2020 ஜூலை மாதம் 94ஆக இருந்த டாலர் குறியீட்டின் மதிப்பு ஆகஸ்டில் 92.31ஆகச் சரிந்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து இது வரை 10 சதவீதத்துக்கு மேல் டாலர் மதிப்பிழந்துள்ளது. யூரோ, தங்கம், பிட்காயின் ஆகியவை மதிப்பேற்றம் பெற்று வருகின்றன.

அமெரிக்காவின் அதிகரித்து வரும் கடன் நிலையும், கோவிட் தாக்குதலை அந்நாடு முறையாகக் கட்டுப்படுத்தத் தவறியதும், தனது தவற்றை மறைக்க உலக சுகாதார அமைப்பின் மீது பழி சுமத்துவதும், தனது தலைமையை நிலை நிறுத்த சீன வெறுப்பையே முதலீடாக்குவதும், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதும் எதேச்சதிகாரப் போக்குடன் உலகையே தன் கட்டுக்குள் கொண்டுவர முயல்வதும்… என எல்லா வகையிலும் அமெரிக்கா ஒரு தவறான முன்னுதராணமாக உள்ளது உலக அளவில் முதலீட்டாளர்களுக்கு டாலர் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.

2008 பொருளாதார மந்தநிலைக்குப் பின் கணிசமான அளவில் டாலர் முதலீடுகளிலிருந்து சீனாவும் ஜப்பானும் வெளியேறின. அமெரிக்காவின் பொருளுற்பத்தியும், ஏற்றுமதி மதிப்பும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. புகழின் நிழலிலேயே டாலரால் தன் பொருளாதார மேலாதிக்கத்தை எவ்வளவு காலம் நீட்டிக்க முடியும்.

சீனா தன் ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்காக அதன் நாணயத்தை மதிப்பிழக்கச் செய்கிறது என்று தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தார் டிரம்ப். உண்மையில் நாணய மதிப்பிழப்பின் மூலம் அதிக வருவாய் பெறலாம் என்ற முதலாளித்துவக் கொள்கை மறுபரிசீலனைக்குரியது. நாணய மதிப்பிழப்பின் மூலம் நாட்டின் மொத்த மதிப்புருவாக்கத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால் இழப்பில்லாமல் கிடைக்கும் வெகுமதி அல்ல அது.

அந்த நாட்டின் உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தாமல்  நாணய மதிப்பிழப்பின் மூலம் ஏற்றுமதியை அதிகரித்தல் என்பது சாத்தியமற்ற ஒன்று. நாணய மதிப்பிழப்பினால் தொழிலாளர்தம் கூலியின் மதிப்பு குறைகிறது, இதுவே சர்வதேச அளவில் போட்டியிடும் அளவிற்கு மலிவு விலையில் ஏற்றுமதியைச் சாத்தியமாக்கக் காரணமாகிறது.

நாட்டின் ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கலாம் ஆனால் உழைக்கும் மக்களே இதன் பின்னணியில் இழப்பவர்களாக உள்ளனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பார்கள், அது போல்தான் அமெரிக்கா டாலரை மதிப்பிழக்க வைத்து ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறது அதே நேரத்தில் டாலர் மதிப்பிழக்காமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய சேமிப்பு ஊடகமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறது. இது முற்றிலும் முரண்பட்ட நிலை.

தனது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியையோ ஏற்றுமதியையோ அதிகரிக்காமல் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விட்டு அதனால் மற்ற நாடுகள் வருவாய் பெறுவதையும் காணச் சகியாத நிலையில்தான் அமெரிக்கா இருக்கிறது, சீனாவின் மலிவான பொருட்களால் அமெரிக்க நுகர்வாளர்கள் பயனடைந்தார்கள் எனக் கருதாமல், சீனா அதிக ஏற்றுமதி வருவாயை பெறுவதைத் தடுக்க வேண்டும் எனக் கருதி, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்று திட்டமிடும் ஈனத்தனமான கொள்கையுடையவர் அங்கே தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்.

சீனாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதுடன் அதன் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உலகெங்கும் சீன வெறுப்பைப் பிரசாரம் செய்து வருகிறது அமெரிக்கத் தலைமை.

