ஐயா, உயர் சாதியினரிடையே பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் 103 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்ற கோணத்தில் பலர் விவாதித்து வருகின்றனர். இது அடிப்படையில் உண்மையாக இருந்தாலும், இந்த 10% இட ஒதுக்கீடு பொருளாதார அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. உயர் சாதியினருக்கு தரப்படுகிறது என்பதைக் காட்டிலும், முதன்மையான அளவுகோலாக பொருளாதார அடிப்படையினைக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகநீதியின் அடிப்படையில்தான் இதுவரை இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் பொருளாதார அளவுகோல் ஒரு அளவுகோலாகக் கருதப்படவில்லை. இந்தியாவில் ஒருவருடைய பிறப்பின் அடிப்படையிலான உருவாக்கப்பட்ட பாகுபாடு அவரை சமுகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற அனைத்து நிலைகளிலும் பாதித்துள்ளது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட பல சமூகங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான நீதியை உறுதி செய்வதே சமூக நீதிக் கொள்கையின் அடிப்படை. பாதிக்கப்பட்ட இம்மக்கள் கல்வி, தொழில், அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நன்கு உயர்ந்திட, இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் சமூக நீதியின் சித்தாந்தம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் கோரிக்கை. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்திலிருந்தே இந்தக் கோரிக்கை விவாதிக்கப்பட்டு வருகிறது. அதே காலகட்டத்தில்தான் புரட்சியாளர் அம்பேத்கர் ஒன்றிய அரசில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தார். இடஒதுக்கீடு வழங்குவதற்கு பொருளாதார நிலையை அளவுகோலாக கருதலாமா என்பது குறித்து விரிவான விவாதம் அப்போது நடைபெற்றது. ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட அன்றைய தலைவர்களும், அரசியல்களத்திற்கு வெளியே உழைத்த சமுக ஆர்வலர்களும், அறிவுத்துறையினரும் இது தொடர்பாக விரிவான, ஆழமான விவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் அனைவரும் இறுதியாக பொருளாதார நிலையை ஒரு அளவுகோலாகக் கருதக்கூடாது, சமூக அந்தஸ்தை அளவுகோலாகக் கருதுவதே மட்டும் உண்மையான ஜனநாயகம் என்ற முடிவுக்கு வந்தனர். அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டதும் அவ்வாறே.thirumavalavan 373ஆனால், மோடி அரசு தற்போது பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நாம் எதிர்க்கிறோம். மோடி அரசின் தந்திரம் என்னவென்றால், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் நம்மை உயர்சாதியினரையும் அவர்களுக்கான வாய்ப்பையும் எதிர்ப்பவர்கள் என்ற தவறான சித்திரத்தை உருவாக்கியுள்ளனர். உயர் சாதியினர் சமூகப் படிநிலையில் மேலே உள்ளனர். அவர்களில் சிலர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருக்கலாம், அதை நாம் மறுக்க முடியாது. அதானால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அவர்கள் பின்தங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் அவர்களின் சமூக அந்தஸ்து அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்கிறது. எனவே, அவர்கள் விரும்பியதை அடைய, அவர்களுக்கு எந்த இடையூறுகளோ, நெருக்கடிகளோ இல்லை. எனவே, அப்போதைய தலைவர்கள் இந்திய சமுகத்தை, சமூக அந்தஸ்தின் அடிப்படையில் சமூகப் படிநிலையில் மேலெ உள்ளவர்கள் எனவும் சமூகப் படிநிலையில் பிற்படுத்தப்பட்டோர் எனவும் இரண்டாகப் பிரித்தனர். சமூகப் படிநிலையில் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் சமூக அந்தஸ்து மட்டுமே தீர்மானிக்கிறது. அதை கவனித்தில் கொண்டே சமூக நீதிக் கொள்கை உருவாக்கப்பட்டது. எனவே, முன்னேறுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய அனைத்து உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான ஒரே அளவுகோலாக சமூக நிலை (Social Status) தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களில் சிலர் பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தாலும், அவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதி (BC & MBC), பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) என்பதால் இன்றும் தொடர்ந்து பரவலாக அவமானப் படுத்தப்படுகிறார்கள். அதேசமயம், உயர் சாதியினரில் சிலர் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும், அவர்களின் உயர்ந்த சமூக நிலை அவர்களுக்கு அதிக கௌரவத்தையும் மதிப்பையும் வழங்குகிறது.

