இருப்பது நாலு பேர். ஆனால் பீரோ நிறைய துணிகளில் குவிந்திருப்பார்கள். 
 
வாசல்களில் செருப்புகளாகவும்... கட்டிலுக்கடியே பழைய பேப்பர்களாகவும்... அட்டாலியில் உபயோகமில்லாத பாத்திரங்களாகவும்... எங்கெல்லாம் சந்து இருக்கிறதோ... எங்கெல்லாம் சகட்டுமேனிக்கு கிடக்கும் எல்லா மீந்த பொருட்களிலும் அந்த நாலு மனிதர்கள் ஒளிந்து பிழிந்து குவிந்து சலித்துக் கிடப்பது... பார்க்க பார்க்க அயர்ச்சி. 
 
வீடென்பது கண்டிப்பாக நூலகம் கிடையாது. ஆனால் அதே நேரம் குப்பைத் தொட்டியும் கிடையாதே.
 
பார்க்கும் பொருளையெல்லாம் வாங்கி குவிக்கும் மனோபாவம்... நுகர்வோர் கலாச்சாரம் சீரழிந்ததன் தத்துவார்த்த தகவமைப்புக்கு தம்மை தத்துக் கொடுத்தது. எது தேவையோ அதுவே வாழ்வென்பதின் தீர்க்கம். அது எப்போது எப்படி நம்மை விட்டு போனது என்று யோசிக்கவாவது வீட்டில் மற்றும் மண்டையில் கொஞ்சம் இடம் வேண்டாமா. 
 
ஒரு பொருள் வாங்க சென்று... இன்னொரு பொருள் வாங்கி.... இன்னொரு பொருள் இலவசமென்று...  இன்னொரு பொருள் தலையில் சுமந்து... ஓர் அட்டூழிய அக்மார்க் இந்திய சந்தையை நிகழ்த்தி வருவது சத்தியமாய் பொருளாதாரத்துக்கு எதிரானது. அதுவும் ஒரு நடுத்தர பொருளாதார நகர்வுக்கு முற்றிலும் முரணானது.

நான்கு இட்லி பிடிக்கும் வயிற்றில் ஆறு இட்லிகளை திணிப்பது... கம்யூனிசம் பிறகு பேசலாம். கடமுடா சத்தத்துக்கு பதில் என்ன.
 
பழையன கழிதலும் புதியன தேவை எனில் நுழைதலும்தான் தினமாக இருக்க வேண்டும். பார்க்கும் எல்லாவற்றையும் சொந்தமாக்கும் மானுடம் மனத்தால் கட்டமைக்கப்பட்ட மாயம். அது தூசுகளாலும் துக்கங்களாலும் தான் வடிவத்தில் இருக்குமே தவிர வாசனைகளாலும்... வசந்தங்களாலும் வாழ்வு பெறாது. மூளை கொண்டு கவனிக்க இதயம் செய்யும் ஆராதனையில்... ஒரு குக்கர் வாங்க போனால் ஒரு குக்கர் மட்டும் வாங்கி வர போதிக்கும். EMI தானே... என்று செய்யும் தகிடுதத்தங்கள் அடுத்த மாதம் துண்டு விழும் பட்ஜெட்டில் இருக்கிறது... கவனிக்க கண்மணிகள். 
 
விளம்பரங்கள் ஈர்க்கும். கண்டிப்பாக கண்களை சுழற்றி பார்க்க செய்யும். போட்டு தாக்கும். மண்டைக்குள் குடைந்து மாய வண்டின் மகத்துவம் பூக்கும். மயங்கினால்... மாவுக்கட்டு தான் அந்த மாத சம்பளத்துக்கு. அதுவும் இந்த மாதிரி சீன பூச்சி காலத்தில் பார்த்து பார்த்து பவ்யமாக... பதுங்கி பதுங்கி பதமாக தேவையை நிறுத்திப் பார்த்து வாங்கி செல்வதுதான் சமயோசிதம்.
 
போன வருடம் பிய்ந்த செருப்பை இன்னும் செருப்பு ஸ்டேண்டில் வைத்து அழகு பார்க்கும் சென்டிமென்டல் இடியாடிக் உணர்வை சற்றே கழற்றி வீசுவோம். அது பூரான்... கரப்பான்... கொசு..... இன்ன பிற சிறு பூச்சிகளுக்கான வாழ்விடத்தை தந்து பிறகு நமது அறியாமையின் பேரில் நம்மை தீண்டவும் செய்யும் கால சூழலையும் செய்து விடலை விட... அதை கடாசி விட்டு அந்த இடத்தில் ஒரு பூந்தொட்டி வைத்து நீர் ஊற்றலாம். மனம் சொட்டும் சாந்தம் மாலை நேரங்களில் கிடைக்கும் என்றால் நம்பலாம்..தெம்பாக.
 
