்டை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளன. மக்களிடையே உள்ள கலாச்சார வேறுபாடை பாகுபாட்டின் வெளிப்பாடாக கருத இயலாது. மாறாக வலுவான ஜனநாயகத்தின் அடையாளம். 

அரசியலமைப்புச் சட்டத்தின் 6ஆவது அட்டவணையும், 271ஆவது பிரிவும் மிசோரம், அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, நாகலாந்து, கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சில கூடுதல் அதிகாரங்களைத் தருகின்றன. அதன்படி தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரதேசங்கள் தங்களுடைய மக்களின் பழக்க வழக்கங்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன, உதாரணமாக, பழங்குடியின மக்களின் தாய்வழிச் சமூகப் பழக்க வழக்கங்களை பாதுகாக்கும் சில சட்டப் பிரிவுகள் உள்ளன. சில பகுதிகளில், கிராமப் பஞ்சாயத்துக்களே குடும்பச சட்டங்களைத் தீர்மானித்துக்கொள்ளும் அதிகாரம் கொண்டவைகளாக உள்ளன.

மேகாலயாவின் காரோ மற்றும் காசி பழங்குடியினர் தாய்வழி வம்சாவளி மரபைப் பின்பற்றுகிறார்கள். அக்குடும்பங்களின் சொத்துக்கள் இளைய மகளின் மரபுரிமையாக உள்ளன. காரோ பழங்குடியின பழக்கவழக்கத்தின் படி, மருமகன் தனது மனைவியின் பெற்றோருடன் வீட்டில் வசிக்கிறார்.

இவ்வகையான தனி அதிகாரம் கொண்ட பகுதிகளைச் சேர்ந்தோரிடம் பொதுசிவில் சட்டத்தை திணித்தால், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புண்டு.

ஒன்றுபட்ட நாட்டிற்கு ஒரேபடித்தான தன்மை கொண்ட சட்டங்கள் இருக்க வேண்டிய தேவை இல்லை. மாறாக உலகின் மற்ற நாடுகளில் பின்பற்றப்படுகிற சமத்துவ நியதியின் போக்கில், அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.

மக்களிடையே உள்ள பாகுபாடுகள் தான் சமத்துவமின்மையின் வேரே அன்றி, அவர்களிடையே உள்ள வேறுபாடுகள் அல்ல என்கிறது சட்ட ஆணையம். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை உருவாக்க வேண்டுமே அன்றி, வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்கவதை நோக்கமாக அரசுகள் கொண்டிருக்க வேண்டியதில்லை. இம்முறையில் ஒவ்வொரு சமூகத்திலும் சமத்துவத்தை உருவாக்குவதின் மூலம், அவை கொண்டுள்ள, இக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய, அரசியலமைப்புச் சட்டத்தோடு ஒத்துப் போகும், அதேவேளையில் பன்முகத்தன்மை கொண்ட சட்டங்களை பாதுகாக்கவும் முடியும். பொது சிவில் சட்டம் இயற்றாமலேயே, அரசியமலைப்புச் சட்டத்தோடு முரண்படும் சட்டங்களை மாற்றவும் முடியும்.

மதமும் மதச்சார்பின்மையும் அரசியலமைப்புச் சட்டமும்

பெரும்பான்மை எனும் பேரிரைச்சலில், மத, வட்டார வேறுபாடுகள் கரைந்து விடாத சூழல் இருந்தால் மட்டுமே, மதச்சார்பின்மைக்கு மதிப்புண்டு. இல்லையெனில் அது பெயரளவிலான மதச் சார்பின்மையாகவே இருக்கும். மதச்சார்பின்மை பன்மியக் கலாச்சாரத்திற்கு எதிராக இருக்க முடியாது. மாறாக, கலாச்சார வேறுபாடுகளுடன் கூடிய அமைதியான கூட்டுவாழ்க்கையை மதச்சார்பின்மை உறுதி செய்ய வேண்டும்.

மதச் சுதந்திரமும் சமத்துவத்திற்கான உரிமையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. இரண்டுமே அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒன்றைக் கைவிட்டால் தான் மற்றொன்று சாத்தியமாகும் என்று கூறுவது நியாமற்ற செயல். பல சட்டங்கள் ஏற்கெனவே இயற்றப்பட்டிருந்தாலும், அவை அரசியலமைப்பிற்கு முரணான வகையில் இருக்க முடியாது. பழக்கவழக்கங்கள் எவ்வளவு காலமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், அவற்றை சட்டங்களாக்கினால், அவை தவறான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதச் சுதந்திரம், விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம், மதத்தை பரப்பும் சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும், எனினும் சதி, அடிமைத்தனம், முத்தலாக், தேவதாசி, வரதட்சிணை, குழந்தைத் திருமணம் போன்ற சமூகத்தீங்குகளை மதப் பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் சமூகத்தில் நிலைத்து நிற்க அனுமதிப்பது முட்டாள்தனம்.