எனவே, இந்த வேறுபாட்டையும் முரண்பாட்டையும் கருத்தில் கொண்டு, பொருளாதார நிலையை ஒரு அளவுகோலாகக் கருத முடியாது, சமூக அந்தஸ்து மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு பொருத்தமானது. அதுதான் சமூக நீதி. எனவே, சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை குழிதோண்டிப் புதைத்திட பொருளாதார நிலை அடிப்படையிலான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் சட்டத்தை பாஜக அரசு இயற்றியுள்ளது. இவர்களின் முக்கிய நோக்கம் உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது அல்ல. மாறாக BC, MBC, SC, ST பிரிவினர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறைமுகமாக எதிர்ப்பதும் தடுப்பதும் ஆகும். BC, MBC, SC, ST பிரிவினர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டிற்கு மெல்ல மெல்ல முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு என்ற பெயரில், பொருளாதார நிலை அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜகவினர் கொண்டு வந்துள்ளனர். ஆக, சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதே மோடி அரசின் முக்கிய நோக்கம். இடஒதுக்கீடு வழங்குவதற்கு பொருளாதார நிலையை ஒரு அளவுகோல் எனக் கருதினால், பின்வரும் நாட்களில் சமூக நீதி பற்றிய விவாதங்கள் நின்றுவிடும். எனவே, சாதி, மதத்தின் பெயரால் இதுவரை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்க: அனைவருக்கும் வழங்கப்பட்ட உரிமைகளை மெல்ல மெல்ல அழித்துவிடலாம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இந்த 10% இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளனர். உயர் சாதியினருக்கு உதவுவதை விட, அவர்களின் உண்மையான நோக்கம் SC, ST, BC, MBC மக்களுக்கு வழங்கப்படும் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முற்றிலுமாக அழிப்பது மட்டுமே. எனவே, இடஒதுக்கீடு வழங்குவதற்கு பொருளாதார நிலையை அளவுகோலாகக் கருத வேண்டும் என்ற கருத்தை நாங்கள் எதிர்க்கிறோம். உயர்சாதியினருக்கு உதவி செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம் என்ற கண்ணோட்டத்தில் இதனைப் பார்க்கக்கூடாது. அரசு அவர்களுக்கு வேறு எல்லா வகையிலும் உதவ முடியும். அவர்களுக்கு கடன்களை வழங்கலாம். அல்லது வேறு வழிகளில் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கலாம். ஆனால் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் பொருளாதார நிலை அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டு வர சட்டம் இயற்றியது கடும் கண்டனத்துக்குரியது. இது சமூக நீதியை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு பிற்போக்கு நடவடிக்கை என்ற அடிப்படையில் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் (OBC) கிரீமிலேயர் முறை (creamy layer) என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? மேலும், SC/ST இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அமல்படுத்துவதற்கான முதல் படி இந்தத் திருத்தம் என்று பல அம்பேத்கரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பொருளாதார நிலையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த அவர்கள் கையாண்ட முதல் உத்தி கிரீமிலேயர். இதற்கு முன்பு கிரீமிலேயரை அனுமதித்ததால், இன்று 10% இடஒதுக்கீடு திருத்த மசோதாவை நிறைவேற்றுவது அவர்களுக்கு எளிதாகிவிட்டது. இது பிற்படுத்தப்பட்டோர் (BC & MBC) இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும், எனவே பட்டியலின, பழங்குடியின மக்கள் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பது தவறான பார்வை. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பை, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பைக் காப்பதன் மூலமும், அதேபோன்று பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பை, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பை காப்பதன் மூலமும் மட்டுமே உறுதிசெய்ய முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு எந்த வகையில் பாதிக்கப்பட்டாலும், அது பட்டியலின, பழங்குடியின மக்களையும் பாதிக்கும். பொதுவாகப் பார்த்தால் கிரிமிலேயர் அடுக்கு சரியாகத் தோன்றலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே பாஜகவின் துரோகமும் சூழ்ச்சியும் புரியும். SC, ST, BC, MBC மக்களுக்கு தலைமுறை தலைமுறையாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தர வேண்டுமா என்ற கேள்வி இயல்பானதாகத் தோன்றும். ஆனால், SC, ST, BC, MBC மக்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்குள், SC, ST சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள். அதனால், பிற சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை இது பாதிக்காது. உண்மையில், SC, ST, BC, MBC மக்களில் பலர் கல்வி இப்போது கற்கத் தொடங்கியுள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரிகளில் தொடங்கி இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். தந்தை நீதிபதியாகவும், தாயார் பேராசிரியராகவும் இருக்கும் ஒருவர் மீண்டும் இடஒதுக்கீடு பெற வேண்டுமா, வேண்டாமா என்பது போன்ற கேள்விகள் எழுவதற்குப் பதிலாக, அவர்கள் தானாக முன்வந்து பொதுப் பிரிவினருக்கான போட்டியில் (General Category) பங்கேற்க வேண்டும். அப்படிச் செய்தால், கிரிமிலேயர் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்த BC, MBC, SC, ST சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பொருளாதார நிலை காரணமாக நன்றாகப் படிக்கும் சூழல் கொண்டவர்கள், தாமே முன்வந்து பொதுப் பிரிவினருக்கான போட்டியில் பங்குபெற வேண்டும். பொதுப் பிரிவினருக்கான போட்டியில் தங்களை இணைத்துக் கொள்ள மாட்டோம், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட SC, ST, MBC, BC இடங்களில் மட்டுமே போட்டியிடுவோம் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருப்பதுதான், இந்த சமூகங்களைச் சார்ந்த சில குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன்களை பெறுகிறார்கள் என்று தொடங்கி கிரிமிலேயர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுவதற்கு முதன்மைக் காரணம். ஏற்கனவே நன்றாகப் படித்து பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளவர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சேர விரும்புவர்கள் தானாக முன்வந்து பொதுப் பிரிவினருக்கான போட்டியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், கிரிமிலேயர் தொடர்பாக எந்த விவாதமும் நடக்காது, அதே வேளையில் SC, ST, BC, MBC இடஒதுக்கீட்டில் பலன் பெற்ற மூன்றாம், நான்காம் தலைமுறை மாணவர்கள் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் வாய்ப்புகளைப் பாதிக்கவும் வாய்ப்பில்லை. எனவே, கிரிமிலேயரை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் சிக்கல் உள்ளது. ஆனால், பட்டியிலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை மெல்ல மெல்ல முடிவுக்குக் கொண்டு வர, பொருளாதார நிலை அடிப்படையிலான இடஒதுக்கீட்டைக் கொண்டுவர ஆளும் வகுப்பைச் சேர்ந்தவர்கள், கிரிமிலேயரை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். இது சமூக நீதிக்கான சாவுமணி. ஒரு பெரிய ஆபத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி கிரிமிலேயர் என்பதை ஏற்கவில்லை, ஏனெனில் அது பொருளாதார நிலை அடிப்படையிலான அளவுகோலை கொண்டு வருகின்றது.

