admk mlas

ஊரே பார்த்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பைத்தியங்கள் தங்கள் உடைகளை கிழித்துக் கொண்டும், தங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாணமாக்கிக் கொண்டும் போகின்றார்கள். அவர்கள், யார் நம்மைப் பார்க்கின்றார்கள், பார்க்கவில்லை என்பதைக் கவனிக்கவில்லை. அது அவர்களுக்குத் தேவையும் இல்லை. அதே போல மார்கழி மாதத்து நாய்களும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அது பாட்டுக்கு நினைத்த இடத்தில் தங்களது பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், நாய்களும் புற உலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பற்றியோ, இல்லை அது நம்மை எப்போதும் கண்காணித்துக்கொண்டு இருக்கின்றது என்பது பற்றியோ கவலைப்படுவதில்லை. அதன் உயிரியல் தேவையைத் தாண்டி வேறு எதைப் பற்றியும் யோசிப்பதுமில்லை.

இன்று தமிழகத்தில் நடந்து வரும் அராஜகங்களைப் பார்க்கும் போது நமக்கு அப்படித்தான் தெரிகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை, கொஞ்சம் கூட அச்சமின்றி ஊரே பார்க்கின்றார்கள் என்ற கூச்சமின்றி பேருந்துகளில் கடத்திக் கொண்டு போய் கூவத்தூரில் அடைத்து வைத்து இருக்கின்றார்கள். அவர்களை மீட்க வேண்டிய காவல்துறையோ, கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல், தாங்கள் மன்னார்குடி கும்பலின் கூலிப்படை தான் என்பதை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றது. கோடிக்கணக்கான மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளை இப்படி யாருக்கும் பயப்படாமல் கடத்திக்கொண்டு போய் அடைத்து வைத்திருக்க முடியும் என்றால், இந்த அரசமைப்பை பார்த்து சாமானிய மக்கள் ஏன் காறித் துப்ப மாட்டார்கள்? மன்னார்குடி கும்பலுக்கு உண்மையிலேயே எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்பதைத் தான் இது காட்டுகின்றது. கடத்தி வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களுக்குத் தான் அது சொகுசு விடுதியாக இருக்கும். ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு நிச்சயம் அங்கு மன்னார்குடி கும்பல் ‘சிறப்பான கவனிப்பைக்’ கொடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால் இது பற்றி பல அரசியல் கட்சிகளுக்கு எந்தக் கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைப் பொருத்தவரை இது எல்லாம் சாதாரண விடயங்கள். ஓட்டுக்குப் பணம் கொடுத்தும், பிரியாணி கொடுத்தும், குவாட்டர் கொடுத்தும் இன்னும் வேட்டி, சேலை என அனைத்தையும் தேர்தல் காலத்தில் கொடுத்து, ஓட்டு வாங்கிய அயோக்கியர்களுக்கு இது எல்லாம் மிகச் சாதாரணமான செய்திகளாகவே இருக்கும் என்பதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களைப் பொருத்தவரை இதற்குப் பெயர் தான் ஜனநாயகம். மக்களுக்கும் அதற்கும் துளியும் சம்மந்தம் கிடையாது. அவர்கள் எம்எல்ஏக்களை கடத்துவார்கள், அவர்களுக்குப் பிடித்த ரெளடிக் கும்பலை பதவியில் அமர்த்துவார்கள், யார் அவர்களைக் கேட்பது? அப்படி கேள்வி கேட்பதற்கு நமக்கு என்ன உரிமை உள்ளது. கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாயை மூடிக்கொண்டு ஓட்டு போடுவது மட்டும் தான் வேலை. கொள்ளைக் கூட்டத்தின் தலைமையை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அதில் தலையிடும் உரிமை ஓட்டுபோட்ட மக்களுக்குக் கிடையாது.

மன்னார்குடியில் இருந்து பல ரவுடிகளை இறக்குமதி செய்து ஒவ்வொரு எம்எல்ஏவும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த ரவுடிகள் கூவத்தூர் மக்களையே விடுதி அமைந்துள்ள சாலையில் செல்லவிடாமல் மிரட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் முதலமைச்சர் பதவி ஏற்காத சூழ்நிலையிலேயே இந்தப் பொறுக்கிக்கும்பல் சாமானிய மக்களை இந்த அளவிற்கு மிரட்டுகின்றது என்றால், பதவியில் அமர்ந்துவிட்டால் அவ்வளவுதான். மன்னார்குடி ரவுடிக் கும்பலை எதிர்க்கும் ஒவ்வொரு சாமானிய குடிமகனும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார் என்பதுதான் உண்மை.

உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பின் வழக்கின் தீர்ப்பு வர உள்ள நிலையில், அதிமுக காலிகள் கொஞ்சம் கூட தமிழ்நாட்டின் மான மரியாதையைப் பற்றி கவலைப்படாமல், சசிகலாவை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றார்கள். இதன் மூலம் எங்களுக்குத் தமிழ்நாட்டின் மான மரியாதையைப் பற்றி எல்லாம் கவலையில்லை, அப்படி என்றால் என்னவென்று எங்கள் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதி என்ற இனத்திற்கே தெரியாது, எங்கள் கொள்ளைக் கூட்டத்தின் தலைவியின் நலன்தான் எங்களுக்கு மிக முக்கியம், அதற்காக நாங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வோம் என்பதைக் காட்டியுள்ளார்கள். சென்னை உயர் நீதிமன்றமோ அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்எல்ஏக்களை உடனே விடுவிக்கக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்திரவிடாமல், சாப்பிடாமல் இருக்கும் 20 எம்எல்ஏக்கள் சாப்பிடுவதற்கு வழிசெய்ய வேண்டும் என்று கூச்சமில்லாமல் உத்திரவிடுகின்றது. மனைவியைக் காணோம், எங்கள் தொகுதி எம்எல்ஏவைக் காணோம் என பல வழக்குகள் தொடுக்கப்பட்டும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றமும் காவல்துறையைப் போன்றே தாங்களும் சசிகலாவின் கூலிப்படைதான் என்பதைக் காட்டியுள்ளது. ஒரு வேளை இது போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கடத்திக் கொண்டுபோய் வைத்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளலாம் என அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏதாவது பிரிவு இருக்கின்றதா எனத் தெரியவில்லை.

sasikala governor

இந்தக் கருமத்தை எல்லாம் கண்கொண்டு பார்க்கும் இளைஞர்கள் ஏன் அரசியலை சாக்கடை என நினைக்க மாட்டார்கள். இந்த அரசு அமைப்பு தனக்கானதல்ல, இது சசிகலா, பன்னீர்செல்வம் போன்ற ஊழல்வாதிகளுக்கானது என இன்று அவர்கள் மனமார உணர்ந்து இருக்கின்றார்கள். இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு எந்தக் கூச்சமும் இல்லை. மார்கழி மாதத்து நாய்களைவிடவும், மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களை விடவும் இவர்கள் புற உலகத்தை சட்டை செய்யாதவர்கள். “மக்கள் கிடக்கின்றார்கள் மக்கள், காசுகொடுத்தால் நாய்களைப் போல வாலை ஆட்டிக்கொண்டு வந்து நிற்பார்கள், நாம் தான் உண்மையில் எஜமானர்கள். நம்மை மீறி இவர்களால் என்ன செய்து கிழித்துவிட முடியும்” என்ற அசைக்க முடியாத தைரியம் தான் இவர்களை எல்லாம் இது போன்று செயல்பட வைக்கின்றது.

ஒரு பக்கம் இவர்களை நாம் மக்கள் பிரதிநிதிகளாகப் பார்த்தாலும், இவர்கள் மக்களின் ஓட்டுக்களை விலைக்கு வாங்கிய கேடுகெட்ட சாக்கடைகள் என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டி இருக்கின்றது. எனவே இவர்களுக்காக நாம் எந்த வகையிலும் அனுதாபப்படத் தேவையில்லை. நமது விமர்சனம் எல்லாம் இப்படி ஊரே பார்க்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கடத்திக் கொண்டு போய் வைத்திருக்க முடியும் என்றால், அதைக் காவல்துறையும், நீதி மன்றமும் கண்டுகொள்ளாமல் இருக்கும் என்றால், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அதைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்றால், நாம் எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதுதான். அதிகார வர்க்கம் நினைத்தால் எதை வேண்டும் என்றாலும் செய்ய முடியும் என்ற நிலை உள்ள ஒரு நாட்டில், சாமானிய மனிதனின் பாதுகாப்பு எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, தீபா அணி என மூன்று அணிகளைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆனால் அனைவருமே ‘அம்மா வழியில்’ நின்று ஆட்சி செய்வோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். தமிழின விரோதம், ஊழல், அழிச்சாட்டியம், அட்டூழியம், பச்சையான படுகொலைகள், அதிகார வர்க்கப் பாசிசம், பார்ப்பன அடிவருடித்தனம் என வாழ்ந்த ஒரு சர்வாதிகார பாப்பாத்தியின் வழியில்தான், இவர்களும் ஆட்சி நடத்தப் போவதாக சொல்வது மிகவும் அபாயகரமானதாகும். தமிழகத்திற்கு ஒரு ஜெயலலிதா செய்த துரோகங்களை சரி செய்யவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இதில் புதிது, புதிதாக பாசிச சித்தாந்தத்தின் வாரிசுகள் முளைவிடுவதை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதனால் இளைஞர்களும், பொது மக்களும் இந்தக் கழிசடை கும்பலில் எந்தக் கழிசடை நல்ல கழிசடை என்று யோசித்து, பைத்தியக்காரத்தனமாக நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு, இந்தக் கழிசடைகளை எப்படி ஒழித்துக் கட்டி, ஒரு மாற்று அரசியலை முன்னெடுப்பது என்பது பற்றி உருப்படியாக யோசிக்கவும்.

- செ.கார்கி

Pin It