cbse 586

சி.பி.எஸ்.இ ன் 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள பகுதி- இந்திய கலாச்சாரம் பற்றியது, இதில் மடிசார் புடவைகள் கட்டியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு பெண்களாம்...

ஒருவேளை குடுமிகள் தான் தமிழ்நாட்டின் ஆண்கள் கலாச்சாரமாக இருக்குமோ?!...

கல்வியை அரசியல் சார்ந்ததாக மாற்றி, அதற்கான வரலாற்றை தவறாகப் பதிவு செய்து, அதன் மூலம் வெறுப்புணர்வை உருவாக்குவது 99.9% சாத்தியமான ஒன்றே.

ஹிட்லர் ஜெர்மனியில் பதவி ஏற்ற பின்னால் செய்த மிகப்பெரிய மாற்றம் அந்நாட்டு பாடத்திட்டத்தை மாற்றியதே. அந்த பாடத்திட்டத்தில் யூதர்கள் மிகக் கொடூரமானவர்கள், உழைக்கத் தெரியாதவர்கள் என தன் நாட்டு பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தார். இதற்கு அடுத்த கட்டமே யூதக்குழந்தைகள் பள்ளிகளை விட்டு ஒதுக்கப்பட்டனர். இப்படியான ஒதுக்குதலை சக மாணவர்களே விரும்பிய அளவுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கிக் காட்டினார். இந்த வெறுப்புணர்வை உருவாக்கியதே ஹிட்லரின் மிகப்பெரிய வெற்றி.

இந்தியாவின் அதிகத் தரம் வாய்ந்த பாடத்திட்டமாக சொல்லப்படும் International Board syllabus, Central Board syllabus ஆகியவை மசூதியின் பாங்கு ஒலியை மாசு எனவும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எல்லாம் மிக மோசமானவர்கள் எனவும், கிறிஸ்த்துவர்களை மதமாற்றம் செய்பவர்களாகவும் சித்தரிக்கிறது. வரலாற்றுப் பாடங்களில் ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் தடம் பதிவதற்குப் பதிலாக மோகன் பகவத்'களின் தடம் பதிந்து கிடக்கின்றன.

மாநில பாடத்திட்டங்களும் அடிப்படையில் இதைத் தான் கையாள்கிறது. இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பு, ஆரியர்கள் வருகை எனத் தொடங்கி சமஸ்கிருதத்தை சிவன் கொடுத்தார், தமிழை அகத்தியர் கொடுத்தார் என்பதிலிருந்து இப்படியாக போய்க்கொண்டே இருக்கிறது.

சார்பு பத்திரிக்கைகள் போல ஒரு சார்பு கல்வியாக இன்றைய கல்வி முறை மாறியிருக்கிறது.

மாநில அரசிற்கு கீழ் கல்விப் பட்டியல் இருக்கும் போது பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஓரளவிற்கு சாத்தியமானது. ஒவ்வொன்றாக திருத்தம் செய்து கொண்டு வரும் காலத்தில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை மாநிலத்தின் கையிலிருந்த கல்வியை பிடுங்கி பொதுப்பட்டியலில் ஒப்படைத்தது. இதன் பிறகு மத்திய அரசின் எண்ணத்திற்கு ஏற்பவே பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

மோடி அரசால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி கொள்கையானது தாய்மொழிக் கல்விக்கொள்கையை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறது. புதிய கல்விக்கொள்கை பட்டியலில் இந்திக்கும் சமஸ்கிருத மொழிக்கு மட்டும் ஏகபோக இடத்தை ஒதுக்கி விட்டு கிட்டத்தட்ட 100 மொழிகளுக்கான அழிவுப்பாதையை கட்டமைககிறது.

இன்றைய கல்வி முறை நிர்வாக நோக்கு கொண்ட ஒரு நிறுவனமாக மாறியிருக்கிறது. இதனால் இனி சமூகநீதி, மத நடுநிலை போன்ற வார்த்தைகள் நிறுவனத்தின் ஷரத்துகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

அபூ சித்திக்

Pin It