நவீன தாராளமயச் சந்தை தடையற்ற வர்த்தகத்தையே பரிந்துரைக்கும் போது, அமெரிக்கா அதன் தலைமைப் பாதுகாவலனாக இருந்து கொண்டே தனது நாட்டிற்கு வரும் இறக்குமதிகளை காப்பு வரிகளால் தடை செய்வது முற்றிலும் பாரபட்சமான போக்கு, தனக்கு இலாபம் வரும் போது தடையற்ற வணிகம், இல்லையென்றால் காப்புத் தடை என்ற முரண்பாடுகளின் உச்சகட்டமான கொள்கை நடைமுறைகளைக்  கொண்டுள்ளது அமெரிக்கா.

உலகமயமாதலை உலகெங்கும் கடைப்பிடிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கும் அமெரிக்கா தன் நாட்டில் தற்சார்பையும் மூடிய பொருளாதாரக் கொள்கைகளையும் கடைப்பிடிக்கிறது. இந்த முரணான போக்கும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சகட்டுமேனிக்கு பொருளாதாரத் தடைகளையும் போர்களையும் தொடுக்கும் அமெரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கை நிலைப்பாடும், டாலரின் நிலைத்தன்மையை மேலும் பாதிக்கும் போக்கையே ஏற்படுத்தும்.

1999இல் யூரோ வெளியிடப்பட்ட போது அது விரைவில் டாலருக்கு நிகராகப் பயன்படுத்தப்படும் என்றே கருதப்பட்டது. யூரோவிற்கு எதிராக டாலரும் மதிப்பிழந்தது என்ற போதும், 2008 பொருளாதார  நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பாவில் ஏற்பட்ட கடன் நெருக்கடியால்  யூரோ டாலருக்கு எதிராக 20%க்கும் மேல் மதிப்பிழந்தது.

இன்று உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயங்களில் இரண்டாவது இடத்தில் யூரோ உள்ளது. 2019இல் உலகளவிலான அந்நியச் செலவாணி இருப்புகளில் அமெரிக்க டாலர் 60.89 சதவீத அளவிலும், யூரோ 20.54 சதவீத அளவிலும் ரென்மின்பியில் 1.96 சதவீத அளவிலும் உள்ளது.

உலகளவில் வர்த்தகங்களுக்கான கட்டணங்களும், சரக்குப் பொருள்களின் விலைப் பட்டியல் வெளியீடும் டாலருக்கு நிகராக 40 சதவீதத்துக்கு மேல் யூரோவில் செய்யப்படுகிறது என்கிறது ஐரோப்பிய மத்திய வங்கி. ஆனாலும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பரிவர்த்தனைகள் பெருமளவில் டாலரிலேயே செய்யப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் ¾ பகுதி டாலரிலே செய்யப்படுகிறது, அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இறக்குமதியில் 90 சதவீதம் டாலரிலே செய்யப்படுவதாக சர்வதேசப் பண நிதியம் குறிப்பிட்டுள்ளது. உலக ஜிடிபியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்கு 15%. சர்வதேச வர்த்தகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு 25%. 60க்கும் மேற்பட்ட நாடுகளால் யூரோ பயன்படுத்தப்படுகிறது.

எரிஆற்றல் சந்தையில் இன்றும் அமெரிக்க டாலரே மேலாதிக்கம் செலுத்துகிறது. இதற்கு பெட்ரோடாலர் ஏற்பாடே முக்கியக் காரணமாகும். ஐரோப்பிய யூனியன் உலகின் மிகப்பெரும் எரிஆற்றல் இறக்குமதியாளராக உள்ள போதும் இவை இன்னும் பெருமளவில் டாலரிலேயே செய்யப்படுகின்றன. 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரென்மின்பியில் மதிப்பிடப்படும் ஷாங்காய்  கச்சா எண்ணெய் எதிர்கால  ஒப்பந்தங்களின் வர்த்தக அளவில் கணிசமான அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழலில் முதன்மையான உலகப் பணமாக உயர டாலருக்குப் போட்டியாக உள்ள நாணயமாக யூரோ உள்ளது. டாலருக்கு மாற்றாக யூரோ உலகப் பணமாகும் சாத்தியப்பாடுகள் இருக்கலாம், ஆனால் இவை யாவும் ஒரு நாளிலே நடந்தேறும் மாற்றங்கள் இல்லை. காலப்போக்கில் இத்தகைய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டாலர் மேலாதிக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை யூரோ உலகப் பணமானால் சரியாக்கி விடுமா என்ற கேள்வியும், ஜனநாயகமான நாணயமாக யூரோவை கருத முடியுமா என்ற கேள்வியும் அடுத்தடுத்து தொக்கி நிற்கிறது.

