(சோவியத் எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி தமது அமெரிக்கப் பயணத்தின்போது ஒரு ‘நல்லொழுக்கச் சங்கத்தின்’ உறுப்பினரைச் சந்தித்தார். இருவரின் உரையாடலும் இங்கே சுருக்கித் தரப்படுகிறது.)

...முந்தைய பகுதி

“பொருளாதார முரண்பாடுகள் வெட்ட வெளிச்சமாகத் தெரியக் கூடிய இடத்தில் நல்லொழுக்கக் கட்டுப்பாடு எப்போதும் மிகவும் கடுமையாகவே இருக்கிறது. என்னிடம் அதிகப் பணமிருந்தால், நான் அதிகக் கண்டிப்பான நல்லொழுக்கவாதியாக இருக்கிறேன். இதனால்தான் பணக்காரர்கள் நூற்றுக்கு நூறு நல்லொழுக்கத்தை வற்புறுத்துகிறார்கள். நான் சொல்வது புரிந்ததா?”

“புரிந்தது. ஆனால், இதிலே சங்கம் என்னத்துக்காக வந்ததாம்?”

“பொறுங்கள் நல்லொழுக்கத்தின் நோக்கம் என்னவென்றால், உங்கள் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று ஒவ்வொருவன் மனத்திலும் பதியும்படி சொல்வதுதான். உங்களுக்கு ஏராளமாகப் பணம் இருக்கும். என்றால் உங்களுக்கு ஏராளமான ஆசைகள் உண்டாகின்றன. அவற்றைத் திருப்தி செய்ய பரிபூரணமான சந்தர்ப்பங்களும் இருக்கின்றன இல்லையா? ஆனால், நல்லொழுக்க விதிகளை மீறாமல் அநேக ஆசைகளை உங்களால் திருப்தி செய்து கொள்ள முடியாது. அதே சமயம் நீங்கள் புறக்கணித்துத் தள்ளுவதை மற்றவர்களுக்கு நீங்கள் உபதேசம் செய்யவும் முடியாது. அது ஆபாசமாகவும் இருக்கும். அப்புறம் ஜனங்களும் உங்களை நம்பாமல் போய்விடலாம். என்ன இருந்தாலும் அவர்கள் எல்லோரும் முட்டாள்கள் இல்லையே. இப்படிப்பட்ட நிலையில் உங்களை ஒரு பிரச்சினை குறுக்கிடுகிறது. ‘இன்பம்’ தரும் பாவகிருத்தியங்களைச் செய்யக் கூடாது என்று போதித்துக் கொண்டு, அதே சமயத்தில் நீங்கள் மட்டும் விதிவிலக்கு தேடிக் கொள்வது எப்படி? உங்கள் உபதேசத்துக்கு இசைந்துபோக உங்களால் முடியுமோ?

Maxim Karki“உதாரணமாகத் ‘திருடக்கூடாது’ என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் அதைக் கொஞ்சங்கூட விரும்பவில்லை. ஜனங்கள் உங்கள் சொத்தைத் திருட ஆரம்பித்தால் அதை நீங்கள் விரும்புகிறீர்களா? ஆனால் அதே சமயத்தில் உங்களுக்குச் சொத்து இருந்தபோதிலும் இன்னும் கொஞ்சம் சொத்து திருட வேண்டும் என்று உங்களுக்கு அடக்க முடியாத ஆசை உண்டாகிறது. “கொலை செய்யாதே; பலாத்காரம் கூடாது” என்று உரத்த சத்தத்துடன் உபதேசிக்கிறீர்கள். ஏனென்றால் உயிரை நீங்கள் மதிக்கிறீர்கள். அது சந்தோஷமாகவும் சுகானுபவமாகவும் இருக்கிறது. ஆனால், என்றாவது ஒரு நாள் உங்கள் - ‘ஆலை’ வேலை செய்யும் தொழிலாளிகள் உங்கள் லாபக் கணக்குகளை நன்றாக அறிந்தவர்கள் கொஞ்சம் சம்பளத்தை உயர்த்தக் கோருகிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆயுதப் படையை வரவழைக்கிறீர்கள். அப்புறம் பல தொழிலாளிகள் கொல்லப்படுகிறார்கள்.

இந்தக் காரியங்கள் யாவும் உங்கள் உபதேசத்துடன் - சகோதர அன்பு, பாவம் செய்யாமை, ஒழுக்கமுடைமை முதலியவற்றைப் போதிக்கும் உங்கள் உபதேசத்துடன் - முரண்பாடானதுதான். ஆனால், தொழிலாளிகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு நீங்கள் நியாயம் கற்பிக்க முடியும். எப்படி? அரசாங்கத்தின் நலன்களை எடுத்துக் கூறுவதன் மூலமாகத்தான். பணக்காரர்கள் நலன்களுக்கு மக்கள் தலைகுனியா விட்டால், எந்த அரசாங்கம் உயிருடன் இருக்க முடியும்? அரசாங்கம் என்றால் நீங்கள் (பணக்காரர்கள்) தாம்!