ஒன்றிய அளவில் 50% இட ஒதுக்கீட்டு உச்ச வரம்பு இருந்தது, இப்போது பாஜக அரசு கொண்டு வந்த 10 விழுக்காடு EWS இடஒதுக்கீட்டின் மூலம் மத்திய நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் வரம்பு மொத்தம் 60 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மாநில அளவில், தமிழகத்தில், அரசு நிறுவனங்களில், 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தமிழகத்தை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

தமிழகம் வழங்கும் 69% இடஒதுக்கீடும், ஒன்றிய அரசு வழங்கும் இடஒதுக்கீடும் வேறுபட்டவை. அவை இரண்டையும் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. மாநில அரசு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குகிறது. ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் ஒன்றிய அரசு இட ஒதுக்கீடு வழங்குகிறது.         ஒன்றிய அளவில் பட்டியலின மக்களுக்கு 15%, பழங்குடி மக்களுக்கு 7.5% இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம், 22.5% இடஒதுக்கீடு SC, ST மக்களுக்கு தரப்படுகிறது. OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு இருப்பதாலும், SC, ST பங்கு 22.5% ஆக இருப்பதாலும் OBC பிரிவினருக்கு 27% மட்டுமே வழங்கப்படுகிறது. மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது. SC, ST மக்கள் தொகை 22.5 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது. SC மக்கள் தொகையும் 15 விழுக்காட்டை தாண்டிவிட்டது. ஆனால் அரசு இன்னும் பழைய நடைமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது. இது மோசடியான செயல்.

