நாட்டில் பலவற்றை முன்னர் தேசியமயமாக்கி பின்னர் தனியார்மயமாகவும் மாற்றிவிட்டனர். ஆனால் இந்தியாவில் தேசமெங்கும் அரசாங்கத்தால் தேசியமயமாக்கபடாமல் தானாகவே தேசியமயமாகிப்போன பலவகைப்பட்ட தனிமனித ஒழுங்கீனங்கள் மட்டும் தனியார்மயமாக்கப்படாமல் உள்ளன.

Indiaஅதாவது கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, வாயில் புகையிலையிட்டு துப்புவது, குப்பைகளை இடுவது என தனிமனித ஒழுங்கீனங்களானது ஏதோ நாட்டின் ஒருசில இடங்களில் நடக்கும் நிகழ்வல்ல. இந்தியாவெங்கும் பரவலாக நடக்கும் நிகழ்வாகும். ஆற்றில், குளங்களில் நீர்வற்றினாலும் சிலரது வாயில் மட்டும் உமிழ் நீர் வற்றாது போலிருக்கிறது. எங்கு பார்த்தாலும் துப்போ துப்பென்று துப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தேசியமயம், இறையாண்மை என்று வந்துவிட்டால் தமிழக அரசியல்வாதிகள் மட்டும் முன்னணியில் வந்துவிடுவார்கள், வரிந்து கட்டிக்கொண்டு. ஆற்றுதண்ணீரை தேசியமாக்க வேண்டும் என்று தொண்டை தண்ணீர் வற்ற கூவியவர்களாயிற்றே. பின் அதுவும் மறந்துப்போய் இந்த சீசனில் ஈழத்தைப் பற்றி பேசினாலோ இந்திய இறையாண்மைப் பற்றி பேசுபவர்களாயிற்றே. சரி, அது போகட்டும். நாம் மீண்டும் நம் பிரச்சினைக்கே வருவோம்.

பொது மக்கள் கூடும் இடங்கள் என்றால் சொல்ல வேண்டியத் தேவையேயில்லை. நன்றாகவே பயன்படுத்தி கொள்கிறார்கள். சகித்துக்கொண்டு கீழே பார்த்தும் நடக்கமுடியாது. பார்க்காமலும் நடக்கமுடியாது. நடை உடைகளில் நாகரிகமாக தெரிபவர்கள்கூட பெரும்பாலும் இம்மாதிரியான செயல்களை அதிகம் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். பொது சுத்தம், சுகாதாராம் பற்றி பலர் பல வகையில் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் தன்னளவில் எந்தமட்டும் நேர்மையாக நடந்துக்கொள்கிறோம் என்பதனையும் நம்மை நாமே கேட்டுக்கொண்டு அதன்வழி நடந்தால் நலம் உண்டாகும்.

சில இருசக்கர வாகன ஓட்டிகளும் பேருந்தில் பயணம் செய்பவர்களும் சாலையில் வரும் மற்றவர்களைப் பற்றிய அக்கறையே இருப்பதில்லை. வாகனம் ஓட்டியபடியே துப்புவது, பேருந்தில் பயணம் செய்தபடியே துப்புவது போன்ற துப்புகெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு துப்பும்பொழுது காற்றில் பறந்து பின்னால் வருபவர்கள் மேல் படுமே என்ற அச்சமோ நாணமோ சிறிதும் அற்றவர்களாக உள்ளார்கள்.

அதுவும் அரசு அலுவலக கட்டடங்களாக இருந்துவிட்டால் திருவிளையாடல்தான் போங்கள். படிகளிலும் சுவர்களிலும் சுதந்திரமாக செயல்பட்டிருப்பார்கள் இந்திய குடிமக்கள். இந்திய மக்களிடம் கலாச்fசார பரிமாற்றம் நன்றாகவே வேலை செய்கிறது. எதில் ஒற்றுமை உள்ளதோ இல்லையோ இந்த மாதிரியான பொது அசுத்தம் ஏற்படுத்துவதில் மட்டும் ஒற்றுமை பேணுகிறார்கள். அதனால் தமிழர்களும் சற்று ஆறுதல் அடையலாம், இது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நிகழ்கிறது என்று நினைக்காமல். எனவே தமிழ்நாடு மட்டும்தான் டாய்லட் நாடு என்று நாமே நம்மை இழிவு படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

பொது ஒழுங்கென்பது தனிமனித ஒழுங்கை பொருத்தே அமைகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் அவரவரளவில் ஒழுங்கை கடைப்பிடித்தாலேயே பொது ஒழுங்கானாது தானாக அமைந்துவிடும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் இன்றே இம்மாதிரியான ஒழுங்கீனங்கள் ஏற்படுவதற்கு காரணமாகாமல் இருக்க உறுதி கொண்டால் எதிர்காலத்திலாவது நாடு நலம்பெறும். மெத்த படித்த மேன்மையானவர்களே திருந்த மனமில்லாத நிலையில் பாமரர்களை பழிக்க நமக்கு அறுகதை கிடையாது.

பொது ஒழுங்கை நம் வீட்டிலிருந்து தொடங்கி குழந்தை பருவத்திலிருந்தே பள்ளிகளிலும் பயிற்றுவிக்க பழகினால் பயன் உண்டாகும். அரசுகளும் இதனை கருத்தில் கொண்டு பொது கழிப்பிடங்களை அதிகரிப்பதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அவைகளை நல்ல சுகதாராமான முறையில் பராமரித்து வரும் கடமையிலிருந்தும் தவறாமலிருக்க வேண்டும். பல இடங்களில் பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதைக் காட்டிலும் பலர் திறந்த வெளியை தேர்ந்தெடுப்பதற்கும் காரணம் அவற்றினை சரிவர பராமரிக்காமல் துர்நாற்றத்துடனும் சுகாதாரக்கேட்டுடனும் வைத்திருப்பதுமே ஆகும்.

எது எதற்கோ கொடிபிடித்து கோசம் போடும் அரசியல் கட்சிகளும் பொது நல அமைப்புகளும் பொது சுத்தம் பற்றிய விழிப்புணர்வுக்காகவும் தொடர்ந்து குரலெழுப்பினால் மாற்றம் விளையாமல் போகாது.


- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It