மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் விஞ்ஞானிகளைக் கண்டித்து, ‘இந்து’ நாளேட்டில் (ஜூலை 24) ஏ.கே.சென்சர்மா என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள கருத்துகள்:

விண்வெளிக்கு அனுப்பும் ‘ராக்கெட்’ ஒன்றை, விஞ்ஞானிகள், கடவுளின் காலடியில் வைத்து (திருப்பதி ஏழுமலையான்) ‘ஆசி’ பெற்று விண்வெளியில் ஏவியிருப்பது, நல்ல நகைச்சுவையாகும். அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களிடம், விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கு, விஞ்ஞானிகளின் இந்த நடவடிக்கை முட்டுக்கட்டைப் போடுவதாகும். விஞ்ஞானமும் மூட நம்பிக்கையும், ஒன்றுக்கொன்று நேர்முரணாக இருக்கும் போது, ஒரு விஞ்ஞானி எப்படி மூடநம்பிக்கையாளராக இருக்க முடிகிறது?

இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டுமானால்  “விஞ்ஞானிகள்” என்ற சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தைத் தேட வேண்டும். தாங்கள் படித்த விஞ்ஞானத்தை தங்களது தொழிலுக்காக பயன்படுத்துறவர்கள் எல்லாம், விஞ்ஞானிகள் என்று பொதுவாக அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் செய்யும் வேலைக்கு விஞ்ஞான மனப்பான்மை தேவை இல்லை.

புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எந்திர ரீதியாக தங்களது வேலையைச் செய்கிறவர்கள்தான் தங்களது தொழில் பணிகளின் நிகழ்வுகள் பற்றிக்கூட, அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லாதவர்கள். இவர்கள் ‘தொழில் நுட்ப வாதிகள்’ மற்றும் பொறியாளர்களைப் போல, ஒரு விஞ்ஞானப் பணியாளர்களே தவிர, விஞ்ஞானிகள் அல்ல. சில போலி விஞ்ஞானிகள், அறிவார்ந்த கோட்பாடுகள், சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உணர்வுகளுக்கு முன்னுரிமை தந்து, மூடநம்பிக்கையாளர் களாக திகழுகிறார்கள்.

இவர்கள் தங்கள் மூளையைப் பகுதி பகுதியாக பகுத்து வைத்துள்ளார்கள். படித்த விஞ்ஞானத்தை ஒரு பகுதியாகவும், போலி அறிவியல் புகட்டும் நம்பிக்கைகளை ஒரு பகுதியாகவும், வெவ் வேறாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். விஞ்ஞானத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது இல்லை.

சர்வ சக்திமிக்க கடவுள் மீது கொண்ட நம்பிக்கைதான் - மனித மூளைகளில் அதிர்வுகளை உருவாக்கி, அதன் பிறகு தான் புதிய சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் உருவாகின்றன என்று சில ‘விஞ்ஞானிகள்’ கூறுகிறார்கள். இது, ஊறிப் போன பழமைவாதங்களை உளவியல் ரீதியாக சிந்திக்காமல், அப்படியே ஏற்றுக் கொண்டதன் விளைவு. இந்த பலவீனமான உளவியலுக்கு உள்ளாகிவிட்டால், எவ்வளவு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் வந்தாலும், இவர்களின் சிந்தனை மாறப் போவதே இல்லை. விஞ்ஞானி அய்ன்ஸ்டின் கூட, ஒரு கடவுள் நம்பிக்கையாளர்தான் என்று அவரது பெயரை, தங்களுக்கு சாதகமாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வசக்தி வாய்ந்த கடவுள் என்று ஒருவர் உண்டு என்று அய்ன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டது இல்லை. அதே போல், அய்ன்ஸ்டீன் போனற விஞ்ஞானிகளின் “நம்பிக்கை” மூடநம்பிக்கைகளை நம்புவோரிடமிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.

கடவுள் நம்பிக்கையாளர்கள் எழுப்பி வந்த பல கேள்விகளுக்கு நவீன விஞ்ஞானம் விடை தந்துவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் கடவுள் நம்பிக்கையாளர்கள் மிக எளிதாகக் கேட்கும் கேள்வி - உலகத்தைப் படைத்தவன் கடவுள் தானே என்பதுதான். அதனால்தான், விண்வெளியில் பறக்கும் ஏவுகணைகளை வடிவமைத்தவர்கள்- அதற்கு இறுதி வடிவம் கொடுப்பது, ‘எல்லாம் வல்ல இறைவன்’ என்று நம்பி, கடவுள் காலடியில் கொண்டு போய் வைத்து பூசை செய்கிறார்கள்.

தாகூர், காந்தி போன்ற கடவுள் நம்பிக்கையாளர்கள் கூட, இப்படி விண்வெளி விஞ்ஞானிகள், தங்களது உருவாக்கத்தை, கடவுளிடம் வைத்து, சரிபார்க்கச் சொல்வதை ஏற்க மாட்டார்கள். இந்த ஏவுகணைகள் உருவாக்கத்தில் விஞ்ஞானிகள் தவறு செய்தால்  அதற்கு கடவுள் எப்படி பொறுப்பாவார் என்றுதான் கேட்பார்கள். இது தொடர்பாக ஒரு கேள்வி எழுகிறது. இப்படி விஞ்ஞானிகள் உருவாக்கிய விண்வெளிக் கோளை  கடவுளிடம் வைத்து, பூசை போடுவது எப்படி மதமாகும்? மதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறதா? மதச் சுதந்திரம் என்ற பெயரில், இந்த நடவடிக்கைகளை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இவைகள் அப்பட்டமான மூட நம்பிக்கைகள் தானே. இது நேர்மையற்ற  பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனையின் வெளிப்பாடுகள். மிக மோசமான பிற்போக்குத்தனம்.

நாம் எழுப்பியுள்ள இந்த கேள்விகளுக்கு, நேரடியான பதிலை எவரும் தர மாட்டார்கள். பெரும்பான்மையானவர்கள், இந்த மூடநம்பிக்கையாளர்களாகவே இருப்பது, இந்த விஞ்ஞானிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. “பெரும்பான்மையினர் நம்பிக்கை” என்ற ஒரே காரணத்தைக் காட்டித்தான், கைரேகை, சோதிடம், குறிபார்ப்பவர்களும், ‘பேய்’ ஓட்டுகிறவர்களும் நாட்டில் பிழைப்பை நடத்துகிறார்கள்.

அறிவுரீதியாக கேள்வி கேட்பவர்களை ‘பகுத்தறிவாளர்கள்’ என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். ‘பெரும்பான்மையினரின் நம்பிக்கை’ என்று இவர்கள் எதற்கெடுத்தாலும் முன் வைக்கும் வாதத்தை முதலில் தகர்த்து, தரைமட்டமாக்க வேண்டும்! அப்போதுதான் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க முடியும்.

Pin It