முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தப் பிறகும், கேரள அரசு அதை ஏற்கத்தயாராக இல்லை. உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றாமல் தடுக்க, மாநிலத்தில் தனிச் சட்டம் நிறைவேற்றிக் கொண்டது. இதன் மூலம், இந்தியாவின் கூட்டமைப்பிலிருந்து தங்களின் மாநில உரிமைக்காக விலகி நிற்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. அங்கே ஆட்சியில் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான்! தேசியம், தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசும் அக்கட்சிதான், இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

கேரளஅரசின் சட்டத்தை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கேரள அரசு உச்சநீதிமன்ற ஆணையை தனிச் சட்டத்தின் மூலம் மீறியுள்ளதை உச்சநீதி மன்றமும் தட்டிக் கேட்கவில்லை. மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், உச்சநீதிமன்றம், மேலும் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு புதிய அணையைக் கட்டுவது பற்றியும் பரிசீலிக்கும். ஏற்கனவே 7 உறுப்பினர்கள் கொண்ட குழுதான்,

ஆய்வு நடத்தி, முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவே இருக்கிறது என்று நீதிமன்றத்துக்கு அறிக்கை தந்தது. இப்போது எதற்கு புதிய குழு? பிரச்சினையை கிடப்பில் போடுவதற்கு நடுவர் மன்றம் நியமிக்கலாம் என்ற யோசனையை முன் வைத்தார்கள்.

தமிழக அரசு எதிர்த்தது. இப்போது அய்வர் குழு வந்திருக்கிறது. இந்த நிலையில் குழுவில் இடம் பெறப் போவதில்லை என்று தி.மு.க.வின் பொதுக் குழு தீர்மானித்து, தனது எதிர்ப்பை மறைமுகமாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே - காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை கருநாடகம் அமுல்படுத்த மறுத்துவிட்டது. மத்திய அரசும் மவுனம் சாதிக்கிறது. இப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், தமிழ்நாட்டுக்கான உரிமையை கேரளா பிடிவாதமாக மறுக்கிறது. மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.

தேசியம் - சர்வ தேசியம் பேசும் கட்சிகள் எல்லாம் தங்கள் மாநிலங்களின் நலன்களுக்காக, ‘தேசியத்துக்கு’ சவால் விடுகின்றன. ஒரு காலத்தில் ‘திராவிட நாடு’ பேசிய கட்சியோ “ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு - பொறுமைக் காப்போம்” என்று கூறுகிறது. “நம்முடைய நியாயமான உரிமைகளையும் பறி கொடுத்துவிட்டு, ஒருமைப்பாட்டுக்கு துரோகம் செய்கிறவர்கள் யார் என்பதை உலகத்துக்கு உணர்த்த இன்றில்லா விட்டாலும், நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள், ஒரு காலம் வரும். அதுவரை நாம் பொறுமையாக இருந்து, அப்படி பொறுமையாக இருக்கிற நேரத்திலும் சட்ட ரீதியாக நம்முடைய வாதங்களை எடுத்து வைத்து, நம்முடைய உரிமைகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி தி.மு.க.வின் பொதுக் குழுவில் பேசியுள்ளார்.

(‘முரசொலி’ பிப்.22) ஒருமைப்பாட்டின் விரோதிகளை அடையாளம் காட்டுவதற்காக நாம் நமது உரிமைகளை இழந்து காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கலைஞர் கூறுவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கான புதிய விளக்கமா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டம் தொடங்கி, பணிகள் வேகமாக நடந்த நிலையில், ‘ராமனை’ காட்டி, பார்ப்பன சக்திகள் முடக்கிவிட்டன. மத்திய அரசு, இதில் மெத்தனம் காட்டுவதையும் முதல்வர் கலைஞர் நியாயப்படுத்தியிருக்கிறார்.

“இராமரைக் காட்டி பயமுறுத்துகிறார்கள். அதனால் அவர்கள் (மத்திய அரசு) சற்றுத் தயங்குகிறார்கள். அந்தத் தயக்கத்துக்குக் காரணத்தை நம்மிடமும் தெரிவிக்கிறார்கள். நாமும் அவர்களுடைய தர்மசங்கடத்திற்காகப் பார்க்க வேண்டியிருக்கிறது” (‘முரசொலி’, பிப்.22) என்று பேசியிருக்கிறார். இதே “தர்ம சங்கடத்துக்காக” ஈழத் தமிழர் மீது நடந்த இனப்படுகொலைகளைக்கூட மூடி மறைத்து, மத்திய அரசின் துரோகத்தை நியாயப்படுத்தியதும் இவர்கள்தான்.

ஆக, மத்தியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்காக தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. தமிழக காங்கிரசு கட்சியோ தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் தட்டிக் கேட்காமல், அவர்கள் போடும் பதவிப் பிச்சைகளுக்காக மடியேந்தி நிற்கிறது.

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிடம் இடித்துரைக்கத் தயாராக இல்லை. தேர்தல் கூட்டணி கட்சி - கட்சி அரசியல் என்ற சந்தர்ப்பவாதங்களுக்குள், தமிழன் உரிமைகள் முடங்கிப் போய் கிடக்கின்றன. தமிழன் தலையில் தேசப்பற்று - ஒருமைப்பாடு என்ற சுமையையும் தூக்கி வைத்து சுமக்கச் சொல்கிறார்கள்! போலி தேசியத்தையும், போலி அரசியலையும், மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, உரிமைகளுக்கான போர்ப்படை ஒன்று தமிழகத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் உருவாக வேண்டியதன் அவசியத்தையே, இவைகள் உணர்த்துகின்றன.
Pin It