மேட்டூரில் கிராம மக்களுக்கு சொந்தமான ‘கிராம நத்தம்’ இடத்தில் கோயில் கட்ட சட்ட விரோதமாக உத்தரவிட்டுள்ளார். கோட்டாட்சித் தலைவர் நிலத்தை மீண்டும் ஒப்படைக்காவிட்டால் ஜூலை 17-ல் முதல் கட்டமாக கோட்டாட்சித் துறை அலுவலகம் முன்பு கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.
மேட்டூரில் ஜூன் 25 அன்று நடந்த நாத்திகர் விழாவில் கொளத்தூர் மணி இதுபற்றிப் பேசியதாவது:
மேட்டூரில் நாத்திகர் விழா கொண்டாடும்போது, ஒரு முக்கிய செய்தியை சொல்ல வேண்டி இருக்கிறது. அரசுப் பணிக்கு வந்த அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தங்களின் மதக் கொள்கைகளை திணிக்கிறார்கள் என்பதால் தான் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் 1967 இல் ‘அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை எல்லாம் அகற்ற வேண்டும்’ என்று ஒரு ஆணை பிறப்பித்தார்.
மத நம்பிக்கை இருக்கிறவர்கள் தங்கள் வீடுகளில் அதை வைத்துக் கொள்ளட்டும்; பொது இடம் அதற்கு சரியானதல்ல என்ற காரணம் கூறப்பட்டது. அந்த ஆணையைப் பின்பற்றி சில இடங்களில் கடவுளர் படங்கள் அகற்றப்பட்டன. சில இடங்களில் அந்த ஆணை பின்பற்றப்படவில்லை.
அதன் பிறகு, அண்மையில் பா.ஜ.க. மய்ய அரசை ஆண்டபோது நாடாளு மன்றக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அடிக்கடி மதக்கலவரம் வருவதன் பின்னணி ஆய்வு செய்யப்பட்டது. ‘பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் தங்கள் மதத்தை திணிக்க முயற்சிப்பதால்தான் சிறுபான்மை மக்கள் கிளர்ந்து எழுந்து எதிர்ப்பதால் மதக் கலவரங்கள் ஏற்படுகின்றன’ - என்று பாராளுமன்றக் குழு முடிவுக்கு வந்தது.
அந்த முடிவை உள்துறை அமைச்சர் எல்லா மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பினார். அப்போது தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த அரிபாஸ்கர் அந்த சுற்றறிக் கையை மாநில அரசின் எல்லா அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பினார்.
‘எந்த அரசு அலுவலகங்களிலும் மத வழிபாடு இருக்கக்கூடாது; மதச் சின்னங்கள் இருக்கக் கூடாது; எந்த சுலோகமும் இருக்கக் கூடாது; ஏற்கனவே ஏதாவது ஒரு வழிபாட்டுத் தலம் அங்கு இருக்குமேயானால், அதை விரிவுபடுத்தவோ, மாற்றியமைக்கவோ கூடாது’ என்று மிகத் தெளிவாக சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
செல்வி ஜெயலலிதா ஆட்சியின் சென்ற ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டில் - இப்போது சென்னை ஆணையராக இருக்கும் லத்திகாசரண் அவர்கள் அப்போது காவல்துறைத் தலைவராக இருந்தார். எந்த காவல் நிலையங்களிலும் பூசை நடத்தக் கூடாது’ என்று லத்திகாசரண் அப்போது ஒரு சுற்றறிக்கையை அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் அனுப்பினார். இப்படி பல முன்னுதாரணங்கள் உள்ளன.
ஆனாலும், அரசு அலுவலங்கள் இன்னும் மாறவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது. மேட்டூர் தொடர் வண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள தங்கமாபுரிபட்டிணத்தில் ‘கிராமநத்தம்’ என்ற பிரிவுக்குள் வரும் ஒரு ஏக்கர் அளவு நிலம் உள்ளது. கிராம நத்தத்தைப் பற்றி ஏற்கனவே பல தீர்ப்புகள் வந்துள்ளன. சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி கண்ணதாசன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்று அரசு எவற்றிலெல்லாம் தலையிடலாம் எ ன்பதைப் பற்றிக் கூறுகிறது.
இரயத்துவாரி நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், கனிமவள நிலங்கள், குவாரி நிலங்கள், ஆறுகள், ஏரிகள் போன்றவற்றில் அரசு தலையிடலாம் என்று அத்தீர்ப்பு கூறுகிறது. ஆனால், ‘ஒரே ஒரு இடத்தில் மட்டும் அரசு தலையிட முடியாது. அதாவது கிராம நத்தத்தில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்று உயர்நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. ஏனெனில் அது மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம்.
தங்கமாபுரிபட்டினத்தில் உள்ள ஒரு ஏக்கர் அளவுள்ள இடத்தில் குழந்தைகள் விளையாடி வந்தனர். நாடகம் நடத்தும் மேடை ஒன்றும் அந்த நிலத்தில் போடப்பட்டுள்ளது. எல்லா மக்களுக்கம் பொதுவாக உள்ள அந்த இடத்தை வேலி போட்டு அடைத்து விட்டு, அதை ஒரு கோயிலுக்கு கொடுத்துவிட்டார், மேட்டூர் கோட்டாட்சித் தலைவர்.
வாய்மொழியாகக் கூட கொடுக்காமல் மிகத் தெளிவாக ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கோயிலின் பயன்பாட்டுக்கு 29.9.2004 அன்று கொடுத்திருக்கிறார். அவ்வாறு செய்ய கோட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை. இதை எதிர்த்து நாம் அப்போதே ஒரு விண்ணப்பம் கொடுத்தோம். இறுதியாக, 15.5.2006க்குள் அந்த வேலியை அகற்றி பொதுமக்கள் எல்லோருடைய பயன்பாட்டுக்கும் அந்த நிலத்தைக் கொடுக்க வேண்டும் என்று மற்றொரு விண்ணப்பம் கொடுத்தோம்.
