police atrocity 636சில நாட்களுக்கு முன்னால் ஆடு திருடர்களால் எஸ்.ஐ. பூமிநாதன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். எஸ்.ஐ. பூமிநாதன் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு இனி ரோந்து செல்பவர்கள் துப்பாக்கியுடன் செல்லும்படியும், இதுபோன்ற சூழ்நிலைகளில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக் கூடாது என்றும் பேட்டி அளித்தார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதன் மீது இரக்கப்படுவதைவிட கொலையில் ஈடுபட்ட சிறுவர்களை நினைத்தால்தான் இந்த சமூக அமைப்பு சிறுவர்களைக் கூட கொலையில் ஈடுபடுத்தும் அளவுக்கு கொடூரமாக மாறி இருப்பதை உணர முடிகின்றது.

எந்த சமூகத்தில் மக்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் போகின்றதோ அந்த சமூகத்தில்தான் திருட்டு, கொலை, கொள்ளை எல்லாம் அரங்கேற்றப்படுகின்றது.

பெருகி வரும் சமூக ஏற்றத்தாழ்வு ஒரு அசமத்துவமான சமூகத்தை உருவாக்கி உள்ளது. உலகமயமாக்கலால் தூண்டப்பட்டுள்ள நுகர்வுக் கலாச்சாரமும், மக்களை சிந்திக்க விடாமல் அவர்களை குடி கலாச்சாரத்தில் மூழ்கடிக்கும் முதலாளித்துவ கார்ப்ரேட் கட்சிகளின் அயோக்கியத்தனமும் சேர்ந்து சிறுவர்களைக் கூட கொலைகாரர்களாக மாற்றி உள்ளது.

சிறுவர்கள் மது வாங்குவதற்காக ஆட்டைத் திருடினார்கள் என்றும், அதைத் தடுக்க வந்த காவலரைக் கொன்றார்கள் என்றும் எழுதும் பத்திரிகைகள் எதுவும் சிறுவர்களைக் கூட குடிகாரர்களாக மாற்றிய இந்த அரசைப் பற்றி விமர்சிக்க மறுக்கின்றார்கள்.

இந்தக் கொலையில் முதல் குற்றவாளியே சாராயம் விற்கும் அரசும், அரசியல்வாதிகளோடு சேர்ந்து 24 மணி நேரமும் சந்துக்கடை நடத்தி சமூகத்தில் குற்றம் நடக்க ஆதாரமாக இருக்கும் காவல்துறையும்தான்.

ஒரு சமூகத்தை குடியினால் சீரழித்துவிட்டு அவர்களை பணத்திற்காக எதையும் செய்யும் குடிநோயாளிகளாக மாற்றிவிட்டு அதற்கு உடந்தையாக இருந்த கூட்டம் இன்று பதற்றப்படுகின்றது.

ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதற்காக உடனே ரோந்து செல்லும் காவலர்கள் தூப்பாக்கி வைத்துக் கொள்ளவும், உயிரை காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கியைத் தயங்காமல் பயன்படுத்தவும் சொல்லும் சைலேந்திரபாபுவும் அதை ஆமோதிக்கும் திமுகவும் இதுவரை காவல் துறையால் கொல்லப்பட்டவர்களுக்கு குறைந்த பட்சம் நீதியையாவது பெற்றுத் தந்திருக்கின்றதா?

தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அது என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது யாருக்குமே தெரியாது.

சுட உத்திரவிட்ட அயோக்கியர்கள் யார்? என்பது கூட இதுவரை வெளி உலகிற்குத் தெரிவிக்கப்படவில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்த திமுக கள்ள மெளனம் காத்து வருகின்றது.

அதே போல சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிஸ் ஆகிய இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கும் இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை.

2001-க்கும் 2018-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,727 தடுப்புக் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் 810ல் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 334 போலீஸ்காரர்கள் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் 26 போலீஸ்காரர்கள் மட்டுமே தண்டிக்கப் பட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா தவிர ஏனைய மாநிலங்களில் போலீஸ்காரர்கள் தண்டிக்கப் பட்டதே இல்லை. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்புக் காவல் மரணங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஒரு போலீஸ்காரர்கூட தண்டிக்கப் பட்டதில்லை.

தடுப்புக் காவல் மரணங்களைத் தவிர 2000-க்கும் 2018-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 2,041 மனித உரிமை மீறல்களைக் காவல் துறையினர் செய்திருப்பதாகப் பதிவாகி இருக்கிறது. 737 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 344 காவலர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். இது எல்லாமே தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் அளித்த தரவுகள். தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் தரவுகள் இன்னும் அதிர்ச்சி அளிக்கின்றன. அந்த ஆணையத்தின் 2017-18-க்கான அறிக்கையின்படி அந்த ஆண்டுகளில் 2,896 பேர் நீதிமன்றக் காவலில் இறந்திருக்கிறார்கள்; 250 பேர் காவல் நிலையத்தில் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்திடம் அளித்த அறிக்கையின்படி 2012-2016 ஆண்டுகளில் 157 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 11 பேர் காவல் நிலையத்திலும், 72 பேர் நீதிமன்றக் காவலிலும் இறந்திருப்பதாகத் தமிழக அரசு மாநில மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை அளித்தது.

குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில், போலீஸ் காவலில் பதிவான நான்கில் மூன்று பங்கு இறப்புகளானது, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நிகழ்ந்ததுள்ளது. குஜராத்தில் இதுபோன்ற 87% இறப்புகள் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. 2014-2019 இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழகத்தில் போலீஸ் காவலில் இறந்ததாகக் கூறப்படும் 46 நபர்களில் 44 பேர் (96%) கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இறந்துள்ளனர்.

காவல் துறையின் உண்மையான முகம் என்பது அடிதடி, அராஜகம், அத்துமீறல் என்பதுதான். தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஓய்வு பெறுவதற்குள் முடிந்தவரை அடித்துப் பிடுங்கி விடுவது என்ற முன்முடிவோடுதான் பலர் இந்தப் பணியையே தேர்ந்தெடுக்கின்றார்கள்.

சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் புகலிடமாக இருப்பது காவல் நிலையங்கள்தான். அவர்களுக்குத் தெரியாமல் ஒருவன் கஞ்சா விற்கவோ, பிளாக்கில் சாராயம் விற்கவோ, தடை செய்யப்பட்ட புகையிலையை விற்கவோ, விபச்சாரத் தொழில் நடத்தவோ நிச்சயமாக முடியாது.

இவை அனைத்தும் காவல் துறையால் மட்டும் நடப்பதில்லை. காவல்துறை, அரசியல்வாதிகள், உள்ளூர் ரவுடிவுகள் இவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த முக்கூட்டுதான் ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றச் சமூகமாக மாற்றுகின்றது.

ஆனால் இவர்களை எல்லாம் குற்றவாளிகளாக யாரும் சித்தரிப்பதில்லை. ஆடு திருடியவன், கோழி திருடியவன், பிக்பாக்கெட் அடிப்பவன் போன்றவர்களே இங்கே பயங்கர குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டு காவல்துறை வன்முறையால் கொல்லப்படுகின்றார்கள்.

அக்டோபர் 11ஆம் தேதி திருப்பெரும்புதூரில் முர்துசா சேக் என்ற வட மாநில இளைஞர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அதேபோல் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி துரைமுருகன் என்பவர் தூத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் போலீசாரால் பிடிக்கப்பட்டு தப்பிக்க முயன்றதாக சொல்லி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவில் காவல்துறை ஒருவரைக் கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதை மீறும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்துக்கு எதிரானவையாகக் கருதப்படலாம்.

ஒருவர் கைது செய்யப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய 11 விதிமுறைகளை இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டது. அவற்றின் விவரம்:

1. ஒருவரைக் கைது செய்யும்போது அது தொடர்புடைய வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி தங்களது பெயர் பொறிக்கப்பட்ட பட்டையைத் தெளிவாகத் தெரியும் வகையில் சீருடை அணிந்திருக்க வேண்டும். யார் விசாரணை அதிகாரி என்பது காவல்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும்.

2. கைது செய்யும்போது அது குறித்த மெமோவை தயார் செய்ய வேண்டும். அதில் கைது நடந்த நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதனைக் கைது செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினரோ, அல்லது அந்தப் பகுதியின் பெரிய மனிதர் ஒருவரோ ஏற்று ஒப்புதல் சாட்சியமளித்து கையெழுத்திட வேண்டும். கைது செய்யப்பட்டவரும் அதில் கையெழுத்திட வேண்டும்.

3. கைது செய்யப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட அல்லது விசாரிக்கப்படும் நபரின் உறவினர், நண்பர், நலம் விரும்பி ஆகிய யாராவது ஒருவருக்கு முடிந்த அளவு விரைவாகத் தகவல் சொல்ல வேண்டும். எந்த இடத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். குடும்ப உறுப்பினரே சாட்சியமளித்து கையெழுத்திட்டால் இதைச் செய்யத் தேவையில்லை.

4. கைது செய்யப்பட்டவரின் உறவினரோ, நண்பரோ மாவட்டத்திற்கு வெளியில் வசித்தால் கைது செய்யப்பட்ட இடம், நேரம் குறித்த தகவல்களை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாவட்ட சட்ட உதவி ஆணையமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையமும் தந்தி மூலம் இதனைச் செய்ய வேண்டும்.

5. ஒரு நபர் கைது செய்யப்பட்டவுடன், அதனை யாருக்காவது தெரிவிக்கும் உரிமை கைது செய்யப்பட்ட நபருக்கு இருக்கிறது என்பதை அவருக்குச் சொல்ல வேண்டும்.

