சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும் என்ற நூலின் முதற்பதிப்பு 1989 ஆம் ஆண்டு புதிய பூமி வெளியீடாக வந்தது. இந்நூலின் ஆசிரியர்களான வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இராவீந்திரன்) ஆகிய இருவருமே ஈழத்தில் இடம் பெற்ற சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு செயற்பட்டவர்கள். முன்னவர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டத்தில் நேரடியாக பங்கு கொண்டது மாத்திரமன்று அப்போராட்டங்களை சரியான திசையில் முன்னெடுத்து சென்ற முக்கிய தோழர்களில் ஒருவராவார். திரு. ந. இரவீந்திரன் அவர்கள் இன்றுவரை சாதியம் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் கனதியான ஆய்வுகளை உண்மையின் பக்கம் நின்று பேசியும் எழுதியும் வருகின்றவர். இத்தகைய அனுபவமும் கோட்பாட்டு தெளிவும் பெற்றவர்கள் இந்நூலை எழுதியுள்ளமை இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்கள் குறித்த புறவயமானதொரு ஆய்வினை வெளிக் கொணர்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது எனலாம்.

Ravanan's bookசுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்நூலின் இரண்டாம் பதிப்பு ‘இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூல் சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, தாக்கம் என்பன பற்றிய பொதுவான பார்வையை முன்வைக்கின்ற அதே சமயம் இலங்கையில் இடம் பெற்ற சாதிய எதிர்ப்பு போராட்டம் குறித்தே எழுதப்பட்டுள்ளமையினால் இரண்டாம் பதிப்பின் தலைப்பு ‘‘இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’’ என மாற்றப்பட்டுள்ளமை மிக பொருத்தமாகவே அமைந்துள்ளது. சில கட்டுரைகளும் தகவல்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை முனைப்படைந்துள்ளதோர் சூழலில் சாதிய முரண்பாடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து இந்நூல் ஆய்வு செய்கின்றது.

சாதியமும் அதற்கு எதிரன போராட்டங்களும் குறித்து நோக்குவதற்கு சாதியமைப்பின் பிறப்பிடமான நிலபிரபுத்துவம் குறித்த தெளிவு அவசியமாகின்றது. நிலபிரபுத்துவமானது நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்கு பிரதேசம், காலத்திற்கு காலம் தனக்கே உரித்தான தனித்துவங்களையும் சிறப்புக்களையும் கொண்டிருக்கின்ற அதே சமயம் சில பொதுமைகளையும் கொண்டு காணப்படுகின்றது. ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்திற்கும் இந்திய நிலப்பிரபுத்துவத்திற்கும் அமைப்பு ரீதியாகக் காணப்படும் வேறுபாடு குறித்து பேராசிரியர் கா. சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘‘ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தை பற்றிப் பேராராய்ச்சி செய்த மாக் புளொக் என்ற பிரஞ்சு பேராசிரியர் ‘விவசாயிகள் கட்டுப்படுத்தப்பட்டுக் கிடக்கும் நிலமை, ஊழிய முறைச் சேவையினால் மக்கள் தமக்கு வேண்டியவற்றைப் பெறுதல், படை வீரர் சமுதாயத்தில் விசேட இடம் பெறுதல், அச் சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொருவரையும் இணைத்து காப்புறுதி அளிக்கும் சமூக பந்தங்கள், பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரம் ஆகியவற்றினூடே குடும்பம், அரசு ஆகிய நிறுவனங்கள் நிலையூன்றிய நிலையிற் காணப்படுதல் ஆகியனவே ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படை பண்புகளாகும்’ எனக் கூறியுள்ளார்.

இந்திய நிலப்பிரபுத்துவத்தை ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்துடன் ஒப்புநோக்கிய கோசாம்பி போன்ற அறிஞர்கள் அவை இரண்டுக்குமுள்ள வேறுபாடுகளை எடுத்துக்காட்டியுள்ளனர். உற்பத்திச் சாதனங்களின் குறைந்த தரம், குறுகிய ஒரு வட்டத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உற்பத்தி, அரசியலதிகாரத்தின் பன்முகப்பாடு ஆகியவற்றில் ஒற்றுமையுண்டெனினும் ஐரோப்பிய அமைப்பில் நிலப்பிரபுவை சுற்றி இயங்கும் ‘‘மனோறியல் (Manarail) அமைப்பு’’ எனப்படும்.

நிலப்பிரபுத்துவப் பண்ணை இந்திய அமைப்பிற் காணப்படாதவொன்றாகும். இதற்கு மேலாக இந்திய அமைப்பில் சாதி வேறுபாடு முக்கிய இடம் பெறுகின்றது. இந்திய நிலபிரபுத்துவத்தின் அச்சாணியாகவும் சிறப்பாகவும் விளங்குவது சாதியமைப்பாகும். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆரிய அமைப்பான வருணாசிரம முறைமையும், பூர்வீக இந்தியாவின் கணக்குழு (Tribal groups)க்களும் சேர்ந்தே சாதியமைப்பைத் தோற்றுவித்தன’’.

