ஸ்ரீலங்கா அரசத் தலைவர் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பால குமாரன் விளக்கம் அளித்துள்ளார். தேர்தலில் விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால்தான் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று சொல்வதற்கு மேற்குலகமும் பி.பி.சி. போன்ற ஊடகங்களும் முயற்சிகள் எடுக்கின்றன. அவர்களுக்கு இலங்கையினது வரலாறு தெரியாது. 1931 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முதலாவது தேர்தலை அதாவது டொனாரின் பரிந்துரைக்கு அமைய நடந்த தேர்தலை யார் புறக்கணித்தது? தமிழ் மக்கள்தான் புறக்கணித்தார்கள். எதற்காக புறக்கணித்தார்கள்? இலங்கைக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று சிங்கள மக்களின் சார்பாக தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள். அதே இனமானது இன்று தங்கள் விடுதலைக்காக தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டார்கள். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்று கடந்த மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார். ஆழிப்பேரலை வராதிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். அன்று எங்கள் தலைவர் கூறியதை இன்று எங்கள் மக்கள் இந்த தேர்தலினூடாக கூறியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் ஆதரவு என்பது வெற்று காசோலை. ரணில் அதற்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லை.
அவரது இராசதந்திரம் தோல்வியடைந்துவிட்டது. தமிழ் மக்கள் போருக்கு அஞ்சிவிட்டதாகவும் உண்டு உடுத்து வாழ்ந்தால் போதும் என்று வாழ்பவர்கள் தமிழர்கள் என்று மிக இழிவாகத் தமிழர்களைக் கருதியமைக்கான மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மகிந்தருக்கு நாமும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில் நிம்மதியான நேர்த்தியான பிறந்த நாளை மகிந்தர் இனிமேல் கொண்டாட முடியுமா என்பது கேள்விக்குறியான விடயமாக இருக்கிறது. மகிந்தரை நாங்கள் நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை என்பது வேறுவிடயம். சந்திரிகா, அவரது தம்பியார், ஜே.வி.பி, சிங்கள மக்கள் யாருமே அவரை நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை. இந்தத் தேர்தல் முடிவு என்பது 2 தேசியங்களின் முடிவாக இருக்கிறது. தமிழ் மக்கள் வாக்களிக்காமல் இருப்பதன் ஊடாக தங்களது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கிராமப்புற சிங்கள மக்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவர்கள் அபிலாசைகளை வாக்களித்து வெளிப்படுத்தி உள்ளார்கள். மகிந்தர் இப்போது அனைத்துக்குமான வாய்ப்புகளைத் திறந்து விட்டிருக்கிறார். பேரினவாத பூதத்தை, ஒற்றையாட்சி எதிர்ப்பு கோசத்தை, அடிப்படைவாத ஆதரவு நிலைப்பாட்டை பௌத்த பிற்போக்குத் தனத்தை, போருக்கான வாய்ப்பை அனைத்து மோசமான நிலைகளுக்குமான வாய்ப்புக்களை மகிந்தர் திறந்துவிட்டிருக்கிறார். தமிழ் மக்களோ அமைதியாக வாக்களிக்காமல் இருந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். தேசியத் தலைவரின் சென்ற வருட மாவீரர் நாள் உரையிலேயே சர்வதேச சமூகத்துக்கான செய்தி வெளிப்படையாக வந்திருக்கிறது.
சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சகதிக்குள் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புக்களும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக் கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடக்கு-கிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை என்று கூறியிருக்கிறார். இதை நாம் நீண்டகாலமாக சர்வதேச சமூகத்துக்குச் கூறிவருகிறோம். இதைக் கூறுவதற்காக போரை இடை நிறுத்தினோம்.
