காவல்துறை என்றால் கடமையும், கண்ணியமும், நேர்மையும் நிறைந்த மனிதர்கள் இருக்கும் துறை; அவர்கள் நாட்டில் நடக்கும் அநியாயங்களை யாருக்கும் அஞ்சாமல் தீரத்துடன் தட்டிக் கேட்பவர்கள் என்ற பொதுவான சிந்தனை சாமானிய மக்களுக்கு உள்ளது. இப்படிப்பட்ட கருமம் பிடித்த சிந்தனையை சமூகத்தில் விதைத்ததில் தமிழ் சினிமாக்களுக்கு பெரிய பங்குள்ளது. அதைப் பார்த்து கெட்டுப் போன குழந்தைகள், ஆரம்பத்தில் திருடன் போலீஸ் விளையாடுவார்கள். அதில் திருடனை போலீஸாக இருக்கும் குழந்தை துரத்திப் பிடிக்கும். பின்னர் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஏற்கெனவே போலீஸைப் பற்றி உருவாக்கி வைத்திருந்த சிந்தனையில் ஈறு, பேன் எல்லாம் பிடித்து முற்றிப் போய் 'போலீசாவதே தன்னுடைய வாழ்வின் இலட்சியம்' என்று அதற்காக மெனக்கெட்டு போராடி, எப்படியோ எல்லாவற்றையும் ‘சரிக்கட்டி’ வேலையில் சேர்ந்து விடுவார்கள்.

police atrocity 636சேர்ந்த பின்னால்தான் தெரியும், திரைப்படத்தில் வரும் காவல்துறை வேறு, நிஜத்தில் உள்ள காவல்துறை வேறு என்பது. வேறு எந்தத் துறையைக் காட்டிலும் இங்கு மிரட்டி பணம் பறிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு முன்சீப்போ, தாசில்தாரோ பணம் கொடுக்கவில்லை என்றால், உங்கள் வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே போவார்கள். ஒரு கட்டத்தில் நீங்களே அலுத்துப் போய் கேட்ட பணத்தைக் கொடுத்து வேலையை முடித்துக் கொள்வீர்கள். ஆனால் காவல்நிலையத்தில் நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்று சொன்னால், உங்களை நாயைவிடக் கேவலமாக நடத்துவதோடு, எதிர்தரப்பிடம் பணம் வாங்கிக் கொண்டு உங்கள் மீதே வழக்கு போடுவார்கள். எதிர்த்துக் கேட்டால் எலும்பை உடைப்பார்கள். உங்களுக்கு மிகப்பெரிய அரசியல் பலம் இல்லை என்றால், உங்கள் வாழ்க்கை அத்தோடு முடிந்தது என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். வீட்டில் வளர்க்கும் நாய்கள் கூட தனக்கு உணவளிப்பவர்களுக்கு விசுவாசமாக இருக்கும். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஏவல் நாய்கள் தனக்கு சம்பளம் கொடுக்கும் அரசுக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள்; அந்த அரசுக்கு வரிகட்டும் மக்களுக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.

இத்தகு நிலைதான் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் நீக்கமற நிறைந்து இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறைக்கு புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் ஒழுக்கத்தையும், நேர்மையும் கற்றுக் கொள்வதை விட அதிகாரத் திமிரையும், ரவுடித்தனத்தையும், அடியாள்தனத்தையுமே கற்றுக் கொள்கின்றார்கள். அதனால் பணிக்குச் சேர்ந்து சில ஆண்டுகளில் சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கச் சென்ற அந்த நேர்மையான காவலர்கள் சாராயக்கடை வாசலிலும், சாலை ஓரங்களிலும் நின்று கொண்டு வழிப்பறி செய்பவர்களாகவும், காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகவும், இன்னும் காவல்நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு வழக்கையும் வழக்கின் தன்மையைப் பொருத்தும், புகார் கொடுக்க வரும் நபரின் செல்வாக்கைப் பொருத்தும் பணம் கறப்பவர்களாகவும் மாறி விடுகின்றார்கள். சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள் குடும்பத்திடமும், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திடமும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குடும்பத்திடமும் கூட இரக்கமே இல்லாமல் பணம் பறிக்கும் பேர்வழிகளாக மாறிவிடுகின்றார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான காவல் புலிகள் வீட்டில் இருந்து கிளம்பும்போதே ‘இன்னைக்கு எவன் தாலியை அறுத்து பணம் பறிக்கலாம்’ என்ற உயரிய சிந்தனையில் தான் வேலைக்கே செல்கின்றார்கள்.

இப்படி அடித்து உதைத்து பணம் பறிப்பது எல்லாம் போதாமல் தமிழக காவல்துறை அடுத்து கட்டத்திற்கு தற்போது சென்றிருக்கின்றது. அப்படி தமிழக காவல்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்ற ஒரு காவலர்தான் நம்ம பார்த்திபன் அவர்கள். அவர் அநீதிக்கு எதிராக நிகழ்த்திய பல திருப்பங்கள் நிறைந்த சாகசக் கதையை நாம் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்.

