qanon conspiracy'QAnon conspiracy theory' என்ற சொல் தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரவலாக பலரும் இது குறித்து பேசுவதும், செய்தித்தாள்கள் எழுதுவதும், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இதுகுறித்து விவாதிப்பதும் காணப்படுகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தச் சொல் அதிகம் பரிச்சயம் இல்லாமல் தான் இருந்தது. 2020 அதிபர் தேர்தல் தொடங்கிய நாளிலிருந்து செய்தி ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் என்றும் கூறலாம்.

QAnon -ஐ எப்படி கூறுவதென்றால் ஒரு தவறான தகவலை, கோட்பாட்டை பொதுவெளியில் பரப்பிவிட்டு (முக்கியமாக சமூக வலைத்தளங்களில்) ஒரு சாரார் மக்களை நம்ப வைக்கப்படுவது.

உதாரணமாக கொரோனா தொற்று குறித்த தவறான செய்திகள், Black lives matter பேரணியில் பங்கு பெற்றவர்களை தவறாக சித்தரிப்பது, அமெரிக்க அதிபர் தேர்தலில் தவறான கோட்பாடுகளை பரப்புவது, அறிவியலுக்கு புறம்பான செய்திகள் இதுபோன்ற பல தவறான கருத்துக்களை தெரிவிப்பவர்களும் அதை பின்பற்றுகிறவர்களும் இந்த 'QAnon" தியரியை நம்புகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகமான NPR மற்றும் கருத்துக் கணிப்புகளை நடத்தும் IPsos நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் 17% இது போன்ற போலியான கோட்பாடுகளையும் செய்திகளையும் நம்புகிறார்கள் என்று தெரிவித்தனர்.

"அமெரிக்க அரசின் அதிகாரத்தை சாத்தானின் ஆதரவு பெற்ற மக்களால் நடத்தக் கூடும் என்றும் ஹாலிவுட் மற்றும் ஊடகங்களை அவர்கள் கைப்பற்ற கூடும்" என்று அவர்கள் நம்புகிறார்களாம்.

ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் QAnon கோட்பாட்டை நம்பி வந்தவர்கள் தான், வன்முறை சம்பவங்களில் பங்கேற்றவர்களை விசாரித்த போது இது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை கவனித்து Homeland security என்ற அமைப்பு "வரும் காலங்களில் உள்நாட்டில் நடைபெறும் வரும் வன்முறை போராட்டங்கள், குழந்தை கடத்தல், மற்றும் தீய சக்திகள் இந்த QAnon கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

QAnon என்றால் என்ன?

இணையதளங்களில் இருந்து வரும் போலி செய்திகள், கோட்பாடுகளை ஆணித்தரமாக நம்பும் மக்கள், ஒரு குடையின் கீழ் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரு தீய சக்திகள் (சாத்தான்) நம்மை ஆட்டி படைக்கும் என நம்புகிறார்கள் (Cabal of Satan worshiping pedophiles).

QAnon இதில் 'Q' என்பதன் பொருள் மர்மமான நபர்கள் இணையதளங்களில் Q என்ற அடையாளத்துடன் எழுதுவதும், அதற்கு எந்த ஒரு ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது. இதைப் பரப்புகிறவர்கள் தெரிவிக்கும் கோட்பாடுகள் நிரூபிக்கப்படாதது. சுருக்கமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமைவாத மற்றும் வலதுசாரி தத்துவத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கும் கோட்பாடுகள் ஆகும்.

சமீபகால எடுத்துக்காட்டு கூற வேண்டுமென்றால் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வரும் கருத்துக்கள் இதில் வரும் என்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். ஆனால் Q - என்றால் யார் என்று இதுவரை தெரியவில்லை. முதன் முதலில் Q - என்ற சொல் 4chan என்ற இணையதளத்தில் இருந்து தான் வந்திருக்கிறது.

காலத்திற்கு ஏற்ப இதுவும் தன்னை மாற்றியிருக்கிறது. முதலில் 4chan இணையதளத்தில் இருந்து மட்டும் வந்தது பின்னர் 8chan என்ற இணையதளத்துக்கு அவர்கள் மாறிவிட்டார்கள். கடந்த ஆண்டு இந்த இணையதளத்தை முடக்கும் வரையில் இதுபோன்ற போலியான செய்திகளை இங்கிருந்து பரப்பி வந்திருந்தார்கள்.

