இராமாயணத்தில் ஒரு காட்சி. அயோத்தியாபுரி அரசன் ஆயிரம் ஆசை நாயகிகளின் ஆசான். தசரத மகா சக்ரவர்த்தி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, புரோகிதன் மூலம் பெற்றெடுத்த இராமச்சந்திர மூர்த்தியின் எதிரே ‘குரங்கு வம்சத்தில்’ பிறந்த அனுமான் ‘பிராமண’ உருவத்தில் வருகிறான்.
அந்தப் ‘பிராமண’ உருவத்தைக் கண்டதும், ‘இராம பிரபு’ அப்படியே சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து வணங்குகிறான்.
எதிர்பாராது நடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி கண்டு அனுமான் துடிக்கிறான்.
“இராம பிரபு... என்ன காரியம் செய்து விட்டீர்கள்? நான் உண்மையான பிராமணன் அல்ல. நானோ வானர வம்சத்தில் பிறந்தவன். மரம், செடி, கொடிகளில் தாவிப் பிழைப்பவன், ‘பிராமண’ உருவெடுத்து வந்தேன். அவ்வளவுதான். என கால்களில் கடவுள் அவதாரமாகிய தாங்கள் வீழ்ந்து நமஷ்கரிப்பது நியாயமா? நீதியா? தருமமா? என்று பதறுகிறான். அப்பொழுது இராமன் கூறுகிறான்.
“அனும! நீ அறியாமையிலே பேதலிக்கிறாய். பிராமண உருவத்தில் வருவது எதுவாக இருந்தாலும், அது குரங்காய் இருந்தாலும் சரியே. நமஷ்கரித்து வணங்குவதே சரியான தருமமாகும். பிராமணனே சகலத்திறகும் மேலானவன்” என்று பதில் கூறுகிறான். இந்தக் காட்சியைப் பக்தி ரசம் கொட்ட தீட்சதர்களும் சாஸ்திரிகளும் பிரசாரம் செய்கிறார்கள் என்றால் காரணம் புரிகிறதா?
‘இராம பிரானே’ ‘பிராமணர்’களைத் தெய்வம் என்று கூறி, தொழுது இருக்கிறான் என்ற எண்ணத்தை நம்மவர்கள் நெஞ்சத்திலே நிலைபெறச் செய்து, நாம் என்றும் பார்ப்பன அடி தொழும் ஆழ்வார்களாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையால் அல்லவா?
இராமாயணம் போன்ற ‘இதிகாசங்கள்’ எழுதப்பட்டதும், அதில் இதுபோன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டதும், அந்த நிலையை என்றென்றைக்கும் நிலை நிறுத்தும் நோக்கத்தோடல்லவா?
இதுவரை உணராவிட்டாலும், ஏமாளித் தமிழர்கள் இனியேனும் உணர்வார்களாக!