euro footballஈரோ கோப்பை கால்பந்து.

இறுதியாட்டம்... இங்கிலாந்தும் & இத்தாலியும் எதிரெதிரே நின்றன..

பகல் 12.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. 67 நிமிடங்கள் கடந்து விட்டன. இரு அணிகளும் 1&1 என்ற கணக்கில் சரிக்குசரியாக நின்றன.

பார்வையாளர்கள் படபடத்தார்கள்...

தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடித்தனர். ஆனால், மற்ற 3 வீரர்களான மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சாங்கோ, சாகா ஆகியோர் அடித்த கோல்களில் ஒருவர் போஸ்ட்டில் அடிக்க மற்ற 2 ஷாட்களையும் இத்தாலி கோல்கீப்பர் டோனாருமா தடுத்துவிட்டார். இதில் இங்கிலாந்து தரப்பில் கோல் அடிக்கத் தவறிய 3 வீரர்களுமே கறுப்பின வீரர்கள்.

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்த 3 கறுப்பின வீரர்களும் காரணமாகி விட்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் நிறவெறி, இனவெறிப் பதிவுகளை இடத் தொடங்கினர். இப்பதிவுகள்தான் தற்போது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த நிறவெறி, இனவெறிப் பதிவுகள் மன்னிக்க முடியாதவை என்று இங்கிலாந்து கால்பந்து அணியின் மேனேஜர் கரேத் சவுத்கேட் தெரிவித்துள்ளார். இவர் மட்டுமல்லாமல் இங்கிலாந்தே இனவெறிக்கு எதிராக கையை உயர்த்தியிருக்கிறது.

விளையாட்டின் வெற்றி தோல்வி சாதாரணமானதுதான். ஆனால் அதனை மையப்படுத்தி இனவெறியைக் கொண்டு வந்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று இங்கிலாந்தின் ஒவ்வொரு குடிமகனும் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் நாடு முழுவதும் தமது சமூக சேவைகளால் அறியப்படும், பிரித்தானிய ராணியாரால் எம்.பி.இ (MBE) பட்டம் பெற்றவருமான மார்கஸ் ரஷ்போர்ட் என்ற வீரரே கடுமையான தாக்குதலுக்கு இலக்கானார்.

அந்த நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுவன் டெக்ஸ்டெர் ரோசியர் என்பவன், தான் ஹீரோவாக கொண்டாடும் மார்கஸ் ரஷ்போர்டுக்காக கைப்பட எழுதிய கடிதம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

"ஆதரவற்றவர்களுக்கு உதவ கடந்த ஆண்டு நீங்கள் என்னை ஊக்கப்படுத்தினீர்கள், பிறகு நேற்று, அனைத்து பழிச்சொல்லையும் மௌனமாக எதிர்கொண்டு நீங்கள் மீண்டும் என்னை பிரமிக்க வைத்துள்ளீர்கள். உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன், நீங்கள் எப்போதுமே எங்களுக்கு ஹீரோதான்" என சிறுவன் குறிப்பிட்டிருந்தான்.

இந்தக் கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல ஊடகவியலாளர் சுஷானா ரெய்ட் கண்ணீர் அடக்க முடியாமல் நேரலையில் தேம்பியுள்ளார். அவருடன் அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இன்னொரு ஊடகவியலாளரும் கண்கலங்கியுள்ளார்.

ஆம் இதுதான் இங்கிலாந்தின் முகம். பெனாலிட்டி ஷாட் கொடுக்கப்பட்டபோது அவர்கள் திறமையானவர்கள் என்பதால்தான் பயிற்சியாளர் கொடுத்தார். அவர்களின் நிறம் அவரது கண்களுக்கோ எங்களது கண்களுக்கோ தெரியவில்லை என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டவர்கள்.

இங்கிலாந்து நாட்டின் கால்பந்தாட்ட அணியின் தலைவனை, இத்தாலியின் கால்பந்தாட்ட தலைவன் கட்டியணைத்து ஆறுதல் சொன்னதும் நீண்டநேரம் அவர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் பாராட்டும், ஆறுதலும் சொல்லிக்கொண்டதும் உலகையே பாசம் என்னும் கயிற்றினால் கட்டிப்போட்டது.

இதுதான் நம் உலகம். அரசியல் அமைப்பு காரணங்களுக்காகத்தான் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறதே தவிர அன்பிற்கும் மனிதாபிமானத்திற்கும் எல்லைகள் வகுக்க யாராலும் முடியாது என்பதையே அந்தக் காட்சி உணர்த்தி நின்றது.

கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் மக்களின் மனங்களில் அன்பென்னும் கோப்பையை ஏந்தி வானுயர உயர்த்தி நிற்கிறார்கள்.

ஆகவேதான் தந்தை பெரியார் தன்னை, நான் பாஷாபிமானமோ, தேசாபிமானமோ இல்லாதவன், நான் மனிதாபிமானம் கொண்டவன் என்று அறிவித்துக் கொண்டார்.

விளையாட்டை விளையாட்டாக பார்ப்போம். சாதி வெறி, மதவெறி, இனவெறி, மொழிவெறி என அனைத்துமே மனிதாபிமானத்தை அழிக்கும். மனிதம் காப்போம். வெறிகளை தூக்கியெறிவோம்.

- சஞ்சய் சங்கையா

Pin It