பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம், பாஜக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து நடந்து வருகிறது. பாஜகவினுடைய நோக்கம் சிறுபான்மையினருக்கு எதிரானது போல இதைக் கட்டமைப்பது. ஆனால் அது உண்மையில் அப்படி அல்ல. பொது சிவில் சட்டம் என்பது அரசமைப்புச் சட்டம் வரைவாக இருக்கும் போது Article 35ஆக இருந்தது. அந்த Article 35 மீது, நவம்பர் 1948­இல்விவாதம் நடைபெற்று இறுதிப்படுத்தப்பட்டது. இறுதிப் படுத்தப்பட்டபோது அது Article 44-ஆக உருப்பெற்றது. அரசமைப்பு சட்டத்தில் பகுதி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியது. பகுதிA IV-இல் பொது சிவில் சட்டத்தை வைத்தார்கள். 36லிருந்து 51 வரை IV. பகுதி III.

பகுதி III அடிப்படை உரிமைகள் பற்றியது. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்தலாம், நீதிமன்றத்திற்குச் சென்று என்னுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது என்று வழக்குத் தொடுக்கலாம். இப்பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து உரிமைகளும் நாம் கோரிப் பெறலாம்.

பகுதி IV இல் இருப்பவை வழிகாட்டு நெறிமுறைகள் தான், அதை அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதில்லை. அரசு வேண்டுமானால் சட்டம் இயற்றலாம். அதுதான் அதனுடைய அடிப்படை. அதை நிதானமாகச் செய்யவேண்டும் என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தை உண்டாக்கியவர்களின் நோக்கம்.

உண்மையான பொது சிவில் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது அல்ல அவர்களின் நோக்கம்.uniform civil code 1அரசமைப்புச் சட்டம் பகுதி IV இல் Article 39 உள்ளது. அதில் Article 39(b) கீழ்கண்டவாறு உள்ளது.

“The state shall, in particular, direct its policy towards securing that the ownership and control of the material resources of the community are so distributed as best to subserve the common good”

இது அப்படியா நடக்கிறது? இயற்கையிலேயே கிடைக்கக் கூடிய வளங்கள் எல்லாம் அனைவருக்குமாகப் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது நோக்கமாக இருக்கிறது. ஆனால் அதானிக்குத் தான் நான்காயிரம் ஏக்கர், எண்ணூர் அருகே துறைமுகம் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக் கிறது. அதேபோல Article 38(2), ஏற்றத்தாழ்வு இல்லாத வருமானம் அனைவருக்கும் கிடைப்பதற்கு அரசு முயற்சிக்கும் என்றும், பல பகுதிகளில் வசிப்பவர் களுக்கும் பல தொழில்களை செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர அரசு முயற்சிக்கும் என்று கூறுகிறது.

“The State shall, in particular, strive to minimise the inequalities in income, and endeavour to eliminate inequalities in status, facilities and opportunities, not only amongst individuals but also amongst groups of people residing in different areas or engaged in different vocations”

இவையெல்லாம் நோக்கங்கள். இவற்றை உரிமை யாகக் கோரமுடியாது.

ஒரு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், அது Article 47 தான். அது மதுவிலக்கைப் பற்றி கூறுகிறது. அதற்குச் சட்டம் கொண்டு வந்தால் மகிழ்ச்சி. இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வருகிறோம் என்று பா.ஜ.க அரசு கொண்டு வர வேண்டியதுதானே. எந்த அரசும் கொண்டு வராது.

எனவே பகுதி IV-இல் இருப்பதால்தான், அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து73 ஆண்டுகள் ஆகியும் இவைகள் - அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் - இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்த நெறிமுறைகளை அமல்படுத்த அரசு முயற்சி செய்யும் என்பதே அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

