கீற்றில் தேட...

‘தோழர்’ என்று சொல்லும் போதே உள்ளுக்குள் ஒரு கம்பீரமும் எழுச்சியும் ஒரு சேரப் பிறக்கும். அப்படி ஒரு சக்தி வாய்ந்தது அந்தச் சொல். பெரும்பாலும் இடதுசாரி சித்தாந்தத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட நபர்களை மட்டுமே குறிக்கப்பட்டு வந்த சொல், பெரியார், அம்பேத்கர், மார்க்சிய இயக்கத் தோழர்கள் மட்டுமே தங்களுக்குள் புழக்கத்தில் பயன்படுத்திய சொல். இடதுசாரி இயக்கப் பின்புலம் இல்லாதவர்கள் நமக்குத் தெரிந்து, தங்களுக்குள் தோழர் என்ற வார்த்தையைத் தவறியும் பயன்படுத்துவது கிடையாது. வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தங்களுக்குள் விழித்துக்கொள்ள ‘ஜீ’ என்ற வார்த்தையையே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கும்போது இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே தங்களுக்குள் தாராளமாகப் பயன்படுத்திவந்த தோழர் என்ற சொல்லை இப்போது தங்களை இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சில பிழைப்புவாத மடையர்கள், இடம், பொருள் பார்க்காமல் யார் என்ன என்ற தராதரம் பார்க்காமல், எவனை வேண்டும் என்றாலும் அழைக்கப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

nayantara 543

கனவுத் தொழிற்சலையில் தயாரிக்கப்படும் முற்போக்குப் பொம்மைகளை வைத்து புரட்சி செய்ய அந்த முற்போக்கு தற்குறிகள் முற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். எம்.ஜி. ஆரை வைத்தும், ஜெயலலிதாவை வைத்தும், விஜயகாந்த்தை வைத்தும் கடைசியில் யாரும் கிடக்காமல் இளைய தளபதி விஜயை வைத்தும் புரட்சி நடத்தத் திட்டம் தீட்டிய தீவட்டிக் கும்பல் இப்போது இறுதியாக யாரும் கிடைக்காமல், நயன்தாராவின் காலடியில் சரணாகதி அடைந்திருக்கின்றது. நிஜ வாழ்க்கைக்கும், நிழல் வாழ்க்கைக்கும் உள்ள பாரிய வேறுபாட்டை உள்வாங்கிக் கொள்ளத் திராணியற்ற கும்பலின் காலை நக்கி, மாபெரும் புரட்சியை செய்து கொண்டு இருக்கின்றது. நாம் எந்த நிறக் கண்ணாடியை அணிந்து பார்க்கின்றோமோ, அந்தக் கண்ணாடியின் தன்மைக்கு ஏற்பவே இந்த உலகம் நமக்கு வண்ணமாகத் தெரிகின்றது. அதற்காக இந்த உலகத்தின் நிறத்தை கண்ணாடிகள் தான் தீர்மானிப்பதாக யாரும் புளகாங்கிதம் அடைந்து, கண்ணாடியை தன்னுடைய பூசை அறையில் வைத்துக் கொண்டாடுவதில்லை. கண்ணாடிக்கு உண்மையில் ஏதாவது பெருமை உண்டென்றால், அது நிச்சயம் அதைத் தயாரித்த நபர்களையே சாருமே ஒழிய, அதை அணிந்துகொண்டு இந்த உலகைப் பார்த்த நபர்களைச் சாராது.

அறம் படம் இன்று மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு அந்தப் படத்தை இயக்கிய கோபி நயினார் அவர்களையே அந்தப் பெருமை சாருமே ஒழிய, அதில் நடித்த நயன்தாராவுக்கு ஒரு போதும் அந்தப் பெருமை சாராது. இப்படித்தான் மெர்சல் படம் வெளியான போது, சில சிகப்புசட்டை புரட்சிப் பூக்கள் தங்களுக்குள் பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டிருக்கும் பிழைப்புவாத நதியை அடக்க முடியாமல் ஊரே பார்க்க விஜயின் பதாகைகளைக் கையில் ஏந்தி புரட்சி செய்தன. இப்போது அதே பிழைப்புவாத சாக்கடைகள் தங்களுடைய கட்சியின் முதன்மையான பணியே அதுதான் என்று முச்சந்தியில் வந்து நின்றுகொண்டு அம்மணமாக ஆடுகின்றனர்.

நயன்தாரா ஒரு உழைப்பாளி, அதனால் அவரை நாங்கள் தோழர் என்று அழைப்போம் என்கின்றார்கள். அப்படி என்றால் சன்னி லியோன், ஷகிலா எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் உழைப்பாளிகள் கிடையாதா அல்லது ரதராத்திரை போன அத்வானியும், குஜராத்தில் ஆயிரக்கணக்காண முஸ்லிம் மக்களை துடிதுடிக்க கொன்றொழிக்கக் காரணமான மோடியும் , இந்திய மக்களை இன்று கசக்கிப் பிழிந்து, பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கும் அம்பானியும், அதானியும், டாடாவும் கடின உழைப்பாளர்கள் இல்லையா? இனி அவர்களையும் தோழர் சன்னி லியோன் என்றும், தோழர் ஷகிலா என்றும், தோழர் அத்வானி என்றும், தோழர் மோடி என்றும், இல்லை தோழர் அம்பானி என்றும், தோழர் அதானி என்றும் இவர்கள் அழைப்பார்களா? இப்படி அழைப்பவர்களை கண்டிக்கத் திராணியற்ற ஒரு கூட்டம் இதற்கு ஜால்ரா வேறு போட்டுக்கொண்டு இருக்கின்றது.

