கொரோனா நச்சுயிரி இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்மை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், இத்தகைய கொடிய நோய்களுக்கான உயிரெதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றி நாம் சிந்திக்கின்றோம். இந்த இடத்தில் மிகச் சிறந்த நுண்ணுயிரியல் ஆய்வாளர்களான மெக்ஃபெர்லான் பர்னட்டும், தாவீது வயிட்டும் (Macfarlane Burnet & David White), மனித குலத்தைத் தாக்கும் எதிர்கால நோய்களைப் பற்றி 1972-ஆம் ஆண்டு கூறியவற்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. "இனிவரும் காலங்களில் நாம் எதிர்கொள்ளப் போகும் தொற்றுநோய்களின் தன்மை குறித்து முன்னரே கணிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கும்” என்று அவர்கள் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள். அத்துடன், எதிர்காலத்தில் முற்றிலும் நாம் எதிர்பாராத வகையில் உலகம் தழுவிய அளவில், இதுவரை நாம் கண்டிராத புதிய வகை தொற்றுநோய்கள் எழும்; அவற்றின் ஆபத்துக்களை நாம் சந்திக்க நேரிடும்; ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக நாம் அத்தகையதொரு தொற்றுநோய் பேராபத்தினை சந்திக்கவில்லை என்று அவர்கள் 1972-ஆம் ஆண்டு கூறியிருந்தார்கள். காலம் அவர்களோடு நின்று விடவில்லை. அவர்களின் காலத்திற்குப் பிறகு எத்தனையோ மாற்றங்களை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

சோரியாசிஸ் எனப்படும் ஒரு வகையான தோல் அழற்சி நோய் (herpes) முதல் லீஜினிலாசிஸ் (legionnaires) எனப்படும் ஒரு வகையான நிமோனியா காய்ச்சல் வரை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான தொற்றுநோய் மனித இனத்தைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டு வருவதோடு, மனிதனின் இருப்பை இந்தப் பூமியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சித்துக் கொண்டே வருகின்றது.

1970-களில் herpes, legionnaires’ தொடங்கி பின்னர் எயிட்ஸ் (AIDS), எபோலா (Ebola), சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome-SARS) போன்ற தொற்றுநோய்கள் என்றால், தற்பொழுது Covid-19 என்ற இந்தப் புதிய வகை தொற்றுநோய். இந்தத் தொற்றுநோய்களினால் எழும் பாதிப்புகள் குறித்து வரலாற்றாய்வாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி ஆராய்கிறார்கள்.

1918 Influenza Epidemic

(1918ல் அமெரிக்காவில் இன்புளூயன்சா நோய் பரவியபோது ஏற்படுத்தப்பட்ட அவரச கால மருத்துவமனை)

கடந்த காலத்தில் நிகழ்ந்த இதுபோன்ற தொற்றுநோய் வரலாற்றைப் பற்றி கேட்கும்போது, அத்தகைய தொற்றுநோய்கள் எந்தப் பின்னணியில் தோன்றின என்பதன் மீது கவனம் செலுத்தி அவற்றை விளக்குகிறார்கள். வரலாற்றில் நிகழ்ந்த எந்தவொரு முக்கியமான நிகழ்வைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டுமெனில், அந்நிகழ்வின் உள்ளூர் மட்ட அளவிலான பிரச்சனையிலிருந்து, அதன் அகச்சூழலிருந்தே நாம் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்.

ஆனால், தொற்றுநோய் குறித்து பேசும்போது வரலாற்றாளர்கள் இதற்கு நேரெதிரான ஒரு புள்ளியிலிருந்து தொடங்குகிறார்கள். அதாவது, தொற்றுநோய்களை உலக சமுதாயம் எவ்வாறு அணுகுகிறது அல்லது அவற்றிற்கு எவ்வாறு வினையாற்றுகிறது என்பதனைக் கண்டறிவதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும் என்று வரலாற்றாளார்கள் கருதுகிறார்கள்.