நாம் முதலில் அரசமைப்பு அவையில் நடந்த விவாதத்தை பார்க்க வேண்டும். யூனிபார்ம் சிவில் கோடு என்றால் பொதுவான சிவில் சட்டம். அப்படியானால் இன்று பொதுவான சிவில் சட்டம் இல்லையா என்று கேட்டால் ஏற்கனவே பொதுவான சிவில் சட்டம் இருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார். பொது சிவில் சட்டம் பற்றி அவர் சொல்லும்போது கிரிமினல் சட்டத்தைப் பற்றியும் அவர் சொல்கிறார். கிரிமினல் சட்டத்தைப் பொருத்தவரை அனைவருக்கும் ஒன்றுதான் என்று 1860 முதல் பிரித்தானிய அரசால் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) 1860இல் வந்ததைத் தான் அவர் சொல்கிறார். சிவில் சட்டத்தைப் பற்றி சொல்லும் போதும், மிக மிக ஒரு சிறு பகுதி (Little Corner) தவிர, அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம்தான் இருப்பதாக டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார். சொத்துக்களை விற்பதற்கும் அடமானம் வைப்பதற்கும் என சொத்துக்கள் பரிவர்த்தனை சம்பந்தமான சட்டமும், பணப் பரிவர்த்தனை சம்பந்தமான சட்டமும், இன்னும் எண்ணற்ற சட்டங்களும் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்தானே என்று சுட்டிக் காட்டுகிறார் டாக்டர் அம்பேத்கர். குடும்பச் சட்டம் என்ற மிக மிக சிறிய பகுதி தவிர மற்ற அனைத்து சிவில் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானது என்பதை எடுத்துக் காட்டுகிறார் அம்பேத்கர். அவர் அரசமைப்பவையில் எடுத்து வைத்த வாதத்தின் ஒரு சிறு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

“We have a uniform and complete Criminal Code operating throughout the country, which is contained in the Penal Code and the Criminal Procedure Code. We have the Law of Transfer of Property, which deals with property relations and which is operative throughout the country. Then there are the Negotiable Instruments Acts: and I can cite innumerable enactments which would prove that this country has practically a Civil Code, uniform in its content and applicable to the whole of the country. The only province the Civil Law has not been able to invade so far is Marriage and Succession. It is this little corner which we have not been able to invade so far and it is the intention of those who desire to have article 35 as part of the Constitution to bring about that change.”

அதாவது குடும்பச் சட்டம் என்பது திருமணம் மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆகும். திருமணம் தொடர்பான சட்டம் என்பது விவாகரத்தையும் ஜீவனாம்சத்தையும் உள்ளடக்கியதாகும். திருமணத்தின் ஒரு கூறுதான் விவாகரத்து. குடும்பத்தில் சொத்துக்களைப் பிரித்துக் கொள்வது சம்பந்தமான சட்டமே வாரிசு உரிமைச் சட்டம். தத்தெடுத்தல் சம்பந்தமான சட்டமும் குடும்பச் சட்டமே.குடும்பச் சட்டமே தனிநபர் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குடும்பச் சட்டம் சம்பந்தமான பகுதியை, ஒரு குறைவான பகுதிதான் என்று அம்பேத்கர் சொல்கிறார்.

அந்தந்த மதங்களுக்கான சட்டம் இங்கு நடைமுறை யில் இருக்கிறது. திருமணம் என்று எடுத்துக்கொண் டால் இந்துக்கள் எல்லாம் இந்து மதம் சொல்கிற சடங்குகள் மற்றும் சம்பிரதாயத்தின்படி திருமணம் செய்கின்றனர். இஸ்லாமியர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் மதத்தின் சடங்குகள் மற்றும் சம்பிரதாயத்தின் படி திருமணம் செய்கின்றனர். அதே போல கிறிஸ்தவர் களும், சீக்கியர்களும், பார்சிகளும் அவரவர் மதம் கூறுகிற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் படி திருமணங்களை செய்கின்றனர். 1937க்கு முன்னால் பிரிட்டிஷ் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்த இஸ்லாமியர்கள், அந்தந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இந்து மக்களின் பழக்க வழக்கங்களின்படியே தங்கள் குடும்பங்களில் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டனர் என்று அம்பேத்கர் அரசமைப்பு அவையில் நடந்த விவாதத்தின் போது குறிப்பிடுகிறார். அதுவும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.

1937இல் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் சரியத் சட்டத்தை-இஸ்லாமியருக்கான வாரிசு உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. சரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் போது பிரிட்டிஷ் அரசு விருப்பத் தேர்வு (Option) கொடுத்தார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் சரியத் சட்டத்திற்கு வாருங்கள். இல்லையென்றால் நீங்கள் எந்த வழக்கப்படி செய்கிறீர் களோ அதை வாரிசுரிமைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள்.