யாரை குறிப்பிடுகிறீர்கள் என்ற தகவல்கள் எல்லாம் அதிகபட்சமாக மூன்றெழுத்து வரை இருக்கும் சுருக்கக் குறியீடுகள் மூலமாக தெரிவிக்கப்படும்.

பின்னாளில் அதுவே Q Posts ஆக மாறியுள்ளது. 2018 க்கு பிறகு இதற்கென பிரத்யேக "Q Drop" ஆஃப்ஸ் உருவாக்கப்பட்டது. Q Post அடிப்படையில் வரும் தகவல்களை ஒரு செயலியில் காணப்படுவதாக வடிவமைக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை இவைகள் பயன்பாட்டில் இருந்தன. இதுபோன்ற ஆஃப்ஸ் - களை கூகுள் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் அதன் ஸ்டோர்களில் இருந்து முழுவதுமாக நீக்கி இருக்கிறது. எனினும் டிரம்ப் மீண்டும் அதிகாரத்துக்கு வருவார் என QAnon followers நம்புகிறார்கள்.

அதிபர் தேர்தல்:

2020 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருந்த சில மாதங்களுக்கு முன்னர் முக்கிய சமூக வலைத்தளங்களில் Q என்ற பெயருடன் இருந்த கணக்குகளை முடக்கியது டிவிட்டர், பேஸ்புக் கூகுளின் யூடியூப் நிறுவனங்கள். இதனால் சில நாட்கள் வரை இதில் நம்பிக்கை உடையவர் வெளியே தெரியாமல் இருந்தார்கள்.

ஆனால், அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தேல்வி என அதிகாரப்பூர்வமாக செய்திகள் வரத் தொடங்கியது முதலே அதிபராக இருந்த டிரம்ப் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினார். தேர்தல் நம்மிடம் இருந்து திருடப்பட்டது என்றார். அதற்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என தேர்தல் நடத்திய அமைப்பு கூறியது.

இந்தச் சூழ்நிலையில் தான் ஜனவரி மாதம் 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற அவையில் ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்றதை உறுதிப்படுத்த செனட் (நாடாளுமன்ற) உறுப்பினர்கள் கூடிய நேரத்தில், டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்ட ஒரு பதிவு, "தேர்தல் முடிவுக்கு எதிரான பேரணி நடத்துவோம்" இது அவரது ஆதரவாளர்களை ஒன்றிணைத்து பேரணி சென்ற போது தான் நாடாளுமன்ற கட்டிடத்தை சூறையாடி பெரும் வன்முறை சம்பவமாக நிறைவேறியது.

இந்த சம்பவத்தை நிறைவேறியது 'QAnon - followers' என்பவர்கள் தான் என கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவத்தை உலக முழுவதும் உள்ள தலைவர் கண்டனம் தெரிவித்தனர்.

அதிபர் டிரம்பின் சமூக வலைத்தளத்தல கணக்குகள் அனைத்தையும் முடக்கியது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மறுநாள் டிவிட்டர் நிறுவனம் 70,000 கணக்குகளை முடக்கியது. அவை அனைத்தும் QAnon Conspiracy theory ல் தொடர்புடையதாக இருந்தது. டிவிட்டரை தொடர்ந்து பேஸ்புக், யூடியூப் நிறுவனமும் இதுபோன்ற கணக்குகளை முடக்கியது.

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களின் பதவியேற்பு விழாவில் QAnon Supporters கலந்துக் கொண்டு சதி செய்யக் கூடும் என தகவல்கள் கிடைத்ததால் அந் நிகழ்ச்சியை நடத்த பல அடுக்கு இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வாசிங்டன் டிசி பகுதியில் பொது மக்கள் கூடுவதற்கு பல கட்டுரைகள் விதிக்கப்பட்டது.

Parler எனும் புதிய வலைத்தளம்:

டிவிட்டர் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் QAnon தொடர்புடைய கணக்குகளை முடிக்கினாலும் இதன் ஆதரவாளர்கள் வெவ்வேறு வலைத்தளங்களின் மூலமாக வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள்.

2018ல் டிவிட்டருக்கு மாற்றாக இருக்கும் என தொடங்கப்பட்ட Parler எனும் புதிய சமூக வலைத்தளம் வலதுசாரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

ஏனென்றால் இதில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் கிடையாது. இந்த நிறுவனத்தை தொடங்கியபோது "The world's #1 free speech social media" என்றே தன்னை அறிமுகப்படுத்தியது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் இதில் இணைந்து கொண்ட பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து. சுமார் 10 மில்லியன் கணக்குகள் புதிதாக தொடங்கியுள்ளனர். தற்போது இதில் மொத்தம் 20 மில்லியன் பயனாளிகள் இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் இந்த சமூக வலைத்தளம் முற்றிலுமாக செயல் இழந்தது. ஏனென்றால் இவர்களுக்கு பின்னால் இருந்து இணையதள சேவைகளை வழங்கும் அமேசான் வெப் சர்வீஸ் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் இவர்களுக்கு சேவைகள் வழங்க மாட்டோம் என்றார்கள்.