இக்கொடிய சமூகத் தீங்குகள் அடிப்படை மனித உரிமைக்கும் எதிரானது, மதங்களுக்கும் தேவையானவை அல்ல. இப் பழக்க வழக்கங்களை குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற அவசியத் தேவை என்ற அடிப்படையிலும் அனுமதிக்க இயலாது. சமூக ஏற்றத்தாழ்வுகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், நீக்கமற நிறைந்திருக்கும் நமது இந்திய சமூகத்தில் சமத்துவ உரிமையை, முழுமையான உரிமையாக கருத இயலாது.

ஆகவே பொருளற்ற முறையில் விவாதிக்கப்படும் சமத்துவ உரிமையால் அனைத்து குடிமக்களும் பயன் பெறுவார்கள் என்று கருத இயலாது. ஆக, சமத்துவம் அல்ல, சமஉரிமை என்ற கருத்தாக்கமே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க உதவும். சமமற்றவர்களை சமமாக நடத்துவதில் எவ்வித சமத்துவமும் இல்லை.

மோசமான மதப்பழக்கம் நல்ல சட்டமாக இருக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள அடிப்படை உரிமைகளுடன் முரண்படும் மதப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் திருத்தப் பட வேண்டும். மதப் பழக்க வழக்கம், அரசியலமைப்புச் சட்டம் என்ற இருமுனை முரணில் அரசியலமைப்புச் சட்டமே நிலைத்து நிற்கும்.

மதச்சார்பற்றதாக உருவாக்கப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தில் கூட பாலின நீதிக்கான நேரடி உத்தரவாதம் இல்லை என்பது சட்டங்களை தற்கால நடைமுறைக்கு ஏற்ப திருத்தியமைப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சட்த் திருத்தங்கள் அவசியம்

இந்து திருமணச் சட்டத்தில் திருமணம் ஒரு சடங்கு. இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம், பார்சி திருமணச் சட்டத்தில் திருமணப் பதிவு அவசியம். கிறித்துவ திருமணச் சட்டத்தில் விவாரத்து இன்னும் களங்கமாகவே உள்ளது. இப்படிப்பட்ட வேறுபாடுகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு, மேல், கீழ் என வரிசைப்படுத்தக் கூடாது. அது மோதலுக்கு வழிவகுக்கும்.

நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் உள்ள பாகுபாடு கொண்ட அம்சங்களை திருத்துவதின் மூலம் பாலின வேறுபாடின்றி சம உரிமையை சாத்தியமாக்க முடியும். இதற்கு மாறாக பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நாடு முழுமைக்கும் ஒரே சட்டத்தை கட்டாயப்படுத்தினால், பெரும்பாலானோர் சட்ட முறைகளுக்கு அப்பாற்பட்ட வெளியில் திருமணத்தையும் விவாகரத்தையும் நடத்திக் கொள்ளும் வழியைத் தேர்ந்தெடுப்பர். திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலுறவு, உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது, விவாகரத்திற்கான காரணங்கள் உள்ளிட்ட போன்வற்றை தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பயன்படுத்தி, உலக அரங்கில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளுடன் ஒருங்கிணைக்க முடியும்.

ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18 என்ற பாலின வேறுபாட்டுடன் கூடிய வகைப்பாடு மனைவி கணவனை விட வயது குறைந்தவராக இருக்க வேண்டும் என்ற தப்பெண்ணத்தை சட்டத்தின் பெயரில் உறுதிப்படுத்துவதாக இருப்பதை மாற்றியமைத்து, ஆண், பெண் அன அனைவருக்கும் ஒரே திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும். 18 வயதில் ஆளும் அரசைத் தேர்ந்தெடுக்க முடியுமெனில், தன் இணையையும் தேர்ந்தெடுக்க முடியும். திருமணப் பதிவை கட்டாயமாக்குவதின் மூலம் குழந்தைத் திருமணம், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்தல், பெண்கள் மீதான குற்றங்கள் உட்பட பல குற்றங்களைத் தடுக்க முடியும்.

விவாகரத்து நடைமுறைகளை எளிதாக்கினால், திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவது குறையும். இல்லையெனில் விரைவில் விவாகரத்து பெறுவதற்காக குற்றவியல் சட்டங்களை நாடுவர். விவாகரத்து பெறும் காலம் நீண்டு கொண்டே போனால், கணவன் – மனைவி மட்டுமல்ல, அவர்களுடைய குழுந்தைகளும் பாதிக்கப்படுவர்.

சுதந்திர இந்தியாவில், புரோகிதர் இல்லாத திருமணங்களை சாத்தியமாக்கிய 1967 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சட்டத்திருத்தம், இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம் (1956), 2001இல் திருத்தப்பட்ட கிறித்துவ திருமண மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்ட பல சட்டத்திருத்தங்கள் சொல்லும் செய்தி என்னவெனில், குடும்ப, தனிநபர் சட்டங்களை காலத்திற்கேற்ப திருத்த முடியும் என்பதே.

இறுதியாக, தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் களைவதும், இயற்றப்பட்ட சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதுமே காலத்தின் தேவை; பொது சிவில் சட்டம் அல்ல என்பதே 21ஆவது சட்ட ஆணைய அறிக்கை சொல்லும் செய்தி.

- சு.விஜயபாஸ்கர்

Pin It