மனித சமூகத்தில் ஒரு திடீர் வெடிப்பு (காட்டாக, தொற்றுநோய்க்கு வினையாற்றுவது) எவ்வாறு நிகழ்கிறது என்பதனை ஆல்பர்ட் கேமசு (Albert Camus) தனது La Peste என்ற நூலில் சுட்டிக் காட்டியிருப்பதை சார்லஸ் ரோசன்பெர்க் (Charles Rosenberg) அடிக்கடி கோடிட்டுக் காட்டுவார்.

ஒரு நாட்டில் வாழும் சமூக மக்களிடம் ஒரு தொற்றுநோயானது, ஒரு நிகழ்த்துக்கலையின் வடிவத்தைப் போல மூன்று அடுத்தடுத்த படிநிலைகளில் நிகழ்கிறது என்று ரோசன்பெர்க் சுட்டிக் காட்டுகிறார். அதில் முதற்படி என்பது தங்களால் உய்த்துணர முடியாத அந்த தொற்றைப் பற்றிய செய்திகளை பின் தொடராமல் விட்டுவிடுவது அல்லது அந்தச் செய்திகளை கைவிட்டு விடுவது.

               அவ்வாறு அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதற்கு அவர்களது தன்னம்பிக்கையோ அல்லது பொருளாதர நலன்களோ காரணங்களாக இருக்கலாம். அந்நோய்த் தொற்றினால் கடுமையான உடல்நலக் குறைவோ அல்லது மரணத்தையோ சந்திக்கும்வரை அதன் சமிக்கைகளை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

நோய்த் தொற்று இருப்பதை மக்கள் அங்கீகரிக்கத் தொடங்கியவுடன் அந்த ஏற்பு மனநிலையே அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்க வைத்து விடும். உள்ளும் புறமும் அதைப் பற்றிய விளக்கங்களை மக்கள் எதிர்பார்க்கத் தொடங்குவார்கள். பெறப்பட்ட விளக்கங்களின் மீது பொதுமக்களும் கருத்து தெரிவிக்கத் தொடங்குவார்கள். இது அந்நோய்த் தொற்று பற்றிய பல பிளவுப்பட்ட கருத்துக்களை தோற்றுவிக்கும். இது மூன்றாவது படிநிலை.

 தொற்றுநோயானது பொதுச்சமூகத்தின் கூட்டு நடவடிக்கையின் மூலமும் ஒழிந்து போகலாம்; அல்லது மிதமிஞ்சிய அளவுக்கு அதன் தாக்குதலை ஏற்படுத்திய பின்னரும் ஒழிந்து போகலாம்.

”ஒரு தொற்றுநோயானது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் சட்டென்று தோன்றி மெல்ல பரிணமித்து வளர்ந்து ஒவ்வொரு கட்டமாக விரிவடைந்து செல்லும்போது, அது தனிநபர்களையும் கூட்டுச் சமுதாயத்தையும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்கிய பின், அதன் இறுதிநிலையை எய்துகிறது” என்று ரோசன்பெர்க் குறிப்பிடுகிறார். Covid-19 தொற்றுநோயிலும் இதேதான் நிகழ்ந்திருக்கின்றது. அது முதலில் சீனாவில் தொடங்கி, அடுத்தடுத்து உலக அளவில் பல நாடுகளுக்குப் பரவி வருகின்றது.

வரலாற்றாளர்கள் இந்த தொற்றுநோயைப் பற்றி விவரிப்பதோடு நின்று விடுவதில்லை. மாறாக, அது சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளையும், அழுத்தங்களையும் பற்றி அதிகம் கவனப்படுத்துகிறார்கள்.

உலகை அச்சுறுத்துகின்ற இந்தப் புதிய இடரானது, வேறெந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாத சில சமூகச் சிக்கல்களை காட்சிப்படுத்திக் காட்டுகின்றன. அந்த வகையில் இதுவொரு சமூக ஆய்விற்கு வித்திடுகின்றது. அதாவது, பொது சமூகம் எவற்றை முக்கியமாகக் கருதுகிறது என்பதோடு, யாரை அவர்கள் உண்மையாக மதிக்கிறார்கள் என்பதனையும் இந்தத் தொற்றுநோய் காட்டிக் கொடுக்கின்றது.

