துண்டை விரித்து படுப்பதற்கு ஒரு துண்டு நிலம் இல்லாமல் பிளாட்பாரங்களிலும் திண்ணைகளிலும் கடற்கரை மண்ணிலும் பூங்கா பெஞ்சுகளிலும் ஏராளமான ஏழைகள் உடம்பை பேப்பர் மடிப்பாய் சுருட்டி கிடக்கும் நம் தேசத்தில்தான், ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்கள் தொழிலதிபர்களுக்கு தானம் செய்யப்படுகிறது. உழுதுண்டு வாழ நிலம் இல்லாமல் வறுமைக்கு மக்கள் வாக்கப்பட்டு உள்ள தேசத்தில் “சிறப்பு பொருளாதார மண்டலம்” என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கப்படுகிறது.

‘சிறப்பு பொருளாதார மண்டலத்தில்’ (சி.பொ.ம) அமையும் தொழிற்சாலைகளால் ஏற்றுமதி கொழுத்து அன்னிய செலவாணி கையிருப்பு பெருகும் என்று சொல்லப்படுகிறது. இதற்காகத்தான் இந்தியாவில் உள்ள 28 சி.பொ.மண்டலங்களை 300 ஆக உயர்த்த அரசு வரிந்து கட்டி நிற்கிறதாம். இதை அமைக்க வரும் முதலாளிகளுக்கு, எவ்வளவு நிலங்களை வேண்டுமானாலும் கண்சிமிட்டும் நேரத்தில் அரசு கைமாற்றிக் கொண்டிருக்கிறது. யூனிடெக், அதானிங், சஹாரா, டி.எல்ஃஎப், டாட்டா, மகேந்திரா, ஹிந்துஸ்தான் கன்ஸ்டரக்ஷன்ஸ், அம்பானி சகோதரர்கள் என பெரும் முதலாளிகள் இம்மண்டலங்களை கைப்பற்ற கடும் ஆர்வம் காட்டுகின்றன. நிலங்கள் கைமாறுவதும் இவர்களுக்குத்தான்.

ஒவ்வொரு பன்துறை சி.பொ.மண்டலம் 10,000 முதல் 30,000 ஏக்கர் (1ஏக்கர்_0.4 ஹெக்டேர்) நிலங்களை வாங்கி கொள்ளும் ஒரு துறை மண்டலமானால் 250 ஏக்கர் நிலங்கள் வரை கேட்கும். இம்மண்டலங்களுக்கு மாநிலங்களின் சிறப்பு சட்டத்தின் மூலம் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. பொது காரியத்திற்காக நிலம் கையகப்படுத்தல் என்ற பழைய விதிபடி அல்லாமல், தனியார் லாபத்திற்காக கையகப்படுத்தப்படுகிறது. நிலம் இழக்கும் விவசாயிக்கு நிலம் மாற்றாக கிடைக்காது. மாற்றிடமோ, மறுவாழ்வு திட்டமோ நிலத்தை இழப்பவர்களுக்கு கிடைக்காது. நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையோ சந்தை விலையில் 10ல் ஒரு பங்கு கூட கிடையாது. தேசிய நெடுஞ்சாலை 8ல் வரும் ஹரியான சி.பொ.மண்டலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சரணாலயத்தை பாதிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதில் முதலாளிகள் முனைப்பு காட்டுவது தேச வளர்ச்சிக்காகவா? இல்லை. இதனால் தங்கள் தொழிற்சாலைகளுக்கு கிடைக்கப்போகும் 10 ஆண்டுகளுக்கான வரிவிலக்கிற்காகதான். வரி விதிப்பு, வணிக செயல்பாடுகள் ஆகியவற்றை பொருத்தவரை, இம்மண்டலங்கள் “அன்னிய பகுதிகள்” என கருதப்பட்ட ஏராளமான சலுகைகள் நீட்டிக்கப்படும் இதில் 100% அன்னிய மூலதனம் அனுமதிக்கப்படும். ஈட்டும் லாபம் முழுவதையும் அன்னிய முதலீட்டாளர்கள் தடயம் தெரியாமல் அப்படியே வாரிபோகலாம். இம்மண்டலங்களில் தொழலாளர் நலச்சட்டங்கள் ஒன்றுக்கு கூட இடமில்லை. இம்மண்டலங்களில் அமையும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் “இறக்குமதி தீர்வை சலுகை மற்றும் வரி சலுகையால் அரசுக்கு இழப்ப ரூ 90,000 கோடியாக இருக்கும்” என்று நிதியமைச்சகம் கணக்கிடுகிறது. 1,00,000 கோடி முதலீட்டுக்கு இவ்வளவு இழப்பை சந்திப்பது நியாயமா?

