மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ ஆர். வரதராஜன், சில வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு உள்ளாகியதால் அனைத்துப் பொறுப்பிலிருந்தும் கட்சி, அவரை விலக்கி வைத்தது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிய அவர், போரூர் ஏரியில் குதித்து, தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக வந்த செய்தி, பொது வாழ்க்கையில் பலரையும் பாதித்துவிட்டது. ஒருவேளை கிடைத்த சடலம் அவருடையதில்லை என்றாலும், அவர், எங்கே போனார் என்பது புதிராகவே இருக்கறிது.

ஒரு கம்யூனிஸ்டாகவோ, பெரியாரியல்வாதியாகவோ, தத்துவார்த்த இயக்கங்களில் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்களுக்கு வாழ்க்கையே இயக்கமாகவும், இயக்கமே வாழ்க்கையாகவும் அமைந்து விடுகிறது. ஆனால், கட்சித் தலைமை இந்த உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல், ‘அதிகாரத்துவபண்போடு செயல்படும்போதுதான் பிரச்னைகள் உருவாகின்றன. நீருக்குள்ளே வாழக்கூடிய மீன், தரையில் தூக்கிப் போட்டால் துடிப்பதைப் போன்ற நிலைக்கு பாதிக்கப்பட்டவர்கள் உள்ளாகிறார்கள்.

தி.க. தலைவர் கி.வீரமணியும், இதே தவறைத்தான் அதிகார மமதையில் செய்தார். அவரால் கழகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள், கொள்கைக்கு மாறாக செயல்பட்டதாக, எந்த ஒருவர் மீதும் குற்றம் சாட்டவும் முடியாது. தலைமைக்கும் கழகக் கட்டுப்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டார்கள் என்றே குற்றம்சாட்டி, தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று தூக்கி வீசினார். அதனால் ஏற்பட்ட விளைவுகளை, அவர் ஒவ்வொரு நாளும் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார். கழகங்கள், “அரசுகளைப் போல் அதிகாரங்களை ஏவும் போதும், அறக்கட்டளைகளாக உருவெடுத்து, அதைக் காப்பதே கொள்கை என்று செயல்படும்போதும், கொள்கைத் தோழமை, நேசம், நேர்மைப் பண்புகள் எல்லாமே புதைக்குழிக்குப் போய்விடுகின்றன.


-விடுதலை இராசேந்திரன்

Pin It