இப்படியிருக்க, தமிழகத்தைப் பொறுத்தவரையில், 50 விழுக்காட்டைத் தாண்டி இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கூடாது. அதே நேரத்தில் 69% இட ஒதுக்கீடும் அமலுக்கு வர வேண்டும் என்ற நிலை இருந்தது. எனவே, இந்திய அளவில் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஒன்றிய அரசும் இறுதியாக அதைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டு, SC, ST மக்களின் 22.5% இட ஒதுக்கீட்டைப் பாதிக்காமல் இருக்க அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும் மாநில அரசுகள் 50 விழுக்காட்டிற்கு கூடுதலாக இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் விதித்திருந்த உச்ச வரம்பையும் மீறி, 19% சேர்த்து மொத்தம் 69% ஆனது. இதை மீண்டும் 50% ஆக குறைக்க முடியவில்லை. மேலும், SC,ST இட ஒதுக்கீட்டிலும் கை வைக்க முடியாது. எனவே 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது கடினமாக இருந்தது. எனவே, எட்டாவது அட்டவணையில் ஒரு விதி சேர்க்கப்பட்டு, இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது, 69% SC, ST, BC, MBC இட ஒதுக்கீட்டை பொறுத்த வரையில், இந்த ஏற்பாடு எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. எனவே, ஒன்றிய, மாநில அளவிலான இடஒதுக்கீடு வரம்புகள் வேறுபட்டவை. இந்த இரண்டு உரிமைகளையும் பாதுகாத்தாலும், உச்சவரம்பை உடைத்து, BC, MBC, SC, ST பிரிவினருக்கு இன்று இருக்கும் உண்மையான மக்கள்தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவும் முன்வர வேண்டும். இதுவே வி.சி.க.வின் நிலைப்பாடு. எனவே, உச்ச நீதிமன்றம் உச்சவரம்பு நிர்ணயித்திருந்தாலும், வரும் காலத்தில் இதை மாற்ற வேண்டும். SC, ST மக்களுக்கு அவர்களுடைய உண்மையான மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பதே VCK வின் கோரிக்கையாகும்.

இட ஒதுக்கீடு கொள்கையைப் பொறுத்தவரை, பல அம்பேத்கரிய செயல்பாட்டாளர்களும், சிந்தனையாளர்களும் அது முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளனர். ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீடு எந்த வகையில் அமல்படுத்தப்படுகிறது? SC, ST, BC, MBC பெரும்பான்மை மக்கள் சரியான முறையில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்களா?

இட ஒதுக்கீடு கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. இது ஒரு மோசடியான செயல் என்று நான் நம்புகிறேன். SC, ST யாக இருந்தாலும் சரி, BC, MBC யாக இருந்தாலும் சரி, இட ஒதுக்கீடு 100% முறையாக அமல் படுத்தப்படவில்லை. SC மாணவர்களைப் பொறுத்தவரை, போதுமான தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை என்று அவர்கள் எப்போதும் திரும்பத் திரும்ப கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது. 5% முதல் 6% இட ஒதுக்கீடு மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. இதையும் கூட, அதிகாரமற்ற, கீழ்மட்ட பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு மட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, அனைத்து துறைகளிலும், 100% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதாவது SC, ST மக்களுக்கு வழங்கப்படும் 22.5% , BC, MBC (ஒன்றிய அளவில் OBC) மக்களுக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தவேண்டும். அப்போதுதான் இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். தற்போது பலர் இதை கோருவதில்லை. ஆளும் வர்க்கங்கள், குறிப்பாக சங்பரிவார் குழுக்கள், இந்த இட ஒதுக்கீட்டை கூட குலைத்து இட ஒதுக்கீடே கூடாது என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றன. ஒவ்வொரு நாளும் சமூக நீதியைக் காக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்பதே உண்மை நிலை.

சமீபகாலமாக, பார்ப்பனியக் கருத்துருவாக்கம் காரணமாக, பொதுப் பிரிவு (General Category) என்பது உயர் சாதியினருக்கு ஒரு பிரிவு மட்டுமே என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அது தவறு. பொதுப்பிரிவு இடங்களை உயர் சாதியினருக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் ஒரு பெரிய சதித்திட்டம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

