மனித உரிமையை பாதுகாப்பேன் என்ற உறுதியேற்போடு திரு.சைலேந்திபாபு தமிழ்நாடு மாநில காவல்துறை இயக்குனராக (DGP) பொறுப்பேற்ற 106 வது நாளில் என்கவுன்டர் என்ற பெயரில் இதுரை தமிழ்நாட்டில், போலி மோதல் மூலம் 2 நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த மனித உரிமை மீறல் செயலை காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ( JAACT) வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், மாநில காவல்துறை இயக்குனராக (DGP) திரு.சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதன் பின்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லையில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தாஷா சேக் என்பவர் 11.10.2021 அன்று போலீசாரால் பிடிக்கப்பட்ட நிலையில், அதன்பின்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜார்கண்ட் மாநில இளைஞர் முர்தாஷா சேக் சுட்டுக் கொல்லப்பட்டு அவரது இரத்தம் காய்வதற்குள் மீண்டும் என்கவுன்டர் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டம் சூலையன் கரிசல் திரவிபுரத்தை சேர்ந்த துரைமுருகன் (33) த/பெ வெற்றிவேல் என்பவர் 15.10.2021 நேற்று, தூத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் கொலை வழக்கு சம்பந்தமாக போலீசாரால் பிடிக்கப்பட்ட நிலையில், அதன் பின்பு எஸ்.ஐ ராஜபிரபு தலைமையினால தனிப்படை போலீசார் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நடந்து முடிந்த இரண்டு சம்பவங்களும் போலி மோதல் சாவுகள் ஆகும்.

தமிழ்நாட்டில் ஆட்க்கொல்லி புலியை சுட்டுக் கொல்லாமல் அதனை உயிரோடு பிடிப்பதற்கு 21 நாட்கள் தொடர் முயற்சிக்குப் பின் பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றத்தில் ஈடுபடக் கூடிய சக மனிதர்களை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழ்நாட்டு போலீசார் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு சுட்டுக் கொல்வது என்பது கொலைக் குற்றமாகும். இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் போலி மோதல் சாவு மூலம் கொல்லப்பட்டவரின் சாதியினரை திருப்திபடுத்த இனி பிற சாதிகளைச் சேர்ந்த சிலரை போலீசார் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்ல வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க போலீசாரின் சட்டவிரோத செயலை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தொடர்ந்து நடந்து வரும் போலி மோதல் சாவு வழக்கினை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து சுயமோட்டா வழக்காக எடுத்து சிறப்பு விசாரணைக் குழு ஏற்படுத்தி விசாரணை செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு,

தியாகு, ஒருங்கிணைப்பாளர்

மீ.த. பாண்டியன், செயலாளர்

ஹென்றி திபேன், சட்ட ஆலோசகர்

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ( JAACT)

Pin It