எண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: காரணம் என்ன? - பகுதி 1dollar oilஅமெரிக்கா எண்ணெய் சந்தைப் போட்டியில் நுழைதல்!

2011- க்குப் பிறகு அமெரிக்கா, fracking எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைப் பெருக்க ஆரம்பித்தது. இன்று சவுதி - ரசியாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறது (படம் காண்க).

oil production

உலகிலேயே அதிகம் எரிபொருள் நுகர்வு கொண்ட நாடு, இன்று உலகிலேயே அதிகம் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடாக மாறி இருக்கிறது. தனது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்வதால், சந்தையைப் பிடித்து ஏற்றுமதி செய்ய பெருமுயற்சி எடுத்து வருகிறது. உலகின் மிகப் பெரிய சந்தை என்பதன் அடிப்படையிலேயே சவுதி எண்ணெயை டாலரில் மட்டுமே விற்பனை செய்யவும், பதிலாக அமெரிக்கா தனது சந்தையையும், சவுதியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒப்பந்தம் எழுபதுகளில் மேற்கொள்ளப்பட்டு பெட்ரோடாலர் உருவானது. மற்றுமொரு மிகப் பெரிய எரிபொருள் உற்பத்தியாளரான ரசியாவைக் கட்டுபடுத்துவது இருவரின் நலனையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதன் பொருட்டே இருவரும் இணைந்து அதன் மீது தாக்குதலைத் தொடுத்து வந்தார்கள்.

2011க்குப் பிறகு அமெரிக்கா, சவுதியிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைந்து இன்று பூஜ்யமாகிப் போனது. அதோடு அமெரிக்காவும் தனது எரிபொருளை விற்க சந்தையில் இறங்க, சந்தை எண்ணெயினால் நிரம்பி வழிந்தது. இதற்குத் தீர்வாக, ஈரான் அணுஆயுதம் தயாரிக்கிறது என்று குற்றம் சாட்டி, அதன் மீது பொருளாதாரத் தடை, swift-ல் இருந்து நீக்கம் ஆகியவற்றைச் செய்து சந்தையிலிருந்தே வெளியேற்றினார்கள். அதன்பிறகு ரசியாவின் ஐரோப்பிய சந்தையைப் பிடிக்கும் நோக்கிலேயே உக்ரைன் பிரச்னை, சிரிய உள்நாட்டுப்  போர் ஆகியவற்றைத் தொடங்கினார்கள். சீனாவை சுற்றி வளைத்து, அந்நாட்டையும் அதன் சந்தையையும் கட்டுப்படுத்த எத்தனித்தார்கள். ’வெனிசுவேலாவில் சர்வாதிகாரி மடுரோ ஆட்சியை வீழ்த்துகிறோம்’ என்ற பெயரில் அதனையும் சந்தையில் இருந்தே விரட்டினார்கள். ஈரான், வெனிசுவேலா ஆகிய இரண்டிலும் தற்காலிக வெற்றி பெற்றாலும், இந்த நடவடிக்கைகள் எல்லாம் சந்தைப் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கின.

எதிரெதிர் திசையில் நகரும் சவுதி - அமெரிக்க நாடுகளின் நலன்கள்

மெல்ல இவை எல்லாம் அவர்களுக்கு எதிராகத் திரும்ப ஆரம்பித்தது. 2007-க்குப் பிறகு, சீனாவின் உற்பத்தி பலம், பொருளாதார பலம் அதிகரித்திருந்தாலும், அமெரிக்காவை எதிர்த்து நின்று சந்தையைப் பிடிக்கும் அளவுக்கு ஆயுத பலம் இல்லை. ரசியாவிடம், அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் அளவிற்கு ஆயுத பலமும், பெருமளவு எரிபொருள் வளமும் இருந்தாலும், பொருளாதார பலமின்றி உலகின் எரிபொருள் சந்தையை ரசியாவால் கைப்பற்ற இயலவில்லை. இருவரின் பலமும் இருவரின் போதாமைகளை ஈடு செய்ய, இயல்பாக இருவரையும் நெருங்கச் செய்தது. இருவரின் மீதான அமெரிக்காவின் அழுத்தம் இன்னும் இந்த இணைவை வேகப்படுத்தும் காரணி ஆனது.

