சில நாட்களுக்கு முன்னால் மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என மக்களவையில் திருமாவளவன் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்.

அப்படியான ஒரு கோரிக்கை தலித்தாக இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களிடம் எழுவதற்கு முக்கிய காரணம் இந்து மதத்தில் இருந்து மதம் மாறி அங்கு செல்பவர்கள் அங்கு சென்றும் தமது சாதிய மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புவதும், அதற்கு திருச்சபை இடம் கொடுப்பதுமே ஆகும்.

thirumavalavan 328கத்தோலிக்க திருச்சபையில் இப்படியான பாரபட்சம் தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருவதால்தான் அதற்கு எதிராக தலித் கிறித்தவர்களும் நீண்ட நாட்களாக போராடி வருகின்றார்கள்.

இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்ட பின்னாலும் சனாதனத்தில் இருந்து விடுபடாமல் சாதிவெறியோடு மிகத் தீவிரமாக இயங்குகின்றார்கள். இது அவர்களை சாதி ஆணவப் படுகொலைகளை நிகழ்த்தும் அளவுக்கு இட்டுச் செல்கின்றது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள முகிழ்த்தகம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார். திருப்பாலைக்குடியைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ரஞ்சனியை காதலித்ததற்காக சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க கிறித்தவர்கள் 50 லட்சம் பேரில் 35 லட்சம் பேர் தலித் மக்கள் ஆவர்கள். அதாவது ஏறக்குறைய 70 சதவீதத்திற்கு மேல் அவர்கள்தான் இருக்கின்றார்கள். ஆனால் தலித் கத்தோலிக்க கிறித்துவர்களின் விகிதாச்சாரத்தை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, தமிழகத்தில் மொத்தம் உள்ள 18 ஆயர்களில் 12 ஆயர்களாக தலித் சமூகத்தை சார்ந்தவர்களையே நியமனம் செய்திருக்க வேண்டும். ஆனால் சொற்ப எண்ணிகையிலான தலித் ஆயர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கேரளா, தமிழ்நாடு, நாகாலாந்து போன்ற மாநிலங்களிலும், மும்பை, டில்லி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களிலும் பல கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களிலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை என தலித் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள்.

மேலும் இந்தியாவிலுள்ள பல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர்களை சேர்த்துக் கொள்வதாகவும், கிறிஸ்தவ திருச்சபைகளில் பொறுப்பு வகிக்கும் பலர் தங்களை ரெட்டி, பெர்னாண்டஸ், நாயுடு, மோராஸ், டிசௌசா, குட்டி, நாடார், லோபஸ் போன்ற பெயர்களை பின்னால் இணைத்துக் கொள்வதாகவும் தனித் தனி ஆலயங்கள், தனித் தனி கல்லறைத் தோட்டங்கள் , பிணங்களை தூக்கிச் செல்ல தனி ஆம்புலன்ஸ்கள் என அத்தனை இடங்களிலும் சாதியப் பாகுபாடு பார்க்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

உண்மையில் இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதற்கு எதிரான போராட்டத்தை தலித்தாக இருந்து மதம் மாறியவர்கள் நிச்சயம் முன் எடுக்க வேண்டும். அப்படியான போராட்டத்திற்கு முற்போக்கு சக்திகளையும் அவர்கள் இணைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அதை எல்லாம் செய்யாமல் மதம் மாறிய கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியல் வகுப்பில் சேர்க்க கோரிக்கை வைப்பது பார்ப்பனத்தை மீட்டுருவாக்கம் செய்ய மட்டுமே உதவும்.

இப்படியான கோரிக்கைகள் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே இருந்துதான் வருகின்றது. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித்துகளை பட்டியல் வகுப்பின் கீழ் இணைக்க வேண்டும் என ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது குறித்து 1995 ஆம் ஆண்டிலேயே அப்போதைய பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பொதுவாக மதம் மாறிய தலித்துகளை அவர்கள் எந்த மதத்திற்கு மாறினார்களோ அந்த மதத்தோடு அடையாளப்படுத்த வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு இந்து மதத்தில் இருந்து பௌத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு செல்லும் தலித்துக்களை பட்டியல் வகுப்பில் சேர்ப்பதும், ஆனால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைத் தழுவுவோர்களை பட்டியல் வகுப்பில் சேர்க்காமல் தவிர்ப்பதும் நடந்து வருகின்றது. இதுவும் தலித்தாக இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தங்களையும் பட்டியல் வகுப்பில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்க அவர்களைத் தூண்டுகின்றது.

பெளத்தம் மற்றும் சீக்கிய மதத்தில் சேர்ந்த தலித்துகளை உண்மையிலேயே பார்ப்பனியம் இன்னும் தலித்துகளாகவே கருதுவதுதான் அவர்களை பட்டியல் வகுப்பில் சேர்ப்பதற்குக் காரணமாக உள்ளது. பார்ப்பனியம் பெளத்தத்தையும் சீக்கியத்தையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே இன்னும் உரிமை கோரி வருகின்றது என்பதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

ஆனால் கிறிஸ்துவத்தையோ, இல்லை இஸ்லாமையோ அது வேறு மதமாக, மீலேச்ச மதமாக தனக்கு எதிரான மதமாக பிரகடனப்படுத்துகின்றது. அதனால்தான் மதம் மாறிய தலித்துகளை பட்டியல் வகுப்பில் சேர்த்து இடம் கொடுக்க மறுக்கின்றது.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி தலித்தாக இருந்து மதம் மாறிய யாருமே இன்று தலித் அல்ல என்பதும், அவர்கள் சாதிகளற்ற கிருஸ்தவர்கள்தான் என்பதையும்தான்.

