ராமன் தன்னுடைய வாழ்நாளில் பெருங்குடிகாரனாகவும், பெண்பித்தனாகவும் மட்டும் இருக்கவில்லை; அப்பட்டமான சாதிவெறியனாகவும் இருந்தான். இராமன் அநீதியான முறையில் நாட்டை அபகரிக்க தசரதனுடன் சேர்ந்து திட்டமிட்டு, பின் அது கைகேயிக்குத் தெரிய வர, ராமன் நாட்டைவிட்டு பொண்டாட்டியுடன் காட்டிற்கு விரட்டப்பட்ட  நாளில் இருந்து, திரும்ப வந்து ஆட்சி பொறுப்பேற்று, பின் சரயு நதியில் குதித்து மண்டையைப் போட்டது வரை அப்பட்டமான சாதிவெறியனாகவே இருந்துள்ளான். அதற்குப் பல ஆதாரங்கள் இராமாயணத்திலேயே காணக் கிடக்கின்றது.

ramayana

 இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராமனுக்கும் வருணனுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், இருவருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுகின்றது. அதன் படி வருணனுக்கு ஏற்பட்ட பிரச்சினையை இராமன் தீர்த்து வைக்க வேண்டும். வருணன் ராமனிடம் "வடக்கே ஒரு தீவில் என் பகைவராகிய ஆயிர (மகா சூத்திர) சாதியினரான திருடர்கள் உளர். அவர்கள் என் தண்ணீரைத் தொட்டுக் குடிப்பது எனக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்கள் மேல் அம்புவிட்டு கொல்" என்கின்றான். இராமனும் அவர்கள் மேல் அம்பை ஏவிக் கொல்கின்றான். (இராமாயண ஆராய்ச்சி: யுத்த காண்டம் - பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை).

  தண்ணீரைத் தொட்டு குடித்ததே பொறுக்க முடியாமல் சூத்திர மக்களை வெறுத்த வருணனும், தனக்கு முன்பின்  எந்தத் தீமையையும் செய்யாத, இன்னும் சொல்லப் போனால் தனக்குச் சம்மந்தமே இல்லாத மக்களை, அவர்கள் தப்பு செய்தார்களா இல்லையா என்பதை எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல், தன்னுடைய அம்புகளால் படுகொலை செய்த சாதிவெறியனான ராமனும் எவ்வளவு இழிவானவர்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனக்குச் சம்மந்தமில்லாதவர்களிடம் மட்டும் ராமன் தன்னுடைய ஆரிய சாதிவெறியைக் காட்டவில்லை. இராமன் காட்டில் ஒரு பரதேசியாக, வாழ வழியற்று இருந்த போது, அவனை ஒரு மனிதனாக மதித்து அவனை உபசரித்த குகன் என்ற வேடுவன் கொடுத்த மாமிசம் முதலிய உணவுகளையும், பானங்களையும் மறுத்து விடுகின்றான். அவன் இப்போது ஒரு துறவி என்ற நிலையில் பழங்களையும், மூலங்களையும் மட்டுமே உண்ண முடியும், அதனால் இறைச்சி முதலியவற்றை ஏற்க முடியாது என்கின்றான். ஆனால் மாரீசனைக் கொன்ற பிறகு, இராமன் உணவுக்கென மற்றொரு மானைக் கொன்று அதன் இறைச்சியை எடுத்து வருவதாகப் பின்னர் வருவதால், இக்கூற்று பொய் எனத் தெரிகின்றது. ஆனால் பரதன் இராமனைத் தேடி காட்டிற்கு வரும்போது குகன் அவனையும் மீன், இறைச்சி, மது ஆகியவற்றுடன் வரவேற்கின்றான். பரதன் எவ்வித மறுப்பும் இன்றி அந்த உணவுகளை ஏற்றுக் கொள்கின்றான்.(இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு-வெண்டி டோனிகர்.ப.எண்:299).