“பொதுவாகப் பார்த்தால் பணக்காரனுடைய நிலைமை பரிதாபமாகவே இருக்கிறது. ஒவ்வொருவனும் தன்னை நேசிக்க வேண்டும் என்பது ஜீவாதாரமான சங்கதியாக இருக்கிறது. அத்துடன் அவனுடைய சொத்தை ‘அபகரிக்க’ யாரும் திட்டம் போடக் கூடாது; அவனுடைய பழக்கவழக்கங்களில் தலையிடக் கூடாது. அவனுடைய மனைவியின், சகோதரியின் புதல்விகளின் கற்பை நன்கு மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அவன் மட்டும் ஜனங்களை நேசிக்க வேண்டும் என்றோ, பெண்களின் கற்பை மதிக்க வேண்டும் என்றோ, இப்படியே பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்றோ யாதொரு அவசியமும் கிடையாது... அவனுடைய வாழ்க்கை முழுவதுமே திருட்டாகத்தான் இருக்கிறது. இது ஒரு நியதியாகவும் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்களையும் தேசம் முழுவதையும் அவன் திருடுகிறான். மூலதனம் வளருவதற்கு - அதாவது ‘நாடு முன்னேறுவதற்கு - அது மிக அவசியமாக இருக்கிறது; இல்லையா? அத்துடன் அவன் டஜன் கணக்கில் பெண்களின் கற்பைக் குலைக்கிறான். அவகாசம் உள்ள ஒரு மனிதனுக்கு அது ஓர் இன்பமான பொழுது போக்கு. அவன் யாரை நேசிப்பது? அவனைப் பொறுத்தமட்டிலும், ஜனங்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து காட்சியளிக்கிறார்கள் ஒரு பிரிவினர் அவனால் திருடப்படுகிறவர்கள் மற்றொரு பிரிவினர் அவனுக்குப் போட்டியாகத் திருடுகிறவர்கள்.

ஆகவே பணக்காரனுக்கு நல்லொழுக்க வாதம் பயனுடையதாகவும், ஜனங்களுக்குக் கெட்டதாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் பணக்காரனுக்கு அது இடைஞ்சலாகவும், மற்றவர்களுக்கு அவசியமாகவும் இருக்கிறது. இதனால்தான் பணக்காரர்கள் ஜனங்களின் மூளைக்குள் தர்மோபதேசங்களைத் திணிக்க முயலுகிறார்கள். தாங்கள் மட்டும் இந்தச் ‘சரக்கு’களை ‘டோப்பா’ மாதிரியும், கையுறை மாதிரியும் வெளியலங்காரமாக அணிந்து கொள்கிறார்கள். சமூகத்தின் கீழ்த்தட்டில் உள்ளவர்களின் நடத்தையைக் கொண்டு மேல் தட்டில் உள்ள வர்க்கத்தினர் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். ஆனால், அதே நடத்தை பணக்காரர்களின் ‘சுதந்திரத்தை’யும் ஒடுக்கி விடுகிறது.

பணக்காரர்களிடம் பணம் இருக்கிறது. அப்படி என்றால் நல்லொழுக்கத்தைப் பற்றி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் இஷ்டப்படியெல்லாம் வாழ அவர்களுக்கு உரிமை உண்டு என்று அர்த்தம். வளப்பமான மண்ணில் களைகள் செழிப்பாக வளர்கின்றன. அளவுக்கு மீறிய செல்வத்தில் ஒழுக்கப் பிசகு நன்றாகத் தழைக்கிறது. அப்படியானால் செய்ய வேண்டியதென்ன? நல்லொழுக்க வாதத்தைப் புறக்கணித்துத் தள்ளுவதா? கூடாது. அது அவசியமானது.

உங்கள் நன்மையை முன்னிட்டு ஜனங்களை நல்லொழுக்கக் கோட்டுக்குள் நிறுத்திவிட்டு, நீங்கள் பாவ கிருத்தியங்களைத் திரைமறைவில் செய்து கொள்ள ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஆகவே, நியூயார்க்கில் ஒரு கூட்டத்தினர் ஓர் அருமையான யோசனை செய்திருக்கிறார்கள். நன்கொடைகள் மூலம் போதுமான மூலதனம் திரட்டப்பட்டிருக்கிறது. பொதுஜன அபிப்பிராயத்தை மயங்க அடிப்பதற்காகப் பற்பல நகரங்களிலும் சங்கங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. என்னைப் போலப் பலரக மனிதர்களை அவர்கள் சம்பளத்தில் அமர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.”

