PUCL copyஇராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் கருணை மனுவின் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவரே தகுதியானவர் என தமிழ்நாடு ஆளுநர் தன்னுடைய, 25 ஜனவரி 2021 தேதியிட்ட ஆணையில் முடிவெடுத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே, 09 செப்டம்பர் 2018 அன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரைத்துத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், முடிவெடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு.

ஆனால், ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரே முடிவெடுக்கத் தகுதியானவர் என்று முடிவெடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 72 (கருணை வழங்குவது குறித்து குடியரசுத் தலைவரின் அதிகாரம்) மற்றும் 161 (கருணை வழங்குவது குறித்து ஆளுநரின் அதிகாரம்) ஆகியவற்றின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்கள் முழுமையான, கட்டற்ற அதிகாரங்கள் எனவும், அவற்றை சட்டங்களால் தடுக்க முடியாது எனவும் கூறியுள்ளது (பஞ்சாப் மாநிலம் எதிர் ஜோகிந்தர் சிங், 1990 (2) SCC 661 வழக்கு).

அதேபோல், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 இன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள கருணை வழங்கும் அதிகாரம், பிரிவு 72 இன் கீழ் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திலிருந்து வேறுபட்டது; தனித்துவம் வாய்ந்தது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் இந்த அதிகாரங்களை மேல், கீழ் என்ற அதிகாரப் படிநிலையில் அரசியலமைப்புச் சட்டம் பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே, பியூசிஎல் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது

1. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஆளுநர் எடுத்திருக்கும் முடிவு மற்றும் அதற்காகப் பெற்ற சட்ட ஆலோசனை குறித்த முழு விவரத்தையும் ஆளுநர் அலுவலகம் வெளியிட வேண்டும். இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

2. இந்த விவரங்களின் அடிப்படையில், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுகுவது உள்ளிட்ட சட்ட வாய்ப்புகளை விரைந்து பரிசீலனை செய்து, ஏழு சிறைவாசிகளின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.

3. பேரறிவாளனின் கருணை மனு தற்பொழுது குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால், தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து கட்சிகள், மனித உரிமை அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டி, பிரதிநிதிகள் குழுவொன்றுடன் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பேரறிவாளனை விரைந்து விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்.

- மக்கள் சிவில் உரிமைக் கழகம்

 

Pin It