ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத் திகழ்ந்த காரணத்தினால் சாமியார்கள் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது. அவ்வெறுப்புக்குள் உட்பட்டே ஓசோவும் என் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

கல்லூரி முடிந்து ஒரு பத்திரிகை நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியபோது என்னோடு இணைந்து 'புதிய பயணம்' என்னும் மாத இதழை நடத்திய ஜெகன் தான் முதன்முதலில் ஓஷோவை முறைப்படி அறிமுகப்படுத்தினான். முதன்முதலில் படித்த ஓஷோ நூல், 'இப்போதே பரவசம், ஏன் காத்திருக்கிறீர்கள்?'. பெரியாரைத் தொடர்ச்சியாக வாசிக்கும் யாரையும் ஓசோ ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை.

ஓஷோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள் குறித்து ஒருநூல் எழுதும் எண்ணமிருப்பதால் ஓஷோவைச் சமீப காலங்களில் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தபோது கவனத்திற்குட்பட்ட சில விசயங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென்று தோன்றுகிறது.

பெரியாரும் ஓசோவும் சிறுபிராயத்திலிருந்தே கலகக்காரராக விளங்கியவர்கள். ஓஷோ சிறுவனாக இருந்தபோது ஒரு விருந்தினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒரு வயதானவரின் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு ஓஷோவின் வீட்டில் பணித்திருக்கிறார்கள். ஆனால் ஓசோவோ ஏன் அவர் காலில் விழ வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 'அவர் வயதானவர், அதனால் காலில் விழவேண்டும்' என்றிருக்கிறார்கள்.

'வயதானவர் என்றால் ஏன் காலில் விழவேண்டும், ஏன் தலையைத் தொடக்கூடாது? நம் வீட்டிற்கு எதிரில் கட்டப்பட்டிருக்கும் யானைக்கு இவரை விட வயது அதிகமிருக்குமே, ஏன் நாம் யானையின் காலில் விழுவதில்லை?' என்று கேட்டிருக்கிறார் பாலக ஓஷோ. பெரியாரின் சிறுவயதுக் கலகச்செயற்பாடுகள் பலரும் அறிந்ததுதான்.

அதேபோல் ஓஷோவிடமிடம் பெரியாரிடமும் தொழிற்படும் தர்க்கங்கள் அலாதியானவை. பிறந்த நேரம் கணிப்பது குறித்துப் பெரியார் கேட்பார், 'பிறந்த நேரம் என்றால் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நேரமா, தலை முதலில் வந்த நேரமா, முழு உடலும் வெளிவந்த நேரமா, அப்போது டாக்டர் பார்க்கும் நேரமா, மருத்துவமனைக்கு வெளியிலுள்ள கடிகாரத்தின் நேரமா, உலகத்திலுள்ள அனைத்துக் கடிகாரங்களும் ஒரேநேரத்தைக் காட்டுமா?' என்று.

ஓஷோவும் இப்படியான தர்க்கங்களை அடுக்கிக்காட்டுவதில் வல்லவர். சொர்க்கம் என்பது பிளாஸ்டிக்காலானதாகத்தானிருக்கும் என்னும் ஓஷோ, ஏனெனில் அங்கு துன்பமே இல்லை, ஒரே இன்பம்தானெனில் ஒரேநாளில் சொர்க்கம் போரடித்துப் போகுமென்பார். அங்கு முதல்நாள் மட்டும்தான் செய்தித்தாள் அச்சடிக்கப்பட்டிருக்கும். கொலை, கொள்ளை, பாலியல்பலாத்காரம் இல்லாத நியூஸ்பேப்பர் எதற்கு?

மதவாதிகள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் பெரியாரும் ஓஷோவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதுவும் ஓஷோ தான் பிறந்த ஜைனமதத்தின் போலித்தனமான செயற்பாடுகள் குறித்தும் ஜைனமுனிவர்களின் உடலொடுக்கும் தன்மை குறித்தும் பகிடிசெய்தார். பெரிரார் கடவுளை மறுத்தாரெனில் ஓஷோவோ 'கடவுள் இறந்துவிட்டார், ஜென்னே வாழ்கிறது' என்றார்.

அதேபோல் ஓஷோவின் வாசிப்பு நினைத்துப் பார்க்க முடியாதளவு அபாரமானது. தத்துவஞானிகள், தீர்க்கதரிசிகள் , அரசியலாளர்கள் என அனைவர் குறித்தும் போகிறபோக்கில் விவரித்துச் செல்வார். பெரியாரை ஓஷோ அறிந்திருந்தால் நிச்சயமாகக் கொண்டாடியிருப்பார் என்பதில் அய்யமில்லை.