“சங்கங்களின் நோக்கம் எனக்கு இன்னதென்று இன்னும் தெரியவில்லையே.”

“அது மிகவும் சாதாரணம்தான். கீழ்த்தட்டில் உள்ள மக்கள் அதிகமாகப் பாவம் செய்வதில்லை. அதுக்கு வாய்ப்பும் இல்லை வசதியும் இல்லை. சட்டம் தெய்வம் இரண்டும் அவர்களை வசமாக மிரட்டிக் கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் வேறொரு பக்கத்தில் நல்லொழுக்கத்துக்கு விரோதமாகப் பாவகாரியங்கள் சிலருக்கு அவசியத் தேவையாக இருக்கிறது. அதுக்காக நல்லொழுக்கம் என்பது மாயவிலங்கு என்று சொல்லிவிட முடியுமா? சொத்துரிமைக்கும் சுரண்டலுக்கும் அதனால் ஆபத்து வந்து விடாதா? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? ஒழுங்குபற்றி, தர்மம் பற்றி, தெய்வம் பற்றி நிரந்தரமாகக் கூச்சல் போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அந்தக் கூச்சல் பொதுமக்களைச் செவிடாக்கி அவர்கள் உண்மையை அறியவொட்டாதபடி தடுத்துவிடும் சிறுசிறு சிலும்புகளாக ஏராளமாக எடுத்து ஓர் ஆற்றில் போட்டால் அதன் மத்தியில் ஒரு பெரிய மரக்கட்டை கூட கண்ணுக்குத் தெரியாதவாறு மிதந்து செல்ல முடியும். எங்கள் சங்கம் என்ன செய்கிறதென்றால், பெரிய குற்றங்களைத் திரைபோட்டு மூடுவதற்காக, எத்தனையோ சின்னஞ்சிறு குற்றங்களை ஏராளமாகச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறது.”

“உதாரணமாக, பிரபலமான செல்வந்தன், தன் மனைவியைத் துன்புறுத்தி அவமானப்படுத்தி விட்டான் என்று ஊரெங்கும் லேசாகச் செய்தி பரவுகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே சங்கம் என் மாதிரியுள்ள ஏஜெண்டுகளை அழைத்து எங்கள் மனைவிமாரை அடிக்கவும் அவமானப்படுத்தவும் கட்டளைபோடும், அவ்விதமே நாங்கள் மனைவிமாரை அடிக்கிறோம். எங்கள் பெண்களுக்கும் இந்தத் தொழில் ரகசியம் தெரியும். அதனால் அவர்கள் முடிந்த மட்டும் காட்டுக் கூப்பாடு போடுகிறார்கள். பத்திரிகைகள் யாவும் இந்தச் செய்தி பற்றி எழுதுகின்றன. பத்திரிகைகள் செய்கிற இந்தப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் பிரபல மனிதன் தன் மனைவியைத் துன்புறுத்திய விஷயம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போய்விடுகிறது.

மந்திரிக்கோ, சட்டசபை அங்கத்தினர்களுக்கோ லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ரகசியத் தகவல் கிளம்பத் தொடங்குகிறதென்றால், உடனே சங்கம் லஞ்சக் கேஸ்களை உற்பத்தி செய்யத் தொடங்கும். சிறு சிறு உத்தியோகஸ்தர்களுக்கு லஞ்சத்தைக் கொடுத்து, அவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பகிரங்கப்படுத்தும். இதே உபாயம்தான் ஒவ்வொரு விஷயத்திலும் கடைப்பிடிக்கப்படும். எல்லாப் பெரிய குற்றங்களும் அற்பக் குற்றங்களின் கீழே மறைக்கப்படுகின்றன. இந்த வேலையைத்தான் சங்கம் செய்கிறது. சமூகத்தின் மேல் வர்க்கத்தினரைப் பொது ஜனத் தீர்ப்பு பாதிக்காதபடி சங்கம் காப்பாற்றுகிறது. இதனால் ஒழுக்ககேடுகளைப் பற்றிப் பெருங்கூச்சலைக் கிளப்புவதனால் பணக்காரர்களின் பாவங்களுக்கு உறைபோட்டுவிடப் படுகிறது.

நிரந்தரமாக மக்கள் ஹிப்னாடிஸ சக்திக்கு அடங்கி மூளை மயங்கிக் கிடக்கிறார்கள். சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. ஆகவே, பத்திரிகைகள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு ஏமாந்து போகிறார்கள். பத்திரிகைகள் கோடீஸ்வரர்களுக்குச் சொந்தமானவை. சங்கமும் அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விஷயம் விளங்கியதா? அமைப்பு எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது?”