டாலருக்கு ஒரு நாணயம் மட்டும்தான் மாற்றாக இருக்க வேண்டும் என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்குப் புறம்பானதுதான். ஆனால் நடப்பிலுள்ள முதலாளித்துவ அமைப்பே ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் முற்றுரிமையை அடையும் போக்குடன்தானே செயல்படுகிறது! யூரோவாலும் பிரச்சனைகள் இல்லாமலில்லை. ஐரோப்பியப் பகுதியில போர்களை தவிர்க்கவும், ஒருங்கிணைந்த பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கும் ஐரோப்பியப் பொருளாதார சமூகம் 1957இல் உருவாக்கப்பட்டது.

1993 ல் அது ஐரோப்பிய ஒன்றியமாக விரிவடைந்து சரக்குப் பொருட்கள், சேவைகள், மூலதனம், உழைப்புச் சக்தி ஆகிய அனைத்திற்குமான தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்த காப்பு வரிகளையும், ஒழுங்குமுறைகளும் நீக்கி, அமெரிக்க, ஜப்பான் பொருளாதாரங்களுக்கு போட்டியாக ஒரு பெரும் சந்தை உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் தற்பொழுது  27 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் டாலர், ஜப்பானின் யென் ஆகியவற்றுக்குப் போட்டியாகத் தங்கள் நாணயத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் 1999ல் யூரோவை அறிமுகப்படுத்தி ஒற்றை நாணயச் சந்தையானது. ஐரோப்பிய நாணய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒரே நாணயத்தையும், பணக் கொள்கையையும், கடைபிடிக்க வேண்டும் என்ற கடப்பாடுடையவை. உறுப்பு நாடுகளின் அரசுக் கடன் மொத்த ஜிடிபியில் 60%க்கு மேல் அதிகமாகக் கூடாது.

நிதிப் பற்றாக்குறை 3%க்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டுள்ளது. ஒரு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டுமானால் அதன் பொருளாதாரத்தை நவீன தாராளாமயக் கொள்கைகளின் அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும். அரசின் தலையீடற்ற சந்தைப் பொருளாதாரத்தை உறுதி செய்ய வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைக் கூடுமான அளவிற்கு தனியார்மயப்படுத்த வேண்டும், அரசு நிர்வாக அமைப்பைக் குறுக்க வேண்டும், காப்பு வரிகளை நீக்க வேண்டும்.

ஐஸ்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் தங்கள் மீன்பிடித் துறைமுகங்களையும், இயற்கை வளங்களையும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தாரை வார்க்காமால் தங்கள் இறையாண்மையைக் காக்க விரும்பியதாலே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவில்லை. 1992இல் சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை 50.3%பேர் ஆதரிக்காததால் சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் 2016இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாக வாக்களித்தும், இன்னும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தெளிவு பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் டாலருக்கு யூரோ கடும் சவாலாக இருந்ததால் டாலரின் மதிப்பு சரிந்தது. ஆனால் 2008 பொருளாதார மந்தத்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் யூரோவின் மதிப்பு டாலருக்கு எதிராக 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்தது. யூரோ மதிப்பிழப்பது சர்வதேச அளவில் அதன் போட்டியிடும் திறனை அதிகரிக்கும் என கருதப்பட்டாலும், அது டாலருக்கு எதிராக மதிப்பேற்றம் பெறுவது செல்வந்தர்களின், அந்நிய முதலீட்டாளர்களின் செல்வச் சேமிப்பு ஊடகமாக யூரோ இருப்பதற்கான அதன் நம்பிகத்தன்மையை அதிகரிக்கும். அதுவே நீண்ட கால அளவில் யூரோ உலகப் பணமாகுமா என்பதை நிர்ணயிக்கும் முக்கியக் காரணியாகவும் அமையும்.