அதில் முக்கியமானது, இந்த தொற்றுநோயிற்கு யாரையாவது பழி சுமத்த வேண்டும் என்று எண்ணுவதே. அவ்வாறு அவர்கள் எண்ணும்போது, மத்திய ஐரோப்பாவிலுள்ள யூதர்கள் முதல் சீனச் சந்தையில் இறைச்சி விற்கும் வணிகர் வரை யாரேனும் ஒருவரை இந்தப் பொது சமூகம் தொடர்ந்து பழி தூற்றிக் கொண்டே வருகிறது.

      இந்தப் பழி தூற்றல் படலத்தின்போது அவர்கள் யாரைப் பழி தூற்றுகிறார்களோ அவர்களின் சமயம், இனம், வகுப்பு மற்றும் பாலினம் போன்றவற்றையும் சேர்த்தே பழி தூற்றுகிறார்கள். அரசுகளும் இந்தப் பழி தூற்றலுக்கு ஏற்ப நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் காத்தல் அல்லது கட்டாய தடுப்பூசிப் போடுதல் போன்ற நடவடிக்கையில் பாரதூரமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அரசின் இத்தகைய போக்குகள், சமூகத்தில் ஏற்கனவே நிலவுகின்ற அதிகாரம் படைத்த குழுவினருக்கும் பாமர மக்களுக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளிகளை இன்னும் அதிகப்படுத்துவதோடு, சமூக முரண்பாடுகளை மென்மேலும் வளர்த்துச் செல்ல வழிவகுக்கின்றது.

தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கு அளிக்க வேண்டிய மருத்துவ வசதிகளின் போதாமையினால் அவர்களைக் காக்க முடியாமல் நாம் தோற்றுப் போயுள்ளோம் என்று தொற்றுநோய் குறித்த வரலாற்று ஆய்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. காட்டாக சின்னம்மை தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு உரிய வரைவறிக்கை 1798-ஆம் ஆண்டே முன்மொழியப்பட்டது. ஆனால் அதனைக் கண்டறிந்து நடைமுறையில் கொண்டு வருவதற்கு நமக்கு 180 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து இதனை நாம் புரிந்து கொள்ள முடியும்.

1900 ஆம் ஆண்டு கொடூரமான பிளேக் நோய் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை மையங்கொண்டு பரவியபோது, அங்குள்ள சைனா டவுன் நகரைச் சுற்றி, சுகாதாரத் துறை அலுவலர்கள் கயிற்றினால் சுற்றி வளையமிட்டிருந்தனர். நேரடியாக வெள்ளையர்களும், மறைமுகமாக எலிகளும் உள்ளே செல்லவும் வெளியே வரவும் அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் அந்த நடவடிக்கை எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை.

20-ஆம் நூற்றாண்டில் மனித இனத்திற்கு கசையடி கொடுத்த சிபிலிசு (Syphilis) எனும் ஒரு வகை பால்வினை நோயானது, ஒரு தார மணத்தைக் கடுமையாக வலியுறுத்தியதன் மூலம் பெயரளவிற்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ அதிகாரி, பாலியல் சட்டம் பற்றி மக்கள் அறிந்துள்ளளனர்; அதைத் தடுக்க முடியாது என்றார்.

               சிபிலிசு பாலியல் நோயிற்கு பெனிசிலின் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டவுடன் அந்நோய் வெகுவாகக் குறைக்கப்பட்டது. ஆனால், பெனிசிலின் பயன்படுத்துவதை சில மருத்துவர்கள் எச்சரித்தார்கள். பெனிசிலின் பயன்பாடு அதிகமாகும்போது, நோய் குறித்த அச்சம் விலகி, ஒருவர் பல்வேறு நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது என்பது அதிகமாகிவிடும் என்றார்கள்.

அதைப் போல 1980-களில் ஹெ.ஐ.வி எனும் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்தக் கிருமியினால் வரும் எய்ட்ஸ் எனும் நோயைக் குணப்படுத்த, 1996-ஆம் ஆண்டுகளில் வியப்புறும் வகையில் எதிர் நச்சுயிரி சிகிச்சை முறை (antiretroviral therapy) கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்தபின், எய்ட்ஸ் நோயின் மூலம் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டன. ஆயினும் அது இன்னும் முற்றுப் பெறவில்லை.