இப்பின்னணியில் இலங்கையின் நிலபிரபுத்துவத்தை இந்திய நிலபிரபுத்துவத்துடன் ஒப்பிட்டு நோக்குகின்றபோது அது வேறுபாடு கொண்டதாக காணப்படுவதை அவதானிக்கலாம். யாழ்ப்பாண நிலபிரபுத்துவமானது இலங்கையில் நிலவுகின்ற சிங்கள மற்றும் கிழக்கு மாகாண நிலபிரபுத்துவ முறையிலிருந்து மாறுப்பட்தொன்றாகவே விளங்குகின்றது. யாழ்ப்பாண சமூகவமைப்பானது இந்துமத செல்வாக்கிற்குட்பட்டதொன்று என்ற வகையில் சதுர்வர்ண வேறுபாட்டினை தன்னகத்தே கொண்டுள்ள அதே சமயம் சதுர்வர்ண வேறுபாட்டின் ஆதிக்க சக்தியான பிராமணர்கள் இங்கு பொருளாதார ஆதிக்கம் கொண்டவர்களாக இல்லை. மாறாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற சைவ வேளாளர் என்ற சாதிய குழுமத்தினரே பொருளாதார ஆதிக்கமும் அதனூடான சமூக ஆதிக்கமும் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

இவ்விடத்தில் பிறிதொரு விடயமும் குறித்து நோக்க வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது. யாழ்ப்பாண சமூகவமைப்பில் நிலவுகின்ற சாதிய அடக்கு முறையை இந்திய சாதிய அடக்கு முறையுடன் ஒப்பு நோக்குகின்றபோது யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற சாதிய அடக்குமுறையே கொடுமையானதாக காணப்படுகின்றது. யாழ்ப்பாண சைவ வேளாளர் என்ற சாதி குழுமத்தினர் பொருளாதார ஆதிக்கம் கொண்டவர்களாகக் காணப்படுகின்ற அதே சமயம் சதுர்வர்ண அடிப்படையில் அவர்கள் பிராமணர்களை விட கீழானவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். இந்த தாழ்வு மனப்பான்மையும் யாழ்ப்பாண சமூகவமைப்பில் சாதியம் இறுக்கமடைவதற்கு முக்கிய காரணமாகும்.

பொருளாதார ஆதிக்கம் பெற்றிருந்த வேளாளர் சாதி குழுமத்தினர் தமக்குத் தேவையான அடிமைகளை தென்னாட்டிலிருந்து இறக்குமதி செய்ததுடன் தத்தமது கிராமங்களில் வாழ்ந்து வந்த அடக்கியொடுக்கப்பட்ட மக்களையும் தமக்கு அடிமைகளாக்கி கொண்டனர். அவர்களின் உழைப்பை ஈவிரக்கமின்றி சுரண்டினர். அவர்கள் தமது வேலைகளை செய்யத் தவறுமிடத்து பகிரங்கமாக கட்டிவைத்து தண்டித்ததுடன் அக்கொடுமைகளுக்கு எதிராக அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் எழுகின்றபோது அவர்களின் குடிசைகளுக்கு தீ மூட்டவும் (ஓலையினால் கட்டப்பட்டிருந்தமையினால் இலகுவாக தீ மூட்ட கூடியதாக இருந்தது. இதன் காரணமாக தான் அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் கல் வீடு கட்டும் உரிமை வேளாளர் சாதியினரால் மறுக்கப்பட்டது) செய்தனர். இதற்கு மாறாக பெண்களை திருமணம் செய்து கொடுக்கின்ற போதும் தமக்கு அடிமைகளாக வாழ்ந்த அடக்கியொடுக்கப்பட்ட மக்களை சீதனப் பொருட்களுடன் தாரை வார்ப்பு செய்து கொடுக்கின்ற முறையும் நிலவியது.

யாழ்ப்பாணத்தை கைப்பிற்றிய பிறநாட்டினர் கூட இச்சாதியமைப்பு முறையினை அப்படியே பாதுகாத்து வந்தனர். ‘பறங்கி சிறை’, ‘கம்பனி சிறை’ முதலியனவும் சாதியமைப்பால் அவர்கள் பெற்ற நலனை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன. இவ்வகையில் நோக்குகின்ற போது யாழ்ப்பாண சமூகவமைப்பில் அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் இழப்பதற்கெனச் சொத்துடமை ஏதுமில்லாத கூலி அடிமைகள் ஆவார். நிலப்பிரபுத்துவம் தோற்றுவித்த சொற்ப கூலிக்காக உடல் உழைப்பை விற்கும் அடிமை வர்க்கமாகவே இப்பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அவ்வகையில் உடமைகளை சொந்தமாக கொண்ட மூலதனகாரர்களுக்கும் உழைப்பை விற்பவர்களான அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்தி உறவே யாழ்ப்பாண சமூக மனிதவூடாட்டத்தின் அடிப்படையாகும். இஃது ஒரு முரண்பாடுடய உறவு. அதுவும் நேச முரண்பாடாக அன்றி பகை முரண்பாடேயாகும். வரலாற்றை பரிணாமம் அடைய செய்யும் வர்க்க போராட்டம் என்பது சாதிய வடிவிலே இங்கு காணப்படுகின்றது.