6. கைது செய்யப்பட்ட காவல் நிலைய நாட்குறிப்பில் கைது குறித்தும், யாருக்குத் தெரிவிக்கப்பட்டது என்பது குறித்தும், எந்த காவல் அதிகாரியின் பிடியில் அந்த நபர் இருக்கிறார் என்பது குறித்தும் பதிவு செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்படும் நபர் தன்னைப் பரிசோதிக்க வேண்டுமென கோரலாம். ஏதேனும் காயங்கள் இருந்தால் அவை பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சோதனை ஆவணம் கைது செய்யப்பட்ட நபராலும் கைது செய்யும் காவல்துறை அதிகாரியாலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதன் பிரதி கைது செய்யப்பட்ட நபருக்கு வழங்கப்பட வேண்டும்.

8. கைது செய்யப்பட்ட நபருக்கு 48 மணி நேரத்திற்குள் தகுதி வாய்ந்த மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தந்த மாநிலத்தின் மருத்துவ சேவை இயக்குநரகத்தால் சான்றளிக்கப்பட்ட மருத்துவரே இந்த சோதனையைச் செய்ய வேண்டும்.

9. கைது ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களும் அந்தப் பகுதியின் மாஜிஸ்ட்ரேட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.

10. விசாரணையின்போது தனது வழக்கறிஞரைச் சந்திக்க கைது செய்யப்பட்டவருக்கு உரிமை உண்டு. ஆனால், முழு நேரமும் இருக்க வேண்டியதில்லை.

11. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநிலத் தலைமையகத்திலும் இதற்கென ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும். இந்த கைது, அந்த நபர் வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த தகவல்களை அங்கே அனுப்ப வேண்டும். கைது நடந்து 12 மணி நேரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்.

இந்த நெறிமுறைகள் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டன. மேலும், அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் இவை ஒளிபரப்புச் செய்யப்படி கூறப்பட்டது. (நன்றி பிபிசி)

ஆனால் இவை எல்லாம் இன்னும் எழுத்து வடிவில் மட்டுமே உள்ளன. உண்மையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த காவல் நிலையத்திலும் மேற்படி உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது கிடையாது.

ஆனால் இவை எல்லாம் ஒரு குற்றமாகக் கருதப்படாத அளவுக்கு அரசு கட்டமைப்பு பாசிச மயமாக மாறி வருகின்றது. சீருடை இல்லாமல் வந்து கூலிப்படையினர் போன்று அடித்து இழுத்துச் செல்வது, நேராக காவல்நிலையம் செல்லாமல் கடத்திக் கொண்டு போய் பல நாட்களுக்கு சித்தரவதை செய்வது. குற்றுயிரும் குலை உயிருமாக அடித்து அனுப்புவது, முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே காவல் நிலைத்தில் வைத்து சித்தரவதை செய்வது, பாலியல் வன்புணர்வு செய்வது என அனைத்துமே கேள்விக்கிடமில்லாமல் அரசின் ஆதரவோடு நடந்து கொண்டுதான் உள்ளது.

காவல்துறை அமைப்பையே கலைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அதை மேலும் மேலும் திமுக அரசு பாசிச மயப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

காவல் துறையைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு மக்கள் காவல் குழுக்களை தமிழகம் முழுக்க உருவாக்கலாம். ஒவ்வொரு பகுதிக்கும் அப்படியான மக்கள் காவல் குழுக்கள் உருவாக்கப்படும் போது நிச்சயம் 100 சதவீதக் குற்றங்கள் தடுக்கப்படும்.

ஆனால் பொறுக்கித் தின்பதற்காக அரசியல் நடத்தும் காலிகள் மக்களை மிரட்டி கொள்ளை அடிக்கவும், மணல் திருடவும், வளங்களை கொள்ளை அடிக்கவும், சாராயம் விற்கவும், கஞ்சா விற்கவும், விபச்சாரம் செய்யவும் முடியாமல் போகும்.

இந்த காவல் துறை என்ற குற்ற அமைப்பு இருக்கும்வரைதான் அரசியல்வாதிகளால் மக்களை தைரியமாகக் கொள்ளை அடிக்க முடியும் என்பதால் அவர்கள் ஒருபோதும் அதைக் கலைக்க மாட்டார்கள். வேண்டுமென்றால் எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ஒழித்துக்கட்ட அனுமதி தருவார்கள்.

எனவே சமூகத்தில் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு முதல் நிபந்தனை இந்த ஒழுங்கு படுத்தப்பட்ட வன்முறை அமைப்பான காவல் துறையை கூண்டோடு கலைக்க வேண்டும். ஆனால் அதை முதலாளிகளின் அடியாள்கள் செய்வார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

- செ.கார்கி

Pin It