நம்மை அடிமைப்படுத்தியிருக்கக் கூடிய பிரிட்டிஷ் அரசு சரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் விருப்புரிமை அடிப்படையில் செய்தபோது, சுதந்திர இந்தியாவின் எதிர்கால நாடாளுமன்றம் Article 44ஐ அடிப்படையாகக் கொண்டு சட்டம் செய்கையில் இப்படித்தானே செய்ய முடியும் என்கிறார் அம்பேத்கர். அதாவது சட்டத்தில் இருப்பது போலவோ விருப்பத் தேர்வு மூலமாகவோ எப்படி வேண்டுமோ அப்படிச் செய்து கொள்வது என்ற அடிப்படையில்தானே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தச் சொல்கிறார் டாக்டர் அம்பேத்கர். அவரவருடைய மத அடிப்படையிலான பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்ள விரும்பினாலும் வைத்துக் கொள்ளலாம் அல்லது பொது சிவில் சட்டத்தை ஏற்றும் நடக்கலாம். இப்படி ஜனநாயக முறைப்படி தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். மிரட்டலின் அடிப்படையில் கொண்டு வரப் படக்கூடாது என்பது அரசமைப்பு அவையில் நடந்த விவாதத்தின் அடிப்படையாக இருக்கிறது.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர். அந்த குழுவில் ஒரு உறுப்பினர் முன்சி அவர்கள். அரசமைப்பு அவையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட முன்சி அவர்கள் பொது சிவில் சட்டத்தை இந்து சனாதனிகளும் எதிர்க்கிறார்கள் என்பதைப் பதிவு செய்கிறார். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்குச் சொத்து கொடுக்க வேண்டும் என்பதையும் மற்ற அனைத்திலும் ஆண்களுக்கு இணையாக பெண்களை பாவிக்க வேண்டும் என்பதையும் இந்து மதம் ஒப்புக் கொள்ளவில்லை என்று சனாதனிகள் கூறுகிறார்கள் என்று முன்சி தனது வாதத்தில் பதிவு செய்துள்ளார்.

1948-இல் மேற்சொன்னபடி அரசமைப்பு அவையில் பொது சிவில் சட்டம் சம்பந்தமாக விவாதம் நடந்து இறுதி செய்யப்பட்ட போது, இந்துக்கள் தொடர்பான சட்டங்கள்கூட முடிவாகவில்லை. அதாவது சட்டங்களாக ஆக்கப்படவில்லை. இந்துச் சட்ட மசோதா (Hindu Code Bill) இந்துக்கள் சம்பந்தமான திருமணம், வாரிசுரிமை, தத்தெடுப்பது தொடர்பான சட்டங்களின் மசோதா 1947இல் டாக்டர் அம்பேத்கரால் முதல் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் அது சட்டமாகவில்லை. 1946-டிசம்பரில் இல் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபைதான் முதல் நாடாளுமன்றமும் கூட. அந்த நாடாளுமன்றத்தில் பிரத மராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. ஜவஹர்லால் நேருவின் தலைமை யிலான அமைச்சரவையில் டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தார்.