யூரோ பயன்பாட்டுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் அது உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறியதா? யூரோ பயன்பாட்டால் ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த சமூக, பொருளாதார அரசியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஐரோப்பிய ஒற்றை நாணயச் சந்தை அதன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை ஏனெனில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகளை அனைத்து நாடுகளிலும்  நடைமுறைப்படுத்தவில்லை. அவற்றின் பொருளாதார வளர்ச்சி ஒருங்கிணைந்து மேம்படுவதற்கு பதிலாக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி பிரிவினைவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

உற்பத்திச் சக்திகளில் வளர்ச்சி பெற்ற நாடுகளே இதனால் அதிகம் பயனடைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமானது அதிக உற்பத்தித் திறனும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்ட ஜெர்மனிக்கே சாதகமாக அமைந்தது. தெற்கு மற்றும் கிழக்கு நாடுகள் குறைவாகவே பலனடைந்துள்ளன. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பலனடைந்தவை தொழில்மையமான நகர்ப்புறங்களே. கிராமப்புறங்கள் இதனால் பலனடையவில்லை.

இந்த ஒற்றைச் சந்தையின் மூலம் ஜெர்மனியின் நிகர வேண்டலுக்கான பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, அரசுக் கடன், வேலையின்மை போன்ற பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு பெறப்பட்டது, ஜெர்மனியின் சந்தையாக மற்ற ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டன. அதே போல் நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் சிறிய உள்நாட்டு சந்தையுடன் இருப்பதால் ஐரோப்பிய சந்தையால் அந்நாடுகளும் பெரிதும் பலனடைந்தன.

ஜெர்மனியின் ஃபிரிய்பெர்கில் உள்ள ஐரோப்பியக் கொள்கை மையம் வெளியிட்ட யூரோவின் 20 ஆண்டுகள் என்ற ஆய்வு யூரோவால் அதிகமாக பயனடைந்தது ஜெர்மனிதான் என்று குறிப்பிடுகிறது, இத்தாலியும் பிரான்ஸும் இதனால் செல்வ இழப்புக்குள்ளாகியதாகவும் கூறுகிறது. யூரோ பயன்பாட்டால் 1999க்கும் 2017க்கும் இடைப்பட்ட பகுதியில் ஜெர்மனி 1.9 இலட்சம் கோடி யூரோ (2.1 இலட்சம் கோடி டாலர்) பலனடைந்ததாக இந்த ஆய்வு கூறுகிறது.

அலெஸ்ஸன்றொ கஸ்பரொட்டி மற்றும் மத்தியஸ் குல்லஸ் ஆகியோர், யூரோ பயன்பாட்டால் யார் பலனடைந்தனர், யார் இழந்தனர் என்பது குறித்துச் செய்த இந்த ஆய்வில் ஜெர்மனியும், நெதர்லாந்தும்தான் யூரோவால் அதிகம் பலனடைந்த நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒற்றை நாணயக் கொள்கை இல்லை என்றால் மற்ற நாடுகளும் தங்கள் நாணயங்களை மதிப்பிழக்க செய்து குறைந்த விலையில் அதிக பொருட்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்ய முடியும்..

சர்வதேச அளவில் நாடுகளின் போட்டியிடும் திறனை இந்த ஒற்றை நாணயக் கொள்கை பாதிப்பதே இதற்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் நாம் ஏற்கெனவே கூறிய படி நாணய மதிப்பிழப்பால் பொருளுற்பத்தி குறை மதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது. யூரோ நாடுகள் வேறுபட்ட போட்டித் திறனுடன் காணப்படுகின்றன.

கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தங்கள் நாணயங்களை மதிப்பிழக்க செய்யாததால் பெரிதும் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஒற்றைச் சந்தையால் ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனி 75 பில்லியன் டாலர், 86 பில்லியன் யூரோ இலாபமடைகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையற்ற வர்த்தகக் கொள்கையால் ஜெர்மனியிடமிருந்து, மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிகம் ஏற்றுமதி செய்து வர்த்தகப் பற்றாக்குறையுடன் காணப்படுகின்றன. சொத்துக்களை விற்றும், கடனின் மூலமும் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடு செய்வதால் இவை கடனாளி நாடுகளாக உருமாறியுள்ளன, இந்நாடுகளின் சொத்துகளில் ஜெர்மனி மற்றும் வட ஐரோப்பிய நாடுகளின்  ஊக நிதிமூலதனங்கள் முதலீடு செய்யப்பட்டு சொத்துக் குமிழிகள் உருவாக்கப்படுகின்றனவே தவிர  உற்பத்தித்திறனை மேம்படுத்தும் விதத்தில் முதலீடு செய்யப்படுவதில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்னாடுகள் கடனாளிகளாக உள்ளன. ஜெர்மனி வர்த்தக உபரியுடன் வளர்ச்சி பெற்றது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இன்னும் சரியாகவே பொருந்தும்.

