‘வாயில் நாக்கில் கோளாறு இருந்தாழொழிய தேன் கசக்காது வேம்பு இனிக்காது. பிறவியில் பிழை இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது. அது போலவே தான் நமது பார்ப்பனர்களின் நிலையும்’ என்பார் பெரியார். காலச்சுவடு 49ல் பதிவாகியுள்ள கண்ணனின் கட்டுரை அதை ருசுப்பிப்பாதாகவேயுள்ளது.

தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சிறுபான்மை எனச் செல்லங்கொஞ்சி ஆதரிக்கும் போலி மதச்சார்பின்மையை ‘விமர்சனம்’ செய்யும் சாக்கில் தனது இந்துவெறி பாசிசத்தை பதிவு செய்துள்ளார்.

இந்து அடிப்படைவாதமும் இஸ்லாம் அடிப்படைவாதமும் ஒன்றாம். இந்துமதம் சமத்துவமின்மையையும் சம்ஹாரத்தையும் அடிப்படையாகவும் இஸ்லாம் சம்த்துவத்தையும் சமாதானத்தையும் தனது அடிப்படையாகவும் கொண்டிருப்பதை கண்ணன் குரான் படித்தறியட்டும். சங்கப்பரிவார காலித்தனங்களை இயக்கமாகப் பார்க்கும் இந்துத்துவ வக்கிரம் கட்டுரை முழுக்க பூணூலாய் நெளிந்து அருவருப்பூட்டுகிறது. இந்தியா என்ற கற்பிதத்தைத் தாண்டி தெற்காசியா என்றோ பூலோகம் என்றோ பார்த்தால் இந்துமதம் துளியூண்டு ஆகிவிடுமாம். சிறுபான்மை என்ற அந்தஸ்து ஏற்படுத்தித் தரும் அரண் இஸ்லாம் சமூகத்துள் மாற்றுச் சிந்தனைகளை ஒடுக்கவும் பெண்களை ஒடுக்கவுமே பயன்படுமாம்.

வள்ளலார் முதல் அம்பேத்கார் வரையிலான மாற்றுச் சிந்தனைகளை வரவேற்றதா கண்ணனின் மதம்? வேலைக்குப் போகும் பெண்களின் கற்பு பற்றி ஆராய்ச்சி செய்யும் பரமாச்சாரிகள் இஸ்லாமில் இல்லை. ‘நீங்கள் அவளு(மனைவி)க்கு ஆடையாகவும் அவள் உங்களுக்கு ஆடையாகவும் இருங்கள்’ என்கிறது அல்குரான்.

இன்னொன்று ஷாஜஹானின் இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் “தூண்டும்” இரண்டு கட்டுரைகளின் கட்டவிழ்ப்பு பற்றியது. அதில் முதல் கட்டுரை முஸ்லிம் இயக்கங்கள் இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராட வேண்டியதன் தேவையையும், இரண்டாவது கட்டுரை காவியமயமாகிப் போயுள்ள இந்தியச் சூழலில் பம்பாய், கோவை, குஜராத் என இஸ்லாமியர் உயிருக்கும் உரிமைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மையைப் பேசுவதாகவும் உள்ளதை இடையிடையே வரிகளை உருவி விமர்சனம் என்கிற பெயரில் தனது வெறுப்பைக் கக்கியிருக்கிறார் காசு. இதில் தோழர் இன்குலாப் போன்றவர்களுக்கு வேண்டுகோள் வேறு. உங்களைப் போன்றோரின் விமர்சன கத்தரிக்கோலை பழிதீர்க்கும் இரண்டு கத்திகளாக மாற்றிக் கொள்ளும் சமத்துகளின் சாதுர்யத்தை தவிர்க்கும் வழிகளை யோசியுங்கள்.

கண்ணனின் பார்வை ஒரு R.S.S. விடலையின் கருத்துக்களை விட ஒரு மைக்ரான் கூட உயரமானதில்லை என்பதை வரிக்கு வரி நிறுவ முடியும். இஸ்ரேலை விட்டு அராஃபத்தையும், ஈராக்கை விட்டு சதாமையும் வெளியேறச் சொல்லும் அமெரிக்காவை இந்தியாவை விட்டு இஸ்லாமியர்களை வெளியேறச் சொல்லும் நபர்கள் சிநேகத்தோடு பார்க்கலாம். உயிருக்கு அபயம் கேட்டு கைகூப்பி கண்ணீர் மல்கும் இஸ்லாமியனின் முகம் பத்திரிக்கை முதலாளிக்கு பரிவர்த்தனைக்கான பண்டமாகலாம். மனிதகுல வரலாறு நெடுக சிறுகக் சிறுகச் சேர்த்த நாகரீக விழுமியங்களனைத்தையும் ரத்தச் சகதியில் போட்டு மிதித்து வெறியாடும் இந்து வெறியை ‘இயக்கம்’ என்பதாகப் பார்க்கலாம். அம்பேத்கரிஸ்டுகளால், பெரியாரிஸ்டுகளால், மார்க்சிஸ்டுகளால் முடியாது. கோல்வால்கரின் மாணவர்களுக்கோ இது புரியாது.

தலித்துகளுக்கு இழிவான அசிங்கமான வாழ்வை நிர்பந்தித்துவிட்டுப் பின் சுத்தமாயிருக்கச் சொல்லி திருவாய் மலர்கிறது காஞ்சி மடம். கொலைவெறியாட்டத்தை ஆதரித்துவிட்டு இஸ்லாமியர்களைச் சாந்தம் பழக உபதேசிக்கிறது காலச்சுவடு.

சமீபத்தில் முஸ்லிம் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது கண்ணன்மார்களின் சந்தேகத்தைப் பகிர்ந்து கொண்டேன். இஸ்லாம் என்றாலே அமைதி, சமாதானம் என்றுதானே அர்த்தம். அதில் குண்டுகளுக்கென்ன வேலை என்று கேட்டதற்கு நான் ஒரு கன்னத்தில் அறைந்தவனிடம் மறு கன்னத்தையும் காட்டுவதும், போர்வையை பறித்துக் கொண்டவனிடம் அங்கவஸ்திரத்தையும் கொடுத்து விடுவதே சமாதானம் என்றால் அத்தகைய சமாதானத்துக்காக உங்கள் சகோதரியைக் கற்பழித்தவனிடமே உங்கள் தாயையும் கூட்டிவிடுவீர்களா என்று கேட்டார்.

நம்மால் முடியவே முடியாது.

(‘காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்’ நூலிலிருந்து)

Pin It