1947இல் அந்த முதல் நாடாளு மன்றத்தில் - அரசமைப்புச் சபையில்-இந்து சட்ட மசோதாவை தாக்கல் செய்த அம்பேத்கர் அதைச் சட்டமாக்கு வதற்கு முயற்சி செய்தார். அரச மைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950 முதல் அமலுக்கு வந்தாலும், அரசமைப்புச் சபையின் வேலை 26-11-1949 உடன் நிறைவடைகிறது. 1952-இல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வரை முதல் நாடாளுமன்றம் செயல்பட்டது. முதல் நாடாளுமன்றத்தால் எண்ணற்ற சட்டங்கள் இயற்றப் பட்டன. 1947-இல் தொழிற்தகராறு சட்டம் (Industrial Disputes Act 1948), 1948இல் தொழிற்சாலைகள் சட்டம் (Facatoraies Act), 1948 இல் குறைந்தபட்ச ஊதிய சட்டம் (Minimum Wages Act), 1948 இல் மின்சார விநியோக சட்டம் (Electricity Supply Act) என பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தது முதல் நாடாளுமன்றம். இவ்வாறு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வர முடிந்த அம்பேத்கர் இந்து மக்கள் சம்பந்தமான இந்து திருமண சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம் மற்றும் தத்தெடுத்தல் சம்பந்தமான சட்டம் ஆகியவைகளைக் கொண்டு வருவதற்கு - மேற்சொன்னபடி மசோதாக்களை தாக்கல் செய்திருந்த போதிலும் அம்பேத்கரால் இந்தச்சட்டங்களை இயற்றுவதற்கு முடியவில்லை. சட்டமாக்குவதற்கான அம்பேத்கரின் முயற்சிகள் அனைத்தும் இந்து சனாதனிகளால் தோற்கடிக்கப்படுகிறது. அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அப்படி எடுத்துக் கொள்ளப்பட்டால் உடனே சனாதனிகள் தடுத்து நிறுத்தி விடுவார்கள். அதனால் 27 செப்டம்பர் 1951இல், இந்துக்களுக்கான திருமணச் சட்டம், வாரிசுரிமைச் சட்டம் மற்றும் தத்தெடுத்தல் சம்பந்தமான சட்டம் ஆகியவைகளை இயற்றுவதற்கு சனாதானிகள் இடையூறு செய்ததைக் காரணமாகச் சொல்லி பதவி விலகினார் அம்பேத்கர்.

அதற்குப் பிறகு 1955-56இல் தான் இந்துக் குடும்ப சட்டம்-இந்து திருமண சட்டம், இந்து வாரிசு உரிமைச் சட்டம் மற்றும் தத்தெடுத்தல் சம்பந்தமான சட்டம் ­கொண்டு வரப்பட்டது. இன்னும் கூடப் பிரச்சினை இருக்கிறது. சபரிமலையில் பெண்கள் கோவிலுக்குப் போகலாமா வேண்டாமா என்ற பிரச்சினை உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது. ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள் போகலாம் என்று சொன்னார்கள். அப்போது தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, கன்வில்கர், நரிமன், சந்திரசூட் நால்வரும் பெண்கள் சபரிமலைக்குப் போகலாம் என்று தீர்ப்பளித்தார்கள். இந்துமல் கோத்ரா என்கிற ஒரு பெண் நீதிபதிதான் போகக் கூடாது என்று சொன்னார். இந்தத் தீர்ப்பு அளித்ததற்கு பின்னர் தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்று விடுகிறார்.

பின்னர் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் வந்தார். அப்போது இந்துத்துவ அமைப்புகள் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், மற்ற மதங்களில் பெண்களுக்கு எதிராக உள்ள மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்து போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து சபரிமலை வழக்குடன் விசாரிக்க வேண்டும் என்றும், அந்த விசாரணையை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் வழக்குத் தொடுத்தார் கள். மேலே கூறியவாறு சபரிமலை வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள் பெண்கள் சபரிமலைக்கு வழிபட செல்லலாம் என்றும் ஒரு நீதிபதி செல்லக்கூடாது என்றும் (4:1) தீர்ப்பளித்து இருந்த நிலையில்,கோகாய், இந்துமல்கோத்ரா ஆகியோரோடு கன்வில்கரும் சேர்ந்து மூவர் அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மற்ற இருவர் மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தார்கள். அதாவது நான்குக்கு (4:1) ஒன்று என்று இருந்த நிலைமை தலைகீழாக மாறி மேற்சொன்னபடி மூவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இருவர் செய்ய வேண்டாம் (3:2) என்றும் தீர்ப்பளிக்கும் நிலை ஏற்பட்டது. சபரிமலை வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மறுபரிசீலனை மனுவை விசாரித்த நீதிபதிகளில் மூவர் கூறியிருப்பினும் இது வரை ஏழு பேர் கொண்ட அமர்வு விசாரணை செய்ய வில்லை. அந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக நிற்கிறது.