சென்னை என்.எஸ்.கே.நகர் 2 வது தெருவில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறையை(100க்கு) தொடர்பு கொண்ட பெண் ஒருவர், மர்ம நபர் ஒருவர் தன்னுடைய பணம் இருந்த பர்சைத் திருடி விட்டதாகவும், அந்த நபரை தாம் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார். ஒரு கேஸ் கிடைக்குமே என்ற நம்பிக்கையில் அங்கு சென்ற ரோந்து போலீசார் அங்கிருந்த இருவரையும் அமைந்தகரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அந்த நபர் தான் திருடன் இல்லை என்றும், தம்மை அந்தப் பெண் பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும், பின்னர் திடீரென வீட்டிற்குள் நுழைந்த ஒரு காவலர் தம்மிடம் இருந்த பணத்தை எல்லாம் பறித்துச் சென்றதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் பார்த்திபன் என்பவரோடு பலமுறை பேசியுள்ளதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண்ணை வைத்து பார்த்திபன் பல வருடங்களாக பாலியல் தொழில் செய்து வந்ததும், அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ரெய்டு வருவது போல சென்று பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்காக என்.எஸ்.கே.நகரில், ஜெயந்தி என்ற அந்தப் பெண்ணிற்கு பார்த்திபன் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து இருந்திருக்கின்றார். அந்தப் பெண் வெளியிடங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்களை தமது வீட்டுக்கு அழைப்பார். அப்படி யாராவது வாடிக்கையாளர் கிடைத்தால், அது குறித்து உடனே தலைமைக் காவலர் பார்த்திபனுக்கும் தகவல் கொடுத்துவிடுவார். பின்னர் வாடிக்கையாளர் அந்தப் பெண்ணுடன் இருக்கும்போது அங்கு ரெய்டுக்கு செல்வது போல செல்லும் தலைமைக் காவலர் பார்த்திபன், அந்த நபர்களிடம் ‘பணம் கொடுக்கவில்லை என்றால் கைது செய்து விடுவேன்’ என்று மிரட்டி, அவர்கள் வைத்திருக்கும் மொத்தப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு விட்டுவிடுவார்.

சம்பவத்தன்று விஸ்வநாதன் என்ற ஒரு வாடிக்கையாளரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் ஜெயந்தி. அவர் தனக்கு 1200 ரூபாய் வேண்டும் என விஸ்வநாதனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் 900 ரூபாய் மட்டுமே உள்ளதாக சொல்லியிருக்கின்றார். இதனால் ஜெயந்திக்கும் விஸ்வநாதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயந்தி பார்த்திபனுக்குப் போன் செய்து வழக்கம்போல் அழைத்துள்ளார். இதற்காகவே காத்துக் கொண்டிருந்த பார்த்திபன், அங்கு சென்று விஸ்வநாதனிடம் இருந்த 900 ரூபாய் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு, பின்னர் விஸ்வநாதனின் மோட்டார் சைக்கிளையும் பிடுங்கி வைத்துக்கொண்டு, கூடுதல் பணத்தை எடுத்து வர வேண்டும் என ஜெயந்தியுடன் சேர்ந்து விஸ்வநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பார்த்திபன் சென்ற பின்னர் மீண்டும் ஜெயந்தியிடம் விஸ்வநாதன் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயந்தி விஸ்வநாதனைத் திருடன் போல சித்தரித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கொடுத்திருக்கின்றார். அதன் பிறகு தான் நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த சம்பவம் வெளியே தெரிய வந்திருக்கின்றது.

இதையடுத்து அந்தப் பெண் மீது விபச்சாரம், கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள். மேலும் பெண்ணை வைத்து விபச்சாரம் செய்த தலைமைக் காவலர் பார்த்திபன் மீதும் கூட்டு சேர்ந்து விபச்சாரம் செய்தல், வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் தலைமைக் காவலர் பார்த்திபன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகின்றது. தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றார்.

தமிழ்நாட்டில் இது போன்ற பல பார்த்திபன்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பிராத்தல் தொழில் மட்டுமல்லாமல், கஞ்சா வியாபாரிகளுடன் கூட்டு, சாராய வியாபாரிகளுடன் கூட்டு, குட்கா வியாபாரிகளுடன் கூட்டு, மணல் கடத்தல் கும்பலுடன் கூட்டு, ரியல்எஸ்டேட் மாஃபியாக்களுடன் கூட்டு, கந்துவட்டிக் கும்பலுடன் கூட்டு என சமூகத்தை சீரழிக்கும் அனைத்து குற்றக் கும்பல்களுடனும் கைகோர்த்து செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களின் ஆசியுடன் தான் அனைத்தும் குற்றச் சம்பவங்களும் தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு தமிழ்நாட்டு காவல்துறையின் சிறப்பான செயல்பாடே காரணம் என முதல்வர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். அதன் உண்மையான பொருள், இப்படி நடக்கும் அனைத்து அநியாயங்களையும் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் அமைதிப் பூங்காவில் இருக்கும் பிணங்களைப் போல இருக்கின்றார்கள் என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். காவல்துறையினரே பிராத்தல் செய்கின்றார்கள் என்ற செய்தி காவல்துறையை லட்சிய நோக்கோடு பார்க்கும் நபர்களுக்கு கசப்பாகத் தெரியலாம். ஆனால் தமிழ்நாட்டின் காவல்துறை என்பது சீரழிந்து போன ஒரு துறையாகவே செயல்பட்டு வருவதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நமக்கு என்ன அச்சம் என்றால் இனி 100க்கு போன் போட்டு…

- செ.கார்கி

Pin It