ops eps ramadossதேர்தல் களத்தில் கூட்டணி பேரத்துக்காக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளோடு பிணைந்து நிற்கும் இடஒதுக்கீடு கொள்கை பகடைக்காயாக்கப்படுகிறது.

தமிழகத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவசர அவசரமாக வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்து விவாதங்கள் ஏதுமின்றி (எதிர் கட்சிகள் அவையில் இடம் பெறவில்லை) நிறைவேற்றியிருக்கிறார்.

அடுத்த நாளே பா.ம.க.வுடன் இழுபறியாக இருந்து வந்த அ.தி.மு.க. கூட்டணி பேரம் முடிவுக்கு வந்து விட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம்; சீர் மரபினருக்கு 7 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என்று பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒதுக்கீடு எண்ணிக்கைகளுக்கு பின்பற்றப்பட்ட அளவுகோல் என்ன என்பது அடிப்படையான கேள்வி. ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு; கல்வி, அரசுப் பணிகளில் குறிப்பிட்ட ஜாதி பெற்றுள்ள பிரதிநிதித்துவம் குறித்த விவரங்கள் ஏதுமின்றி அவசர கோலத்தில் தேர்தல் அரசியலுக்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை புறக்கணித்து விட முடியாது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களே இது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான குழுவை நியமித்திருக்கிறார். அந்தக் குழுவின் பணி இன்னும் முடிவடையவில்லை.

அதன் காரணமாகவே இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் எதிர்காலத்தில் மாற்றங்கள் வரும் வாய்ப்புகள் உண்டு என்று முதலமைச்சர் பழனிச்சாமியே சட்டசபையில் அறிவிக்க வேண்டிய நிலை.

தற்போதுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதப் பிரிவே பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீடுதான். 1989இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரது முயற்சியால் உருவாக்கப்பட்டது.

இந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவுக்கு அடிப்படையாக ஜே.ஏ. அம்பா சங்கர் தலைமையில் 1982இல் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. 1985 வரை 4 ஆண்டுகள் பணியாற்றிய இந்த ஆணையம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை வரையறுத்தது.

அவர்களின் மக்கள் தொகையும் சீர் மரபினர் என்ற சமூகப் பிரிவினரையும் சேர்த்து மக்கள் தொகையில் 24.65 சதவீதம் என கண்டறிந்தது. 31 ஆண்டுகளுக்கு முன்பு அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே இப்போது ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது மற்றொரு கேள்வி! இதைவிட முக்கியப் பிரச்சினையை கருதிப் பார்க்க வேண்டும்.

வன்னியர் சீர் மரபினர் சமூகத்தைவிட மிகவும் கீழ் நிலையிலுள்ள போயர், ஒட்டர், குயவர், வண்ணார், நாவிதர், குருவிக்காரர், புள்ளான் வேட்டுவ கவுண்டர், வேட்டைக்காரர் போன்ற 41 வகுப்பினருக்கு ஒரு கிராமப் பஞ்சாயத்து உறுப்பினராகக் கூட முடியாத நிலையிலும் கல்வி - அரசுப் பணிகளில் யாராவது இருக்கிறார்களா என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலையிலும்தான் இந்த சமூகத்தினர் இருக்கிறார்கள்.

இந்த பிரிவினருக்கு 2.5 சதவீத ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குரலற்ற மக்களாக வாழும் இவர்களுக்கு தமிழ்நாட்டில் சமூக நீதிக் களத்தில் குரல் கொடுக்க வலிமையான தலைமையும் இல்லை; சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இல்லை.

சம வாய்ப்புகளைப் பகிர்ந்தளிப்பதுதான் சமூகநீதியின் அடிப்படைக் கோட்பாடு. மாறாக, ஜாதிக்கான அரசியல் அணி திரட்டல் எனும் நோக்கமாக அது மாற்றப்படும்போது சமூகநீதியின் கண்ணோட்டமே திசை திருப்பப்பட்டு விடுகிறது.

ஏற்கனவே சட்டப்படி அமுலில் உள்ள இடஒதுக்கீடுகளே முழுமையாக நிறைவேற்றப்படுவதும் இல்லை. மத்திய அரசின் கல்வி மற்றும் அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீடானாலும் பட்டியல் இனப் பிரிவின் 22.5 சதவீத இடஒதுக்கீடானாலும் பாதியளவுகூட நிறைவேற்றப்படவில்லை.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதன் வழியாகவும் தமிழக அரசே காலியான அரசுப் பணிகளின் இடங்களில் ‘கான்ட்ராக்ட்’, ‘அவுட்சோர்சிங்’ அடிப்படையில் பணியாளர்களை நிரப்புவதாலும் இடஒதுக்கீடு பறி போகிறது.

அகில இந்திய மருத்துவ கோட்டாவில் இந்த ஆண்டு 3000 பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை வழங்க, மோடி ஆட்சி மறுத்துவிட்டது. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் மத்திய அரசின் நிதி உதவி பெறுவதாலேயே உயர் பட்டப்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக் கூடாது;

27 சதவீதம் மட்டுமே அமுல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. ஆட்சி கட்டாயப்படுத்துகிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சென்னை, கான்பூர், கரக்பூர் ஆகிய அய்ந்து அய்.அய்.டி. நிறுவனங்களில் இடஒதுக்கீடு நிரப்பப்படுவதே இல்லை. (இது குறித்து விரிவான செய்தி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது).

‘நீட்’ தேர்வின் பாதிப்பு; தமிழ் தெரியாதவர்களும் தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, அரசு தேர்வாணைய விதிகளில் கொண்டு வந்த திருத்தம். தமிழ்நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களான நெய்வேலி, ஆவடி தொழில்சாலைகளில் தமிழர்களைப் புறக்கணித்து வடநாட்டுக்காரர்களைக் கொண்டு வந்து திணிக்கும் போக்கு இவைகளால் தமிழர் வேலைவாய்ப்பும் சமூக நீதியும் குலைந்து போய் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களே இது பற்றி தொடர்ந்து அறிக்கைகள் வழியாக அம்பலப்படுத்தியவர் தான். இந்த நிலையில் காகிதங்களில் வெறும் எண்களை மட்டும் எழுதி, சட்டமாக்கிக் கொண்டு, வெற்றிப் பறை கொட்டுவதில் எந்த நியாயமும் இல்லை. உள் ஒதுக்கீட்டின் நியாயங்களை நாம் உறுதியாக ஆதரிக்கிறோம்.

அதே நேரத்தில் இடஒதுக்கீட்டையே உறுதிப்படுத்தாமல் உள் ஒதுக்கீட்டை வைத்திருப்பதால் கிடைக்கப் போகும் பயன் சமூக நீதிக்கா அல்லது தேர்தல் அரசியலுக்கான ஜாதிய அணி திரட்டலுக்கா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

 

Pin It