காம்ரேட் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லாகவே இன்று தோழர் என்ற சொல் தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. சங்க இலக்கியத்தில் நண்பன் என்பதைக் குறிக்க தோழர் என்ற சொல் பயன்பட்டிருந்தாலும் தமிழகத்தில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் அந்தச் சொல் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களையே குறிக்கப் பெரும்பாலும் பயன்பட்டுவருகின்றது. பெரியார் அவர்கள் அந்தக் காலத்தில் ஒருவரை விளிக்கப் பயன்படுத்திவந்த ஸ்ரீ, கனம், திரு, திருமதி போன்ற சொற்களைத் தவிர்த்து தோழர் என்று அழைக்கும்படியே தனது அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கேட்டுக்கொண்டார், அவரும் அப்படியே அழைத்தும் வந்தார். ஒரு சொல் இன்றைய தேதியில் எப்படி பயன்படுத்தப்படுகின்றதோ, அதன் பொருள் உணர்ந்து பயன்படுத்துவது நல்லது. தோழர் என்ற சொல் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அழைக்கப் பயன்படுத்துவதால் தான், ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது கோவை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த, தற்போது திருச்சி காவல்துறை ஆணையராக உள்ள அமுல்ராஜ் அவர்கள் தோழர் என அழைத்து யாராவது உங்களிடம் பேசினால், தொடர்பைத் துண்டியுங்கள் என்று சொன்னார். இதில் இருந்தே அதிகார வர்க்கத்தின் பார்வையில் தோழர் என்ற சொல் யாரைக் குறிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

நடிகை நயன்தாராவை தோழர் நயன்தாரா என விளித்த பா.ரஞ்சித், படத்தின் இயக்குநர் கோபிநயினார் அவர்களின் பெயரைக்கூட குறிப்பிடாமல் இயக்குநர் என்ற பொதுச்சொல்லால் ட்விட்டரில் அறம் பட குழுவினருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கின்றார். கதைத்திருடர்களிடம் இருக்கும் குற்ற உணர்வுதான், அவரை கோபி நயினார் பெயரைப் பயன்படுத்த தடுக்கின்றது என்பது வெளிப்படை. எப்படி கோபி நயினார் பெயரைப் பயன்படுத்தாதது அயோக்கியத்தனமான செயலோ, அதைவிட பெரிய அயோக்கியத்தனமான செயல் நயன்தாராவை 'தோழர் நயன்தாரா' என ரஞ்சித் அழைத்திருப்பது. அம்பேத்கரின் கொள்கைகளை கடைபிடிப்பதாய்ச் சொல்லும் ரஞ்சித்துக்கு நயன்தாரா தோழராகத் தெரிகின்றார் என்றால் அவர் உள்வாங்கிக்கொண்ட அம்பேத்கரிய சிந்தனையின் லட்சணம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

இன்று தமிழ்நாட்டில் தோழர் என்ற வார்த்தை மட்டும் தான் இடதுசாரி சிந்தனையாளர்கள் தங்களுக்குள் விளித்துக் கொள்ளும் ஒரு கெளரவமான சொல்லாக இருக்கின்றது. இனிமேல் அதுவும் கூட இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது. இதை நிச்சயம் அனுமதிக்க முடியாது. கழிசடைகளையும், உலுத்துப் போனவர்களையும், பிழைப்புவாதிகளையும் அன்போடு விளிக்க அயோக்கியர்களுக்கு ஆயிரம் சொற்கள் இருக்கின்றன. எனவே ‘தோழரை’ விட்டுவிடுங்கள் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. நம் முன்னால் கண்டிக்கப்பட வேண்டியதும், போராடி பெற வேண்டியதுமான உயிர் போகும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எல்லாம் கண்டுகொள்ள ஆள் இல்லாமல் இன்று தலைதூக்கி நிற்கின்றது. அதில் கொஞ்சம் இடதுசாரி சிந்தனைகொண்டவர்கள் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டு பிழைப்புவாத கூத்தாடிக் கும்பல் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக செய்யும் தந்திரங்களை உண்மை என்று நம்பி, அதற்காக நேரத்தையும், உழைப்பையும் வீணாக்குவது அறிவீனமாகும். சில பேர் தெரியாமல் இதைச் செய்கின்றார்கள், ஆனால் பல பேர் தெரிந்தே விளம்பர நோக்கில் நக்கிப் பிழைக்கும் நோக்கில், இதனால் எதாவது வரும்படி கிடைக்காதா என இதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றார்கள்.

கோபி நயனார் ரஞ்சித்தால் மிக மோசமாக ஏமாற்றப்பட்டது ரஞ்சித்தின் கீழ்த்தரமான ஏமாற்று சிந்தனையை எப்படிக் காட்டுகின்றதோ, அதே போல நயன்தாராவை தோழர் என அழைத்தது அவரின் அம்பேத்கரிய சிந்தனையின் புரிதலை பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றது. அதை விளங்கிக்கொள்ளாமல் ரஞ்சித்தைப் பாராட்டுவதும், நயன்தாராவை தோழர் என ரஞ்சித் அழைத்ததை எந்த விமர்சன கண்ணோட்டமும் இன்றி வழிமொழிவதும் உண்மையில் அப்படி செய்பவர்கள் தோழர் என்ற வார்த்தையின் ஆழமான பொருளை அறியாத, பிழைப்புவாதத்திற்காக இடதுசாரி வேடமிடும் போலிகள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- செ.கார்கி