பொதுவாகத் தடையற்ற வணிகத்தை ஆதரிக்கும் விதமாக ரிக்கார்டோவின் ஒப்பீட்டு அனுகூலம் (Comparative advantage) என்ற கோட்பாட்டை முதலாளித்துவ அறிஞர்கள் முன்வைப்பார்கள் இதன் படி தடையற்ற வணிகத்தில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுமே பயனடையும் (win-win) என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தக் கோட்பாடு அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது, சம அளவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த  நாடுகளுக்கு மட்டுமே தடையற்ற வர்த்தகம் சாதகமாக அமையும், ஏனெனில் அந்நாடுகளால் மட்டுமே அதிக உற்பத்தித் திறனுடன் மலிவாகப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். மாறுபட்ட பொருளாதார வளர்ச்சி நிலையில் உள்ள நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகம் ஏற்பட்டால் அது வளர்ந்த நாடுகளுக்கே சாதகமாக அமையும், வளர்ச்சி குன்றிய நாடுகள் பாதிக்கப்படும் என்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.

2008இல் அமெரிக்காவில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவிற்கும் பரவியது. அதற்கு முன் வளரும் நிலையில் இருந்த போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளாகின. இந்நாடுகளின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்து பன்றி எனப் பொருள்படும் வகையில் பிக்ஸ் (PIIGS) என்ற குறியீட்டுச் சொல்லால் இழிவுபடுத்திக் கேலிக்குள்ளாக்கப்பட்டன.

தென்னாடுகள் திறனற்ற, ஊதாரித்தனமான சோம்பேறிகளின் நாடுகள் என்பது போல் இழிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன, இந்நாடுகள் கடனாளிகளாகித் தம்  பொருளாதார இறையாண்மையை இழந்தன. இந்நாடுகள் கடனிலிருந்து மீட்சி பெறக் கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நவீன தாராளமய நிறுவனங்களால் கட்டளையிடப்பட்டன. அதன் படி அரசு செலவினங்களைக் குறைத்து வரியை உயர்த்துமாறும் பணிக்கப்பட்டன.

இதனால் பொருளாதாரம் சுருங்கி வளர்ச்சி குன்றியது, அரசு வருவாயும் சுருங்கியது. ஆனால் அரசின் கடன் மட்டும் அதிகரித்து கொண்டே வருகிறது, வேலையின்மை விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால் கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் மற்ற நாடுகளைக் காட்டிலும் கடும் பாதிப்புக்குள்ளாகி சின்னாபின்னமாக்கப்பட்டது. நவீன தாராளமய கொள்கைகளைத் திரும்பப் பெற்று கிரீஸின் பொருளாதாரத்தை மீட்கிறோம் என்று இடது முற்போக்கணியைச் சேர்ந்த சைரிஸா கட்சி உறுதியளித்து 2015 ஜனவரியில் தேர்தலில் வெற்றி பெற்றது. அக்கட்சியை சேர்ந்த அலெக்ஸிஸ் த்சிப்ரஸ் பிரதமரானார்.

அலெக்ஸிஸ் த்சிப்ரஸ் நவீன தாராளமய வலையில் விழாமல் கிரீஸில் மக்களுக்கான மாற்று அரசை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஐரோப்பாவில் அது ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பொது வாக்கெடுப்பில் மக்கள் புரட்சிகரமான முறையில் தீர்ப்பளித்திருந்தனர், நவீன தாராளமயத்தின்  நிதி சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வாக்களித்திருந்தனர், ஆனால் மக்களின் நம்பிக்கைக்கு மாறான முறையில் நிதிச் சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு நவீன தாராளமய நிறுவனங்களுக்கு அடிபணிந்தார் அலெக்ஸிஸ் த்சிப்ரஸ்.

