மறைந்த என் அன்பு நண்பர் மக்கள் மருத்துவர் ஜீவானந்தம் ஒரு நாள் காலை தொலைபேசியில் அழைத்தார். பெரும்பாலும் அவர் இரவு நேரத்தில்தான் என்னை அழைத்து நீண்ட உரையாடல் நடத்துவார். ஆனால் அன்று காலை அழைத்தவுடன் ஏதோ அவசரம் போலிருக்கிறது என என் அலைபேசியை எடுத்து வினவினேன். “உடன் ஒரு கட்டளை” என்றார். என்ன என்றேன். “நான் ஒரு சிறிய நூல் ஒன்றை தமிழாக்கம் செய்துள்ளேன். அதனைப் படித்துவிட்டு, அதன் மொழிபெயர்ப்பு சரியாக உள்ளதா என பார்த்துவிட்டு, அதற்கு அறிமுக உரை ஒன்றை நீங்களே எழுதித் தந்திடவேண்டும்” என்றார். என்ன நூல் என்றேன். தாமஸ் பெயின் எழுதிய “காமன் சென்ஸ்” என்றார். உடனே “அது பழைய புத்தகம், அமெரிக்க விடுதலைப் போராட்ட காலத்தில் எழுதியது அதை எதற்கு தற்போது மொழி பெயர்த்தீர்கள்” என்றேன். “நீங்கள் படியுங்கள், படித்து விட்டு ஒரு வாரத்தில் அறிமுக உரை சற்று நீண்டதாகவும் விளக்கமாகவும் இருக்க வேண்டும், அது மட்டுமல்ல அது பயன்படும் வகையில் இருக்க வேண்டும்” என்றார்.

rich and poorமறுநாள் காலை அவர் மொழி பெயர்த்த புத்தகத்தின் நகல் ஒன்று வந்து சேர்ந்தது. அவரின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் படிக்க ஆரம்பித்தேன். அதே நூலை நான் முதுகலை படித்தபோது தேர்வுக்காக படித்தது என் ஞாபகத்திற்கு வந்தது. அப்பொழுது தேர்வுதான் பிரதானம். எனவே அந்த நோக்கில் படித்தது, அமெரிக்க சுதந்திரப் போருக்காக எழுதியது என்பது மட்டும் ஞாபகத்திற்கு வந்தது. மருத்துவர் ஜீவானந்தம் கூறியபோது மொழிபெயர்ப்பையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்றார். உடனே மீண்டும் ஆங்கிலத்தில் உள்ள அந்தப் புத்தகத்தை கூகுளிலிருந்து பதிவிறக்கம் செய்து அதையும் படித்தேன். அது ஒரு விதத்தில் என் மாணவப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது. அந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் படித்தேன், மருத்துவர் ஜீவானந்தத்தின் மொழி பெயர்ப்பில் வந்த தமிழ் பிரதியையும் படித்தேன். அதை வைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இன்றைய சூழலுக்கும் பொருந்துவதாக இருந்தது. படிக்கும்போதே மருத்துவர் ஜீவானந்தத்தை அழைத்து நன்றி கூறினேன். சிரித்தார். சிரித்துவிட்டு “உங்களால் மட்டும் ரசிக்க முடியும் அதன் தேவையை உணர முடியும் என்றுதான் உங்களிடம் அனுப்பியுள்ளேன்” என்றார்.

தாமஸ் பெயின் பெரும் புத்தகம் எழுதும் பழக்கமுடையவர் அல்ல. அவரின் சிறப்பு எளிய மக்களுக்காக எழுதுவது. எளிய மக்கள் மொழியில் எழுதுவது. மக்களுக்கு மிக எளிதில் புரியும்படியும், அவர்களின் உள்ளத்தைத் தொடும் வகையில் எழுதுவதிலும் அவரை எவரும் மிஞ்ச முடியாது. அவருடைய நடையில் மக்களின் உணர்வுக்குள் புகும் சக்தி இருக்கும். அத்துடன் மகிழ்ச்சிமிக்க துள்ளல் நடை இருக்கும். அதே நேரத்தில் எந்த அலங்காரமும் இன்றி எளிய மக்கள் மொழியில் எழுதும் வல்லமை வாய்ந்தவர். ஆகையால்தான் இவரை அமெரிக்க விடுதலைக்கும், அமெரிக்க நாட்டு உருவாக்கத்திற்கும் அடித்தளமிட்டவர்களின் ஒருவரான பெஞ்சமின் பிராங்கிளின் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு வரவழைத்தார். வரவழைத்து அமெரிக்காவில் வாழும் குவாக்கர்கள் எனப்படும் ஒரு இனக் குழுவினர் அமெரிக்க விடுதலைப்போரை ஆதரிக்க மறுத்த நிலையில், அவர்களை விடுதலைப்போருக்கு தயார் செய்ய இவர் கட்டுரை எழுதி அதன் மூலம் அந்த மக்களின் ஆதரவைப் பெற முனைந்தார் பெஞ்சமின் பிராங்கிளின்.