அதனால்தான் சொல்கின்றேன், இன இழிவைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனவர்களை மீண்டும் அதே பட்டியலில் வைத்து இட ஒதுக்கீடு கொடுப்பது அவர்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாதிய அடையாளத்தை தொலைக்க வழியில்லாமல் செய்துவிடும் என்று.

சாதி ஒழிப்பில் அக்கறையற்றவர்கள் இந்து தலித்துக்களுக்கும், மதம் மாறிய தலித்துக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகி விட்டது என நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள். அவர்களின் கண்ணீர் உண்மையானது என்றால், இன இழிவை ஒழிக்கும் வழியையும் சொல்லிவிட்டு கண்ணீர் வடிக்கலாம்.

மேலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கிடைக்குமாறு வழி செய்யப்பட்டால் மதமாற்றம் அதிகரிக்கும் என்று வலதுசாரி இந்து அமைப்புக்கள் கூறிக் கொண்டிருக்கின்றன. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பிரச்சினையை தீர்ப்பது மிக எளிமையானது. தலித்தாக இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவிக்கச் சொல்லி நாம் கோரிக்கை வைக்கலாம்.

தங்கள் மீதான் பார்ப்பனிய இந்து மதத்தின் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து அதில் இருந்து விடுபட மதம் மாறியவர்களை இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் பட்டியல் வகுப்பில் சேர்க்க கோரிக்கை எழுப்பவதைவிட சுமரியாதையோடு அவர்களை கிறிஸ்தவ மதத்தில் நடத்தச் சொல்லியும் தங்கள் மீதான பாரபட்சத்தை கடைபிடிக்கும் சாதி வெறியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் விசிக அவர்களோடு இணைந்து போராடலாம்.

காரணம் இத்தனை ஆண்டுகால இட ஒதுக்கீடு சாதி வெறியர்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. இட ஒதுக்கீடு ஒரு போதும் சாதியை ஒழிக்கப் போவதில்லை என்பதை நாம் நிதர்சனமாகப் பார்த்து வருகின்றோம். சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பது சரியானதுதான். ஆனால் இத்தனை ஆண்டுகால இட ஒதுக்கீடு ஏற்றத்தாழ்வை எந்த அளவிற்கு குறைத்திருக்கின்றது, சமூக சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் ஒரு அடியாவது முன்னேறி இருக்கின்றதா என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

தங்களுக்கு தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தேவையில்லை, தங்களுக்கு தன்மானமும் சுயமரியாதையும்தான் முக்கியம் என பார்ப்பன இந்துமதத்தில் இருந்து வெளியேறியவர்களை “அங்கே போகாதே நீ பார்ப்பன இந்து மதத்திலேயே தீண்டத்தகாதவனாக இரு, உனக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தருகின்றேன் என்று சொல்வது எந்தவகையிலும் முற்போக்கான அரசியலாக இருக்காது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினருக்கு 20 விழுக்காடும், ஆதி திராவிடர் வகுப்பினருக்கு 18 விழுக்காடும் மற்றும் பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் வழங்கப்படுகின்றது.

நீதிபதி ஜனார்த்தனம் குழு ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தனி இடஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டம் 15.9.2007 முதல் அமலுக்கு வந்தது. இதன் படி பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லீம் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடதுக்கீடு கோரிக்கை திமுக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த தனி ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் கிடைத்த வாய்ப்புகளைவிட குறைவான வாய்ப்புகளே கிடைப்பதாக கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம்சாட்டியதை அடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீடு திமுக அரசால் 2008 ஆம் ஆண்டே திரும்பப் பெறப்பட்டது.

தற்போது பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் போக மீதமுள்ள 26.5 சதவீத இட ஒதுக்கீட்டை கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மதம் மாறிய தலித்துகளை பட்டியல் வகுப்பில் சேர்த்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் 18 சதவீதத்தில் அருந்ததியர்களுக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு போக 15 சதவீதம் மட்டுமே உள்ளது.

எனவே எப்படி பார்த்தாலும் திருமாவளவன் அவர்களின் கோரிக்கை தவறானதுதான். உண்மையில் தலித்தாக இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்க திருமாவளவன் அவர்கள் குரல் கொடுக்கலாம். மதம் மாறிய தலித்துகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு கிடையாது என 1950ல் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யப் போராட்டம் நடத்தலாம்.

ஆனால் அதை எதையும் செய்யாமல் தலித்தாக இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களை பட்டியல் வகுப்பில் சேர்த்து இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் எனச் சொல்வது தலித்களின் எண்ணிக்கையை பெரும்பான்மையாகக் காட்டி அரசியல் பேரம் செய்வதற்கு மட்டும் உதவுமே ஒழிய இன இழிவை ஒழிக்க உதவாது.

- செ.கார்கி

Pin It