ஒரு நாகரிக சமூகத்தின் மூலத்தைப் போலவே ஒரு புறமான ஒடுக்குமுறைகளும் மறுபுறமான சமூகவுருவாக்கமும் தாம் தனித்துவமான வர்க்கம் என்ற உணர்வை பலப்படுத்தியிருக்கின்றது. இந்த உணர்வின் பிரக்ஞையின் எதிரொலியாகவே யாழ்ப்பாணத்தில் சாதிய எதிர்ப்பு போராட்டங்களும் அவற்றிடையாக எழுந்த இயக்கங்களும் அவற்றுக்கு சேவையாற்றும் இலக்கியங்களும் தோற்றம் பெற்றன. அண்மைக் காலத்தில் இவ்வுணர்வு முனைப்படைந்து வருவதையும் அறியலாம். இவ்வுணர்வில் தொனிக்கின்ற பொருளை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பார்க்கும் போது குறுகியவாதமக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் ஓர் ஒடுக்கமுறைக்குட்டபட்ட மக்கள் சமுதாயத்தின் இனத்துவ அடையாளத்தையும் சமூகவுருவாக்கத்தையும் அங்கீகரிக்கின்ற போக்காகவும் இக்குரலைக் காணலாம்.

எங்கெல்லாம் ஒடுக்கு முறைகளும் அடக்கு முறைகளும் இடம்பெறுகின்றனவோ அங்கெல்லாம் போராட்டங்ளும் இயக்கங்களும் தோன்றுவது தான் இயற்கையின் நியதி. அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களானது காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் முனைப்படைந்து வந்துள்ளன. இந்நூல் இப்போராட்ட வரலாற்றை அதன் சரித்திரப் பின்னணியில் வைத்து ஆய்வு செய்கின்றது. எடுத்துக்காட்டாக கொலனிய காலத்திலிருந்து சுதந்திர காலம் வரை, ஐம்பதுகளிலிருந்து அறுபது ஒக்ரோபர் வரை, 1966 ஒக்ரோபர் எழுச்சியும் போராட்டங்களும், 1970களில் தொடர்ந்த போராட்டங்கள், தமிழ் தேசிய போராட்டத்தில் சாதியத்தின் நிலபாடு ஆகிய தலைப்புகளில் யாழ்ப்பாண சமூகவமைப்பில் நிலவிய சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன எனும் விடயங்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண சமூகவமைப்பில் நிலவிய சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வந்துள்ளன என்ற போதிலும் அதன் ஆரம்பபால போராட்டங்கள் யாவும் ஸ்தாபன மயமாக்கப்பட்டவையாக அமையவில்லை. 1910 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர்கள் சங்கம் இத்துறையில் தோன்றிய முதலாவது ஸ்தாபனமாகும். அவ்வாறே சிறுபான்மை தமிழர் மகாசபை நடத்திய சாதிய எதிர்ப்பு போராட்டங்களும் வரலாற்று முக்கியத்துவம் உடையவையாக காணப்படுகின்றன. இவை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை நடாத்தி சிறுசிறு வெற்றிகளை பெற்றிருந்தாலும் சாதிய ஒடுக்கு முறையின் ஆணிவேரை தொடமுடியாமல் போய்விட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும். இப்போராட்டங்களை தொடர்ந்து சிறிது இடைவெளிக்கு பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமானது சாதிய ஒடுக்கமுறைக்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை நடாத்தியது. இவ்வியக்கமானது மக்கள் மத்தியில் வேர்கொண்டு கிளை பரப்பியதுடன் அது தொழிலாளர்கள் - விவசாயிகள் புத்திஜீவிகள், மாணவர்கள் என பலரை தன்நோக்கி ஆகர்ஷித்திருந்தது.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டத்தில் பங்குபற்றிய பலர் மார்ஸிய பாதையில் பயனித்துக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் இந்நாட்டிலுள்ள தொழிலாளர்கள் விவசாயிகள் அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று நடாத்திய போராட்டங்களில் பங்கு பற்றி இப்போராட்டங்களில் பெற்ற அனுபவங்களை ஆதாரமாக கொண்டு இப்போராட்டங்களை முன்னெடுத்தவர்கள்.

உலகின் சகல பாகங்களையும் பொறுத்தமட்டில் இக்கால பகுதியில் பாசிஸத்திற்கு எதிரான பலமான மக்கள் இயக்கங்கள் உருப்பெற்று வந்தன. இந்நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கங்கள் பாசிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து ஆர்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தினர். அத்தகைய சர்வதேச எழுச்சி குறித்து நூலாசிரியர்களின் பார்வை இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தது.

‘‘அறுபதாம் ஆண்டுகள் சர்வதேச ரீதியாகப் பெரும் எழுச்சிகளும் போராட்டங்களும் முன்னெழுந்து நின்ற தசாப்த காலமாகும். ஆசியாவிலே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நேரடிப் போராட்டத்தில் வியட்நாம், லாவோஸ், கம்போடியா மக்கள் புயலென எழுந்து நின்று போராடினார். அதன் அதிர்வுகள் ஏனைய ஆசிரிய நாடுகளில் மட்டுமன்றி உலகம் பூராகவும் எதிரொலித்தன. ஆப்பிரிக்க நாடுகளில் கொலனியத்திற்கும் நிறவெறிக்கும எதிரான மக்கள் போராட்டங்கள் வீறுடன் முன்னேறிச் சென்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் வலுவடைந்தன.

அமெரிக்காவில் வெள்ளை நிறவெறிக்கு எதிராக கறுப்பின நீக்ரோ மக்கள் என்றுமில்லாத அளவுக்கு போராட்ட சுவாலையை உருவாக்கினர். ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களும் மாணவர்களும் முதலாளியத்தின் விளைவுகளுக்கு எதிராக வேலை நிறுத்தங்களிலும் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதே காலப் பகுதியில் தான் சர்வதேச கம்யுனிஸ்ட் இயக்கத்தில் புரட்சிகர கருத்துக்களுக்கும் நவீன திரிபுவாத கருத்துகளுக்கும் இடையிலான வாதபிரதிவாதங்கள் உச்ச நிலையை அடைந்தன. சீனாவில் மாபெரும் கலாசார புரட்சி நடைபெற்றது. இந்தியாவில் நகசல்பாரிப் போராட்டம் வெடித்தெழுந்தது.’’