கிரீஸ் நாட்டிற்கு முதலில் ஐரோப்பிய மத்திய வங்கி கடன் நிவாரணம் அளிக்க மறுத்து கைவிட்டது. இறுதியில் கடும் நவீன தாராளமயக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடனே நிதி அளிக்க ஒப்புக்கொண்டது.டிரோய்கா- என்று அழைக்கப்படும் மும்மூர்த்திகளான ஐரோப்பிய கமிசன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச பண நிதியம், இணைந்து சைப்ரஸ், கிரீஸ், அயர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் நிதி அளித்தன. இந்த  நெருக்கடியிலிருந்து வெளியேற கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதாவது அரசு குடிமக்களுக்கான சமூகபயனுள்ள பொதுத்துறை செலவீனங்களை கடுமையாகக் குறைக்க வேண்டும், வரியை அதிகப்படுத்தி வருவாயை அதிகப்படுத்தவேண்டும் என்ற கடும் நிபந்தனைகளை விதித்தன.

இந்தக் கசப்பு மருந்தினால் பொருளாதாரம் சுருங்கி, கடன் நிலை மேலும் அதிகமானதே தவிர குறையவேயில்லை.அப்பொழுது கடனில் மூழ்கிய கிரீஸ் நாடு இன்னும் மீளா துயரில் தத்தளிக்கிறது. கிரீஸ் நாட்டின் கடன் நெருக்கடியால் ஜெர்மனி தான் அதிகம் பயனடைந்துள்ளது. இதனால் ஜெர்மனி 2010-17 இடைப்பட்ட காலத்தில் 2.9 பில்லியன் யூரோ லாபமடைந்துள்ளது. கடன் வாங்கினால் வட்டி கட்டியே அழிய வேண்டும் என்பது வெறும் ஏழை தனிமனிதர்களுக்கான நியதி மட்டுமல்ல நாடுகளும் இவ்வாறு மீளா கடனில் துயர்பட்டு அடிமை நிலைக்கு தள்ளப்படுவதும் நவீன தாராளமயத்தின் இன்றைய நியதியாக உள்ளது.

தற்பொழுது ஏற்பட்ட கோவிட்-19 கொள்ளை நோயானது கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடன் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியதோடு வடக்கு தெற்கு பிரிவினையையும் அதிகப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு சோதனையாகவே அமைந்துள்ளது. கிரீஸ் நாட்டின் கடன் அளவானது 180% அளவிற்கு அதிகரித்துள்ளது.

இத்தாலியில் கடன் 132%ஆக உள்ளது.ஏப்ரல் மாதத்தில் கோவிட்-19ஆல் கடுமையாக பாதிப்படைந்த 9 நாடுகளின் அரசுகள் இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸின் தலைமையில் பொதுக் கடன் பத்திரங்களை வெளியிடும் திட்டத்தை முன்வைத்தன. அதிகக் கடனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குக் குறைந்த வட்டியில் கடனளிக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. நெருக்கடி நிலையில் அனைத்து நாடுகளும் ஒற்றுமையின் அடிப்படையில் கொரோனா பத்திரங்கள் வெளியிட வேண்டும் என்றும், அந்த கடன் நிதியானது நாடுகளின் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், அதன் நிதிப் பொறுப்புகள் அனைத்து நாடுகளாலும் சம அளவில் பகிரப்படும் என்றும் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது.

ஒட்டுமொத்தக் கண்டமும் நெருக்கடியில் சிக்கிய போது ஒற்றுமைக்கான ஒரு கருவியாக கொரோனா பத்திரம் முன்னிறுத்தப்பட்டது. ஆனால் சிக்கன நால்வர் என அழைக்கப்படும் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் ஆரம்பத்திலேயே அந்தத் திட்டத்தை முறியடித்தன.

மே மாதத்தில் ஐரோப்பியக் கமிசன் பொருளாதார நிதிச் சேதங்களிலிருந்து நாடுகளைக் காத்து மறுசீரமைக்க ஒரு திட்டத்தை உருவாக்க முயன்ற போது சிக்கன நால்வர் நெதர்லாந்து நிதியமைச்சர் வொப்கெ ஹோக்ஸ்டிரா தலைமையில் பிரிவினைவாத முறையில் தெற்கு நாடுகளை எதிர்த்தன. இந்த இக்கட்டான சூழலிலும் தென் ஐரோப்பிய நாடுகள் கேளிக்கைகளில் ஊதாரித்தனமாக வீண் செலவு செய்வது போல் சித்திரித்து, அவர்களுக்கு உதவி செய்யாமல் நீதி போதனை அளித்து அவர்களை மேலும் காயப்படுத்தினர்.