கற்பு, கலாச்சாரம், குடும்ப நிறுவனம், குழந்தைப்பேறு ஆகிய அம்சங்களிலும் ஓஷோ மற்றும் பெரியாரின் சிந்தனைகள் பல சமயங்களில் இணையாகப் பயணிக்கின்றன.

இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர். முற்பிறவி, கர்மா, விதி ஆகிய கருத்தாக்கங்கள் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாரிய விளைவுகள் குறித்து உரையாடுகின்றனர். திருமண முறையை மறுத்து ஆண் - பெண்ணுக்கிடையில் தோழமை உறவை வலியுறுத்துகிறார் ஓஷோ. பெரியாரும் 'திருமணம் என்பது கிரிமினல் குற்றம்' என்கிறார்.

ஆனால் ஓஷோ மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களை ஏற்றுக் கொள்ளாததோடு காத்திரமான விமர்சனங்களையும் முன்வைத்தார். பெண்ணிய இயக்கங்கள் பெண்களை ஆண்களாக மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன என்றார். ஆணை விடப் பெண்ணே உயர்ந்தவள் என்ற ஓஷோ ஆனால் பெண்னிய இயக்கங்கள் பெண்களை ஆண்களைப் போல மாற்ற முயற்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது, ஆண்தான் பெண்னிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்றார்.

இத்தகைய விமர்சனங்களின் பின்னணியில் பெரியாரின் சிந்தனைகள் குறித்தும் கூட நாம் கேள்விகளை எழுப்பலாம். ஏனெனில் பெரியார் பெண்களை ஆண்களைப் போல உடையணியச்சொன்னவர், இருவருக்கும் பொதுப்பெயர்களை இடச்சொன்னவர். கிராப் வெட்டிக் கொள்ளச் சொன்னவர். இதுவெல்லாம் கால மாற்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை கட்டவோ வளையல் அணியவோ தயாராயில்லை.

குறிப்புகள் :

1. ஆனால் ஓசோ மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களின் மீது முன்வைக்கும் விமர்சனங்களை அப்படியே நாம் இந்தியச்சூழலில் பொருத்திப் பார்க்கமுடியாது. இங்கு பெண்ணிய இயக்கங்களில் பார்ப்பனப் பெண்களே அதிகமும் தலைமையைக் கைப்பற்றியதால், பார்ப்பனீய - ஆணிய மதிப்பீடுகளுக்கேற்றவாறான பெண்களை 'உருவாக்கி'த் தருவதில் தங்களையறியாமலே வினையாற்றினர். தமிழ்ச்சூழலிலோ ஓவியா, சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தியப் பெண்கள் இவர்களையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் பெண்ணிய இயக்கமெல்லாம் ஒன்றுமில்லை. வரதட்சணை, கற்பழிப்பு எதிர்ப்பு ஆகியவற்றைத் தாண்டாத இடதுசாரிப் பெண்ணிய அமைப்புகளும், தயிர்சாதத் தயாரிப்புகளான மங்கையர்மலர், அவள்விகடன் வாசகர்வட்டங்கள்தானிருக்கின்றன.

2. கடைசிப் பத்தியில் உள்ள பெரியாரின் மீதான கேள்விகளைத் தயவுசெய்து தட்டையாக அணுகவேண்டாம். ஏனெனில் பெரியார் அடையாளங்களைக் கடப்பதற்காகவே - 'ஆண்மை', 'பெண்மை' ஒழிவதற்காவே அத்தகைய முன்வைப்புகளை முன்வைத்தார். குறிப்பாக உடை விசயத்தில் பெண்களுக்கு மிகவும் சவுகரியமானதும் ஆபத்தில்லாததும் சுடிதார், பேண்ட் - சட்டை மாதிரியான உடைகளே. சுனாமியின் போது நிறையப் பெண்கள் ஓடமுடியாமல் சேலை தடுக்கியும் நீண்ட கூந்தல் மரக்கிளைகள் மாட்டியும் இறந்துபோனார்கள் என்னும் எதார்த்தநிலைமைகளையும் கணக்கிலெடுக்கவேண்டும். என்றபோதும் வேறுமாதிரியும் உரையாடிப் பார்க்கலாமே.

- சுகுணா திவாகர்

Pin It