இன்றும்கூட கோவிலுக்குள் அனைத்துச் சாதியினரும் போக முடியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதும் 54 கோவில்கள் சாதிய மோதல் என்ற காரணத்தால் மூடப்பட்டிருக்கின்றன என்று கூறியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விழுப்புரம் பகுதியில் மட்டும் 300 கோவில்கள் சாதிய மோதல் காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கின்றன என்று கூறி இருக்கிறார். வேங்கைவயலில் பட்டியல் இனத்தவரின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது என்ற பிரச்சனை எழுந்த போதுதான், அதே ஊரில் உள்ள கோயிலில் பட்டியல் இனத்தவர் வழிபட அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் தெரிய வந்தது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 (2) அனைத்துச் சாதியினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்பதை அடிப்படை உரிமை என்று அறிவிக்கின்றது. ஆனால் பட்டியல் இனத்தவர் கோயிலுக்குள் சென்று வழிபட முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

எனவே பொது சிவில் சட்டம் பற்றி இவர்கள் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது. அதைத் தாண்டி உண்மையில் இதைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லை.

22ஆவது சட்ட ஆணையம் 14 சூன் 2023 அன்று பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது பற்றி கருத்துத் தெரிவிக்குமாறு ஒரு பொது அறிவிப்பு கொடுத்தது. அதன் பிறகுதான் இப்போது தொடர்ந்து விவாதங்கள் நடைபெறுகின்றன. 2016இல் மோடி அரசு பொது சிவில் சட்டம் பற்றி 21ஆவது சட்ட ஆணையத்திடம் அறிக்கை அளிக்குமாறு கேட்டது. அவர்கள் இதுதொடர்பாக இதேபோல் பொது அறிவிப்புக் கொடுத்து அனைவரையும் கேட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 31.8.2018 அன்று “Consultative paper on
reform of Family Law” என்ற 185 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஒன்றிய அரசிற்கு சமர்ப்பித்தார்கள். அவர்களுடைய பரிந்துரையில் பொது சிவில் சட்டம் இப்போதைக்கு தேவையும் இல்லை அவசியமும் இல்லை (Uniform Civil code is neither necessary nor desirable) என்று சொன்னார்கள். இப்போதைய உடனடி தேவை ஒவ்வொரு மதங்களிலும் குடும்பச் சட்டங்கள் - அதாவது தனிநபர் சட்டங்கள் செய்யப்பட வேண்டும் (Codify) என்று 21ஆவது சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. ஏற்கனவே உள்ள குடும்ப சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அந்த பரிந்துரை கூறியது. மேலும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்வதுடன், பல புதிய பொதுவான சட்டங்களையும் நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது 21ஆவது சட்ட ஆணையம்.

21ஆவது சட்ட ஆணையத்தின் மேற்சொன்ன பரிந்துரைகளைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது மோடியின் அரசு. அந்த ஆணையம் சொன்ன பரிந்துரைகளை அமல்படுத்த தயாராக இல்லை மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு.

21ஆவது சட்ட ஆணையம் எல்லா மதங்களிலும் உள்ள தனிநபர் சட்டங்களை, அதாவது குடும்பச் சட்டங்களைத் திருத்தச் சொன்னது. இஸ்லாமியருக்கான தனிநபர் சட்டங்கள், கிறிஸ்தவர்களுக்கான தனிநபர் சட்டங்கள், சீக்கியர்களுக்கான தனிநபர் சட்டங்கள், பார்சிகளுக்கான தனிநபர் சட்டங்கள் ஆகியவற்றை முறைப்படுத்தச் (Codify) சொன்னது. அந்த அந்த சமூகங்களில் உள்ளவர்களோடு தேவையான விவாதங்கள் நடத்தி அந்தந்த சமூகங்களுக்கான தனிநபர் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் அந்த வேலைகள் எதுவும் செய்ய மோடி அரசு தயாராக இல்லை.

