தலித்துகள் இந்தச் சமூகத்தில் யாராலும் விவரிக்க முடியாத அளவிற்கு துன்பங்கள் பலவற்றை சந்தித்து வரும் ஒரு குறிப்பிட்ட பிரிவினத்தவர் ஆவர். இந்து சாதிய அமைப்பிலுள்ள படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையின் காரணமாகவே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக உள்ளனர். அவர்கள் அனைத்து வகையான பகைமை உணர்வுகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர். சமூகத்தில் மட்டுமில்லாமல், நீதி அமைப்புகளிலும் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக பல நிலைகளில் பாகுபடுத்தப்படுகின்றனர்.
சமூக – பொருளாதார நிலையின் காரணமாக, தலித் மக்கள் எல்லா இடங்களிலும் பாகுபாடுகளையும், பகைமை உணர்வுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. தலித்துகள் கிராமங்களிலும் நகரங்களிலும் வசித்தாலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பொதுவானவை.
கிராமப் பகுதியில் உள்ள தலித் மக்கள் சந்திக்கும் சில பிரச்சனைகள் : 1. வாழ்வாதாரம் : நிலமற்றும், பொருளாதார ரீதியாக ஏழ்மையாகவும் இருப்பதால், தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பிறரைச் சார்ந்து உள்ளனர். 2. நிலம் : அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டதன் காரணமாக, சொந்த நிலமின்றி தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். 3. உழைப்பு : அவர்களுக்கு வேலை மறுக்கப் படுகிறது, குறைந்தபட்ச கூலியும் மறுக்கப்படுகிறது. 4. வீடு : அடிப்படை வசதிகளின்றி நெரிசலான ஒரே இடத்தில் வசிக்கின்றனர். 5. கல்வி : சமூக, பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்வியைப் பெற முடிவதில்லை. 6. காதல் / திருமணம் : மற்ற சாதியினரை திருமணம் செய்ய முற்படும்போது அவர்கள் நசுக்கப்படுகின்றனர். 7. வன்கொடுமைகள்: அற்ப விஷயங்களுக்காகக் கூட அவர்கள் ஆதிக்க சாதியினரால் வன்கொடுமை களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். 8. வழிபாடு : கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறார்கள். 9. பொதுச்சாலை, கிணறு, நீர்நிலைகள் : இவற்றைப் பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 10. இறப்பு : மயானங்களில் எரிப்பதற்கோ, அடக்கம் செய்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை. சடலத்தை ஊர்ப்பாதையில் கொண்டு செல்லவும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
நகரத்தில் வாழும் தலித் மக்கள் பின்வரும் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் :
1. இடப்பெயர்வு (சேரிகளில் இருந்து வெளியேற்றப்படுதல்) 2. பொய்யாக புனையப்பட்ட குற்ற வழக்குகள் 3. காவல் வன்முறை 4. கல்வி நிலையங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் நுண்ணிய முறைகளில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 5. கல்வி பயிலும் போதும் அதற்குப்பின்பும் தேவையான இடவசதியை மற்றும் நிதி உதவிகளை அரசு வழங்காமலிருத்தல். 6. எண்ணத்தில் பாகுபாட்டைக் கொண்டிருத்தல்.
தலித் மக்களுக்கு எவ்வகையில் சட்ட உதவி தேவைப்படுகிறது ?
சாதி காரணமாக தலித் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் கொடுமைகள் ஆகியவற்றை குறிப்பாக கவனத்தில் கொள்ளும் வகையிலான சட்ட உதவிகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. தலித் மக்களுக்கென குறிப்பாக இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் இருப்பினும், அரசு தனது உதவிக்கரத்தை அவர்களை நோக்கி நீட்டுவதில்லை. சட்ட உதவி இயக்கம் மூலம் மட்டுமே அவற்றைப் பெற்றுத் தர இயலும். அவர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவி அவர்களின் பிரச்சனைகளை மய்யப்படுத்தியதாகவும், சட்டப்புலமையுடனும் சட்டப்புதுமைகளுடனும் கையாளப் படுதல் வேண்டும்.