மறைமுகமாக அல்ல. வெளிப்படையாகவே செயல்படுத்துகிறார்கள். இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பு 50% என்றால், மீதி 50% உயர் சாதியினருக்கு மட்டுமே பொருந்தும் என்பது இப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட சமூகங்களால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த வாய்ப்புகளையும் முழுமையாகப் பெற இயலவில்லை. இந்நிலையில், SC, ST இடங்களை நிரப்ப போதுமான தகுதியானவர்கள் இல்லை என்று கூறுகின்றனர். பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு இல்லை. இதனால், அனைத்து உயர் பதவிகளையும் பொதுப்பிரிவு என்ற பெயரில் உயர்சாதியினர் என்று சொல்லப்படுபவர்கள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளனர். அவர்களின் மக்கள் தொகை உண்மையில் மிகக் குறைவு. ஆனால் அவர்களின் பெறும் இடங்கள் 50 விழுக்காட்டை விட அதிகமாக உள்ளது. நடைமுறை உண்மை என்னவென்றால், பொதுப் பிரிவினர் என்று அழைக்கப்படுபவர்கள், அல்லது வேறுவிதமாகக் கூறினால், உயர் சாதியினர், இடஒதுக்கீடு பெறும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உரிமைகளிலும் வாய்ப்புகளிலும் அத்துமீறுகின்றனர். சமூக நீதியைக் காக்க விரும்புபவர்கள் இதைப் புரிந்துகொண்டு, தகுதி பெற்றவர்களை BC, MBC, SC, ST சமூகங்களில் இருந்து பொதுப் பிரிவுக்கு மாற்ற முயல வேண்டும். இது முக்கியமானது. இட ஒதுக்கீடு பெறும் வகுப்பில் உள்ளவர்கள், பொதுப்பிரிவில் போட்டியிடத் தகுதியுடையவர்களாக இருந்தால், அவர்கள் பொதுப் பிரிவினராகக் கருதப்பட வேண்டும். அப்போதுதான் உயர்சாதியினர் ஆக்கிரமித்துள்ள 50% இடங்களை மீட்க முடியும். அப்போது தான் உண்மையான சமூக நீதியையும் பாதுகாக்க முடியும்.

பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களை பாதிக்கும் வகையில் GST, NEET போன்ற திட்டங்களை மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மாநிலங்களின் உரிமையை நசுக்கும் தன்மை கொண்டவையா? இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசும் மாநிலங்களும் எதிரெதிராக நிற்கின்றனவா? 

உயர்சாதியினக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையில் இருக்கும் மோதல்போக்கில் எந்த அளவு உண்மை இருக்கிறதோ, அதே அளவு உண்மை, ஒன்றியத்தை ஆளும் கட்சிகள், மாநில அரசுகளை அணுகுவதில் உள்ளது. மாநிலக் கட்சிகள் ஒன்றிர அரசை பலவீனப்படுத்துவதால், மாநிலக் கட்சிகள் வலுவாக வளரக்கூடாது என்று ஓன்றிய அளவில் ஆளும் கட்சிகள் விரும்புகிறார்கள். எனவே, வலுவான ஒன்றிய அரசை அமைப்பதே பாஜகவின் முக்கிய நோக்கமாகும். ஒரு நாடு, ஒரு பண்பாடு, ஒரு ஆட்சியை என்பது தான் அவர்களின் நோக்கம். எனவே, மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவது, மாநிலம் சார்ந்த உணர்வுகளை நசுக்குவது, அரசியல் அரங்கில் வலுவான மாநிலக் கட்சிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது போன்றவையே அவர்களின் திட்டங்கள். உயர் சாதியினருக்கும் மற்ற சாதியினருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அதிகப்படுத்த பாஜக முயல்வதைப் போல, வலுவான ஒன்றிய அரசையும், பலவீனமான மாநில அரசாங்கங்களை நிறுவுவதும், மெல்ல மெல்ல மாநில அரசாங்கங்களை அழிப்பதும் அல்லது ஒன்றிய கட்சிகளின் மாநில அரசாங்கங்களை நிறுவுவதுமே அவர்களின் நோக்கமாகும். இதைச் செயல்படுத்த, அவர்கள் பல தேச விரோதச் சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். இது ஒரு தேச விரோத நடவடிக்கை என்று கருதுவதை விட மாநில உணர்வுகளை நசுக்குவதாகவே கருதவேண்டும். காலப்போக்கில், எந்த ஒரு மாநிலக் கட்சியும் இருக்கக் கூடாது அல்லது இருக்க வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவர்களின் விருப்பம்.

2006ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிதான் EWS இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை அமைத்தது. இப்போது நாடாளுமன்றத்திலும் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க., மசோதாவை எதிர்த்தது, ஆனால் வாக்கெடுப்புக்கு முன்பாக வெளிநடப்பு செய்தது. ஒடுக்கப்பட்ட, பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான பிஎஸ்பி மசோதாவை ஆதரித்து வாக்களித்தது. சிபிஎம் கட்சியும் எதிர்த்தாலும் ஆதரவாகவே வாக்களித்தது. இது குறித்த உங்கள் பார்வை என்ன?