பல்வேறு காலகட்டங்களில் பரவிய பல்வேறு தொற்றுநோய்களுக்கு யார் காரணம் என்ற குற்றச்சாட்டு எழும்போது, பொதுமக்கள் அந்நோய்த் தொற்று தோன்றிய இடத்தில் வாழும் சிலரின் இனம், வகுப்பு, பாலினம் போன்றவற்றைச் சுட்டிக் காட்டி, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அவர்கள் மீது பழி சுமத்து வந்திருக்கின்றனர். உண்மையை விளங்கிக் கொள்ளாத இந்தச் சமூக கருத்துநிலையைப் பார்க்கும்போது, வரலாற்று அறிஞர் ஆலன் பிராண்டின் (Allan Brandt) ஒரு புகழ் மிக்க வாசகம் நம் நினைவுக்கு வருகிறது. "சமூகச் சிக்கலைத் தீர்க்கும் அதிசய மருந்து ஒருபோதும் முழுமையானதாக இருக்காது" என்பார் அவர்.

நாம் தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் வேண்டுமானால் நமக்கு புதிய ஒன்றாக இருக்கலாம்; ஆனால் தொற்றுநோய் நமக்குப் புதியதன்று. எனவே, இந்நோயின் கடினத் தன்மை நம்மை அவ்வளவு எளிதில் சோர்வடையச் செய்துவிடாது என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்மைத் தேற்றுகிறார்கள்.

இந்தத் தொற்று நோயினால் சீனாவில் புதிய வகை நோயாளிகள் உருவாகியிருக்கிறார்கள் என்றால், அதில் வியப்புக்குரியது ஏதுமில்லை. சீனா இதைப் போன்ற பல தொற்றுநோய் அனுபவங்களைக் கண்டிருக்கின்றது. அப்படியானால் மக்கள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வை காலம் கடந்து பெற்றனர் என்று கூறுவோமேயானால், அதற்கு என்ன காரணம் என்பதை கேமஸ் விளக்கியிருப்பதை நாம் மேலே கண்டோம்.

ஒருவேளை, இந்நோய் குறித்த தொடக்கநிலை எச்சரிக்கைகளை மக்களிடம் பரவாமல் தடுக்க சீன அதிகாரிகள் முயன்றார்களா என்றால், ஆம் அவ்வாறு முயன்றிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சீன அரசு அதன் மேலாதிக்கவாதிகளின் தலையீட்டிற்கு இணங்கச் செயல்பட்டிருக்கிறது என்றால், அதுவும் உண்மையே. சீன மேலாதிக்கவாதிகளின் தலையீடு இந்த விசயத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு உள்ளது. அவர்களின் இசைவிற்கு ஏற்ப அரசு நடந்து கொண்டுள்ளது என்பதற்கும் சில முன்னிகழ்வுகள் உள்ளன.

               நோய்த் தொற்று உடையவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தத் தவறி விட்டதா சீன அரசு என்றால், ஆம் அதுவும் உண்மையே. அதுமட்டுமின்றி சீனர் ஒருவர் தொற்றுநோய் அறிகுறியை ஏதும் பெறாமலேயே, இன்புளூயன்சாவையும் SARS-CoV-2 வையும் மற்றவர்களுக்கு பரப்பத் தொடங்கி விட்டார்கள். அதாவது, நோய்த் தாக்குதலுக்கு ஆளாகாதவர்களும் கூட நோய் பரப்பும் காரணிகளாகி விட்டார்கள். இருப்பினும், அதில் அரசின் குறுக்கீடு பயனற்றதாகி விடாது. 1918-ல் அமெரிக்காவை இன்ஃபூளூயன்சா தொற்றுத் தாக்கிய பொழுது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அதற்குப் பல்வேறு வகையில் வினையாற்றினார்கள்.

