அரசு மருத்துவர்களின் போராட்டமும், கோரிக்கைகளும்...
1) அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்புகளில் ஏற்கெனவே இருந்த 50% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்!
என்ற நிபந்தனையை நீட் தேர்விற்கு தமிழகத்தில் அனுமதி வழங்கிய பின்பு, தமிழக அரசு பின்பற்றவில்லை. இந்த இடஒதுக்கீட்டில் படிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் கிராமப்புறத்தில் மருத்துவராக வேலை செய்திருக்க வேண்டும் என்பதும், அரசுப் பணியில் சேர்ந்துவிட்டு இடையில் விருப்ப ஓய்வு பெற்று வேறு வேலைக்கும் போக முடியாது என்பதும் முக்கியமான நிபந்தனை. இதனால் மக்கள் வரிப்பணத்தில் படித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யவும், தங்களின் அனுபவத்தின் மூலம் சிறந்த மருத்துவத்தை கிராமப்புற மக்களுக்கும் கொடுப்பதற்கும் வாய்ப்பாக இருந்தது.
முதுநிலை மருத்துவக் கல்வியில் 50% இடஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மருத்துவர்களுக்கானது மட்டுமல்ல; அது மக்களுக்கானதும்கூட.
2) முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தி, அதன் அடிப்படையில் மீண்டும் பணியிடம் வழங்க வேண்டும்.
கடந்த காலத்தில் முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தி, பணியிடங்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக, மருத்துவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், அவர்கள் சேவையிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள், குடும்ப நலனிலும் அக்கறை காட்டினார்கள். இப்போது கலந்தாய்வு முறையை ரத்துசெய்துவிட்டு, நேரடியாக உத்தரவு அடிப்படையில் பணியமர்த்துவது ஊழல் முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கிறது, குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாத சூழலும் ஏற்படுகிறது
3) நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிப்பது ஆபத்தானது. சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் மருத்துவர்களைக் குறைப்பதால், நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மருத்துவர்களும் 300 முதல் 400க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நடவடிக்கை இரு தரப்புக்குமே கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
4) காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பல மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களையும், மத்திய அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களையும் ஒப்பிடும்போது, தமிழக அரசு மருத்துவர்கள் குறைவான ஊதியத்தையே பெற்று வருகின்றனர்.
MBBS படித்த மருத்துவர்கள் மத்திய, மாநில அரசுப் பணியில் சேரும்போது ₹51,600/- ஒரே அடிப்படை ஊதியத்தையே பெறுகின்றனர். ஆனால், பணியில் சேர்ந்த 14-ம் ஆண்டில் மத்திய அரசு மருத்துவரின் ஊதியம் ₹1,40,000/-. மாநில அரசின் மருத்துவர்களுக்கு இந்த சம்பளத்தைப் பெற 20 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
அதே நேரத்தில் நம்ம தெர்மாகோல் விஞ்ஞானிகள் பதவியேற்றது முதலே ₹1.15 லட்சத்துடன் பல சலுகைகளையும் பெறுகிறார்கள்.
மருத்துவத் துறையை மேம்படுத்த வேண்டும் என்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது ஜிடிபியில் 1.04% மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது.
இதனால்தான், மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க முடியவில்லை, மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த முடியவில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையாக கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்குகிறார்கள். வாராக்கடன் எனும் பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்கிறார்கள்.
ஆக, அரசிடம் நிதி இல்லை என்றால்... MLA, MP அமைச்சர்கள் போன்ற வேலைகளுக்கும் ₹20,000 சம்பளத்தில் வேலை செய்ய M.COM, M.SC, M.PHILL,PHD, MBA படித்த இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். டாஸ்மாக்கில் சரக்கு ஊற்றிக் கொடுப்பதை விட இந்த வேலை மதிப்பு மிக்கது தானே!
போராடும் மருத்துவர்களின் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ₹310/- கோடி தான் செலவாகும். தீபாவளி டாஸ்மாக் விற்பனை மூன்று நாளில் மட்டும் 480/-கோடி. இலக்கு வைத்து விற்கும் அரசு, மக்களின் நலனிலும் இலக்கு வைக்கலாமே...!
தமிழக மருத்துவர்கள் தற்போது பணியில் சேர்ந்த 20-ம் ஆண்டில் பெறும் ஊதியத்தை 12-ம் ஆண்டிலேயே வழங்கலாம் என 2009-ம் ஆண்டு எட்டப்பட்ட தமிழக அரசின் அரசாணை எண் 354-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அனைத்து மருத்துவர்களுக்கும் நிறைவேற்றாமல் விட்டதுதான் இந்தப் போராட்டத்துக்கு வழிவகுத்து விட்டது. இது அவர்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டமாகும். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
“அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அங்கீகாரம் பெறாத அமைப்பு. எனவே, அந்த அமைப்புடன் பேச முடியாது” என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது, அம்மையார் ஜெயாவின் அடிப்பொடி தான் என்பதை நினைவூட்டுவதாக இருக்கிறது.
இதே அமைச்சர், கடந்த ஆகஸ்ட் 27 அன்று இதே கூட்டமைப்பை அழைத்துப் பேசினார். ஆறு வாரங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கினார். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டாக்டர் செந்தில்ராஜ் ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தார்கள்.
கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பணிமாறுதல் செய்வது, டிஸ்மிஸ் செய்து விடுவதாக மிரட்டுவதைப் பார்க்கும் போது காலஞ்சென்ற அம்மையார் சாலைப்பணியாளர்களை, மக்கள் நலப்பணியாளர்களை ஒரே இரவில் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியதையும் நினைவுபடுத்துகிறார் போலும்...
இருந்தாலும் இந்தத் தைரியம் எடப்பாடி அரசுக்கு வருவதற்குக் காரணமே இந்த அரசு அலுவலர்களின் சுயநலமான போராட்ட அணுகுமுறை தான். ஒவ்வொரு அரசுத்துறை அலுவலர்களும், தனித்தனியாக வடிவேல் வசனத்தில் சொல்வதானால், அவர்களுக்கு வந்தால் தான் ரத்தம், அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி என்ற பாராமுகத்துடன் இருப்பதுடன், அரசின் / அரசாங்கத்தின் எஜமானர்களான பொதுமக்களிடம் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி ஒரு நாளும் விளக்கிக் கூறாமல் மக்களின் ஏஜெண்டுகளிடம் பேரம் பேசுவதும் தான்.
இனிமேலாவது மக்களுடன் இணைந்து போராட அரசு அலுவலர்கள் முன்வர வேண்டும் அப்போது தான் கார்ப்பரேட் கைக்கூலிகளை தூக்கியெறிந்து மக்கள் நல அரசை அமைக்க முடியும்.
தகவல் உதவி:
ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.
தொடர்புக்கு:
நன்றி: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா-சிவகங்கை
- தருமர், திருப்பூர்