இது ஒரு கசப்பான உண்மை. ஒருமித்த சிந்தனை ஜனநாயக சக்திகளிடையே இன்னும் உருவாகவில்லை. அது நடக்க வேண்டும். அதைச் செய்ய எங்களைப் போன்றவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனவே, எத்தனை இடர்பாடுகள் நடந்தாலும், ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி உங்கள் பார்வை என்ன? தற்போதைய பிரச்சினைக்கு இது பொருத்தமானது என்று நினைக்கிறீர்களா? ஏன் தமிழ் நாட்டில் இது தொடர்பான முக்கியப் பேச்சு இல்லை என்று நினைக்கிறீர்கள்?

சமூக நீதியை முழுமையாக செயல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். சாதியை ஒழிக்க, சமூக நீதி என்பது முன் நிபந்தனை. சமூக நீதியை உறுதி செய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது. எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது என்று விசிக கோருகிறது. இதைப் பற்றிய விவாதம் இதுவரை தமிழகத்தில் பரவலாக நடைபெறவில்லை. அது நடைபெற வேண்டும். அதைச் செய்ய அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்.

உச்ச நீதிமன்றங்களில் உயர்சாதியினரின் ஏகபோக உரிமை பற்றி உங்கள் பார்வை என்ன? கொலிஜியம் அமைப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. நீதித்துறை, பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், இராணுவம், காவல் துறை போன்ற அனைத்து அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது மிக அவசியம். இதனால் தான் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகிறோம். அது அமலுக்கு வந்தால் ராணுவம், நீதித்துறை என அனைத்து நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும். மேலும், ஜனநாயகமும் பாதுகாக்கப்படும்.

EWS இட ஒதுக்கீடு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. வழக்கு தொடர்ந்துள்ளது. உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில் நடக்கும் நீதிமன்றங்களில் இருந்து தகுந்த தீர்ப்பைப் பெற முடியும் என்று நினைக்கிறீர்களா? 

நீதிமன்றங்களை அணுகுவது எதிர்ப்பின் சின்னம். அவர்கள் எப்பொழுதும் நமது நலன்களுக்கு எதிரான தீர்ப்புகளையே எல்லா நேரங்களிலும் வழங்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான நேரங்களில், நமது நலன்களுக்கு எதிராக தீர்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால் சில சமயங்களில், சில ஜனநாயக சக்திகள் நீதிபதிகள் வடிவில் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். ஆக, இந்த விஷயத்திலும் அரிதினும் அரிதாக, அதிசயம் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நேர்மையான, ஜனநாயக சக்திகள் எங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.

அப்படியானால், அது ஒரு அதிசயம் மட்டுமே என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அரிதாக ஏதாவது நடந்தால் அதை அதிசயம் என்கிறோம். பலமுறை, அதுவும் நடந்துள்ளது. எல்லா நீதிபதிகளும் எங்களுக்கு எதிராக இருந்திருக்கிறார்கள் என்றோ, எல்லா அதிகாரிகளும் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு எதிராக இருந்திருக்கிறார்கள் என்றோ சொல்ல முடியாது. பல ஜனநாயக சிந்தனை கொண்ட மக்களும் உள்ளனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண அய்யர், பிறப்பால் பார்ப்பனராக இருந்தும் ஜனநாயகத்தின் பக்கம் நின்று பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதேபோல் நீதியரசர் சந்துருவும் ஜனநாயகத்தின் பக்கம் நின்று பல நல்ல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். நாம் சற்றும் எதிர்பார்க்காத சமயங்களில், உச்ச நீதிமன்றம் பல நல்ல தீர்ப்புகளை வழங்கி நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி ஒரு நீதி வரும் என்று எதிர்பார்த்து வழக்குப் பதிவு செய்துள்ளோம்

EWS இட ஒதுக்கீடு எனும் சவாலை முன்னெடுத்துச் செல்ல விசிக எவ்வாறு திட்டமிடுகிறது? அது சட்ட அடிப்படையில் மட்டுமா அல்லது சமூக அரசியல் அடிப்படையிலும் அமையப் போகிறதா? 