முதன் முதல் நோய்த் தொற்று பரவிய இடத்தில் அம்மக்களோ, அரசோ செய்த தவறுகளில் இருந்து சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது நோய்த் தொற்று பரவாத வகையில் பொதுமக்கள் கூடுவதை உடனடியாக தவிர்த்திருக்க வேண்டும். காட்டாக பள்ளிகளை மூடுதல், வழிபாட்டுத் தலங்கள் போன்ற முக்கிய இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்து இருப்பதன் மூலமும் இன்னும் பிற தனிமைப்படுத்தும் திட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும்; அதே சமயத்தில் மரண விகிதத்தையும் குறைக்கலாம்.

சீன அரசின் காலதாமதமான தடுப்பு நடவடிக்கையினால் இந்தத் தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது. இதற்கு இரண்டு வகையான காரணங்களைக் கூற முடியும்.

1900 ஆண்டுகளில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் பிளேக் நோய் (plague) பரவிய பொழுதும், 2003-ஆம் ஆண்டுவாக்கில் சார்ஸ் (SARS) நோய் பரவியபோதும் நிலவிய அதே சீன எதிர்ப்பு மனநிலை தற்பொழுது COVID-19 பரவும் இந்நேரத்திலும் எழுந்திருக்கின்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்நோயைப் பற்றி பேசும்போது ‘உகான் வைரஸ்’ (Wuhan Virus) என்று, சீன அல்லது ஆசிய எதிர்ப்பு மனநிலையை அமெரிக்காதோறும் எழுப்ப முயற்சிக்கும் வண்ணமே பேசி வருகிறார். அத்துடன் தொற்று நோய்க்கு ஆளானவர்களை இரக்கமற்ற முறையில் நடத்தி, அவர்களை தொற்றுநோய் பரப்பும் விசக் கிருமிகள் என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்துவது.

இரண்டவதாக, தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் மருத்துவர்களையே அந்த நோய்கள் சில சமயங்களில் காவு வாங்கி விடுகின்றன. 1793 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் காய்ச்சல் நோய் பரவிய பொழுதும், மத்திய ஐரோப்பாவில் பிளேக் நோய் பரவிய பொழுதும், 2014 எபோலா வைரஸ் பரவிய பொழுதும், தற்பொழுது COVID-19 தொற்று சீனாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி வருகின்ற இந்த நேரத்திலும் நோய்க்கு சிகிச்சை அளிக்கச் சென்ற மருத்துவர்கள் பலர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்துள்ளனர். தொற்றுநோய்க்கு பயந்து கொண்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முன்வராதது ஒரு முக்கியமான காரணம்.

இந்தத் தொற்று நோய் அபாயத்தைக் கடந்தும் சில மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன் வந்தபொழுதிலும், அவர்களுக்குப் போதிய அளவில் மருத்துவ வசதிகள், மருத்துவ ஊழியர்கள், அதற்கு உண்டான முறையான அமைப்புகள் எதுவும் இல்லாமலேயே இந்த நோய்த் தொற்றை தடுக்க வேண்டும் என அரசுகள் மருத்துவர்களை கட்டாயப்படுத்துகிறது.

COVID-19 தொற்று நோயினால் நமக்கு எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும்  எனக் கணிக்கும் சில நிபுணர்கள் அச்சத்தை ஏற்படுத்தும் சில தகவல்களைப் பரிமாறுகிறார்கள். அதாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதோடு மட்டுமல்லாது, 100 மில்லியனுக்கும் அதிகமான மரணங்கள் இந்த நோயினால் ஏற்படும் என்றும் அச்சுறுத்துகிறார்கள்.

காலரா, இன்ஃப்ளூயன்சா, சின்னம்மை , பிளேக், மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மூச்சுத்திணறல் நோய் (Middle East respiratory syndrome), மார்பர்க் வைரஸ் நோய் (Marburg virus disease) என காலந்தோறும் பல்வேறு தொற்று நோய்கள் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. ஆனால், பல லட்சம் மனிதர்களை ஒரே நேரத்தில் காவு வாங்கிச் செல்லக்கூடிய, முரட்டுத்தனமான தொற்றுநோய்கள் கடந்த நூற்றாண்டில் ஒரு சிலவே தோன்றியிருக்கின்றன. அப்படியானால் அத்தகையதொரு அரிய ஒரு நிலையைத் தான் இன்று நாம் எட்டி இருக்கின்றோமா?