வழக்குரைஞர்களின் பங்களிப்பு :
அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களை அடைவதற்கான அடிப்படைக் கடமை யில், தலித் மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு கடும் முயற்சியை மேற்கொள்வது, ஒவ்வொரு வழக்குரைஞரின் கடமையாகும். வழக்குரைஞர்களாகப் பதிவு செய்யும்போது, ""அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள குறிக்கோள்களுக்கு கடமைப்பட்டுள்ளவர்களாகநடந்து கொள்வோம்'' என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17, "தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்' என்று அறிவித்துள்ளதை செயல்வடிவத்திற்குக் கொண்டு வரவேண்டியது, அனைத்துக் குடிமக்களின் கடமையாகும்.
வழக்குரைஞர்களைப் பொருத்தமட்டில், இந்திய வழக்குரைஞர் கழகத்தின் விதி 46 பின்வருமாறு அவர்களைக் கட்டா யப்படுத்துகிறது. பிரிவு 4 சட்ட உதவி வழங்க வேண்டிய கடமை : (தொழில் நன்னடத்தை மற்றும் ஒழுங்கு முறை விதிகள் பகுதி 2இன் கீழ் விதி 46இல் இந்திய வழக்குரைஞர் கழகம் வகுத்துள்ளது) ""வழக்குரைஞரின் உதவி தேவைப்படும் எந்த ஒரு நபரும், அவ்வழக்குரைஞருக்கு கட்டணத்தை முழுமையாகவோ, போதுமான அளவிற்கோ தர இயலாதபோதும் சட்ட உதவிக்கான உரிமையைப் பெற்றுள்ளார் என்பதை, சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு வழக்குரைஞரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஒரு வழக்குரைஞரின் பொருளாதாரச் சூழலுக்குட்பட்டு, வறியவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இலவச சட்ட உதவி வழங்குவது, வழக்குரைஞரின் மிக உயர்ந்த சமூகக் கடமையாகும்.''
சட்ட உதவிகளை வழங்குவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட "சட்ட உதவிக்குழு' என்று ஒரு குழு, தமிழ்நாடு வழக்குரைஞர் கழகத்தில் உள்ளது என்பது பலருக்கு செய்தியாக இருக்கலாம். இருப்பினும், அக்குழுவின் பங்களிப்பும் செயல்பாடுகளும் புதிராகவே உள்ளன. இது ஒரு முரண் நகையும்கூட.
நீதிபதிகளின் பங்களிப்பு :
(1) நீதிபதிகள் தங்கள் பணிகளை நிறைவேற்றும்போதேகூட, தலித் மக்களின் நலன் தொடர்பானவற்றில் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். தலித் மக்களுக்கு நீதி வழங்க அவர்கள் சட்டங்களை மீற வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு இயற்றப்பட்ட சட்டமும் தலித் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. நீதித்துறையினர் செய்ய வேண்டியதெல்லாம், தலித் மக்களின் குறைகளை கருணையுணர்வுடன் கேட்டு, அந்தந்த சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ள தீர்வழிகளை வழங்க வேண்டியது மட்டுமே.
(2) சான்றாக, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995இன் விதி 12 பின்வருமாறு கூறுகிறது: ""வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வசதிகள் குறித்த அறிக்கை, மாவட்ட நடுவர் அல்லது உட்கோட்ட நடுவர் அல்லது பிற நிர்வாக நடுவர்
அல்லது காவல் துறை கண்காணிப்பாளரால் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். குறித்த நேரத்திற்குள் நிவாரண உதவி அல்லது இழப்பீடு – பாதிக்கப்பட்டவர்களையோ அல்லது அவரைச் சார்ந்தவர்களையோ சென்றடையவில்லை என்றோ அல்லது நிவாரண உதவி போதுமானதாக இல்லை என்றோ சிறப்பு நீதிமன்றம் கருதினால், நீதிமன்றம் தீருதவியை முழுமையாகவோ, பகுதியாகவோ வழங்க வும், வேறு வகை உதவிகளையும் வழங்கிடவும் உத்தரவிடலாம்.''
(3) பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்) அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் எந்தவொரு நீதிபதியையும் மேற்கண்ட விதியை இதுவரையிலும் பயன்படுத்தி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமாறு செய்ததாகத் தெரியவில்லை.