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகின்றது. தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு சிங்கள பெருந்தேசியவாதம் மட்டுமே காரணமானது எனக் கொண்டு அதற்காக மட்டும் போராடுவதே பிரதானமானது என செயற்பட்ட போக்கு, ஒருவகையில் ஐக்கியப்பட வேண்டிய சிங்கள நேச சக்திகளையும் விரோதியாக பார்த்ததுடன் தமிழ் மேட்டு குடியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைகின்ற பண்பே இவ்வணியினரில் முனைப்பு பெற்றுக் காணப்பட்டது. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்காக தாழ்த்தப்பட்ட சாதி பிரிவினரில் ஒரு சிலரை தம்முடன் இணைத்துக் கொண்டு செயற்பட்டதுடன் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு எதிராக அவர்களையே கோடரிக் காம்பாக பாவித்தனர். அந்தவகையில் இவற்றுக்கு மாறாக இடம் பெற்ற மக்கள் போராட்டங்கள் எழுச்சிகள் அவர்களுக்கு அருவருக்கதக்கதாயிருந்ததுடன் அவர்களின் மூக்கை சிணுங்க வைத்ததில் வியப்பொன்றுமில்லை. இது குறித்து ‘ஈழத்து முற்போக்கு சிறுகதைகள்’ என்ற சிறுகதை தொகுதிக்கு முன்னுரை எழுதிய நீர்வை பொன்னையன் அவர்களின் பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது.

‘‘சிறுபான்மை தமிழர் மகாசபை நடத்திய சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், சாதிய ஒடுக்கு முறையை தகர்க்க முடியவில்லை. இப்போராட்டத்தை அடுத்து சிறிது கால இடைவெளிக்குப் பின் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் சாதிய ஒடுக்கு முறைக்கெதிராக உக்கிரமான போராட்டத்தை நடாத்தியது. இப்போராட்டத்திலிருந்து ஒரு சில முற்போக்கு எழுத்தாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு சில எழுத்தாளர்கள் அரசியல் காரணங்களுக்காகவே ஒதுங்கிக் கொண்டனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த சிலர், ‘தும்புகள் (நளவர்), துரும்புகள் (ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு சலவை செய்பவர்கள்) தம்பட்டக் கம்புகள் (பறையர்) சமூக சேவை செய்ய வந்து விட்டனர்’ என்று இப்போராட்டத்தைக் கிண்டல் செய்துள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அப்போர் முழக்கம் தென்புலத்திலும் ஒலித்து விழிப்பை ஏற்படுத்தியது. அது மாத்திரமல்ல ‘‘யாழ்ப்பாணத்தில் வியட்நாம் யுத்தம் நடக்கிறது’’ என்று ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் முறையிட்டு குரலெழுப்பினார். இப்போராட்டம் சுபத்திரன், சாருமதி, நெடுந்தீவு மகேந்திரன், கணேஷ் போன்ற போராட்ட உணர்வு நிறைந்த வீரியமுள்ள இளம் முற்போக்குக் கவிஞர்களைத் தோற்றுவித்தது’’.

இவ்வாறாக 1960களில் பொதுவுடமை இயக்கத்தில் சர்வதேச ரீதியான தத்துவார்த்த முரண்பாடுகள் - பிளவுகள் ஈழத்து பொதுவுடமை இயக்கத்திலும் தாக்கம் செலுத்த கூடியவையாக அமைந்து காணப்பட்டன. பாராளுமன்ற பிரவேசத்தினூடாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நிலைபாட்டினை இரசியாவும், புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திய சீனாவும் இரு வேறுபட்ட முகாம்களாக பிரிந்து தத்துவார்த்த போராட்டங்களை நடாத்தின. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சாதிய எதிர்ப்பு போராட்டத்தில் சீன அணியினரே முக்கிய பங்களிப்பினை என்பது யதார்த்த உண்மையாகும். இவர்கள் இப்போராட்டத்தை கையிலேந்தியமையினால் திரிபுவாதத்தை ஏற்று நின்று மொஸ்கோ சார்பு அணியினர் இப்போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டனர். அவ்வாறு ஒதுங்கிக் கொண்டமைக்கு அவர்களின் தத்துவார்த்த கோளாறும் ஒரு காரணமாகும். இது தொடர்பில் நூலாசிரியர்களின் பின்வரும் கூற்று முக்கியமானதொன்றாகும்.

‘‘1964ல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இப்பிளவு வடபகுதியிலும் இடம் பெற்றது. பாராளுமன்றப் பாதையை முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்ட பீற்றர் கெனமன் - விக்கிரதசிங்ஹ தலைமையிலான ‘‘சோவியத் சார்பு’’ கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு யாழ்ப்பாணத்தில் குறைவாகவே காணப்பட்டது. அதன் பக்கத்தில் அ. வைத்திலிங்கம், ஐ. ஆர். அரியரத்தினம் வ. பொன்னம்பலம், எம். சி. சுப்பிரமணியம், எஸ். ஜெயசிங்கம், பொன் குமாரசுவாமி, எஸ். விஜயானந்தன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் சமாதான பாதையில் பாராளுமன்றப் பதவிகளைப் பெறுதலையும் சலுகை அரசியலையும் வலியுறுத்தி வந்தனர். மறுபக்கத்தில் சமுதாயமாற்றத்தையும் அதற்கான புரட்சிகர போராட்டங்களின் நடைமுறை அவசியத்தையும் ‘‘சீனச்சார்பு’’ கம்னியூஸ்ட் கட்சியானது முன்வந்து அதன் புரட்சிகர கொள்கைகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் இளம் தலைமுறையினரிடையேயும் பலத்த ஆதரவை தோற்றுவித்திருந்தது.