ஜூன் மாதத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது கிரீஸ் நாட்டை  மட்டும் தற்காலிகமாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றலாம் என்று ஜெர்மனியின் நட்பு நாடான ஸ்லொவனியா முன்மொழிந்தது, ஜெர்மனியும் கிரெக்ஸிட்டைத்தான் எதிர்பார்த்திருந்தது. இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் தேவைப்படும் போது கிரீஸ் நாட்டைப் பயன்படுத்திக் கொண்டு கடன் நிலைக்குத் தள்ளி அதில் ஆதாயமும் அடைந்த பிறகு, கிரீஸை வெளியேற்றி கதவுகளைச் சாற்றத் தயாராக இருந்தது. இவ்வாறு கடனளிக்கும் நாடுகள், கடனாளி நாடுகள் என்று பாகுபடுத்தி நாடுகளை பணயம் வைக்கிறது முதலாளித்துவ நவீன தாராளமய சூதாட்டம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒருங்கிணைந்து கடன் நிவாரணம் அளிக்கா விடில் ஐரோப்பிய ஒன்றியமே உடையும் அபாயம் ஏற்படும் என்று பிரான்ஸ் நாட்டு அதிபர் மக்ரோன் எச்சரித்தார். ஸ்பெயினின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரஞ்சா கொன்சலெ ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் அனைவரும் ஒரே படகில் பயணிக்கிறோம், எதிர்பாரா விதத்தில் ஒரு பெரும் பனிப் பாறையில் மோதி விட்ட நிலையில் யாருக்கு முதல் வகுப்பு பயணச் சீட்டு, யாருக்கு இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு என்று கலந்துரையாடுவதற்கான நேரம் இது இல்லை என்று தெரிவித்தார். இரண்டு மாதப் போராட்டங்களுக்குப் பிறகு இறுதியில் ஜெர்மனியானது அவசரநிலை கருதி 750 பில்லியன் யூரோ மதிப்பில் பொதுவில் கொரோனா நிதிக் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது.

முன்னர் எந்தவொரு கடன் நிவாரணத்தையும், இடர் பகிர்வையும் கடுமையாக எதிர்த்த ஜெர்மனி கடனை பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்ததற்கு கரிசனம்தான் காரணமா என்றால் இல்லை. ஐரோப்பிய யூனியன் என்ற அமைப்பே உடைந்து விட்டால் அதனால் இவ்வளவு நாள் அதிகமாகப் பயனடைந்த ஜெர்மனியின் மேலாதிக்கமும் கேள்விக்குள்ளாகும் என்பதே முக்கியமான காரணம்.

இது கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கான உடனடி உதவி என்பதைக் காட்டிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்ற அரசியல் அமைப்பை நீட்டிக்கச் செய்வதற்கான ஒரு ஏற்பாடே தவிர வேறு ஒன்றுமில்லை. இதைத் தொடர்ந்து கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு இன்னும் கடுமையான முறையில் கசப்பு மருந்தான நிதிச் சிக்கன நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படும்.

அரசியலமைப்பு ரீதியாக ஜெர்மனிய வெளியுறவுக் கொள்கையானது ஐரோப்பிய  ஒன்றியத்தின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம்  அளிக்கிறது. ஐரோப்பாவின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் எதுவும் ஜெர்மனியின் நலன்களுக்கு விரோதமானது என்றும் கருதப்படுகிறது. யூரோவின் பின் நிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஒருமைப்பாடு இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதும் பிரிவினைவாதம் அதை முறியடிக்குமா என்பதும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பதுடன் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு பதில் அதிகரிக்கச் செய்துள்ளது. வேறுபட்ட பொருளாதார வளர்ச்சி நிலையிலுள்ள, பல நாடுகளின் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ ஒற்றை நாணயச் சந்தையின் மூலம் தீர்வு பெற இயலாது என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமே சிறந்த சான்றாக விளங்குகிறது.

ஐரோப்பியக் கண்டத்தில் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்த யூரோ நாணயம் டாலருக்கு மாற்றாகலாம் ஆனால் அதன் மூலம் உலகின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற முடியும் என்று மனக் கோட்டை கட்டினால் அது பெருந்தவறாய்ப் போகும்.

(தொடரும்)

Pin It