அப்போது சர்வதேச சமூகம் என்ன கூறியது? ஒரு வாய்ப்பை எங்களுக்குத் தாருங்கள். நிச்சயமாக சிங்கள மக்களுடன் இணைந்து ஒரு தீர்வைத் தருவார்கள். ஒரு இடைப்பட்ட தீர்வை பக்குவமாக முன் வைப்போம் என்றார்கள். ஆனால் அவர்களின் இந்தக் கருத்துக்களுக்கு எதிராகவே சிங்கள மக்கள் வாக்களித்துள்ளார். நார்வேக்காக நாங்கள் உண்மையிலேயே பரிதாப்படுகிறோம். நார்வேயின் நல்ல நோக்கம் இவ்வளவு மோசமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் போல் மூன்றாம் தரப்பாக உள்வந்து சிங்களத்துக்கு ஆதரவாக ஒருதரப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிங்களம் முயற்சிக்கும் என்பதில் சர்வதேச சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும். சிங்களத்துக்கு தமிழர் உரிமைகளை மறுப்பதற்கும் ஒடுக்குவதற்கும்தான் சர்வதேச சமூகம் தேவை. உரிமைகளைக் கொடுப்பதற்கு அவர்களுக்கு சர்வதேச சமூகம் தேவை இல்லை. இலங்கை இனப்பிரச்சனையில் சர்வதேச சமூகம் தலையிட்டதே திறந்த பொருளாதாரக் கொள்கைக்காகத்தான்.
இந்த அடிப்படையையே சிங்களம் மறுத்திருக்கிற போது சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகிறது? சிங்களத்திலே இருப்பது பௌத்த பேரினவாத அடிப்படை வாதம். இதன் வெளிப்பாடுதான் மகிந்தர். இதற்கு ஒரு அழுத்தத்தை சர்வதேச சமூகம் அளிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு மறதி அதிகம் இல்லை. இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது என்று கடந்த மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த அரசியல் வெறுமை யாரால் உருவாக்கப்பட்டது? ரணிலின் அமைதிப் பேச்சுவார்த்தைகளால்தான் உருவாக்கப்பட்டது. தமிழர்களை அரவணைத்து வாழவும் தயாரில்லை. பிரிந்து செல்ல வாழவிடுவதாகவும் இல்லை. குறுகிய கால சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுத்தால் இறுதியில் நீ சலுகைகளையும் இழந்து விடுவாய் என்பதுதான் ரணிலுக்கு வாக்களிக்காத தமிழ் மக்களின் கருத்து. சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் தமிழ் பேசும் வாக்குகள். இவர் என்ன தமிழரின் பிரதிநிதியா? எங்களுடைய குரலை ஒலிக்கவா இவர் இருக்கிறார்? அல்லவே. அல்ல. எதற்காக நாங்கள் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும்? 48 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற படுகொலைகள், மிக மோசமான எதிர்ப்பு நடவடிக்கைகள், தமிழ் மக்களைத் திட்டமிட்டு அழித்த அனைத்து சர்வதேச சதி வலைப்பின்னல் தொடர்பான வேதனை எல்லாவற்றுக்கும் நாம் கொடுக்க வேண்டிய தண்டனை என்பது வரலாற்றின் தீர்ப்பாக இருக்கும். நாளாந்த வாழ்க்கைக்கான அற்ப சலுகைகளுக்காக இனத்தின் உரிமைகளை பணயம் வைப்பது என்பது எப்போதும் முடியாது. மற்ற நாடுகளில் போராடுகிற சக்திகளை ஒடுக்குவதற்காக இணைந்து செயற்பட்டு மிக இலாவகமாக ஒடுக்குவார்கள். ஆனால் இங்கே அந்த செயற்பாட்டைக் கூட செய்ய அவர்களால் முடியவில்லை என்பதை அந்த மக்கள் மகிந்தரை வாக்களிப்பினூடாக தெரிவு செய்துள்ளதன் மூலம் நார்வே என்ன செய்ய முடியும்? இனி நார்வே அற்புதங்களையும் மந்திரங்களையும் இங்கே நிகழ்த்த வேண்டும்.
பண்டாவின் அரசியல் வாரிசுகள் இன்று ஒன்று சேர்ந்து செய்யப் போவது என்ன? மிகப் பெரிய அவலமாக மாறப் போகிறது. முரண்பாடுகள் எல்லாம் முற்றி கூர்மையடைந்து வெடிக்கிற போது இந்தத் தீவிலே இரத்த ஆறு ஓடுவது கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. அதைத் தடுக்கும் வலிமை கூட பிரபாகரனிடம்தான் உண்டு. இராணுவத்தில் ஊடுருவல், ஆட்சிக் கவிழ்ப்பு, புரட்சி என்று சிங்கள தேசம் நாசமாகப் போகிறது. அதைத் தடுக்கிற ஆற்றல் எங்களிடம்தான் உள்ளது. ஆகவே பிரபாகரன் வெல்ல வேண்டும் என்று சிங்கள மக்களே விரும்புவார்கள். இதைத்தான் மகிந்தவின் வெற்றி... பிரபாகரனின் வெற்றியின் தொடக்கம் என்று கூறியிருந்தேன் என்றார் க.வே. பாலகுமாரன்.