இக்கட்சியின் பக்கத்தில் மு. கார்த்திகேயன், டாக்டர்.சு.வே சீனிவாசகம், ஜே.ஏ. சுப்பரமணியம், வீ.ஏ. கந்தசாமி, கே. டானியல், எம். குமாரசுவாமி, வராத்துப்பளை வ. சின்னத்தம்பி, எம். செல்லத்தம்பி, நீர்வைப் பொன்னையன், இ.கா. சூடாமணி, மு. முத்தையா, எம்.பி. செல்வரட்ணம், எஸ். சிவலிங்கம் (மான்) ந. முத்தையா, எஸ் ஜனகன், எம். சின்னையா போன்ற தலைமைக் குழுவினர் இருந்தனர். இக்கட்சிதான் தமிழ் மக்களிடையேயான தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வந்த சாதிய தீண்டாமை ஒடுக்குமுறையினைப் புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் எதிர்த்து முறியடித்து ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தி வைத்தது’’.

போராட்ட வடிவங்களை ஒழுங்கமைப்பது தொடர்பாகவும் அதனை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற விடயம் தொடர்பாகவும் விவாதங்கள் எழுந்தன.

சிறுபான்மை தமிழர் மகா சபையினர் சலூன் சலவை நிலையங்களில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டங்களை முன்வைத்தனர். இந்த தரப்புப் போராட்டமானது யதார்த்த வாழ்கையிலிருந்து அந்நியப்பட்டிருந்ததுடன் பல விதமான அடக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் உட்பட்டு வந்த சாதியினருக்கு எதிரான போராட்டமாகவும் திகழ்ந்தது. தமது நேச சக்திகளுடனான ஐக்கியம், போராட்ட தந்திரோபாயம் முதலிய அம்சங்களை கவனத்திற் கொள்ளாததுடன் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தி குறுக்கி படுதோல்வி அடைய செய்கின்ற முயற்சியாகவும் இது அமையக்கூடிய சூழல் காணப்பட்டது.

அவ்வாறே சாதிய போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பான விவாதங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்தது. இதன் இரண்டாவது தரப்பு சாதியத்தை தீவிரவாத நிலைப்பாட்டிலிருந்து நோக்கினர். இது குறித்த நூலாசிரியரின் பார்வைகள் இவ்வாறு அமைந்திருக்கின்றது.

ஒக்டோம்பர் 21 எழுச்சியினால் மக்கள் உணர்வு பெற்றுக் கொண்டிருந்த வேளையில் சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்திற்கான அரசியல் மார்க்கமும் தந்திரோபாயங்களும் வகுக்கப்பட்ட வேண்டிய நடைமுறைக் கொள்கைப் பிரச்சனை முன்னெழுந்தது. சாதிப் பிரச்சனை அடிப்படையில் வர்க்கப் பிரச்சனை என்பது தெளிவாகி இருந்த போதிலும் நடைமுறையில் அதை முன்னெடுத்துச் செல்வதில் கட்சிக்குள் பெரும் விவாதம் எழுந்தது. கட்சியின் அன்னைய பொதுச் செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் முன்வைத்த நடைமுறை அணுகுமுறை சம்பந்தமாகவே மேற்படி விவாதம் எழுந்தது. அதன் அடிப்படையில் தலைமைத் தோழர்கள் உட்படச் சில தோழர்கள் முன்வைத்த சில கருத்துக்கள் கொள்கை நடைமுறை ரீதியில் தவறானவையாக இருந்தன.

சாதி அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்ட மக்கள் தமக்கு இழைக்கப்படும் பிற்போக்கு பலாத்காரத்திற்கு எதிராகப் புரட்சிகர பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் எனத் தோழர்கள் முன்வைத்த கொள்கை சரியானதென ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அப்பலாத்காரம் யாருக்கு எதிராக என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. உதாரணமாக, அமெரிக்க கறுப்பு ஆப்பிரிக்க நீக்ரோ மக்கள் வெள்ளையர்களுக்கு எதிராகப் பாவித்து வந்த வரைமுறையற்ற பலாத்காரத்தை ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதையே அத்தவறான கருத்து வற்புறுத்தியது. அதாவது தீவிர கறுப்பின நீக்ரோவாதிகள் வெள்ளையர்களைக் கண்ட கண்ட இடங்களில் தாக்குவதும் பெற்றோல் குண்டுகள் வீசுவதும் கொளுத்துவதும் போன்ற உதாரணம் சில தலைமைத் தோழர்களால் எடுத்துக் காட்டப்பட்டது. இது அடிப்படையில் தீவிர கறுப்பினவாதம் ஆகும்.