இந்த குவாக்கர்கள் இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தெய்வத்தின் தூதுவர்கள், இறைவன் மக்களைக் காக்க அனுப்பப்பட்டவர்கள், அவர்களை எதிர்ப்பது பாவச்செயல், அதை ஒரு போதும் செய்யக்கூடாது. அகிம்சையில் பற்றுக் கொண்டவர்கள், இறையியலில் நாட்டம் கொண்டவர்கள். இங்கிலாந்து நாட்டு அரச குடும்பத்தை எதிர்ப்பது இறைவனை எதிர்ப்பது என்ற சிந்தனை கொண்டவர்கள். அப்படி இருந்த மக்களை மாற்ற எழுதப்பட்ட நூல். அந்த குவாக்கர் இன மக்களுக்கு ஒரு உண்மையை புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்து அந்த சிறிய புத்தகத்தை எழுதினார். இங்கிலாந்து அரச குடும்பம் தாங்கள் நினைக்கின்ற இறைப் பணி எதையும் செய்யவில்லை அதற்கு நேர் எதிர்த் திசையில் பயணித்து எப்படி உல்லாச வாழ்க்கையில் தோய்ந்து, மக்கள் மீது நம்பிக்கையற்ற சுயநலம் பேணும், சுகபோகம் அனுபவிக்கும் குடும்பமாகத் திகழ்கிறது என்பதை குவாக்கர்கள் புரிந்து உணர்ந்து, தெளிந்து விடுதலைப் போருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து எழுதினார்.

அதுமட்டுமல்ல, அமெரிக்க விடுதலை என்பது, அமெரிக்க காலனிகளில் வசிக்கும் மக்களுக்கானது மட்டுமல்ல, அது மிகப்பெரிய கொள்கைப் பிரகடனத்தை தாங்கி உலக மக்களின் உன்னத மேம்பாட்டுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் எழுதி அமெரிக்க மக்களின் ஆற்றல் முழுவதும் மானுடத்திற்கு எப்படி உன்னத நிலையில் பேராற்றலாக உயர்ந்து செயல்படப் போகிறது என்பதை படம் பிடித்து அமெரிக்க வலிமை எங்கிருக்கிறது என்பதையும் சாதாரண மனிதர் உணரும் வகையில் எழுதியதுதான் அந்தப் புத்தகம். எந்த நோக்கத்திற்காக அமெரிக்கா சுதந்திரம் பெற்றதோ அவற்றிற்காக இன்று அந்த நாடு செயல்படவில்லை என்பது உலகறிந்த செய்தி. இந்தப் புத்தகத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்பதுதான் நம் கேள்வி. ஒரு தொடர்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை நிதானமாகப் படித்தால் அந்தத் தொடர்பை புரிந்து கொள்ள முடியும். எவ்வளவு மகத்தான லட்சியங்களுக்காக அந்த விடுதலைப்போர் அங்கே நடத்தப்பட்டது. அந்த லட்சியங்கள் இன்று எங்கே? என்று கேட்கத் தூண்டுகிறது. அது மட்டுமல்ல அந்த லட்சியக் கனவுகளுக்கு நேர் எதிர் திசையில் அமெரிக்கா செல்வதை நம்மால் உணர முடியும். இது என்ன அமெரிக்காவைத்தானே பாதித்தது நமக்கு என்ன என்று கேட்கத் தோன்றும். அதற்கும் இந்தப் புத்தகத்தில் விடை இருக்கின்றது.