(4) மேலும், தலித் மக்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்களுக்கு நீதிபதிகள் சட்ட நோக்கம் சுட்டும் பொருள் விளக்கம் அளித்தல் வேண்டும். அப்பா பாலு இங்காலே – எதிர் – கர்நாடக மாநில அரசு 1995 4 Supp. SCC 469 என்ற வழக்கின் தீர்ப்பில் நீதிபதி திரு. கே. ராமசாமி பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் :
""ஆகவே, நீதிபதிகள் காலத்தின் கட்டாயம் மற்றும் சமூகத் தேவைகளையும் சந்திக்கும் அளவில் மனிதச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். வாழ்வுரிமையை அர்த்தமுள்ளதாக்கவும், அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்தவும், சட்டமியற்றும் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றவும் செயல்பட வேண்டும். இந்நீதிமன்றம், தேசத்தின் வாழ்வை மாற்றியமைக்கும் கருவியாக உள்ள சூழலில், தேசத்தின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படவும்,
அரசமைப்புச் சட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளவற்றை மெய்ப்பிக்கும் வகையில் சட்டத்தை நடைமுறைக்கேற்றவாறு பொருள் விளக்கம் அளித்து – பொதுநலனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்...
""சட்டத்திற்குப் பொருள் விளக்கம் காணும் போது, ஒரு நீதிபதி அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களையும் சட்டத்தின் நோக்கத்தையும் உணர்வதுடன், அதைத் தனது மனதில் எப்போதும் இருத்திக் கொண்டு, தீண்டாமையை ஒழிப்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தலித் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் சமத் துவ உரிமையை வழங்க வேண்டும். சமூக ஒற்றுமையை கனிய வைக்கவும் சகோதரத்துவம் உண்மையில் நிலைபெறச் செய்யவும் செயல்பட வேண்டும்.
""ஆகவே, நீதிமன்றம் உளவியல் ரீதியான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்ற போதிலும், நியாயமான சந்தேகம் என்பது (ஏசு உயிர்தெழுந்த பின் அது அவர்தானா என்பதை அறிய அவரது சீடர் ஏசுவின் விலாவிலுள்ள காயத்தை தொட்டுப்பார்த்து உறுதி செய்து கொண்ட) "தாமஸ் கொண்ட சந்தேகமாக' இருக்கத் தேவையில்லை : மனச் சாய்வு, அற்பப்புத்தி, ஆழப்புதைந்துள்ள தவறான எண்ணம், வாழ்க்கையின் பிற பணியில் இருப்பவர்களுக்குரிய உள்ளார்ந்த பக்கச் சார்புகள் ஆகியவற்றை நீதிபதி கள் கொண்டிருக்கக்கூடாது. நேரறிவுள்ள மனிதன் என்பதற்கான அளவுகோல், அதேபோன்ற சூழலில் ஒரு நபர் நடந்து கொள்ளும் முறையும், அந்நபருக்கு ஏற்படக்கூடிய நியாயமான சந்தேகமும்தான் என்பதே விதி.''
சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பங்கு :
1) தலித் மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்த வழிமுறைகள் சட்டப் பணிகள் ஆணைக் குழு சட்டத்தின் முகப்புரையிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு விஷயங்களை நியாயப்படுத்தும் மற்ற சட்டப்பிரிவுகளும் இச்சட்டத்தில் உள்ளன. நுகர்வோர் பாதுகாப்பு,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்கு சிறப்பு கவனம் கொள்ளும் எந்த ஒரு விஷயத்தையும் சமூக நீதி வழக்கில் வழியாக தேவையான நடவடிக்கை எடுத்தல், அதற்காக சமூகப் பணியாளர்களுக்கு சட்டத் திறமைகளில் பயிற்சி அளித்தல். சட்டப்பணிகள் தளத்தில், அதிலும், அத்தகையப் பணிகள் வறியவரின் தேவைகளுக்கேற்ப வழங்குதல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு, சட்டப்படி வகுக்கப்பட்டுள்ள சட்டப் பணிகளுக்கான திட்டங்களை சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இருப்பிலுள்ள நிதியைக் கொண்டு நிறைவேற்ற தன்னார்வ சமூகத் தொண்டு நிறுவனங்கள், மாநில – மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் ஆகியவற்றிற்கு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு வழங்குதல், சமூகத்தின் அடித்தள மக்களிடம், குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர், பெண்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறத் தொழிலாளர்களிடையே பணியாற்றும் தன்னார்வ சமூக நல நிறுவனங்களின் ஆதரவைப் பெற, சிறப்பு முயற்சிகள் எடுத்தல் ஆகியவை சட்டப்பணிகள் ஆணைக் குழு சட்டத்தின் பிரிவு 4இன் (d), (g), (i), (m) ஆகிய உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே சட்டத்தின் பிரிவு 7, ""நடுவண் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையும் மாநில ஆணைக் குழு நடுவண் ஆணைக் குழுவின் கலந்தாலோசனையுடன் ஒழுங்கமைவு விதிகள் வகுத்து மேற்கொள்ளலாம்'' என்று குறிப்பிடுகிறது.
