ஒன்றுபட்ட சோவியத்தின் முன்னால் அதிபர் மிகைல் கோர்பசேவ் கடந்த வாரம் முதுமையால் உயிரிழந்தார். அவர் 1985 முதல் 1991-ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை அதன் தலைவராக இருந்தார்.

அவரது மறைவிற்கு அமெரிக்க, பிரான்ஸ், ஆஸ்திரிய நாட்டு அதிபர்கள், ஐநா பொதுச் செயலாளர், பிரிட்டன் பிரதமர், இந்திய பிரதமர் ஆகியோர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கோர்ப்பச்சேவ் தனது கொள்கையால் ரசிய மக்களுக்கு சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் கொண்டு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

mikhail gorbachevஸ்டாலின் அவர்களின் மறைவிற்கு பின்பு அங்கு அதிகாரத்திற்கு வந்த குருஷ்சேவ் முதல் பிரஸ்னேவ் வரை அனைவரும் முதலாளித்துவச் சிந்தனைப் போக்கை மாற்றுவதற்கு பதிலாக அவர்கள் அம்முதலாளித்துவத்தை மறுகட்டமைப்பு செய்யும் சதிவேலையில்தான் ஈடுபட்டார்கள். இந்த திருத்தல்வாதிகள் சோசலிசக் கருத்துக்களோடு தொடர்பில்லாத கருத்துக்களால், கொஞ்சம் கொஞ்சமாக சோசலிசத்தின் அடிப்படைக் கூறுகளை செல்லரித்துப் போகச் செய்தார்கள்.

1950 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கோர்பச்சேவ் எப்போதும் சோவியத் அதிகார வர்க்கத்திற்கு விசுவாசமான சேவகராகவே இருந்தார். முழுமையான முதலாளித்துவ மீட்சியை செய்து சோவியத் ஒன்றியத்தை ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகளாக உடைத்துவிட்டு, தங்களை மேலுயர்த்திக் கொண்ட ஒட்டுண்ணிகளால் நடத்தப்பட்ட இறுதிக் காட்டிக்கொடுப்பு நடவடிக்கைக்கு அவரே தலைமை பொறுப்பேற்று இருந்தார்.

1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வெளிப்படைத் தன்மை கொள்கை (கிளாஸ்னோஸ்ட் - glasnost) மற்றும் மறுசீரமைப்பு (பெரஸ்த்ரோய்கா - perestroika) கொள்கைகள் போன்றவை முதலாளித்துவ மீட்சியை ஏற்படுத்தி உலக சந்தையுடன் சோவியத் பொருளாதாரத்தை மறுஒருங்கிணைப்பு செய்தது.

கோர்பச்சேவின் இந்த கொள்கைகளின் விளைவாக 1917 ரஷ்யப் புரட்சியில் இருந்து உருவான தேசியமயமாக்கப்பட்ட சொத்து அமைப்பு முறை உடைந்து தனியார் சொத்துடமை முறை உருவானது. உற்பத்திச் சாதனங்களின் மீது தனி சொத்துரிமை சட்டப்பூர்வமானது

மேலும் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது, சிறு வணிகங்களை சட்டபூர்வமாக்கி முக்கிய தொழில்துறைகளுக்கான மானியங்களை நிறுத்தியது. தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்தது போன்றவற்றால் சோவியத் பொருளாதாரம் மற்றும் சோவியத் சமூகம் சீர்குலைத்தது.

1989 வாக்கில், சோவியத் ஒன்றியத்தில் சுமார் 43 மில்லியன் பேர் மாதத்திற்கு 75 ரூபிள்களுக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்தார்கள். அந்தளவிற்கு கோர்பச்சேவ் நாட்டை பொருளாதார ரீதியாக சீரழித்து வைத்திருந்தார்.

சோசலிஸப் பொருளாதாரத்தின் ஒரு மிக முக்கிய அம்சம் திட்டமிடுதலாகும். காரணம் முதலாளித்துவப் பொருளாதாரம் சமூகத் தேவை குறித்து கவலை எதுவும் இல்லாமல் எது அதிக விலைக்கு விற்பதற்கு வாய்ப்பு உள்ளதோ அதை எல்லாம் உற்பத்தி செய்து விற்று லாபம் ஈட்டுவது. ஆனால் கோர்பச்சேவ் ஆணைகளின் அடிப்படையிலான நிர்வாக முறை என்று கூறி அந்த முறையை முடிவுக்குக் கொண்டு வந்தார். மறுசீரமைப்புக் கொள்கைகளை அறிமுகம் செய்தார்.