நாம் எதற்காக இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கினோம்? எப்படிப்பட்ட துயரங்களை நம் முன்னோர்கள் அனுபவித்து தியாகம் செய்து வாங்கினார்கள். சாதாரண மக்களிடம் என்னவெல்லாம் சுதந்திர நாட்டில் ஏழைகளின் வாழ்வில் மாற்றங்கள் நிகழப்போகிறது? என்ற கற்பனையை முன் வைத்துத்தானே மக்களைப் போராட வைத்தனர் நம் தலைவர்கள். இந்தியா ஓர் ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வழிமுறையை உலகுக்கு தெரிவிக்க என்றுதானே நம் தலைவர்கள், மகான்கள் அனைவரும் கூறினர். நம் சுதந்திரப் போராட்ட வழிமுறையை 42 நாடுகள் பின்பற்றி இந்தியாவிற்குப் பிறகு சுதந்திரம் அடைந்தன. நம் அகிம்சை வழிதானே தென்னாப்பிரிக்க விடுதலைக்கு வழிகாட்டியது. நெல்சன் மண்டேலா அதைத்தானே உலகுக்கு அறிவித்தார்.

நம் அகிம்சை வழியில் தானே அமெரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டங்களை நடத்த உறுதுணையாக இருந்தது என்று மார்டின் லூதர் கிங் ஜூனியர் பிரகடனப்படுத்தினார். அவர் அதை மட்டுமா பிரகடனப்படுத்தினார், காந்தியும், காந்தியமும் சுதந்திரப் போராட்டத்திற்கு தேவை என இந்தியர்கள் கருதுகின்றார்கள். அது முற்றிலும் தவறானது, காந்தி இந்தியாவிற்கும் உலகிற்கும் எதிர்காலத்திற்கும் எப்போதும் தேவைப்படுவார் என்று பிரகடனப்படுத்தினார். அத்துடன் காந்திய வழிமுறை என்பது உலகுக்கு வழிகாட்டும் உன்னத நெறி என்பதையும் கோடிட்டுக் காட்டினார். தன் இளைமையான வயதில் இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்புகையில் கூறிய கருத்துக்கள் இன்னும் நம் காதுகளில் ரீங்காரமாக ஒலிக்கின்றதல்லவா?

அடுத்து இந்தியா சுதந்திரம் அடைந்து, இந்திய மக்கள் தங்களின் வேர்களைக் கண்டு பிடித்து, இந்திய வாழ்வுமுறையின் மகத்துவத்தை தாங்கள் வாழ்ந்து காட்டி உலகுக்குப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பதைத்தானே இந்த நாட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என காந்தி கனவு கண்டார். இவ்வளவு உன்னதக் குறிக்கோளோடு உருவான நம் நாடு இன்று மக்களாட்சி என்ற பெயரில், நம் அரசியல்வாதிகள் வாழும் முறையும், அவர்கள் நடத்துகின்ற அரசியலும், அவர்கள் பங்கேற்று செயல்படுகின்ற தேர்தல் முறைகளும், அவர்கள் நடத்துகின்ற ஆளுகையும், நிர்வாகமும் எவ்வளவு தாழ்நிலையை எட்டியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்கு தாமஸ் பெயின் எழுதிய இந்த நூல் உதவிகரமாக இருக்கும், எப்படி இங்கிலாந்து மன்னர் பரம்பரை உல்லாச வாழ்க்கையை மக்களின் அறியாமையால் அவர்கள்மேல் வைத்த நம்பிக்கையைப் பயன்படுத்தி வாழ்ந்தார்களோ, அதேபோல்தான் நம் நாட்டிலும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஓர் உல்லாச வாழ்க்கையை பெரும்பாலான அரசியல் கட்சிகள் நடத்துகின்றன. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் போல் ஒரு சில கட்சிகளும் இருக்கின்றன.

அது மட்டுமல்ல மக்களாட்சி என்றால் தேர்தல்தான் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் உருவாக்கி மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் பற்றி எந்தப் புரிதலையும் ஏற்படா வண்ணம் அரசியல் நடத்தப்பட்டு வருகிறது நம் அரசியல் கட்சிகளால் நம் நாட்டில். தேர்தல் முடிந்துவிட்டால் வெற்றி பெற்றவர்கள்தான் அதிகாரம் பெற்றவர்கள். அவர்கள் உருவாக்குவதுதான் முடிவு, அவர்கள் வைப்பதுதான் சட்டம் அதை அனைவரும் ஏற்க வேண்டும், அவை எவ்வளவுக்கு மக்களுக்கு விரோதமாக இருந்தாலும் என்றுதான் நடந்து கொள்கின்றன நம்மை ஆளும் அரசியல் கட்சிகள்.