 குகன் கொடுத்த உணவை ராமன் சாப்பிடாமல் இருந்ததற்குக் காரணம் அப்பட்டமான சாதிவெறியே ஆகும். குகன் பரதனை சந்தித்த போது “நான் இராமனுக்குப் பலவித  உணவுகளை அளித்தேன் , ஆனால் அவன் அவை எல்லாவற்றையும் மறுத்துவிட்டான். அவன் க்ஷத்திரிய தர்மத்தைப் பின்பற்றுபவன் க்ஷத்தியர்கள் கொடுக்க வேண்டுமே அன்றி ஒரு போதும் பெறக்கூடாது போலும்” என்கின்றான். (மேற்படி நூல்). இதில் இருந்து இராமன் வேடுவர்களை எவ்வளவு இழிவாக நினைத்தான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இராமன் காட்டிற்கு வந்தபின்பு மாமிச உணவைத் தவிர்க்கவில்லை என்பது வால்மீகி இராமாயணத்தின் மூலமே நம்மால் தெரிந்து கொள்ள முடிகின்றது. "வேள்விக்காகவும், உணவுக்காகவும் பசு உள்பட விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததைப் பற்றிய குறிப்புகளை வால்மீகி இராமாயணத்தில் அடிக்கடி பார்க்கலாம். உண்ணத் தகுந்தவை என்று தர்ம சாஸ்திரங்களால் அறிவிக்கப்பட்ட விலங்குகளைப் பெரும் எண்ணிக்கையில் பலி தந்த ஒரு பெரிய வேள்வியை தசரதன் நடத்திய பின்னால்தான் இராமன் பிறந்தான். இராமன் தன் சபதத்தை நிறைவேற்றி முடித்தால் ஆயிரம் பசுக்களையும், நூறு ஜாடி மதுவையும் தானம் தருவதாக யமுனை ஆற்றைக் கடக்கும்போது சீதை உறுதி தருகிறாள். மான் இறைச்சி மீது சீதை கொண்டிருந்த பெருவிருப்பத்தின் காரணமாக அவள் கணவன் மான் வேடத்திலிருந்த மாரீசனைக் கொல்லவும் துணிகிறான். இராமனைக் கெளரவிப்பதற்காக பரத்வாஜர் ஒரு கொழுத்த கன்றை பலி தருகின்றார்”.(பசுவின் புனிதம்: டி.என்.ஜா. ப.எண்:95).

 மேலும் “வால்மீகி இராமாயணத்தில் உணவுக்காகவும், வேள்விக்காகவும் இராமனும், இலட்சுமணனும் காட்டு விலங்குகளை வேட்டையாடியதாக அடிக்கடி பல குறிப்புகளைப் பார்க்க முடிகின்றது. இராமன் வேட்டையாடுவதையே பொழுது போக்காகக் கொண்டவன் என்ற  படிமத்துக்கு ஆதாரமாக ஏராளமான இராமாயணக் கதைகளையும் காட்ட முடியும்”(மேற்படி  நூல் ப. எண்:67). இதன் மூலம் இராமன் இறைச்சி உணவை  ஒரு போதும் தவிர்த்தவன் இல்லை என்பதும், குகன் கொடுத்த மாமிச உணவை இராமன் மறுத்ததற்கு சாதிவெறி ஒன்றே காரணமாகும் என்பதும் தெளிவாக விளங்குகின்றது. இவை எல்லாம் இராமன் காட்டில் நாடோடியாக அலைந்து திரிந்த போது என்றால், அவன் ஆட்சி நடத்திய போது அவனின் சாதிவெறி இன்னும் தலைக்கேறியது. தனது குடிகளை சமமாகப் பாவித்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருந்த இராமன் அவர்களை சாதிய கண்ணோட்டத்துடனேயே அணுகினான்.

“நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகின்றார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்து விடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கொடிய குற்றத்தைச் செய்கின்றான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

 இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாட்டு மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கின்றார் வால்மீகி. இருந்த போதிலும் பார்ப்பனச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டித்து, செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என  அச்சுறுத்தினான். அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த  எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நரதன் சொன்னான்.

தரும(புனித) சட்டங்களின்படி பார்ப்பனர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பார்ப்பனர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி  நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன்தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன். அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பார்ப்பனனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற  சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன்தோன்றி அவன் செய்த இந்நற் காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய் கிடந்த பார்ப்பனச் சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான்.  “அந்தப் பார்ப்பனச் சிறுவன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான்” என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லி விட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்துக்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு  ஒன்றை அகத்தியன் இராமனுக்குப் பரிசாய் அளித்தான்”. (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 8: ப. எண் 463-464)

