இந்திய அரசாங்கத்தின் அரசியல் அதிகாரத்தில் தலைமைப் பாத்திரத்தில் அமர்ந்துள்ள இந்தியப் பெருமுதலாளிகளின் வர்க்கத் தன்மை (character) குறித்து அறிய வேண்டியது முக்கியமானது. இன்று சமூக வலைத்தளங்களில் அது குறித்து விவாதம் நடைபெறுகிறது. அது மா - இலெ இயககத்தினரிடையே நடைபெறுவது இயல்பே. 

    1947ல் நேரடியாக அதிகாரத்தி்ல் அமர்ந்த இந்தியப் பெரு முதலாளிகள் 1944ல் Bombay Club என்றவாறு கூடியபோது மேற்கொண்ட முடிவை நேரு மூலமாக நிறைவேற்றிக் கொள்ளத் தொடங்கினர். அப்போது மூலதனப் பற்றாக்குறையில் இருந்த அவர்கள் பொருளாதாரத்தில் அரசின் பாத்திரத்தை முதன்மையாக்கி தமது தொழில்களுக்கான சந்தையை உருவாக்கி விரிவாக்கி திடப்படுத்திக் கொள்வதே அவர்களின் நோக்கம். அரசானதுஅதற்காகவே உள் கட்டுமானம், கன ரக தொழில்துறை, மூலதனப் பொருளுற்பத்தி தொழில்துறை, போக்குவரத்து, மின்சாரம், காப்பீடு, கல்வி, சுகாதாரம்  போன்ற துறைகளில் மூலதனமிட்டது. மறு புறத்தில் இத்துறைகளுக்கான மூலதனம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பெறுவதற்கு அப்போது நிலவிய அமெரிக்க முகாம் மற்றும் சோவியத் ஒன்றிய முகாம் இடையேயான முரண்பாட்டை பயன்படுத்தியது. இரு முகாம்களையும் மாறிமாறியும் அக்கம்பக்கமாகவும் பயன்படுத்தி இந்தியப் பெருமுதலாளிகளை வளர்த்துவிட்டது. இவர்களுக்கு சாதகமாக காப்பீட்டுத் துறையை நாட்டுடமையாக்கிய நேருவுக்குப் பின்னர் முக்கியமான 14 வங்கிகளை அதே காரணத்திற்காகவே இந்திரா காந்தி நாட்டுடமையாக்கி அவர்களின் மூலதனப் பற்றாக்குறையை ஈடுகட்டினார். அத்துடன் புதிதாக காப்பீட்டு நிறுவனங்களையும் தொழில்சார் கடன்களை இவர்களுக்கு மட்டு்ம் பிரத்யேகமாக உதவும் நோக்கில் IDBI, ICICI, IDFC போன்ற நிறுவனங்களையும் தொடங்கினார். இவ்வாறாக இந்திய ஆட்சியாளர்கள் தனியார் பெருந்தொழில் முதலாளிகளின் மூலதன வளர்ச்சிக்காக அதிகார வர்க்க தொழில் மற்றும் வங்கி/நிதி மூலதனத்தை வளர்த்தெடுத்தனர். 

     இந்திரா காந்தி அதே நோக்கத்தி்ற்காகவே 1980களின் தொடக்கத்தில் வேறு 8 வங்கிகளை நாட்டுடமையாக்கினார். இன்னொரு புறத்தில் போராட்டங்களினாலும் இந்தியப் பெருமுதலாளிகளின் சந்தை விரிவாக்கத் தேவையினாலும் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தினார். ராஜீவ் காலத்திலும் இது தொடர்ந்தது.  இதனால் இந்திய அதிகார வர்க்க மூலதனமும் தனியார் மூலதனமும் இணைந்த இந்தியப் பெரு மூலதனம் வளர்ந்தது. இதற்கிடையில் இலங்கை போன்ற அண்டை நாடுகளில் ஏற்கனவே இருந்த இந்தியப் பெருமுதலாளிகளின் மூலதனம் வளர்ந்தது. அத்துடன் புதிதாக நேபாளம், பங்களாதேஷ் முதலான அண்டை நாடுகளிலும் மூலதனம் விரிவடைந்தது. இந்திய விரிவாதிக்க அரசியல் இதை சாத்தியமாக்கியது. மேலும் புதிதாக தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பிர்லாவின் மூலதனம் பாய்ந்தது. அனைத்திலும் முக்கியமாக ஏகாதிபத்திய மூலதனமானது தர வரிசையில் 1947ல் இருந்ததை விட குறைந்து அந்த இடத்தில் அதிகார வர்க்க மூலதனம் முதலாம் இடத்தைப் பிடித்தது. ஏகாதிபத்திய மூலதனமோ மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இ்ந்திய தனியார் பெருமூலதனம் இரண்டாம் இடத்திலேயே இன்றும் நீடித்து வருகின்றது. 

     இந்தியப் பெருமூலதனம் 1947ல் அரசியல் அதிகாரத்தைப் பெற்றது முதல் அதிகார வர்க்க மூலதனத்தையும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாட்டையும் பயன்படுத்தி தன்னை ஒப்பீட்டளவில் திடப்படுத்திக்கொண்டு 1990களில் நுழைகிறது. 25 ஆண்டுகளுக்குப் பி்ந்தைய இன்றைய அளவுக்கு வலுவுடன் அன்று இல்லையென்றாலும் காலத்தால் பரிசோதிக்கப்பட்ட உத்தியான "நிலைமைக்கேற்ற கூட்டு அல்லது சமரசம்" என்பதையே ஏகாதிபத்திய மூலதனத்திடம் கடைப்பிடித்து இன்று "வளரும் ஏகாதிபத்தியம்" என்ற நிலையை அடைந்துள்ளது. 