சீனாவும்-ரசியாவும் கைகோர்த்துக் கொண்டு இவர்களின் தாக்குதலை சந்திக்க ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தவிர்த்த பெரிய சந்தையான சீனா, ரசியாவிடம் சென்றது. அமெரிக்கா தொடங்கிய உக்ரைன், சிரிய போர்களில் ரசியா வெற்றி பெற்று இவர்களின் நோக்கத்தை சிதைத்தது. ஈரான், வெனிசுவேலா நாடுகளுக்கு இருவரும் ஆதரவளித்து டாலரைத் தவிர்த்து மறைமுகமாக அவர்களின் எண்ணையை சந்தையில் விற்று, அவர்களை சந்தையுடன் இணைக்கும் பாலமானார்கள்.

அமெரிக்க - சவுதி கூட்டணிக்கு எண்ணெய் சந்தை நெருக்கடி முற்ற ஆரம்பித்தது. சந்தை என்ற வகையில் சவுதிக்கு அமெரிக்காவின் தேவையும், நிலையான எண்ணெய்க்கு சவுதியின் தேவை அமெரிக்காவுக்கும் இல்லாமல் போனது. அது இயல்பாக சவுதி எதற்கு டாலரில் மட்டும் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. அமெரிக்கா தனது அரசியல் –பொருளாதார - ராணுவ பலத்தைக் கொண்டு, சவுதிக்கு எண்ணெய் சந்தையை பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யானது. இன்றைய அரசியல் சூழலில் சீனாவின் பொருளாதார எழுச்சி அதனைத் தொடர்ந்து, அதன் அரசியல் கூட்டணி பலமே வெற்றியை ஈட்டும் என நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இதனிடையில் 2015- ல் சவுதியில் மன்னர் அப்துல்லா மறைவுக்குப் பிறகு சல்மான் அரியணை ஏறினார். அவர் அரியணைக்கு வந்த பின் அடுத்த அரியணைக்கு வரிசையில் இருந்த, அந்நாட்டின் உள்துறை மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த நயப்பை நீக்கிவிட்டு, தனது சொந்த மகனை அரியணைக்கு வரும் அடுத்த பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

சவுதி - அமெரிக்க கூட்டணியில் விரிசல்

2016-ல் அமெரிக்க தேசிய முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரம்ப், பன்னாட்டு உலகமய முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹில்லாரியை தோற்கடித்து அதிபராக பதவி ஏற்றார். ட்ரம்ப் அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் (america first) கொள்கையை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு வேண்டுமனில், அதற்கான தொகையை செலுத்துங்கள் என்றார். சீன – இந்திய - ஐரோப்பிய நாடுகளுடன் பேசி அமெரிக்க எரிபொருளை வாங்க வற்புறுத்தினார். சவுதியின் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. வேறுவழியின்றி சீன - ரசிய கூட்டணியிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தது சவுதி. அது உலகப் பணமான பெட்ரோ டாலருக்கு எதிரானது.

சவுதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் (MBS)- க்கு எதிராக காய்களை நகர்த்த ஆரம்பித்தது அமெரிக்காவின் CIA. முன்னாள் பட்டத்து இளவரசரும், அமெரிக்க உளவுத்துறைக்கு நெருக்கமானவருமான நயப்பை வைத்து ஆட்சியைப் பிடிக்க அல்லது அரசை வளைக்க முயற்சி செய்தது. 2017- அக்டோபர் 5-ல் மன்னரும் MBS- ம் ரசியாவுக்கு பயணம் செய்து பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்து கொண்டார்கள். அதற்கு அடுத்த மாதம் நவம்பர் 9-ல், MBS நயப்பையும், அவரின் ஆதரவாளர்களையும் ஊழல் செய்தார்கள் என்ற பெயரில் 2017- ல் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து அடைத்தார். சிலர் சித்திரவதை செய்யப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. பின்பு அவர்களின் பணத்தை பெருமளவு பிடுங்கிக் கொண்டு, உறுதிமொழி வாங்கிக் கொண்டு வெளியில் விட்டார். இது ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்றால் சிறுபிள்ளை கூட நம்பாது.

 இந்த எண்ணெய் சந்தை தாக்குதல் நடந்த மறுநாளே முன்னாள் பட்டத்து இளவரசர் நயப் மற்றும் மன்னர் சல்மானின் தம்பி உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சொல்லி சவுதி அரசினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த தொடர் நிகழ்வுகளும், அவை நடந்த நேரமும் சவுதி-அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இல்லையென்றால் கொரோனா பாதிப்பில் உலக பொருளாதாரமே கிட்டத்தட்ட நின்று இருக்கும் இந்த சமயத்தில் சந்தையை எண்ணெய் வெள்ளத்தில் மிதக்க விடுவேன் என்று கூட்டணியில் உள்ளவர்கள் அறிவிப்பார்களா? அமெரிக்க பங்குச் சந்தையின் மாபெரும் வீழ்ச்சியை வைத்துப் பார்க்கும் போது இது சவுதி -ரசிய கூட்டணி இணைந்து, மிகச் சரியாக சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா பலமிழந்து தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்திருக்கும் வேளையில், கொரோனா நுண்ணுயிரி தாக்குதலில் உலக உற்பத்தியே நின்றிருக்கும் வேளையில், அமெரிக்க ஷெல் உற்பத்தியாளர்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதல் என்று தான் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. ஆனால், அமெரிக்க சந்தை வீழ்ச்சி இந்த அறிவிப்புக்கு முன்னரே தொடங்கி விட்டதே! இந்த அறிவிப்புக்கு பிறகும் வீழ்ச்சி அடைந்து வருகிறதே! அப்படி என்றால் இது கொரானா நுண்ணுயிரி பரவலால் ஏற்பட்ட வீழ்ச்சி என்று தானே கொள்ள வேண்டும்?

பங்குச் சந்தை வீழ்ச்சி கொரோனா நுண்ணுயிரி தாக்குதலின் விளைவா?

உண்மையில் அமெரிக்கப் பங்குச் சந்தை, சவுதியின் எண்ணெய் சந்தை தாக்குதலுக்கு முன்பே விழ ஆரம்பித்திருந்தது. பங்குச் சந்தை குறியீட்டு எண் கடைசியாக உச்சத்தில் இருந்தது பிப்ரவரி 12. சீனாவில் கொரானா நுண்ணுயிரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து, உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது தொடர ஆரம்பித்ததையடுத்து, அதன் பொருளாதார விளைவுகள் தீவிரமடையும் என்பதை உணர்ந்த முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க ஆரம்பித்தார்கள். சவுதி அறிவிப்பு வெளியிட்ட அன்று மட்டும் 10% பங்குகள் வீழ்ந்தது என்றால், அதற்கு முன்பே கிட்டத்தட்ட 10% பங்குகள் வீழ்ச்சி அடைந்திருந்தன. அதன் தீவிரத்தைக் கண்டு பதபதப்படைந்த அமெரிக்க மத்திய வங்கி அவசர, அவசரமாக மார்ச் 3 அன்று யாரும் எதிர்பாராத விதமாக 50 புள்ளிகள் வட்டி விகிதத்தைக் குறைத்தது.