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சோந்த நம்மவர்கள் நிறைய பேர் அதிகாரத்திற்கு வரவில்லையே என்று நாம் ஏங்குகிறோம். இப்போது இருப்பதை விட இன்னும் அதிக அளவில் ஒடுக்கப்பட்ட நம் இனத்தவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். ஆனால், அவர்கள் அதிகாரத்திற்கு வந்து விட்டால் ஆணவமும் கூடவே சேர்ந்து விடுகிறது.
1954 இல் தொடங்கப்பட்டது கொளத்தூரிலுள்ள நிர்மலாப்பள்ளி. அந்தப் பள்ளிக்குச் செல்லும் ஒரு பாதையையே ‘புறம்போக்கு’ நிலம் என்பதைக் காரணமாகக் காட்டி தடுத்துவிட்டார்கள் அரசு அதிகாரிகள். இதனால், மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு பள்ளிக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இப்போது பாதை விடப்பட்டு இருக்கிறது.
இதேபோலத்தான் 15.5.2006 இல் வேலியை அகற்றவில்லை என்றால் நாம் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறி, அதை மக்களுக்குத் தெரியப்படுத்த அந்தப் பகுதியில் ‘தட்டி’ ஒன்று வைத்தோம். ஆனால், காவல்துறை உதவியுடன் அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரியைப் பயன்படுத்தி ‘எழுதப்பட்ட தட்டியை’ அகற்றிவிட்டார்கள். அப்போது அதை பெரிய சிக்கலாக்க நாம் விரும்பவில்லை. இப்போது நாம் அறிவிக்கிறோம்.
‘அரசுக்கு அதிகாரமில்லாத கிராம நத்தம் பகுதியிலுள்ள வேலியை நீக்கி பொது மக்கள் பயன்பாட்டுக்கு தனது மத எண்ணத்தின் அடிப்படையில் கோயிலுக்கு வழங்கிய கோட்டாட்சித் தலைவர் தன்னுடைய ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால், வருகிற ஜூலை 17 ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெரியார் தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதற்குப் பிறகும் கோட்டாட்சியர் நியாயமான முறையில் செயல்படவில்லையென்றால், நமக்கு விடுதலை நாள் என்று சொல்லப்படும் ஆகஸ்ட் 15 அன்று (விடுதலை நாள் என்பதை நாம் ஏற்பதில்லை. அது அடிமை மாற்றம் செய்த நாள் அவ்வளவே. வெள்ளை அரசுக்கு பதிலாக பார்ப்பன கொள்ளை அரசுக்கு ஆட்பட்டு இருக்கிறோம் அவ்வளவே) அந்த வேலியை பெரியார் தி.க. அகற்றும் என்ற இரு செய்திகளையும் நாத்திகர் விழாவின் மூலம் அறிவிக்கிறோம்.
நாம் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுகிறோமா என்பதைக் கேட்க காவல்துறை ஒற்றர்கள் இங்கு வந்திருக்கலாம். அவர்கள் இந்த இரு அறிவிப்புகளையும் ஒழுங்காக மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் தெரிவிக்கக் கோருகிறோம். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இந்தச் செய்தியை ஒரு கடிதம் மூலம் நாம் தெரிவிக்க இருக்கிறோம். அதற்குப் பயனில்லை எனில் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம்.
இதற்கு முன்பு ஒரு நிகழ்வில் நாம் அப்படித்தான் நேரடி நடவடிக்கையில் இறங்கினோம். சில வருடங்களுக்கு முன்பு மேட்டூர் அணை அனல்மின் நிலையத்தில் ஒரு கோயில் கட்டினார்கள். அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் தடை வழங்குவதற்குள் கோயிலை கட்டி முடித்து விட்டார்கள். அதனால், இதில் தாங்கள் தலையிட முடியாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. அதன் பிறகு, மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜெயலலிதா ஆட்சியின் போது கோயில் கட்டினார்கள். ‘
மூன்று நாளில் நீங்களே இடித்துத் தள்ளி விடுங்கள்; இல்லையெனில் நாங்கள் இடிப்போம்’ என்று அறிவித்தோம். அரசு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. எனவே, மேட்டூரில் கரசேவை’ என்று அறிவிப்பு கொடுத்து விட்டு, பெரியார் படிப்பகத்திலிருந்து தோழர்கள் ஊர்வலமாகச் சென்று கோயிலை இடித்துத் தள்ளினோம். எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தார்கள்.
நாங்கள் உயர்நீதிமன்றம் சென்றோம். ‘அரச வளாகங்களில் கோயில் இருக்கக் கூடாது என்ற அரசின் ஆணையை நடைமுறைப்படுத்த நாங்கள் உதவியிருக்கிறோம். எனவே முதல் தகவல் அறிக்கையின்படி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கூறி தடை கேட்டோம்.
கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறி தடை வழங்கிவிட்டது. அதனால், அந்த வழக்கே இல்லாமல் போய் விட்டது.
அரசு அதிகாரிகளுக்கு நினைவூட்டவே இப்போது இதைக் கூறுகிறோம்.
அரசின் சட்டத்தை நிறைவேற்ற நாம் துணை புரியும்போது, ஒருவேளை, ஏதாவது பின் விளைவுகள் வந்தாலும் ஏற்கத் தயாராக இருக்கிறோம். வந்திருக்கும் காவல்துறை ஒற்றர்கள் ஒழுங்கானத் தகவலை தொடர்புடையவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.