இதன் மூலம் லாப நோக்க உற்பத்தி முறையை மீண்டும் சோவியத்தில் தீவிரமாக அமுல்படுத்தி முதலாளித்து மீட்சியை விரைவு படுத்தினார். திட்டமிட்ட பொருளாதார அமைப்பு முறையை உடைத்து ரசிய முதலாளித்துவ வர்க்கமும் பன்னாட்டு முதலாளித்துவ வர்க்கமும் நாட்டைக் கொள்ளையடிக்க திறந்து விட்டார்.

இதற்கு ஏற்றார்போல கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகும் தகுதி குறித்த கட்சி விதிகளும் தளர்த்தப்பட்டன. கட்சியில் கம்யூனிஸ்ட் கொள்கையோடு தொடர்பில்லாத பல சுயநலவாத சந்தர்ப்பவாத நபர்கள் உள்ளே நுழைய திட்டமிட்டு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதனால்தான் கோர்ப்பச்சேவ் கொண்டு வந்தது சீர்திருத்தமல்ல எதிர்புரட்சி என்று கம்யூஸ்ட்கள் கூறுகின்றார்கள். சோவியத் யூனியனில் நடைபெறுவது பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி என்பதை மாற்றி முதலாளித்துவத்தைக் கொண்டுவர எப்படி அதை அனைத்து மக்களுக்குமான அரசு என்று குருஷ்சேவ் சொன்னாரோ அதையேதான் கோர்பச்சேவும் சொன்னார்.

அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுடன் நெருக்கமாக உறவில் இருந்தார். அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்று சொல்லி அவருக்கு 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட கடுமையான உணவுத் தட்டுப்பாடும் கோர்பச்சேவின் கையாலாகத்தனமும்,ஏகாதிபத்திய அடிமைப் போக்கும், பல தேசிய இன மக்களின் உரிமைகளை மறுத்ததும் பல மாநிலங்கள் பிரிந்து போகும் நிலையை ஏற்படுத்தியது. பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது. இந்த 4 மாநிலங்களும் சுயேட்சியாக சுதந்திரப் பிரகடனம் செய்தன.

ஜப்பான், பிரான்சு, இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் இவற்றுக்கு தூதரக அங்கீகாரம் வழங்கி சோவியத் உடைய மனதார வேலை செய்தன.

மேலும் பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா ஏகாதிபத்தியம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இதற்கு கோர்பச்சேவ் பணிந்து போனார்.

இதனால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்று எழுதிய பிரகடனத்தில் டிசம்பர் 25, 1991 இல் கோர்பச்சேவ் கையெழுத்திட்டார். சோவியத் ஒன்றியம் பல குடியரசுகளாக உடைந்தது.

இப்படியாக லட்சக்கணக்கான பட்டாளி வர்க்க தோழர்களின் ரத்தத்தில் கட்டியமைக்கபட்ட சோவியத் யூனியனை கோர்பச்சேவ் ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு உடைத்து எறிந்தார்.

நாம் சோவியத் யூனியனை இந்தியாவோடும் ஒப்பிட முடியும். பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை கட்டமைத்து வைத்திருப்பது ஒன்றிய அரசின் ராணுவபலமே அல்லாமல் வேறு அல்ல.

இன்றும் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இன விடுதலைக்கான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதை ராணுவ பலத்தை பயன்படுத்தியே ஒன்றிய அரசு ஒடுக்கி வருகின்றது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் ஒன்றிய அரசின் அடாவடித்தனமான பார்ப்பனிய திணிப்பு மற்றும் உலகமயமாக்கல் கொள்கைதான்.

ஒன்றியத்தில் இருக்கும் பல மாநிலங்கள் சமச்சீரற்ற வளர்ச்சியால் வறுமை, வேலைவாய்ப்பின்மை, வளங்கள் பன்னாட்டு முதலாளிகளால் சுரண்டப்படுதல் போன்றவற்றை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.

ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பு, புதிய வேளான் சட்டங்கள் , மின்சார சட்டங்கள் போன்றவற்றால் மாநில அரசின் அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டு அவை ஒன்றிய அரசின் அடிமைகளாக மாற்றப்படுகின்றன.

இவை எல்லாம் ஒரு நாள் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட நிலையை ஒன்றிய அரசுக்கு கொண்டு வரப் போகின்றது என்பதுதான் நிச்சயம்.

- செ.கார்கி

Pin It