மக்களாட்சி உலகத்தில் விரிந்து பரந்து பொருள் கொண்டு பல்வேறு உயரிய நெறிகளைக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற விவாதம் வருகின்றபோது, மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளான, சமத்துவம், சகோதரத்துவம், உரிமைகள், நேர்மை, நியாயம், நியதி, நீதி, ஒருவரை ஒருவர் மதித்தல், எதிர்கருத்தை மதித்து வாங்குதல், மக்களின் குரலை மரியாதையுடன் கேட்டல், என்பதையெல்லாம் புறம் தள்ளி தேர்தல், வெற்றி, ஆட்சி, ஆளுகை, பொருளாதார வளர்ச்சி என்று அடிப்படை மக்களாட்சிப் பண்புகளிலிருந்து விலகி வாழ்ந்து பெரும்பான்மை மக்களைச் சுரண்டி வாழும் ஒரு சில சமூகங்களுக்கு பணி செய்வதாக மாற்றிவிட்டார்கள் நம் அரசியல்வாதிகள். இது மக்களாட்சியில் ஒரு சோக வரலாறு.

இந்தியா வளர்கிறது பொருளாதாரத்தில், உலகை வியக்க வைக்கிறது வளர்ச்சியில், என்று கூறும்போது, அடைந்த வளர்ச்சியால், மக்களின் வாழ்வு மேம்பட்டதா? இதோ புள்ளி விபரம் அரசாங்கமே தந்துள்ளது. இந்தியாவில் 68% மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இந்திய கிராமங்களில் வகிக்கும் குடும்பங்களில் 90% எந்தவித நிலைத்த வருமானம் அற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். அந்தக் குடும்பங்களில் 5.37 மில்லியன் குடும்பங்கள் நிலமற்ற ஏழைகளாய் வாழ்கின்றனர். 6.89 மில்லியன் கிராமக் குடும்பங்கள் ஆண் துணையின்றி பெண்கள் தலைவராக இருந்து குடும்பத்தை ஏழ்மையில் இருந்து நடத்துகின்றனர். 49% மக்கள் கிராமங்களில் பல்முனை வறுமைத் தாக்குதலுக்கு உட்பட்டு வாழ்கின்றனர். 51.4% கிராம மக்கள் உடல் உழைப்பை வைத்து கூலி பெற்று வாழ்க்கையை நடத்துகின்றார்கள். 23,73% மக்கள் கிராமங்களில் ஒரே ஒரு அறை கொண்ட குடிசைகளில்தான் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூழலை மக்களாட்சி சாதாரணமாக கடந்துவிட முடியாது. ஆட்சியாளர்கள் 3 ட்ரில்லியன் ரூபாய் ஆண்டு தோறும் கிராமங்களின் மேம்பாட்டுக்காக செலவழிப்பதாகக் கூறுகின்றார்கள். கிராமங்கள் எப்படி இருக்கின்றது என்பதற்கும் அரசாங்கமே புள்ளி விபரம் ஒன்றைத் தருகின்றது. இந்தியாவில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் கிராமங்களில் குறைந்தபட்ச மானுட வாழ்வுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த மாநிலங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று குஜராத், மற்றொன்று கேரளா. பெரும்பாலான மாநிலங்கள் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைக் கூட செய்ய இயலாத நிலையில் இருக்கின்றன என்பதை அரசு கூறிய போதும், நம் அறிவு ஜீவிகளோ, ஊடகங்களோ விவாதிக்கத் தயாராக இல்லை என்பது தான் நாம் பார்க்கும் ஒரு எதார்த்தமான உண்மை.

வளர்ந்தோம், சாதித்தோம், மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு, அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் முதல் நான்கு இடங்களுக்குள் இருக்கும் நாடு என்று கூறும் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 80 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பு என்பது நம் அரசாங்கத்தின் பொது வினியோக முறையில் தரும் விலை இல்லாத உணவுப் பொருள்கள் மூலமாக என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த புள்ளி விபரத்தைத் தெரிவித்தவர் நம் பாரதப் பிரதமர். இந்தச் செய்தி கூறும் உண்மை என்ன? நாம் உலகம் வியக்கும் வண்ணம் பொருளாதாரத்தில் வளர்ந்தும், மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செயது, அவர்கள் மதிக்கத்தகுந்த மரியாதையுடைய மானுட வாழ்வை முறையாக வாழ வழிவகை செய்ய முடியவில்லை என்பதுதான் நாம் இன்று காணும் உண்மை. இந்தச் சூழலில் தான் ஆண்டு வருமானம் 10,000 கோடி டாலரை மிஞ்சி அம்பானியின் ரிலயன்ஸ் கம்பெனி சாதனை படைத்திருக்கிறது. இந்த அபரிமித லாபம் ஈட்டும் வணிகத்தையும் நாம் புரிந்து கொள்ள தவறக் கூடாது.

