காலங்களில் முரண்பாடுகள், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா இல்லையா என்பதில் முரண்பாடுகள், அப்படியே இருந்தாலும் எத்தனை சங்கங்கள் அல்லது சங்கம் இருந்தது என்பதிலும் கருத்து மாறுபாடுகள் இருந்தன, -இருக்கின்றன அறிஞர்களிடையே

uma maheshwaranarஆனாலும்,

முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் பாண்டியர்கள் என்பது வரலாறு.

நான்காவது ‘தமிழ்ச்சங்கத்தை’ மதுரையில் நிறுவினார் பாண்டித்துரையார்.

உ.வே.சாமிநாதரின் தமிழ் ஆய்வும், தமிழின் முதல் கலைக்களஞ்சியமான ஆ.சிங்காரவேலு அவர்களின் ‘அபிதான சிந்தாமணி’ அச்சாகி வெளிவரவும் காரணமாக இருந்தது மதுரைத் தமிழ்ச்சங்கம்.

தமிழுலகின் இறுதித் தமிழ்ச்சங்கமாகவும், ஐந்தாவது தமிழ்ச்சங்கமாகவும் உருவானது தான் “கரந்தைத் தமிழ்ச்சங்கம்”.

இச்சங்கம் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய இருவருள் ஒருவர் வே.உமாமகேசுவரனார். மற்றொருவர் துங்கன் இராதாகிருட்டிணன்.

உமாமகேசுவரனாரின் தாயார் காமாட்சி அம்மையார், தந்தை வேப்பம்பிள்ளை.

தஞ்சை மாவட்டம் கரந்தட்டான்குடி இவருடைய சொந்த ஊர். 1883 ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் இவர் பிறந்தார்.

வல்லம், கும்பகோணத்தில் இவரின் பள்ளிப்படிப்பு முடிந்து, இவர் தஞ்சைக் கல்லூரி இளங்கலைப்பட்டம் பெற்றார். பின் சென்னை சட்டக்கல்லூரி பயின்று, தஞ்சை சீனி(ப்பிள்ளை)யிடம் வழக்கறிஞர் பயிற்சியைப் பெற்றார்.

இவரின் வழக்காடும் திறமையால், இவர் அரசுக் கூடுதல் வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். ஆனாலும் இத்தொழிலில் இவர் நாட்டம் கொள்ளவில்லை. மாறாக தமிழ்ச் சிந்தனையே இவரிடம் மேலோங்கி நின்றது.

உமாமகேசுவரனார் துங்கன்.இராதாகிருட்டிணன், கவிஞர் அரங்க.வேங்கடாசலம் ஆகியோருடன் இணைந்து 1911 மே திங்கள் 14ஆம் நாள், தஞ்சை வடவாறு, வடகரையில் உள்ள கரந்தையில் ‘கரந்தைத் தமிழ்ச் சங்க’த்தை நிறுவினார்.

“கரந்தை என்ற சொல்லுக்கு (ஆநிரை) மீட்டல் என்ற ஒரு பொருளுண்டு. தமிழ் மொழியின் இந்தப் பெருமைகளை மீட்கத் தோன்றிய அமைப்பு - கரந்தைத் தமிழ்ச்சங்கம்Ó என்கிறார் கரந்தை ஜெயக்குமார்.

இச்சங்கத்தின் முதல் செயலாளர் கவிஞர் வேங்கடாசலம். முதல் தலைவராக உமாமகேசுவரனார் பொறுப்பேற்றார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 06.10.1916 ‘செந்தமிழ் கைத் தொழில் கல்லூரி’ ஒன்று தொடங்கப் பெற்றது. இக்கல்லூரியின் தலைமையாசிரியர் கவிஞர் வேங்கடாசலம்.

1929 ஆம் ஆண்டு இச்சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவமனை தொடங்கப் பெற்றது.

தொடர்ந்து ‘தமிழ்ப் பொழில்’ என்று இதழும் தொடங்கப்பெற்று, அவ்விதழ் தொடர்ந்து வெளிவந்தது. இவைகளைச் செய்தவர் உமாமகேசுவரனார்.