அதே போன்று தீவிர சாதிவாதத்தைத் தூண்டக்கூடிய அபாயத்திற்கே இட்டுச் செல்லக்கூடியதொன்று என்பது அவ்வேளை சிலரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. முழக்கங்களாயினும் கொள்ளைகளாயினும் வெறுமனே அதிதீவிரத் தன்மை வாய்ந்தவையாக இருந்தால் மட்டும் புரட்சிகரமாகாது. அவை சமூக யதார்த்த நடை முறைக்குப் பொருந்துபவையாகவும் இருக்க வேண்டும். மேலும் அத்தகைய மார்க்கங்கள் தூரநோக்கின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மக்களின் இறுதி விடுதலைப் பாதைக்கு வழி காட்டுவதாயும் அமைய வேண்டும். குறுகிய சாதிவாதத்தைத் தூண்டுவதும் அதன் வேகத்தில் சில தீவிர பலாத்கார நடவடிக்கைள் ஆற்றப்படுவதும் சுலபமானது.

ஆனால் மொத்தத்தில் அத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அம்மக்களுக்கும் முழுச் சமுகத்திற்கும் தொழிலாளி வர்க்கப் புரட்சி மார்க்கத்திற்கும் ஏற்படக்கூடிய அபாயங்களும் அழிவுகளும் பற்றிக் கவனத்தில் கொள்வது பிரதானமாகும். எனவே அன்றைய சூழலில் முன்வைக்கப்பட்ட மேற்படி தவறான அரசியல் அணுகுமுறையை எதிர்க்க வேண்டிய தேவை கட்சிக்குள் உள்ள சில தலைமைத் தோழர்களுக்கு ஏற்பட்டது. அந்த அணுகுமுறையில் இருந்த தவறான நிலைபாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டன. அவ்விவாதத்தின் அடிப்படையில் சாதிய தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை வடபுலத்தில் முன்னெடுத்த கட்சியின் மத்திய குழுவும் பிரதேசக்குழுவும் இணைந்து விவாதித்து முடிவெடுத்துச் செயற்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இவ்விடயத்தினை புரட்சிக்கு பின்னர் ரஷ்யாவின் நெருக்கடி மிக்க சூழ்நிலையுடன் ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமானதாக அமையும். ரஷ்யாவில் ஏற்பட்ட போருக்கு பின் மக்கள் அமைதியை விரும்பினர். கெரன்ஸ்கி அரசு போரை நடாத்தியது. அப்போது ரஷ்யாவின் சில பகுதிகள் ஜேர்மனியிடம் இருந்தன. போரினால் நிறையவற்றை இழந்து விட்டமையினாலும் ஜேர்மனியை மீட்டெடுக்க கூடிய வல்லமை ரஷ்யாவிடம் இல்லாமையினாலும் லெனின் அமைதிக்கான பேச்சுவார்த்தையை ஆதரித்தார்.

அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ட்ராட்ஸ்கி போரின் மூலமாக ரஷ்யாவை இழந்தாலும் ஜேர்மனியிலும் பாட்டாளிவர்க்க புரட்சி நடைபெறுகின்றது எனவும் ரஷ்யா போரில் தோற்றாலும் அவ்வனுபவம் புரட்சிக்கு உதவும் என்றும் தமது சிந்தனையை முன்வைத்தார். இதனை அடியாகக் கொண்டே அவரது நிரந்தர புரட்சி சித்தாந்தம் என்ற நூல் எழுதப்பட்டிருந்தது. இதற்கு மாறாக மற்றொரு தரப்பினர் ஜேர்மனியியுடன் போரும் வேண்டாம் சமாதான பேச்சுவார்த்தையும் வேண்டாம் என்ற இவ்வணியினர் ஜேர்மனியில் புரட்சி வெற்றிப் பெறப் போகின்றது எனவும் அதனூடாக ரஷ்யா தானே விடுதலை அமையும் என்ற சிந்தனையும் முன் வைத்தனர்.

அன்றைய சூழலின் யதார்த்தத்தை உணராது இவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் வெற்று அலங்கார வார்த்தைகளாக காணப்பட அதே சமயம் வெறும் வக்கற்ற புலம்பல்களுக்கே இவர்களை இட்டு சென்றது. எது புறநிலை யதார்த்தமோ அதிலிருந்து தான் முடிவுக்கு வரவேண்டும். ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட முடிவுகளை கொண்டோ சமூக போராட்டங்களை ஒழுங்கமைப்பது வெற்றுக் கோசங்களாகவே அமையும் என்பதை வரலாறு நமக்கு அழகுற எடுத்துக் காட்டியுள்ளது. அவ்வடிப்படையில் இப்பண்பு எதிர்புரட்சிகரமானதாகும். இத்தகைய போக்கினையே லெனின் ‘‘புரட்சிகர வாய்ச்சொல்’’ என்றார்.

இத்தகைய பின்னணியில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்கள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து வர்க்க போராட்டத்திற்கான கட்டியம் கூறி நின்றனர். ஒரு வகையில் இந்திய சாதிய விடுதலைப் போராட்டங்களுக்கும் இப்போராட்டமும் நடைமுறையும் முன்னோடியாகத் திகழ்கின்றது.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் தான் அது. மக்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ஒட்டியதாக இருந்தமை. சாதிய அமைப்பு முறையின் பிரதான மையங்களாக பெரும் ஆலயங்களும் தேனீர் கடைகளும் திகழ்கின்றன என்ற அடிப்படையில் அவற்றினுள் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் தெளிவான நிலைபாட்டினை கொண்டிருந்தது. அதனை தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் ‘‘அடிமை குடிமை முறை ஒழியட்டும், ஆலய தேநீர்க்கடை பிரவேசம் தொடரட்டும்’’ என்ற நிலைபாட்டை முன்வைத்தது. அவ்வகையில் அக்காலக்கட்டத்தில் தோன்றிய கலை இலக்கிய வடிவங்களும் புரட்சிகரமான உள்ளடங்கங்களை கொண்டிருந்த அதே சமயம் மக்களை ஒட்டிய கலை வடிவில் அவை படைப்பாக்கி தரப்பட்டன. உதாரணமாக என். கே ரகுநாதனின் ‘‘கந்தன் கருணை’’, சி. மௌனகுருவின் சங்காரம் முதலிய நாடகங்களை குறிப்பிடலாம்.