இந்த இடத்தில் உண்மையை உரசிப் பாருங்கள். நாம் எங்கு இருக்கிறோம் என்று. நம் ஆட்சியாளர்கள் உள்ளபடியே மக்களுக்காக செயல்படுகின்றார்களா? அப்படிச் செயல்பட்டிருந்தால் இன்று இவ்வளவு பெரிய அளவில் பொருளாதாரம் வளர்ந்தபோது எல்லாத் தரப்பு மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிடைத்திருக்கும் அல்லவா? சாதாரண மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் அல்லவா? இது ஏன் நடைபெறவில்லை? உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை ஓர் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவில் செல்வம் ஒரு சிலர் கையில் குவிக்கப்பட்டுள்ளது, 60% செல்வம் ஒரு பதிமூன்று தனி நபரிடம் சென்று சேர்ந்து விட்டது. கீழ் மட்டத்தில் உள்ள 40% மக்கள் கையில் வெறும் 13% சொத்து மட்டுமே இருக்கின்றது.

மேற்கூறிய புள்ளி விபரம் என்ன செய்தியைத் தருகிறது நமக்கு? நம் அரசு யாருக்காக உழைக்கிறது? உண்மையிலேயே ஏழைகளைப் பற்றி நம் ஆட்சியாளர்கள் சிந்திக்கின்றார்களா? இப்படிக் கேள்வி கேட்டால் அதற்கும் ஒரு பதில் வரும். நிறைய திட்டங்களை அரசு தீட்டி செயல்படுத்தி வருகிறது என்பார்கள். அவைகள் அனைத்தும் பிச்சை போடுவது. தேர்தலின்போது வாக்குகளை ஏழைகளிடம் விலை கொடுத்து வாங்கிக் கொள்வது. ஏழைகளை அரசியலுக்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொள்வது. இன்றைய சந்தைப் பொருளாதாரம் அரசியலை அடியோடு துவம்சம் செய்து சிதிலமடைய வைத்துவிட்டது. அரசியல் என்பதும், ஆட்சியைப் பிடிப்பது என்பதும் பணம் பார்க்க என்ற சூழலைக் கொண்டு வந்துவிட்டது. மக்களின் மேம்பாட்டுக்கு செயல்பட வேண்டிய மக்களாட்சி, சந்தைக்கும் ஒரு சில முதலாளிகளுக்கும் செயல்பட்டுக் கொண்டுள்ளது என்பதுதான் நாம் இன்று பார்க்கும் எதார்த்தமான உண்மை.

இந்தச் சூழலிலிருந்து விடுபட மந்திரமோ, வித்தையோ, மாயா ஜாலமோ செய்து கொண்டுவர இயலாது. இதற்கு இருப்பது ஒரே வழிதான், அது மக்களை குறிப்பாக மக்களாட்சிக்குப் போராட ஏழைகளைத் தயார் செய்வதுதான், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான், மக்களை அதிகாரப் படுத்துவதுதான். இதைவிட மிக முக்கியமாக மக்களிடம் தாழ்ந்து கிடக்கும் சிந்தனைச் சூழலை மாற்றியமைத்திட வேண்டும். மக்களின் சிந்தனைப் போக்கு மாறாமல் எந்த மாற்றத்தையும் நாம் அரசியலில் எதிர்பார்க்க முடியாது. இந்தச் சிந்தனைச் சூழலை மாற்றுவதுதான் இன்றைய மிக முக்கியமான பணி. அந்தப் பணிக்கு மிகவும் உதவிகரமாக தாமஸ் பெயினின் ‘பொது அறிவு' என்ற நூல் இருக்கும் என்பதை யாரும் மறுக்க இயலாது. இதைத்தான் மக்கள் மருத்துவர் மனதில் வைத்து இந்த நூலை மொழி பெயர்த்துள்ளார், இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. அதன் அடிப்படையில் ஒரு பெரும் விவாதத்தை முன்னெடுக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவை மற்றும் தலையாயப் பணி.

- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It