2008 Lehman வங்கி வீழ்ச்சிக்குப் இப்படி 50 புள்ளிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பது இதுவே முதல்முறை. இப்படி interest rate மற்றும் Repo rate ஐ குறைக்கும் போது வங்கிகள் முறையே மத்திய வங்கியில் இருப்பாக வைத்திருக்க வேண்டிய பணத்தின் அளவும், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடனாகக் கொடுக்க அறவிடும் வட்டியின் அளவும் குறையும். அதாவது கடன் எளிமையாகக் குறைந்த வட்டியில், அதிக அளவு கிடைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு சரிந்து விழும் பங்குகளை வாங்கி சரிவைத் தடுப்பார்கள். யார் அவர்கள் என்கிறீர்களா? சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான். அதுவும் சரிவைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், மத்திய வங்கியே சரிந்து விழும் பங்குகளை வாங்கி நிலையை சீராக்கும். அதனால் சவுதி எண்ணெய் சந்தை தாக்குதல் என்பது இந்த சரிவை வேகப்படுத்திய வெறும் வினையூக்கி என்று வாதிடுபவர்களும் உண்டு.

இதன் பிறகு பல்வேறு வழிகளில் அமெரிக்க மத்திய வங்கி 3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணத்தை சந்தையில் இறக்க அறிவிப்பை வெளியிட்டும் சரிவு நின்றபாடில்லை. அதன் பிறகும் கிட்டத்தட்ட 9% சதம் வரை வீழ்ச்சி அடைந்தே வந்தது. இறுதியாக அதிபர் ட்ரம்ப், இந்த நுண்ணுயிரித் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் அவசர நிலையை அறிவித்து, சரிந்து வரும் பங்குகளின் விலையை தடுக்க அவசரகால எண்ணெய் இருப்பை (stretegic reserve) நிரப்பப் போவதாக அறிவித்த பின்னரே 8% அளவு பங்குச் சந்தை மீண்டது. எனில் இது நுண்ணுயிரி தாக்குதலின் விளைவா, இல்லை எண்ணெய் சந்தை தாக்குதலின் விளைவா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

ஒரு வாதத்துக்கு இது நுண்ணுயிரி தாக்குதலின் விளைவு என்றே கொள்வோமாயின், உலகிலேயே அதிகம் இந்த நுண்ணுயிரி பரவி பாதிப்புக்குள்ளானது சீனாவே. ஆனால் அதன் பங்குகள் பெருமளவு வீழ்ச்சியடையவில்லையே ஏன்? மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், அவர்கள் மொத்த பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்திருந்தார்கள். சரி.. அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு எண்ணெய் சந்தை தாக்குதல் எனக் கொண்டால், ஏன் மற்ற ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் பங்குகள் வீழ்ச்சியடைகின்றன. இதற்குக் காரணம் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தி, சீனாவில் உற்பத்தியாகும் பாகங்களைக் கொண்டே தயாராகின்றன. அது முற்றிலுமாக நின்று போனதால் மொத்த உற்பத்தியும் நின்று போய் இருக்கிறது. அதோடு இப்போதுதான் மற்ற நாடுகளில் நுண்ணுயிரி தாக்குதல் வேகமடைந்திருக்கிறது. அதனால்தான் பங்குச் சந்தை வீழ்ச்சி தற்போது வேகமேடுத்திருக்கிறது என்பது மற்றுமொரு வாதம்.

உண்மைதான். வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுமே தமது வருவாய் பெருமளவு வீழ்ச்சியடையும் என்று கூறி இருக்கின்றன. மற்ற சில்லறை நிறுவனங்கள் பெருமளவு வீழ்ச்சி அடியாது என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. எனில் இந்த வாதம் குறிப்பிட்ட அளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் இது சீன பங்குச் சந்தையின் நிலைத்தன்மையை விளக்க தவறுகிறதே என்கிறீர்களா? இதைப் பற்றி அடுத்த தொடரில் பரிசீலிப்போம்...!

- சூறாவளி

Pin It