இந்துக்களுக்கான சட்டங்கள் மட்டும் (Codify) செய்யப்பட்டு ஒரு தூண் இருக்கிறது. அதேபோல வரிசையாக எல்லா மதங்களுக்குமான சட்டங்கள் செய்யப்பட்டு பல தூண்கள் (Pillars) வர வேண்டும். அப்போதுதான் அதன் மேல் பொது சிவில் சட்டம் என்னும் சாலை அமைக்க முடியும். எல்லா சமூகத் தையும் சேர்ந்தவர்களும் இன்று இருதார மணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் அவர்கள், நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னபோது மன்னராட்சியில் போரில் இளம் வீரர்கள் மடிந்துவிடும் சூழல் நிலவியது. அப்போது இளம் விதவைகள் மட்டுமல்ல இரண்டு வயது மூன்று வயது சிறு குழந்தைகளையும் அனாதைகளாக விட்டுவிட்டு போரில் மடிந்து விடுவார்கள். இப்படி கைவிடப்படுபவர்கள் விபச்சாரம் என்கிற நிலைக்குத் தள்ளப்படும் வறுமை நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். அவர்கள் அங்கே ஏழாம் நூற்றாண்டில் இப்படி நீதி சொன்னபோது, இங்கே சதி என்று சொல்லி கணவன் இறந்ததும் பெண்ணையும் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள். இன்று இரண்டுமே சரி கிடையாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். எனவே இருதார மணங்களைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்தத் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஏற்கனவே குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் போன்றவை அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டங்களாக இருப்பதை இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ளலாம். எந்த மதத்தைச் சேர்ந்தவர் குழந்தைத் திருமணம் செய்தாலும் - தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம் செய்தாலும் - அது சட்டப்படி குற்றம்.

சூன் 14 அன்று பொது சிவில் சட்டம் பற்றி கருத்துத் தெரிவிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியினர், அவர்கள் ஆட்சி செய்யக் கூடிய வடகிழக்கு மாநிலங்களில் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு மேகாலயாவில், மிசோரமில், நாகாலாந்தில் பொதுசிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லி விட்டார்கள். உடனே நாடாளுமன்ற நிலைக்குழுவில் அதன் தலைவர் சுஷில் மோடி நாங்கள் பொது சிவில் சட்டத்திலிருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிப்போம் என்று சொல்லிவிட்டார். பட்டியல் இன மக்களில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விலக்கு அளித்துவிட்டால் இது எப்படிப் பொதுவான சட்டமாகும்?

வாரிசுரிமையில் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை என்பது 2005ல்தான் வருகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதற்கு முன்னர் வரைக்கும் அதைக் கொண்டுவர முடிய வில்லை. அதுதான் நிலைமை. பெண்களுக்கும் ஆண் களுக்கு நிகராகச் சொத்தில் பங்கு தரலாம் என்று சொன்னால் அனைத்துச் சமூகங்களும் அதை ஏற்றுக் கொள்ளும். ஒவ்வொரு சமூகத்திற்கும் இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வந்து அதற்குப் பிறகு ஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.

பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் கொண்டுவரும் முறைதான் தவறு என்று சொல்கிறோம். குழந்தைத் திருமண ஒழிப்புச் சட்டத்தை யாராவது எதிர்ப்பார்களா? முதன்முதலில் குழந்தைத் திருமண ஒழிப்புச் சட்டம் வந்தபோது அதை எதிர்த்தவர் திலகர். இந்துப் பெண்களை எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொடுப்போம் என்று சொன்னார். சங்கராச்சாரியார் 6 வயதில் 8 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார். ஆனால் சனாதனவாதிகளாக இருப்பவர்கள் கூட இன்றைக்கு இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது போன்ற மதச்சார்பற்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்ட வேண்டும்.

இன்று பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருப்பவர் களும், எதிர்க்கட்சி அணியில் இல்லாத கட்சிகளும் இப்பொழுது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார். பாட்டாளி மக்கள் கட்சியும் பொது சிவில் சட்டத்தை இப்போது கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதேபோல மாயாவதியும் சொல்லி இருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியினர் இந்துத்துவக் கருத்துகளைக் கொண்டவர்கள் தான். அவர்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாகச் சொன்னார்கள். அகாலிதளம் பொதுசிவில் சட்டத்தை எதிர்த்தது, ஆம்ஆத்மிக்கு எதிராகப் பரப்புரை செய்தவுடன் ஆம்ஆத்மி கட்சியின் முதலமைச்சர் பஞ்சாபில் நாங்களும் பொது சிவில் சட்டத்தை எதிர்க் கிறோம் என்று சொல்கிறார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அகாலி தளம் பாஜக கூட்டணியில் இருந்த கட்சி. எனவே இந்தச் சூழலில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உகந்தது இல்லை என்பதும் அனைத்து தரப்பினரின் சம்மதத்துடன்தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