கம்யூனிஸ்ட்டுக்கள் ஆலய பிரவேச போராட்டத்தை ஏன் முன்னெடுத்தார்கள் என்ற வினா எழுவது தவிர்க்க முடியாததொன்றாகும். அதனை அன்றைய சரிந்த சூழலில் வைத்து நோக்குவதன் மூலமாகவே தெளிவு பெறக் கூடியதாயிருக்கும். மதம் குறித்த பார்வையை முன்வைக்கும் வறட்டு மார்ஸியவாதிகளுக்கும், மார்ஸியவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு தெளிவானது. மதத்தை அதன் சமூதாய சூழலில் வைத்து நோக்குவதன் மூலம் ஒடுக்கு முறைக்கு ஏதுவாக உள்ள காரணிகள் எதிர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையும், ஒடுக்கு முறைக்கு எதிராக வெளிப்பட்டுள்ள போர்க்குணத்தை சமுதாய மாற்ற செயற்பாடுகளுக்கு ஏற்ப ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர முடியும்.

சமூகமாற்ற போராட்டங்களில் மதங்கள் எத்தகைய தாக்கத்தை செலுத்துகின்றன. நேர்மையோடு சமுதாய மாற்றம் குறித்து சிந்திக்கின்ற மார்க்சியவாதி அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், பாரம்பரிய மரபுகளை எவ்வாறு பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும், நடைமுறையிலிருந்து நாம் கற்க வேண்டியவைகள் யாவை என்பன குறித்து லெனின் அவர்களின் பின்வரும் கூற்று முக்கியமானது.

‘‘பாட்டாளி வர்க்க கலை பற்றிப் பேசும்போது இதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். மனிதவர்க்கத்தின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவும் அதனை மாற்றக் கூடிய ஆற்றலும் சாத்திமானாற்தான் பாட்டாளி வர்க்க கலை படைக்க முடியும். பாட்டாளி வர்க்க கலை - நிபுணர்கள் என அழைத்துக் கொள்பவர்களின் கண்டுபிடிப்பல்ல. அப்படிச் சொல்வது எல்லாம் சுத்த அபத்தம். பாட்டாளி வர்க்க கலை என்பது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அதிகாரத்துவ சமூகம் ஆகியவற்றில் சேகரிக்கப்பட்ட மனித குல அறிவின் தர்க்க ரீதியிலான வளர்ச்சியாகும்’’.

ஆதிக்க சக்திகள் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக எத்தகைய வகையில் பாட்டாளி வர்க்கத்தின் கலாசார பண்பாடுகளிலிருந்து கற்கின்றதோ அவ்வாறே அந்நுகத்தடியை தூக்கியெறிவதற்காகப் போராடுகின்ற சக்திகளும் வரலாற்றிலிருந்து கற்க வேண்டும் என்பதை மேற்குறித்த வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பொருள்படாது.

அதனை உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியப்படாது, பாட்டாளிவர்க்க சிந்தனையின் நிலை நின்று நோக்க வேண்டும் என்பதை மார்க்ஸியர்கள் எப்போதும் வலியுறுத்தியே வந்துள்ளனர். அதேசமயம் சமூகமாற்றச் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த பார்வையிலிருந்து அந்நியப்படாமல் ஆக்கிக் கொண்டமை ஆரோக்கியமானதாகும்.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டத்தின் பிறிதொரு சிறப்பம்சம் அது சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளையும் தன்னுள் ஜக்கியப்படுத்தி நின்றது. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமன்றி அடக்கியெடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் உணர்வும் நேர்மையும் கொண்டிருந்த உயர் சாதியினரும் இப்போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்தனர் என்பதில் முக்கியமானதோர் செய்தியாகும். தவிரவும் பிற இன மதத்தினரும் வகித்த பாத்திரம் குறித்து நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘‘சாதிய தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தில் அவர்கள் முன்னணியில் இருந்து வந்தனர். அக்காலத்தில் தோழர் சுபைர் இளங்கீரன் தொழிலாளி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தனர். அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சாதிய எதிர்ப்பு கூட்டங்களிலும் கருத்தங்குகளிலும் பங்கு பற்றி வந்தனர் தோழர்கள் எம். ஏ. சி. இக்பால், சலீம், காதர், அஸீஸ், கன்சூர், நதீன், கமால் போன்ற தோழர்கள் இப்போராட்டங்களின் போது முன்னிணியில் இருந்து செயற்பட்டுவந்தனர்.

