கீற்றில் தேட...

திரையரங்குகளில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை என நீதிமன்றங்கள் சொன்னாலும் அரங்கத்தின் சக பார்வையாள நீதிபதிகள் நமக்கு தூக்கு தண்டனையை எழுதும் முனைப்புடனேயே நம்மை உற்று நோக்குகிறார்கள். அப்படியான சமீபத்திய நிகழ்வொன்றில் இரு திரைப்படங்களின் நினைவு வந்து சேர்ந்தது.

city lights sword

சிலை திறப்பு விழாவிற்கான கோலாகாலத்துடன் ஒரு நகரம் களைகட்டியிருக்கிறது. மேடையில் திறக்கப்போகும் சிலை பற்றிய உரையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. தொடர்ந்து ஏகோபித்த மக்களின் கரவொலிக்கு நடுவே துணியால் போர்த்தப்பட்டிருக்கும் சிலை திறக்கப்படுகிறது. துணி விலக்கப்பட, விலக்கப்பட அதுவரை ஆராவாரம் செய்துகொண்டிருந்த மக்கள் ஒரு திடுக்கிடலுடன் சிலையைப் பார்க்கிறார்கள். சிலையின் மடியில் அப்பெரு நகரத்தால் புறக்கணிக்கப்பட்ட நம் நாடோடி உறங்கிக் கொண்டிருக்கிறான்.

தன்னுடைய பெருந்துயரங்களை அதிசிறந்த நகைச்சுவையாய் பார்வையாளர்கள் முன் வைக்கும் உன்னதக் கலைஞன் சார்லி சாப்ளினின் "சிட்டி லைட்ஸ்" திரைப்படத்தின் ஆரம்பக்காட்சி இது. இந்தக் காட்சி திடீரென சிரிப்பை வரவழைத்தாலும் உறங்குவற்கு இடமற்ற ஒரு உயிரின் அவஸ்த்தையை பிற்பாடு மெல்ல நம் மூளைக்கு உணர்த்தும். அதுதான் சார்லியின் தனித்தன்மை. காட்சியைத் தொடர்வோம். அந்த நகர மக்கள் அருவருப்புடன் சார்லியைப் பார்த்து சத்தம் போடுகிறார்கள். சார்லி அவசரகதியில் எழுந்து இறங்க முயல்கிறார். அப்போது கீழே அமர்ந்திருக்கும் மற்றொரு சிலையின் கத்தியில் சார்லியின் பேண்ட் மாட்டிக் கொள்கிறது. சார்லி செய்வதறியாது திணறுகிறார். அப்போது சிலைதிறப்பு இசைக்குழுவால் அந் நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது. சார்லி தூண்டிலில் மாட்டிக்கொண்ட புழுவின் நிலையில் இருந்தாலும் அந்த இசைக்கு மரியாதை தர முயல்கிறார். ஆனால் அந்தரத்தில் மாட்டிக்கொண்டதால் விழுந்து விழுந்து மரியாதை தர இயலாமல் திக்கித் தினறுகிறார். பார்வையாளர்களான நமக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.

pandri

நாகராஜ் மஞ்சுலேவின் மராத்திய திரைப்படமான பன்றியில் இந்த தேசிய கீத அவஸ்த்தை மற்றொரு கோணத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கும். ஆதிக்க சாதியினர் கட்டாயத்தின் பேரில் உச்சிவெயிலில் பன்றியைப் பிடிக்க போராடியபடி ஜாப்பய்யாவின் குடும்பம் தத்தளித்துக் கொண்டிருக்கும். உடல் முழுதும் குத்திக் கிழிக்கும் அவமானத்துடன் ஜாப்யாவும் அவ்வேட்டையில் பங்கெடுத்தபடி இருப்பான். அப்பொழுது அவனது பள்ளியிலிருந்து தேசிய கீதம் ஒலிக்கத் தொடங்கும். பள்ளியைத் தாண்டி வெளியேறும் தேசிய கீத ஒலியால் அவ்வூர் மக்களும் சட்டென மரியாதை அளித்தபடி தங்கள் வேலைகளை மறந்து, அப்படியப்படியே நின்று மரியாதை அளிப்பார்கள். அப்பொழுது அத்தனை நேரம் அங்கிங்கென போக்கு காட்டிய பன்றி சாவகாசமாக ஜாப்பையாவின் குடும்பத்தினர் பக்கம் நடந்து போகும். எதுவும் செய்ய முடியாமல் ஜாப்யாவின் குடும்பம் திணறியபடி நின்றிருக்கும்.

தேசிய கீதத்திற்கு கட்டாயம் எழுந்து நின்றாக வேண்டும் என்கிற கற்பிதத்திற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் அவஸ்தையை இந்த இரண்டு திரைப்படங்களும் நுட்பமாக பகடி செய்திருப்பதையும், சாடியிருப்பதையும் இக்காட்சிகள் வழியே நாம் எளிமையாக உணரலாம். எல்லா மொன்னையான கற்பிதங்களும் நிச்சயம் கட்டுடைக்கப்பட வேண்டியவைகளே. தற்சமயம் தேசியகீதத்திற்கு திரையரங்குகளில் எழுந்து நிற்க கட்டாயமில்லை என நீதிமன்றங்கள் சொல்லியிருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து திரையரங்கங்கள் தேசிய கீதத்தை ஒலிபரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் எழுந்து நிற்கவில்லை என்றால், பக்கத்திலிருக்கும் எச்.ராஜா சாயல்கள் நம்மைக் குறுகுறுவென பார்க்கின்றன. நாம் சார்லியைப் போல தூண்டில் அவஸ்த்தையுடன் வேறு வழியின்றி எழுந்து நின்று தொலைய வேண்டியிருக்கிறது.

- கர்ணாசக்தி