உலக அளவில் தொடர்ந்து வளர்ந்து வரும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் உடனடி விளைவுகளை அன்றாடம் எதிர்கொள்ள வேண்டிய பலவீனமான சமூகப் பிரிவினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நலிவடைந்த பிரிவினர் தங்களது அன்றாடத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு தங்களது உயிரின் மதிப்பைப் பற்றி சிந்திக்க இடமின்றி, தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, விலங்குகளோடு புழங்குதல், சந்தைகளில் கூடுதல், வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளுதல் போன்ற பல வகையான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகும் பொழுது, தெரிந்தோ தெரியாமலோ தொற்றுநோய்களை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கடத்தும் காரணிகளாக அவர்கள் ஆகி விடுகிறார்கள். இது முதலாளித்துவச் சமூகத்தின் ஒரு தவிர்க்க முடியாத சமூகச் சிக்கலாகும். இந்நேரத்திலாவது, நாம் இந்த சமூக சிக்கலை மிகத் தீவிரமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

வரலாற்றை உற்றுநோக்கும் பொழுது மனித உயிர்களைக் கொத்து கொத்தாக கொண்டு செல்லக்கூடிய இது போன்ற அரிய வகை உயிர்க்கொலை தொற்று நோய்கள் விரும்பத்தகாத ஒன்றே. இருப்பினும் நம்முடையை விருப்பத்திற்கு அப்பாற்பட்டு, எதிர்பாராத விதமாக அவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தொற்றுநோய் குறித்து பொது சமூகத்திற்கு இருக்கின்ற அளவுக்கு அதிகமான அச்ச உணர்வு, நோய் குறித்த பல்வேறு செய்திகளில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் தெளிவின்மை போன்ற காரணிகளால் பொது சமூகம் இன்னும் அதிகமான சிக்கலில் போய் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு தான் அதிகம் உள்ளது என்பதைத் தான் கடந்த கால தொற்றுநோய் வரலாற்று நிகழ்வுகள் கூறுகின்றன. 1976, 2006, மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் H1N1 இன்புளூயன்சா நோய் பரவுவதாக மக்கள் பீதியில் இருந்தனர். உண்மையில் அந்தக் கால கட்டங்களில் அந்நோய் உருவாகவேயில்லை. இதைப் போன்று ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியும்.

 மக்கள், பெரிய அளவிலான அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளிவிட்டு (2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எபோலா வைரஸ் பரவியபோது) மிகச் சிறிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய செய்திகளை கண்மூடித்தனமாக நம்பி அதிகம் பீதியடைவார்கள். இதனைக் கொரோனா வைரசினால் இறந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து நாம் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். SARS-CoV-2 தொற்றினால் கடந்த மார்ச் 12-ஆம் தேதி வரையில் 5,000 மக்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். இந்த இறப்பு எண்ணிக்கையானது இன்ஃப்ளூயன்சா காய்ச்சலினால் ஓராண்டில் நிகழும் மொத்த மரண எண்ணிக்கையில் ஒரு பகுதி மட்டுமே.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதற்கு முன்பு, ஆண்டுதோறும் 5000 மக்கள் மாரடைப்பினால் இறந்திருக்கிறார்கள். ஆக, அமெரிக்காவில் இன்புளூயன்சாவினாலும், சீனாவில் மாரடைப்பினாலும் அதிகம் மரணங்கள் நிகழ்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது அமெரிக்காவின் பெரும்பாலான மக்கள் ஏன் இன்ஃப்ளூயன்சாவிற்கு எதிரான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்? கொரோனா வைரஸ் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக சீனா தனது பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி இருக்கிறது. அதிக மரணங்கள் மாரடைப்பினால் நிகழும்போது, அந்த மாரடைப்பை உண்டு பண்ணும் சிகரெட் பயன்பாட்டிற்கு மிகச் சிறிய அளவே கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது சீன அரசு.