    இன்று இந்தியாவானது G7 நாடுகளிலேயே முதலீட்டை மேற்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளது. 1. இந்தியாவானது அமெரிக்க கருவூலப் பத்திரங்களிலேயே அதிகமாக முதலீட்டை மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றாகும். 2. இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய G7 நாடுகளில் நேரடி அன்னிய முதலீட்டை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா ஐந்து இடங்களுக்குள் வருகிறது. 3. முந்நாளைய சோவியத் ஒன்றியத்தின் மூலதனம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இராணுவத்தளவாடங்கள், கன ரகத் தொழில்கள் ஆகிய துறைகளில் பெற்ற இந்தியா இன்று ரஷ்யாவில் அந்நாடு இங்கு மேற்கொண்டுள்ள முதலீட்டை விட இரு மடங்கை மேற்கொண்டுள்ளது. 4. அமெரிக்காவுக்கு எதிராக அமைந்துள்ள BRICS, SCO ஆகியவற்றில் இந்தியா முக்கிய உறுப்பு நாடாக உள்ளது. 5. உலகமயமாக்கலுக்கு முன் அண்டைப் பகுதியில் தெற்காசியாவில் அதிகமாக இருந்த இந்திய மூலதனமானது பின்னர் தென் கிழக்காசிய நாடுகளிலும் விரிவாகியுள்ளது.  6. இந்தியப் பெரு முதலாளியக் குழுமங்களான டாடா, ஆதித்ய பிர்லா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், இன்போசிஸ், விப்ரோ போன்ற குழுமங்கள் தமது வருவாயில் சுமார் 50 விழுக்காட்டை வெளிநாடுகளிலிருந்து பெறுகின்றன. 7. இந்தியப் பெருமூலதனத்திற்கு ஏதுவாக இந்திய வங்கிகள் பல கிளைகள வெளிநாடுகளில் திறந்துள்ளன. இ்ந்திய வங்கிகளை சார்ந்து வளர்ந்த இந்தியப் பெருமுதலாளிய குழுமங்கள் அதை விட மலிவாக ADR(American Depository Receipts), GDR(Global Depository Receipts), FCCB, கார்ப்பரேட் கம்பெனி பத்திரங்கள் போன்ற வடிவங்களில் தமக்கான மூலதனத்தை கடந்த ஆண்டுகளாக திரட்டி வருகின்றன. இந்தியப் பெருமுதலாளிய குழுமங்கள் வெளி்நாட்டு வங்கிகளில் மட்டுமல்லாது இவ்வடிவங்களில் மூலதனத்தை திரட்டுவதற்கு சாத்தியமாவதற்கு காரணம் யாதெனில் ஏற்கனவே அவை திரட்டி வைத்துள்ள மூலதனம், சந்தை ஆகியவற்றின் பலமே ஆகும். 

            அனைத்தையும் விட முக்கியமானது என்னவெனில் உலகமயமாக்கலுக்கு முந்தைய இந்தியாவில் முதன்மையான நிதி மூலதன வடிவம் என்பது அதிகார வர்க்க வங்கி மூலதனமும் காப்பீட்டு மூலதனமுமே ஆகும். பின்னர் 25 ஆண்டுகள் கழித்து பரஸ்பர நிதியங்கள்(Mutual Funds- உள்நாட்டு பரஸ்பர நிதியங்களின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு இந்திய வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைகளில் ஐந்தில் ஒரு பங்காகும்), மேலே பார்த்த கார்ப்பரேட் பத்திரங்கள் அல்லாமல் Commercial Papers, Non-Banking Financial Companies(NBFCs), Asset Reconstruction Companies(ARCs), Asset Under Management (AUM) உள்ளிட்ட வடிவங்களில்/வடிவங்களிலான நிதி நிறுவனங்களின் வாயிலாகவும் மூலதனம் திரட்டப்படும் வகையில் அது நிதிமயமாகிவருகிறது. மேல் நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரியை அதிகமாக செலுத்துவதை தவிர்க்க அல்லது குறைக்க மேற்காணும் வடிவங்களில் முதலீட்டை பரவலாக மேற்காெள்கின்றனர்.

இந்தியாவில் மூலதனமானது நாள்தோறும் நிதிமயமாகி வருகிறது. இந்நிலையில் இத்துணை பெரிதாக வளர்ந்துள்ள இந்தியப் பெருமூலதனத்தின் தன்மையை மிகவும் குறுக்கி தரகுப் பெருமூலதனம் என இன்னமும் சொல்லப்படுகிறது. இந்தியப் பெருமூலதனமானது தனது பலத்தின் நிலைமையிலிருந்து ஏனைய ஏகாதிபத்திய மூலதனத்தோடு சமரசத்தை மேற்கொள்வதை (முழுையான)சரணடைவு என்றோ அடிவருடித்தனம் என்றோ காட்டப்படுகிறது. 1960கள் முதல் சொல்லப்படும் தரகுப் பெருமுதலாளியம் என்ற வரையறுப்பு செய்யப்பட்ட காலத்தில் மேனிலை வல்லரசுகளாக இருந்த அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இன்று இந்தியா அந்நாடுகளில் முதலீட்டாளராகவும் மாறியுள்ளது. அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் முக்கிய முதலீட்டாளராக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியா இருந்து வருகிறது; ரஷ்யாவானது இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதலீட்டை விட இந்தியா அங்கு இரு மடங்கு முதலீட்டை அதிகமாக செய்துள்ளது. இத்தகைய நிலையில் இந்தியப் பெருமூலதனமானது வளரும் ஏகாதிபத்திய மூலதனத்தின் தன்மையை கொண்டுள்ளது என உறுதியாக கூறலாம்.

- பாஸ்கர்

Pin It