இந்திய தணிக்கை ஜெனரல், “இம்மண்டலங்களுக்கு வழங்கிய சலுகையால் 7500 கோடி ரூபாய் கஸ்டமஸ் தீர்வை இழப்பு இவற்றால் கிடைத்த அன்னிய செலவாணி வெறும் 4700 கோடி மட்டுமே” என்று தனது அறிக்கையில் (1998 ஈ.பி.2 அறிக்கை) அரசை இடிக்கிறார். கடந்த கால அனுபவத்தில் நம் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சி.பொ.மண்டலத்தின் பங்கு வெறும் 5.1% மட்டுமே உலகம் முழுவதும் சி.பொ.மண்டலம் ஏற்றுமதி எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயலாமல் தோற்று போயுள்ளன. சீனாவின் சென்ஹென் மற்றும் அயர்லாந்தின் சென்னான் ஆகிய ஒன்றிரண்டுதான் இலக்கை எட்டின. பிலிபைன்ஸ், மலேசியா, பிரேசல், மெக்சிகோ, கொலம்பியா, இலங்கை, பங்களாதேஷ், இந்தியா என்று எங்கும் சி.பொ.மண்டலங்கள் ‘தோல்விமுகமே’ காட்டுகின்றன. ஆனாலும் இந்திய அரசு சி.பொ.மண்டலங்கள் அமைக்க ஏனோ ஆதித ஆர்வம் காட்டுகிறது.

இந்தி ரிசர்வ் வங்கி விழித்து கொண்டு, சி.பொ.மண்டலத்திற்கு வேகதடை போட முனைகிறது இதற்கு வழங்கப்படும் வரி சலுகைகள் அதிகம் என கருதுகிறது. கடந்த வாரத்தில் கூட இம்மண்டலங்கள் அமைக்க முதலாளிகள் வங்களிடம் கடனுக்கு அணுகினால், தொழில் கடனிற்கான வடடி விகிதத்தை விட கூடுதலாக விதிக்க வேண்டும் என்றும் ரியல் எஸ்டேட் கடனின் வட்டி விகிதம் அளவிற்கு இருக்க வேண்டும் என்றும் வணிக வங்களுக்கு ஆணையிட்டுள்ளது. சி.பொ.மண்டலம் விஷயத்தில் நிதியமைச்சகம் கொஞசம் தயக்கம் காட்டுகிறது. சில காங்கிரஸ் கட்சி முதல்வர்களும், முக்கிய தலைவர்களும் எதிர்ப்பு கருத்துகள் எழுப்ப வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம், மாநிலங்களில் சி.பொ.மண்டலத்திற்கெதிராக நடைபெறும் போராட்டங்களால் எழுகிறது. சி.பொ.மண்டலம் அதிக எண்ணிக்கையில் அமையவேண்டும் என வணிக அமைச்சகம் வேகம் காட்டுகிறது.

சி.பொ.மண்டலத்தால் வேலை வாய்ப்பு உயரும் என்று சொல்லப்படுகிறது. இது வரை 28 சி.பொ.மண்டலத்தில் 1,00,650 வேலைகள் மட்டுமே உருவாகியுள்ளது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு கிடையாது. உழைப்பு சுரண்டல் மலிந்து உள்ளது. “வெறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வரிசலுகைகள் பெற, சி.பொ.மண்டலங்களுக்க குடிபெயரும் இதனால் பல்வேறு பகுதிகளில் சமூக பின்னடைவு நிகழும்” என்று ஐ.எம்.எப் ரகுராம்ராஜன் கவலை தெரிவிக்கிறார்.

இதில் நிகழ இருக்கிற நிலக்கொள்ளை விவகாரத்திற்கெதிரான போராட்டங்கள் சிலிர்ந்து எழ வேண்டும். சி.பொ. மண்டலத்திற்கு ஒதுக்கப்படும் மொத்த நிலங்களில் 25% உற்பத்திசார் மைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாக எஞ்சிய 75% நிலத்தில் வணிக வளாகங்கள், மிகப்பெரும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்புகள் என்று எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். முதலாளிகள், ரியல் எஸ்டேட் வழியில் இதில் காசு பார்க்க முயல்வார்கள். டி.எல்.எப், மராத்தான், ராஹேஸ், சிட்டி பார்க்ஸ், திலான் போன்ற ரியல் எஸ்டேட் வியாபாரிகளை உள்ளே நுழைப்பார்கள். சி.பொ.மண்டலம் என்ற பெயரில் நிலங்கள் யார் கைகளுக்கு மாறுகிறது என இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்குமே!

(நன்றி: DYFI இளைஞர் முழக்கம்)

Pin It