கட்டுப்பாடு இல்லாமல் வன்முறையைத் தூண்டும் சம்பவங்களை பதிவிடுகிறார்கள், மற்றும் நாடாளுமன்ற கட்டிடத்தில் நிகழ்த்தப்பட்ட பேரணிக்கு முன்கூட்டியே இத்தளத்தில் பயனாளிகள் திட்டமிட்டார்கள் என காரணம் சுமத்தியது அமேசான்.

அது ஒருவகையில் உண்மை கூட என்று பல்வேறு நோக்கர்கள் கருதினார்கள். முடிவு, இதனால் இதைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது ஒரு அரசியல் நோக்கம் கொண்ட செயல் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது Parler நிறுவனம். (Source: NPR technology.)

வேகமாக பரவும் சதி/ சூழ்ச்சி கோட்பாடுகள்:

1969 ஆம் ஆண்டு நிலவில் மனிதன் கால் பதித்த நாசா விண்கலத்தை அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் டிவியில் நேரடியாக பார்த்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகள் கழித்தும் பத்தில் ஒரு நபர் இதை நம்ப மறுக்கிறார்களாம் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.

இதுமட்டுமின்றி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்றும் நம்புகின்றனர். இதில் உண்மை இல்லை. அவர் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பிறந்திருக்கிறார்.

அதற்கான பிறப்பு சான்றிதழை (பிறந்த தேதி ஆகஸ்ட் 4, 1961) அவர் அதிபராக இருக்கும் போது கூட வெளியிட்டார். டொனால்ட் டிரம்ப் அதிபராக போட்டியிட்ட போது இந்தக் குற்றச்சாட்டை வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் இன்னொரு சம்பவத்தைக் குறிப்பிடலாம் அதாவது அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சில மக்கள் இன்னும் அதை ஒரு யுஎஃப்ஒ தாக்குதல் என நம்புகிறார்கள்.

இதே கோணத்தில் தான் பயங்கரவாதிகளால் தகர்க்கபட்ட "இரட்டை கோபுரம்" ஒரு யுஎஃப்ஒ தாக்குதல் என அந்த சம்பவத்தைப் பார்க்கிறார்கள்.

QAnon கோட்பாட்டை பின் தொடரும் நபர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது பாருங்கள், அமெரிக்க அதிபராக இருக்கும் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இவர்களைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் டாம் ஹேங்ஸ், எலன் டீஜெனரஸ், இதோடு மட்டுமல்லாமல் மதத்தலைவர்கள் ஆன போப் பிரான்சிஸ், தலாய் லாமா, போன்றவர்கள் உலகை தவறான வழி நடத்துகிறார் என நம்புகிறார்கள்.

அவர்களில் பலர் குழந்தைகளை துன்புறுத்துவதோடு மட்டுமல்லாமல், Adrenochrome என்ற ஆயுட்காலம் நிறைந்த ரசாயனத்தை பிரித்தெடுப்பதற்காக இந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பாதிக்கப்பட்டவர்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள் என்றும் நம்புகிறார்கள்.

இதோடு நின்று விட்டதா என்றால் இல்லை என்ற பொருள் வரும். இன்னும் இதுபோன்ற பல சம்பவங்களுக்கு ஆதாரங்கள் இருந்தாலும் மக்கள் அதை நம்ப மறுக்கிறார்கள்.

அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கை சம்பவங்கள் போலிச் செய்திகள் காட்டுத் தீ போல் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது. உலகெங்கும் வலதுசாரி ஆதரவாளர்கள் எங்கெல்லாம் ஆட்சி நடத்துகிறார்களோ அங்கே போலி செய்திகளும் உண்மைக்குப் புறம்பான செய்திகளும் பரவலாக அதிகரித்து வருகிறது என்பது வேதனை அளிக்கும் செய்தி.

நன்றி NPR. (https://www.npr.org/2021/01/31/962104747/unwelcome-on-facebook-twitter-qanon-followers-flock-to-fringe-sites)

- பாண்டி

Pin It