இந்தப் பிரச்சினை அனைத்து தளங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும். உயர் சாதியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்ற பிம்பத்தை உருவாக்கக் கூடாது. உயர்சாதியினருக்கு இந்த இடஒதுக்கீடு வழங்கப்படலாம் என்றாலும், அது முழுவதுமாக அவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்துக் கட்டவே EWS இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. எனவே, சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டுமானால், இந்த 10% EWS இடஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இதை சட்ட அடிப்படையில் அணுக வேண்டிய அவசியம் உள்ளது. சமூகம், பொருளாதாரம், பண்பாடு போன்ற அனைத்து தளங்களுக்கும் இதை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் உள்ளது. விசிக இந்த சிக்கலை இவ்வாறே அணுகுகிறது. EWS இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை தீர்க்கும் வரையில் சவாலை தொடர்ந்து எதிர்கொள்ளும் நோக்கத்துடன் விசிக உள்ளது.

விசிக சமீபத்தில் நடத்திய நாடு காப்போம் (Save Nation) மாநாட்டில் EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக குரல் எழுப்பியதா? நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்னதால், இந்த EWS இடஒதுக்கீடு மசோதா நாட்டின் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறீர்களா?

இந்த 10% EWS இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி என்றும். எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாடு காப்போம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும், இந்தப் பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம். இதே நிலை நீடித்தால், நாளடைவில் சமூக நீதிக் கோட்பாடு முற்றிலும் அழிந்துவிடும். அது தொடர்பாக எந்த விவாதமும் நடக்காது. எனவே, இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதும், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் விசிகவின் முக்கிய நிலைப்பாடுகளாகும்.

இருப்பினும், EWS இடஒதுக்கீடு தொடர்பாக, பொது மக்கள் முதல் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரை, தமிழகத்தில் ஒரு அமைதி நிலவுகிறது. நீட்-அனிதா மரணம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது பெருந்திரளாக வீதிக்கு வந்தவர்கள் இப்போது ஏன் வெளியே வரவில்லை?

தமிழகத்திலாவது சில எதிர்ப்புக் குரல்கள் உள்ளன. மற்ற மாநிலங்களில் எதுவும் இல்லை. காரணம், அவர்கள் முற்றிலுமாக சமஸ்கிருதமயமாக்கப் பட்டவர்களாகவும் இந்து மயமாக்கப்பட்டவர்களாகவும் மாறிவிட்டனர். பல மாநிலங்களில் மாநில கட்சிகள் கூட சங்க பரிவாரத்தின் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகின்றன. எனவே, இந்த 10% இட ஒதுக்கீடு தொடர்பான நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள, அவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. இது சமூக நீதிக்கு எதிரான இட ஒதுக்கீடு என்ற அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த இடஒதுக்கீடு உயர் சாதியினருக்கு வழங்கப்படுகிறதா அல்லது மற்ற சாதியினருக்கு வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழும். இந்த EWS இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என்பதை புரிந்துகொள்வதில் சிலருக்கு சிக்கல் உள்ளது. சங்பரிவார் அமைப்புகளுடன் அவர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தான் அப்படி. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கம் சார்ந்தவர்களும், இடதுசாரிகளும் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருப்பதால், EWS இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்க முடிகிறது.

கடந்த காலங்களில், பிரதிநிதித்துவ உரிமைகளுக்கு சவால் வரும் போதெல்லாம் தமிழ்நாடு மிகப்பெரிய போராட்டங்களைக் கண்டது. ஆனால், இப்போது நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர, திமுக போன்ற பெரிய கட்சிகள் கூட இந்தப் பிரச்னையை வீதிக்கு கொண்டுவரவில்லை. பெரியார் திடலில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது, இதில் விசிகவும் பங்கேற்றது. நமது போராட்ட வடிவங்கள் மாறிவிட்டதா?