சமூகம் தான் எதிர்கொள்ளும் சுகாதாரச் சிக்கல் குறித்து பல தருணங்களில் தவறான புரிதல்களையே கொண்டிருக்கின்றன. அத்துடன் அதில் குறைந்த அக்கறையே செலுத்தி வருகின்றன. கொரோனா தொற்றுநோயின் எதிர்கால விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தத் தொற்றுநோய் ஏற்படுத்தப் போவதாக மேலே சொல்லப்பட்ட அந்த விளைவுகளைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுகின்றேன்.

நம்மை எதிர்நோக்கியுள்ள இந்த கொரோனா தொற்றுநோய் குறித்து அளவுக்கு அதிகமாக, பீதியின் அடிப்படையில் மதிப்பிடாமல் அச்சுறுத்தலின் உண்மையான தன்மையின் அடிப்படையில் மதிப்பிட்டு, அதற்கேற்ப சுகாதாரக் கொள்கைகளை வகுக்க, நாட்டின் குடிமக்களும் தலைவர்களும் மிகக் கவனத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டியதை வலியுறுத்தக் காரணம், 1976-ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி அந்நாட்டில் ஸ்வைன் ஃப்ளூ (“swine flu”) காய்ச்சல் பரவத் தொடங்கியது. அந்தக் காய்ச்சல் பரவியபோது, அந்நாட்டின் அரசியல் தலைமைகள் அதற்கு ஆற்றிய எதிர்வினைகளும் அதன் விளைவுகளும் எவ்வாறு அமைந்தன என்பது வரலாற்றில் நமக்கு ஒரு கேள்வியை முன் வைக்கின்றது.

இந்த நச்சுக்காய்ச்சல் பரவியபோது, அதற்கு எதிராக ஜெரால்ட் போர்ட் (Gerald Ford) அளவுக்கு அதிகமாக தீவிரம் காட்டினார். நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் நோய் அவ்வளவு தீவிரமாகப் பரவி இருக்கவில்லை. ஆதலால் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்ட மக்களில் பலர் நோய்வாய்ப்பட்டனர்; பலர் இறந்தனர். அவர் ஏற்படுத்திய பீதி அவருக்கு எதிராகவே முடிந்தது. ஆம், அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் நிகழ்ந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார் .

               இதற்கு நேரெதிராக 1981 ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் மிகத் தீவிரமாகப் பரவியது. ஆனால் ரொனால்ட் ரீகன் தனது முதல் ஆட்சிக் காலம் முடியும் வரை எய்ட்ஸ் நோய்க்கு எதிராக எந்தவித தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அப்படியிருந்தும் அடுத்து வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

நல்ல வேளையாக தற்போதைய ஆட்சியாளர்கள் ரொனால்ட் ரீகனின் பாதையைப் பின்பற்றவில்லை. அதே சமயத்தில் ஜெரால்ட் ஃபோர்ட் அளவுக்கு அதிகமாக வினையாற்றி பிரச்சனையில் மாட்டிக் கொண்டது போல் இவர்களும் மாட்டிக் கொள்வார்களா அல்லது வெற்றி பெறுவார்களா? தொற்றுநோய்க்கு எதிராக அமெரிக்க ஆட்சிமுறையின் தற்போதைய நடைமுறைகள் இரண்டும் கலந்த வகையில் தான் உள்ளன.

 தொற்றுநோய் குறித்த தக்க அறிவுரைகளை வரலாறு நமக்கு கற்பிக்கின்றது. ஆனால் மக்கள் வரலாற்றைப் புரிந்து கொண்டு அறிவுடைமையோடு நடந்து கொண்டால் மட்டுமே அதனைத் தடுக்க முடியும்.

ஆங்கில மூலம் : The New England Journal of Medicine ( https://www.nejm.org/doi/full/10.1056/NEJMp2004361)

கட்டுரையாளர்:   டேவிட் எஸ்.ஜோன்ஸ் எம்.டி, பிஎச்.டி (ஹார்வர்டு பல்கலைக்கழகம்)

தமிழில் : ப.பிரபாகரன்

Pin It