என்ன காய் வேண்டுமோ...அதை மட்டும் வாங்குங்கள். கடைக்காரன் பேச்சு கொடுத்துக் கொண்டே அடுத்த வாரத்தையும் காதில் கட்டி விடுவான். ஏனெனில் human being is a wanting animal என்று வியாபாரிகளுக்கு தெரியும். எல்லா வியாபாரிகளுக்கும். y becoz...இந்த உலகின் கட்டமைப்பு வியாபாரிகளால் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டது. அமைக்கப்பட்ட அவர்கள் கோட்டை அது. இந்த உலகம் இரண்டே பிரிவுகளால் தான் ஆனது. ஒன்று இருக்கும் எல்லா தந்திரங்களாலும்... வியாபாரிகள். எதிரே நிராயுதபாணியாக கட்டு கட்டாய் பணத்தோடு... அல்லது அதற்கு நிகரான ஆசையோடு... நுகர்வோர்கள். அதான் நாம். அதுவும் நாம் உலகிலேயே சிறந்த நுகர்வோர்கள். எது வந்தாலும்... அது நல்ல சந்தைக்கு வந்தாலும் சரி ... கள்ள சந்தைக்கு வந்தாலும் சரி... முதலில் ஓடோடி சென்று... உல்லாலா பாடி... அது தேவையா இல்லையா... அதன் பயன் எந்தளவு... நமக்கு.... நம் வீட்டுக்கு... என்று எந்தவிதமான முன் யோசனையும் இல்லாமல்... படபடவென வாங்கி வந்து வீட்டில் குவித்து வைப்பதில் ஒரு வித அலாதி மனப்பிரமை. அதிலும் பக்கத்து வீட்டில் அதைப் பற்றி பேசி புளகாங்கிதம் அடைவது... புண்ணியஸ்தலம் சென்று வந்தது போல. தேள் கொட்டினாலும் வாங்கி குவிப்பதில் தீரர்கள் அல்லவா நாம். 
 
வாரத்துக்கு 7 நாட்கள் தானே. மாதத்துக்கு 30 அல்லது 31. 50 சட்டைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது. பீரோவில் நசுங்கிக் கிடக்கும் பழைய வாசனையில் நினைவுகள் வேண்டுமானால் சித்திரம் வரையலாம். நிதர்சனம் பாய்ச்ச உருண்டை தான்.

எலக்ட்ரானிக் பொருட்களின் பழசு பட்டைகளை... ஆங்காங்கே.... கட்டிலுக்கடியே... மேசைக்கடியே... மேசை ட்ராயிரில் என்று குவித்து வைப்பதில் அப்படி ஒரு பூரிப்பு. அதனடியே தேள் உள்பட... பாம்புகூட வந்து சுருண்டு கொள்ள காரணம் வீட்டுக்கு வீடு அதே பதட்ட வாசற்படி தான். அதுவும் காம்பவுண்ட் சுற்றி இருக்கும் மர சாமான்களில் இருந்து இரும்பு கம்பியில் இருந்து... பழைய டிஸ்... பழைய சைக்கிள்... பழைய பைக் ஹேண்டில் பார்... என்று  இன்னும் பழைய கட்டைப்பைகள்... துணிக்கடையில் தீபாவளிக்கு கொடுத்த இலவச பேக்குகள் என்று அய்யயோ... மினி ஸ்மார்ட் குப்பைத்தொட்டிகளை வீட்டுக்குள்....மற்றும் வீட்டை சுற்றியும் வைத்துக் கொண்டு.. மூச்சுக்கு முன்னொரு தும்மல் வேறு. 
 
கொஞ்சூண்டு இடம் பொத்தினாற் போல இருந்து விடவே கூடாது. நாலு துணியை சுற்றி அங்கே வைத்து விட வேண்டும். 
 
அதே போல படிப்பாளிகளின் பவுடர் வாசம் தாங்கொணா. தன் அளவு அறிந்து எதை படிக்க வேண்டும் என்றும் புரிதலில்லை. தன் அறிவு கொண்டு எதை படிக்க வேண்டாம் என்றும் தெரிவதில்லை. முகநூலில் போட்டு... தோசைக்கு தொட்டுக் கொள்ளும் சட்னிக்காகவே இந்த மாதம் இத்தனை காசுக்கு இவ்ளோ புக் என்று வாங்கி குவிக்க வேண்டியது. அது புத்தக பூச்சியினால் பழுப்பேறி ஹாலிலும்...நாளிலும்... கிடந்து சீரழிய வேண்டியது. இன்னது வேணும். அது இதுவரைக்கும்....தாங்கும் என்ற கணக்கு... நூல்கள் வாங்குகையில் தேவை படிப்ஸ்களே. 
 
ஆக, மீண்டும் அதே பல்லவி தான். ராகம் கூடினாலும்.. ராத்திரிக்கு காத்திருக்க தான் வேண்டும். 
 
எந்த பொருள் வாங்கினாலும்.. அதன் தேவை... அதன் பயன். அது இப்போது தேவையா.. அடுத்த மாதம் தேவையா...அல்லது ஆறு மாசத்துக்கு பின் தேவையா என்பது தான் தேவையின் அலகில் வாழுதல். அது தான் ஸ்மார்ட் ஹோம்க்கான அடிக்கல். பணத்தை எதிலும் முடக்க கூடாது. 
 
Pl.s Note : JIT (JUST IN TIME) என்ற முறையை பின்பற்றலாம். 
 
இறுதியாக...பழைய குளிர்சாதன பெட்டியை வராண்டாவில் போட்டு அழகு பார்த்தல்... நாஷ்டால்ஜியாவுக்கு ஓகே. மற்றபடி மழை நாட்களில் வந்து சூழும் நசநசப்புக்கு நாட் ஓகே.
 
- கவிஜி 

Pin It