“நீராரும் கடலுடுத்த” என்ற மனோன்மணீயம் பாடல் வரிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்தார்.

வடமொழி மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த திருவையாறு கல்லூரியில் அதனை மாற்றித் தமிழைக் கற்பிக்கச் செய்தார்.

அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்தார்.

1919ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தீர்மானம் இயற்றச் செய்தார்.

1937-ம் ஆண்டு இந்தியைக் கட்டாயம் ஆக்கிய போது, அதைக் கண்டித்தும், போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றினார்.

கரந்தை சங்கத்தின் மூலம் ‘யாழ்நூல்’, ‘நக்கீரர்’, ‘கபிலர்’, ‘தொல்காப்பியம்‘ போன்ற நூல்களைப் பதிப்பிக்கச் செய்தார்.

இவரின் முயற்சியால் 1938 ஆம் ஆண்டு கரந்தைப் புலவர் கல்லூரி தொடங்கப் பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் 1941 இல் தான் இதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியது.

1920 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தேர்தலில் போட்டியிட்டுத் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

அப்போது தஞ்சையில் இருந்தது வெறும் 40 பள்ளிகளே. அவைகளின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்திக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தவர் உமாமகேசுவரனார்.

இவரின் ஆற்றல் மிகு பயனுறு தமிழ்ப் பணியால், 1938 ஆம் ஆண்டு ஞானியாரடிகள் மணிவிழாவின் போது, நாவலர் சோமசுந்தர பாரதியாரின் முன்மொழிவின் பேரில், ஞானியாரடிகள் “தமிழ்வேள்” என்ற பட்டத்தை வழங்கினார்.

அன்று முதல் தமிழ்வேள் உமாமகேசுவரனார் என்று அழைக்கப்பட்டார்.

அதுமட்டுமன்று, 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு ‘இராவ்பகதூர்’ என்ற பட்டத்தையும் இவருக்கு வழங்கியது.

அளப்பரிய பணிகளைத் தமிழலகுக்குச் செய்த தமிழவேள் உமாமகேசுவரனார், இரவீந்தரநாத்தின் சாந்தி நிகேதனைப் பார்வையிட கல்கத்தாவுக்குச் சென்று, அப்படியே காசி இந்து பல்கலைக் கழகத்தையும் பார்வையிட்டார்.

அப்பொழுது நோய்வாய்ப்பட்ட தமிழவேள் உமாமகேசுவரனார், அயோத்திக்கு அருகில் பைசாபாத் என்ற ஊரில் இருந்த குறவி என்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

1941 மே 9 ஆம் நாள் அங்கு மரணமடைந்த தமிழ்வேள் உமாமகேசுவரனார் உடல் தமிழகம் வரவே இல்லை. சரயு நதிக்கரையில் எரியூட்டப்பட்டுவிட்டது அவரின் உடல்.

அப்பெருமகனாரின் உருவச்சிலையை 1973 ஏப்ரல் 13-ம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் திறந்து வைத்தார் கலைஞர் அவர்கள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்கிறார்:

வான வரிவைக் காணும்போ தெல்லாம் -- உமா

மகேச்சுரன் புகழே என் நினைவில்வரும்.

உமாமகேசுவரனார் மறைவுச் செய்தி கேள்வியுற்ற உரைவேந்தர் - தமிழறிஞர் அவ்வை துரைசாமி இவ்வாறு தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் -

தாயாகி உண்பித்தான், தந்தையாய்

அறிவளித்தான், சான்றோனாகி

ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்

அவ்வப்போ தயர்ந்த காலை

ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்

இனியாரை உறுவோம் அந்தோ!

தேயாத புகழான்தன் செயல்நினைந்து

உளம் தேய்ந்து சிதைகின்றே மால்.

 மறக்கமுடியுமா         

இவரை நாம்     

மறக்கமுடியுமா

Pin It