சங்கானைப் போராட்டத்தின் உச்சகட்டத்தில் கட்சியின் கொழும்புத் தலைமைக் காரியாலயத்தில் இருந்து பத்தாயிரம் துண்டுப்பிரசுரங்களை யாழ்ப்பாணத்திற்கு புகையிரதம் மூலம் தோழர் எஸ். சிவதாசன் எடுத்து வந்தார். இதனை முன்கூட்டியே இரகசிய பொலீஸ் மூலம் அறிந்த யாழ்ப்பாணப் பொலிசார் யாழ். புகையிரத நிலையத்தில் காத்திருந்து அத்துண்டுப் பிரசுரங்கள் முழுவதையும் கைப்பற்றி அத்தோழரையும் கைது செய்து பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்தனர். இச்செய்தி உடன் கொழும்புத் தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள் கழித்து அதே துண்டுப் பிரசுரம் பத்தாயிரம் அச்சிடப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டு வடபகுதி பூராவும் விநியோகிக்கப்பட்டது.

இப்பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்களையும் யாழ்ப்பாணத்திற்கு தம்முடன் எடுத்து வந்தவர்கள் பதினைந்து பௌத்த பிக்குகள் ஆவர். அவ்வேளை கட்சியின் ஆதரவாளர்களாக இருந்த அம்முற்போக்கு பௌத்த பிக்குமார்கள் அவ்வாறு செய்து கொண்டதுடன் சங்கானைக்கும் ஏனைய இடங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் அனுதாபமும் இது போன்ற பல தெரிவித்து தமது ஆதாரங்களையும் வெளிப்படுத்தினர். குறிப்பிடத்தக்க சம்பவங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இடம் பெற்றமை குறிப்பிட்த்தக்கதாக அமைந்தது.

1960களில் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டங்கள் எவ்வாறு முனைப்பு பெற்றிருந்ததோ அவ்வாறே 1970களில் தமிழ் இன விடுதலைக்கான போராட்டங்களும் முனைப்பு பெற்றது. தமிழ் முதலாளித்துவ சக்திகள் இதனை இனவாதத்திற்குள் அழுத்திச் சென்றன. அந்த வகையில் 1970க்கு பின் இலங்கை சூழலில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை பல்வேறு வகையில் பின்னடையச் செய்தன. தற்கால போக்கில் சாதியம் ஒழிந்து விட்டதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் இந்நூலில் இடம் பெறுகின்ற 1970களில் தொடர்ந்த போராட்டங்கள், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் சாதியத்தின் நிலைப்பாடு ஆகிய கட்டுரைகள் முக்கியமானவையாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலத்தில் சைவ வைணவர்கள் சமண பௌத்த சமயத்தினருக்கு எதிராக மக்களை தம் பக்கம் ஈர்க்கும் பொருட்டு சாதிய எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தனர். பின்னர் நிலவுடமை அமைப்பின் வெற்றியின் விளைவாக எழுந்த சோழர் சாம்ராஜியத்தில் சாதியம் நிறுவனமயமாக்கப்பட்டது. இவ்வாறே போர்க்கால இசைவாக ஏற்பட்டுள்ள சாதியத்தின் தளர்வு முற்றுமுழுதானதோர் சமூக மாற்ற போராட்டத்தை ஏற்படுத்த முடியாது. இது குறித்து இந்நூலின் முன்னுரையை பிரஸ்தாபிக்கும் சி. சிவசேகரம் அவர்கள் பின்வரும் கூற்று முக்கியமானது.

இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமலும் சாதியம் ஒழிந்து விட்டதென்றும் தமிழ்த் தேசியமே அதை முறியடித்தது என்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். அந்த வெற்றிக்குத் தமிழ்த் தேசியம் எவ்வகையிலும் பங்களிக்கவில்லை. அதை இயலுமானவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களுக்கும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி, சனநாயக, முற்போக்குச் சக்திகளுமேயாவர். அதை இயலுமாக்கியது மாக்ஸிய லெனினிய வாதிகளின் வழிநடத்திலின் கீழ் அவர்கள் முன்னெடுத்த வெகுசனப் போராட்டப் பாதையே.

அவ்வகையில் சாதிய முரண்பாடு என்பது இன்று வரை தமிழர் சமூக அமைப்பின் வெவ்வேறு வகையில் இடம் பெற்று வருகின்றது. அத்தகைய முரண்பாடுகளை இல்லாதாக்கி ஒரு சமத்துவமான சமூகத்தை உருவாக்க ‘‘சாதிய அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்’’ என்ற அடிப்படையிலான சமூக மாற்ற போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஈழத்து தமிழர் சமூகவமைப்பில் சாதியமைப்பு என்பது சிக்கல் இருந்தது. நூலாசிரியர்கள் இதனை தமக்கே உரிய முறையில் ஆராய்ந்துள்ளனர். சாதியமைப்பு அடிப்படையை வரலாற்று கண்ணோட்டத்தில் நோக்கி அதனை வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் தெளிவுப்படுத்துகின்றனர் எனக் கூறின் தவறாகாது. இத்தகைய அனுபவங்களையும் நடைமுறையும் இந்நூல் வெளிக் கொணர்கின்றது என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இன்று வரை தமிழர் சமூகவமைப்பில் முனைப்படைந்து வருகின்ற சாதிய முரண்பாடுகள் குறித்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அது தொடர்பான ஆய்வுகள் வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. ஆழமான நுட்பமான மாக்ஸிய ஆய்வுகளின் ஊடாகவே இதனை சாதிக்க முடியும். மிகைப்படுத்தல்களோ திரிபுகளோ மறைப்புகளோ இன்றி இந்நூலாசிரியர்கள் இந்நூலை எழுதியுள்ளமை ஒரு பொறுப்புள்ள சமூக கடமையின் பகுதியேயாகும்.

- லெனின் மதிவானம்

Pin It