இல்லை. அப்படி குறைத்து அளவிட முடியாது. கடந்த காலங்களில் ஊடகங்களின் வளர்ச்சியும் வலிமையும் குறைவாகவே இருந்தது. இப்போதெல்லாம், யாராவது உண்ணாவிரதம் இருந்தால், செய்தி உலகம் முழுவதும், மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது. எனவே, லட்சக்கணக்கானோர் பெரிய அளவில் திரண்டிருந்தால் மட்டுமே அதை போராட்டமாக கருத வேண்டும் என்றோ, குறைந்த அளவில் நடந்தால் அதை நீர்த்துப் போன போராட்டம் என்றோ ஒரு முடிவுக்கு வரக்கூடாது. ஆனால், எதிர்க்க வேண்டியதை எதிர்ப்பதும், உரிய நேரத்தில் அதைச் செய்வதும் தான் எந்தப் போராட்டத்திற்கும் முக்கியப் பண்பு. அது பல கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டமாகவோ, ஒரு கட்சி நடத்தும் போராட்டமாகவோ இருக்கலாம், அல்லது சுமார் 10,000 பேர் இணைந்தோ, வெறும் 10 பேர் மட்டுமே கூடி நடத்தும் போராட்டமாகவோ இருக்கலாம். எப்படியானாலும் எதிர்ப்பு என்பது எதிர்ப்பே. நமது எதிர்ப்பை வெளிப்படுத்த அது ஒரு வாய்ப்பு. எனவே, கடந்த காலப் போராட்டங்களையும் நிகழ்காலப் போராட்டங்களையும் ஒப்பிடத் தேவையில்லை என்று நான் கருதுகிறேன்.

இறுதியாக, SC, ST, BC, MBC மக்கள், நமது இளைஞர்கள், நமது ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை சமூகம் இந்தப் பிரச்சினையை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

முதலில், இது பற்றிய விரிவான விவாதம் தொடங்கப்பட வேண்டும். இதில் நமது இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். அனுதாபத்தின் அடிப்படையில் சில குறிப்பிட்ட சமூகங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுவதாக சமூக நீதியை நாம் பார்க்கக் கூடாது. பல நூற்றாண்டுகளாக இதுவரை உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்பட்ட சட்ட உரிமையே சமுக நீதி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, சமூக நீதி குறித்து விரிவான விவாதமும் விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற வேண்டும். இளைஞர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சமூக நீதியில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். சமூக நீதி என்பது ஜனநாயகத்தின் தலைவாசல் அல்லது நுழைவாயில். அது அழிந்தால், சனாதனம் இங்கு மீண்டும் வெற்றி பெறும். அரசியலற்ற மக்கள் திரளான பொது சமூகத்திடம் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதும், விரிவான விவாதங்களை உருவாக்குவதும், அதன் அடிப்படையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன் வருவதும் முக்கியம் என்று கருதுகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றன என்று நினைக்காமல், ஜனாநாயகத்தைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதைப் புரிந்துகொண்டு, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் அடங்கிய பொதுச் சமூகம் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதை உயர்சாதியினருக்கு எதிரான போராட்டமாக கருதாமல், சமூக நீதியை பாதுகாக்கும் போராட்டமாகவும், அதை தொடரும் போராட்டமாகவும் கருதி, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அனுமதிக்காமல், சமூக நீதி அடிப்படையில் மட்டுமே ஒதுக்கீடு அளிப்பதற்கான போராட்டமாகவும் கருதவேண்டும். இதைத்தான் நான் அவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.

வட்ட மேஜை இந்தியா சார்பில் முதல்முறையாக உங்களை சந்திக்கிறோம். இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி. வட்டமேசை இந்தியாவிற்கான கருத்து அல்லது ஆலோசனை உங்களிடம் உள்ளதா?

வட்ட மேஜை இந்தியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வட்டமேசை இந்தியா என்பது ஜனநாயக சக்திகளை சரியாக அடையாளம் கண்டு அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யும் ஒரு ஜனநாயக இணையதளம் என்பதை நான் அறிவேன். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற ஜனநாயகத் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள், சித்தாந்தங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுவதற்கு வட்டமேசை இந்தியா ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது. வட்ட மேஜை இந்தியாவிலிருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட சில கட்டுரைகள் ஆங்கிலத்தில் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பல ஊடக நிறுவனங்கலும் இணையதளங்களும் இருந்தாலும், வட்ட மேஜை இந்தியா இத்தகைய ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இளைஞர்கள் பிரகாசிக்க அதிக இடத்தை அனுமதித்த விதம் மிகவும் பாராட்டத்தக்கது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய வட்ட மேஜை இந்தியாவுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

(இந்த கலந்துரையாடல் 3.5.2019 அன்று நடைபெற்றது. மதிப்பிற்குரிய டாக்டர் தொல். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உயர் சாதியினரிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த வாய்ப்பை வழங்கிய அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது தேர்தல் வெற்றிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி: Round Table India இணையதளம் (2019, ஜீலை 19 வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுந்தர் பார்த்தசாரதி

Pin It