 இராமனின்  சாதிவெறியையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும் தெரிந்துகொள்ள இதைவிட வேறு சான்றுகள் எதுவும் நமக்குத் தேவையில்லை. இந்தக் கதை நம்ப முடியாத அளவிற்கு புரட்டுக் கதையாக இருந்தாலும் கதையின் மூலம் வலியுறுத்தப்படும் செய்தி மிக முக்கியமானதாக இருக்கின்றது. அது சூத்திரன் எந்தச் சூழ்நிலையிலும் தவம் செய்யும் உரிமையற்றவன் என்பதும், அப்படி தவம் செய்தால் அவனை கொல்வதுதான் மனுநீதிப் படி தர்மாகும் என்பதும். இதைத்தான் கடவுள்களும் விரும்பி இருக்கின்றார்கள் என்றால், அந்தக் கடவுள்களின் யோக்கியதை எப்படிப் பட்டதாய் இருந்திருக்கும். அடுத்து கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி, ராமன் பார்ப்பன சிறுவன் உயிர் பிழைக்க கடவுளை வேண்டிக்கொண்டான் என்பது. கடவுளை இராமன் வேண்டினான் என்றால், அப்போது இராமன் யார்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. ராமன் ஒரு சாதாரண மனிதனாக இருந்த காரணத்தால்தான் கடவுளை வேண்டினான். ஆனால் எந்தக் கடவுளை வேண்டினான் என தெரியவில்லை. வால்மீகி இராமனை ஒரு சாமானிய மனிதனைவிட மிகவும் கீழான குணங்கள் கொண்டவனாகவே அனைத்து இடங்களிலும் சித்தரிக்கின்றார்.

மது, மாமிசம், குடி, கூத்தி என ஒரு மன்னனுக்கே உரித்தான அனைத்து கேளிக்கைகளுடனும் ஆட்சி நடத்திய ராமன் தன் குடி மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினான் என்றோ, அணைகளைக் கட்டி நீர்ப் பாசன வசதிகளை செய்துகொடுத்து விவசாயத்தை வளர்த்தான் என்றோ, எல்லா சாதி மக்களுக்கும் சமச்சீர் கல்வி கொடுத்தான் என்றோ, மருத்துவமனைகளை நிறுவி தன் குடிகளுக்கு இலவசமாக தரமான மருத்துவத்தைக் கொடுத்தான் என்றோ, சாலை வசதிகளை மேம்படுத்தி வணிகத்தை ஊக்குவித்தான் என்றோ, குறைந்த பட்சம் தன் குடிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளையாவது பூர்த்திசெய்தான் என்றே ஒரு வரி கூட இராமாயணத்தில் இல்லை!! மாறாக இராமன்  நாட்டை அபகரிக்க சதிசெய்தான், அதனால் காட்டிற்கு விரட்டப்பட்டான், அங்கு பெண்களை மானபங்கம் செய்தான், விதிப்படி சீதையை இராவணனுக்குப் பத்துமாதம் தாரைவார்த்தான், பின்பு சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போனது முன் பிறவியில் தான் பிருந்தையுடன் பாலியல் வல்லுறவு கொண்டதால் அந்தப் பெண்விட்ட சாபம் என்பதை மறந்து, தனக்குத் துணையாக அனுமான், சுக்ரீவன்,விபூஷணன், அங்கதன் போன்ற ஆரிய கைக்கூலிகளை சேர்த்துக்கொண்டு திட்டமிட்டு இராவணனைக் கொன்றான், அரசனான பின்பு அளவுக்கு அதிகமாகக் குடித்தான், கணக்கற்ற பெண்களுடன் விபச்சாரம் செய்தான், சாதிவெறி தலைக்கேறி சம்பூகனைக் கொன்றான் என்றுதான்  சொல்லப்பட்டிருக்கின்றது.

 எப்படிப் பார்த்தாலும் இராமனை ஒரு கடவுளாக அல்ல, ஒரு நல்ல மனிதனாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒழுக்கம் கெட்டவானகவே வால்மீகியால் காட்டப்பட்டிருக்கின்றான். ஆனால் அனுமான்களும், சுக்ரீவன்களும்,விபீஷணன்களும் இன்றும் பொறுக்கித் தின்று வயிறு வளர்ப்பதற்காக இராவணனையும், சம்பூகன்களையும் காட்டிக் கொடுக்க துடியாய் துடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்காக தனக்கு சோறு போட்டு வளர்த்த மண்ணை ஆரிய பார்ப்பன கூட்டத்திற்குக் கூட்டிக் கொடுக்க அவர்கள் ஒப்பந்தமும் போட்டிருக்கின்றார்கள்.  அந்தக் கூட்டத்திற்கு மானம், மரியாதை என்றால் என்ன என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து வகுப்பெடுப்போம்…!

- செ.கார்கி

Pin It