(2) இருப்பினும், சட்ட உதவிகளை வழங்க வேண்டிய அனைத்து அமைப்புகளும் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யத் தவறியதன் காரணமாக, அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. இந்நிலையில்தான் சட்ட உதவிக்கான இயக்கம் ஈடுபட்டு, இந்த அவலங்களைத் தீர்க்க முனைய வேண்டும்.
3) இந்தக் கருதுகோளை மேலும் விவரிக்க புள்ளி விவரங்கள் இல்லாதது எனக்கு குறையாக அமைந்துள்ளது. சட்ட உதவி கோரி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் விண்ணப்பித்த விவரங்களைத்
தவிர, வேறு எந்தப் புள்ளிவிவரங்களும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் இல்லை. தலித் மக்களின் குறைகளை முறையாகப் பதிவு செய்து, அவற்றின் தன்மைக்கேற்ப வழக்குகளை வகைப்படுத்தவும், அவை தொடர்பான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தீர்வழிகள் :
1. வழக்குரைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடையே தலித் உரிமைகளில் செயல்பட தன்னார்வம் கொண்டுள்ள நபர்களைக் கண்டறிந்து, ஒரு பட்டியல் தயார் செய்து பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சிறப்பு சட்டப் பணிகள் குழு ஒன்றை மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவில் ஏற்படுத்த வேண்டும்.
2. தலித் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள் குறித்த சட்ட மற்றும் பிற பயிற்சிகளை அச்சிறப்பு சட்டப் பணிகள் குழுவிற்கு வழங்க வேண்டும். குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், கையால் மலம் அள்ளுதல் மற்றும் உலர் கழிப்பறை தடைச் சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் போன்ற சட்டங்கள் குறித்து அறியச் செய்தல் வேண்டும். இவை மட்டுமின்றி, பஞ்சமி நிலத் திட்டம், சாதிச் சான்று போன்ற தலித் மக்களுக்காக மாநில அரசுகள் உருவாக்கும் பல திட்டங்களையும் இச்சிறப்புக் குழுவினருக்குப் பயிற்சியில் அறியுமாறு செய்ய வேண்டும்.
3. தலித் மக்களின் உரிமைகளைப் போராடிப் பெற நீதிமன்ற அமைப்புகளையும் , பிற அமைப்புகளையும் அணுக மேற்கண்ட குழுவில் உள்ளவர்களுக்கு ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும்.
4. சட்டப்பணிகள் ஆணைக் குழுக்கள் செயல்படுத்த உருவாக்கப்படும் சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி மற்றும் பிற உதவிகளை இந்தக் குழுவிற்கு வழங்க வேண்டும்.
5. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் விரிவாகக் குறிப்பிட்டுள்ள வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை செயல்படுத்தும் வகையில் அவர்கள் புகார்களைத் தயார் செய்வதற்கும், சட்ட அமைப்புகளை அணுகுவதற்கும் உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வழக்குரைஞர் குழுக்களை மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவில் உருவாக்க வேண்டும்.
6. தலித் மக்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கவும், தேவைப்படும்போது கள ஆய்வு மேற்கொள்ளவும் சட்டம் சார்ந்த பயிற்சி முகாம்களை, சமூகத் தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து நடத்திட வேண்டும்.
ஏனெனில், நீதி என்பது உரிமை ; பிச்சையல்ல!