ஆகவே அம்பேத்கர் அவர்கள் அரசமைப்பு அவையில் நடந்த விவாதத்தில் சொன்னது போல பொது சிவில் சட்டம் என்பது வற்புறுத்தலின் பெயரில் இல்லாமல் விருப்பத் தேர்வாக இருக்கவேண்டும். அதை இந்த அரசாங்கம் தெளிவாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். வாரிசுரிமையில் பெண்களுக்கு சரிசமமாகச் சொத்துகளைக் கொடுக்க வேண்டும் என்பதை இன்று அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்வார்கள். குடியுரிமைச் சட்டத்திருத்திற்கு எதிராக ஷாகின்பாக்கில் போராடியவர்கள் பெண்கள்தான். தலாக் தலாக் தலாக் என்று சொல்வதை இன்று ஏற்றுக்கொள்வார்களா? எனவே இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு என்பது நிதானமாக அனைவருடைய ஒப்புதலின் அடிப்படை யிலும் இந்துச் சட்டம் போன்று இஸ்லாமிய தனிநபர் சட்டங்களையும், உருவாக்கிக் மற்ற ஒவ்வொரு மதத் தினருக்குமான தனிநபர் சட்டங்களையும் கொண்டு வரவேண்டும். எல்லாத் தரப்பினரின் தனிநபர் சட்டங் களும் ஒவ்வொரு தூணாக ஆக ஒரே உயரத்திற்கு வரும்போது நாம் பொதுசிவில் சட்டம் என்றொரு சாலையை அமைப்பது எளிதாக இருக்கும். ஏனென்றால் நாம் யாரும் பொதுசிவில் சட்டம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஐரோப்பா முழுவதும் பொது சிவில் சட்டம் இருக்கிறது, எகிப்தில் இருக்கிறது, துருக்கியில் இருக்கிறது என்று அந்த விவாதத்தில் அம்பேத்கரும் முன்ஷியும் அல்லாடி கிருஷ்ணசாமியும் சொல்லி இருக்கிறார்கள்.

விவாகரத்தை உள்ளடக்கிய திருமணம் தொடர்பான சட்டங்கள், வாரிசுரிமை தொடர்பான சட்டங்கள் ஆகிய இவை அனைத்தும் மதம் சார்ந்திருப்பதற்குப் பதிலாக பொதுவான ஒரு சட்டமாக அமெரிக்காவிலும் ஐரோப்பா விலும் ஆஸ்திரேலியாவிலும் இருப்பது போன்ற ஒரு சட்டத்தை இங்கேயும் கொண்டு வரவேண்டும் என்பது தான் நம்முடைய இலட்சியமாக இருக்கிறது. ஆனால் பொதுவான சட்டங்களை கொண்டு வரும் நோக்கம் ஏதும் இந்த மோடி அரசுக்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் குழந்தைத் திருமண ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்தவர்கள், அதேபோல் சிறப்புத் திருமண சட்டத்தை ஆதரிக்காதவர்கள். சிறப்புத் திருமணச் சட்டத்தில் கொடுக்கப்படும் அறிவிப்பு காலத்தில் லவ் ஜிகாத் என்ற பெயரில் தகராறு செய்து இரண்டு மதங்களைச் சேர்ந்த வர்களுக்கு இடையில் நடைபெறும் திருமணத்தை நிறுத்திவிடும் அடாத செயலைச் செய்கிறார்கள் சனாதனிகள்.

எனவே பொதுவான சட்டங்களைக் கேட்பவர்கள் நாம்தான். சட்டங்கள் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் இதனைச் சிறுபான்மையினருக்குப் பீதியை ஏற்படுத்தும் வகையில் செய்யக்கூடாது என்பதைத் தான் நாம் கேட்கிறோம். அவர்கள் கூட்டணியில் இருக்கக் கூடிய வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் இதை எதிர்த்த உடனேயே அவர்களுக்கு விலக்கு அளித்தபோதே அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள். அதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமானால் 21ஆவது சட்ட ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

- நீதிபதி து.அரிபரந்தாமன்

Pin It