உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக கிபி 1528ஆம் ஆண்டில் முகலாய மன்னன் பாபரின் படைத்தளபதி மீர் பாகி என்பவரால் கட்டப்பட்டது என ஒப்புக் கொண்டு விட்டோம். பாபர் மசூதி கட்டப்பட்ட வரலாற்றுக் காலத்தில் எந்த ஒரு கோயிலும் அங்கே இல்லை; கோயில் போன்ற அமைப்பிலான எந்த கட்டடத்தையும் இடித்துக் கட்டப்படவில்லை என ஒப்புக் கொண்டு விட்டோம். மசூதி கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த சீக்கிய குருவான 'குருநானக்'கும், இந்துத்துவாவினரே பேரரசர் எனக் கூறும் அக்பர் காலத்தில் வாழ்ந்தவரும், ராமாயணத்தை இந்தியில் எழுதியவருமான 'துளசிதாசர்' ராமரின் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டதென அக்பரிடம் முறையிட்டதாக கூறாத நிலையினையும் அறிந்தோம்.

yogi adityanath with narendra giri1949 ஆம் ஆண்டு வரையிலும் பாபர் மசூதியில் தொழுகை நடைபெற்றதையும், அநீதியான முறையில் ராமர் சிலை வைக்கப்பட்டதையும் ஒப்புக்கொண்டோம். அப்போது நீதித் துறையின் மீது நம்பிக்கை வைத்து வழக்கு தொடுத்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையினை வெளியே நடத்திக் கொள்ளுங்கள் என நம்பிக்கையூட்டினோம்.

ராமர் கோயிலுக்கான பிரச்சாரங்களை நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்ஸூம், அதன் பரிவாரங்களும் செய்யும்போது அமைதியாக இருந்தோம். வழக்கு நடைபெற்றபோதே, உலக மக்கள் பார்க்கும்போதே பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டதை தவறு என்றோம்.

இவை அனைத்தும் வரலாற்று ரீதியாகவும் ஆதாரங்கள் அடிப்படையிலும் கூறப்பட்டிருந்தாலும், தீர்ப்பு மட்டும் இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், கூட்டு மனச்சாட்சியின் அடிப்படையிலும் வழங்கப்பட்டிருப்பது நியாயமா எனத் தெரியவில்லை!

தீர்ப்பின் மூலம் ஒரு நூற்றாண்டு முழுவதும் கோயிலை இடித்துதான் முஸ்லிம்களின் மசூதி கட்டப்பட்டது என்னும் பழி நீங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் முதல் பாஜக உறுப்பினர்கள் வரை தங்களது தவறினை மடைமாற்ற “தோல்வியும் அல்ல! வெற்றியும் அல்ல” என வார்த்தை பிசகாமல் கூறுகின்றனர். ஆனால் அயோத்தியினை வைத்து காவு வாங்கபட்ட உயிர்களுக்கு நீதம் கிடைக்குமா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து வழக்கினை நடத்தியோர்களுக்கும், ஒட்டுமொத்த இசுலாமிய அமைப்புகளுக்கும் அதிர்ச்சி இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பினை அளிப்பதாகவும், மக்கள் அமைதியினைக் காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் தீர்ப்பினை முன்னமே ஆருடம் கொண்டதைப் போன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து செயல் வடிவங்களையும் விஎச்பியும், அகாரா அமைப்பும் செய்து வந்தது.

தீர்ப்பிற்கு முன்னரே, அனைத்திந்திய அகாரா பரிசத் தலைவர் நரேந்திர கிரி "பாபர் மசூதியைப் போலவே மசூதிகள் கட்ட காசி மற்றும் மதுராவிலும் இன்னும் பிற 3500 கோயில்கள் இடிக்கப்பட்டன. ஆகவே இந்த மசூதிகள் இடிக்கப்பட வேண்டும். இந்தியாவின் சக்திவாய்ந்த பின்புலம் தங்களுக்கு இருப்பதாலும், இந்துக்களுக்கு ஆதரவான அரசாங்கம் உத்தரப் பிரதேசத்திலும் மத்தியிலும் இருப்பதால், இரட்டை நோக்கங்களை அடைவதில் எந்த சிக்கலும் இருக்கக்கூடாது" எனக் கூறியுள்ளதை நினைவில் கொள்க!!! மேலும் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக காசி மற்றும் மதுரா மீதான தங்களுடைய உரிமையை முசுலிம்கள் விட்டுத் தர வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு வெளியாகிக் கொண்டிருக்கும் 9/11/2019 மதிய வேளையில் பாஜகவின் சுப்பிரமணியசாமி "அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது" என்றார். இந்து முண்ணணி ராமகோபாலனோ "எங்களின் அடுத்த இலக்கு உத்திர காசி" என பத்திரிக்கையாளருக்கு கொடுத்த பேட்டியில் கூறுகின்றார்.

ஆக நூற்றாண்டு காலமான அயோத்தி பிரச்சினையுடன் ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் ஆட்டம் முடிந்துவிட்டது எனக் கருதிட வேண்டாம். அவர்கள் இந்து - முஸ்லிம் பிரச்சினைகளை வைத்தே தங்களது அரசியலை நடத்தி வருகின்றனர். இது இல்லையென்றால் அவர்களுக்கு ஏது பிழைப்பு? பாபரியோடு முடிந்து விடாது... இன்னும் காசியும் - மதுராவும் - 3500 பள்ளிவாசல்களும் அவர்களின் பட்டியலில் உண்டு. அதனை வைத்தே மீதமுள்ள காலத்தினை ஓட்டிடுவர்.

- நவாஸ்

Pin It