மிரட்டல் காரணம் அல்ல
சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது, தேர்தலைப் புறக்கணித்தமைக்குக் கடந்த காலப் பட்டறிவும், சிங்களத் தலைவர்கள் மீதும் நம்பிக்கை கொள்வதற்கு இல்லை என்ற தெளிந்த முடிவுமே காரணமாகும். ஆனால் தமிழ் மக்களின் இம்முடிவிற்கு வடக்கு கிழக்கில் தேர்தலில் நடந்த வன்முறைகள், அச்சுறுத்தல்கள் காரணம் என சில அமைப்புக்கள் அபிப்பிராயத்தைத் தோற்றுவிக்கவும் முற்படாமல் இல்லை. இம்முறை தேர்தல் தினத்தன்று வடக்கு கிழக்கில் வன்முறைகள் பெரியளவில் இடம் பெற்றதாகத் தகவல்கள் இல்லை. அதிலும் குறிப்பாக வடக்கில் வன்முறைகள் இடம் பெற்றதான தகவல்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆயினும் மக்கள் வாக்களிக்க வீதிகளில் இறங்கவில்லை என்பதே உண்மையாகும்.
ஏனெனில் மக்கள் தேர்தல் நாளை துக்க நாளாக கடைப்பிடித்திருந்தனர். கடைகள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறவில்லை. மக்கள் வாக்குச் சாவடிகள் பக்கம் தலைகாட்டவே முற்படவில்லை. ஆனால், இது மக்களின் அவசர முடிவல்ல. இம் முடிவை மக்கள் ஏற்கனவே எடுத்திருந்தனர். இதனை வன்முறை மூலமோ அன்றி அச்சுறுத்தல் மூலமோ இடம் பெற்றதாகக் கூறுவது பேரினவாத ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் குறித்து செய்துவந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு ஒப்பானதே.
இது ஒருபுறம் இருக்க அண்மைக் காலத்தில் வடக்குகிழக்கில் நிலவும் சூழ்நிலையை விட படுமோசமான சூழ்நிலையில் பல தேர்தல்கள் இடம் பெற்றுள்ளன. பல சிங்கள அரசுத் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் அவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு அவர்களிடமே ஆட்சியும் அரசாங்கங்களும் ஒப்படைக்கப்பட்டமையுமே வரலாறாகும்.
இதற்கும் அப்பால் வடக்கு-கிழக்கில் கூட தமிழ் மக்களை வாக்களிக்காது தடைசெய்வதற்கு பெரும் முயற்சி செய்யப்பட்ட தேர்தல்களும் நடந்ததுண்டு. ஆனால் தமிழ் மக்கள் அவற்றை மீறி வாக்களித்தோடு தமது சனநாயக உரிமை மூலம் தமது தெளிவான முடிவை அளித்ததும் உண்டு. ஆகையினால், மக்கள் வாக்களிக்க விரும்பினால் அவர்களைத் தடைசெய்வது என்பது சாத்தியபடானதல்ல, அதனை மக்கள் மேற்கொண்டே இருப்பர். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என்பதே யதார்த்த நிலையாகும். தமிழ்மக்களின் ஒட்டுமொத்த முடிவால் தமிழ் இன விரோத குழுக்களும் தேர்தல் மோசடியில் ஈடுபட முடியாது போய்விட்டது என்பதே நிதர்சனமாகும். ஆனால் அதற்காக தமிழ்மக்கள் தமது நிலைப்பாட்டிலேயோ முடிவுகளிலோ மாற்றம் எதுவும் செய்வார்கள் என எதிர்பார்ப்பின் ஏமாற்றமே அடைவார்கள்.
தென்செய்தி டிசம்பர் 16-31 இதழில் வெளியான கட்டுரை
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பிரபாகரன் - வெற்றியின் தொடக்கம்
- விவரங்கள்
- க.வே.பாலகுமாரன்
- பிரிவு: கட்டுரைகள்