இந்து மதம், சாதி, தீண்டாமை ஆகியவை பற்றி எந்தப் புரிதலும் இல்லாத பலர் 'நல்லா படிச்சி முன்னேறினால் தீண்டாமை மறைந்து விடும், சம மதிப்பு தானாகக் கிடைக்கும்’ என்று கூறுவதை வழக்கமாகக் கேட்டு இருப்பீர்கள். ஆனால் உண்மையில் இந்தக் கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோடும் தந்திரமாகும். 

மேற்கண்ட கருத்து ஏற்கப்பட்டு விடுமாயின், பட்டியல் சாதியினர் ஒழுங்காக படிக்காததனால் தான் அவர்கள் சம மதிப்பு பெறுவதில்லை என்ற கருத்து உண்மையாகி விடும். அப்படி அது உண்மையாகி் விட்டால், தீண்டாமைக்கு காரணமான ‘இந்து மதம்' குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விடும்.

ambed savitha budha 400இது ஒரு புறம் இருக்கட்டும். இங்கே கேள்வி, தீண்டாமையிலிருந்து கல்வி தீர்வு தரும் என்று வாதிடுபவர்கள் உயர் கல்வி கற்கச் சென்று, அந்த நிறுவனங்களில் தற்கொலை செய்து கொள்ளும் பட்டியல் சாதி் மாணவர்களின் நிலையைப் பற்றி என்ன கருத்து சொல்லப் போகின்றனர் ?

பல்வேறு சித்தாந்தங்கள் இந்தியாவில் உலவுகின்றன. அதில் பெரும்பாலான சித்தாந்தங்கள் சேரிப் பகுதிகளில் மட்டுமே உலவுகிறது. நிலமில்லாமை தான் தீண்டாமைக்குக் காரணம் என்பதிலிருந்து பகுத்தறிவு இல்லாமை (யாருக்கு?) தான் தீண்டாமைக்குக் காரணம் என்பது வரை பல்வேறு சித்தாந்தங்கள் இங்கு பேசப்படுகின்றன. ஆனால் மிகவும் வருந்தத்தக்க விடயம் தீண்டாமையிலிருந்து மக்களை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும் என்று தன் வாழ்நாளை அர்ப்பணித்த பாபாசாகேபின் கருத்துக்கள் இந்த சம்பவங்களின் போது பேசப்படுவதில்லை என்பது தான். 

பள்ளிக் கல்வியிலும், மாநிலக் கல்லூரிகளிலும் புத்த சேரிகளில் வசிக்கும் இளைஞர்களை தீண்டாமை அவ்வளவாகத் தாக்குவதில்லை. அப்படி தீண்டாமைக் கொடுமை அவர்கள் மீது ஏவப்பட்டாலும் அவர்களைத் தாங்கிப் பிடிக்க பெற்றோர்களும், உறவினர்களும், அமைப்புகளும் உள்ளனர். 

ஆனால் அதைத் தாண்டி மருத்துவம், பொறியியல், மேலாண்மை என்று உயர் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் நிலை பெரும்பாலான இடங்களில் மிகவும் கொடூரமானதாகத் தான் இருக்கும். குறிப்பாக மாநிலம் தாண்டிச் செல்பவர்கள் மற்றும் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்த மத்திய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கச் செல்வோர் ஆகியோர் படும் துயரம் சக பட்டியல் சாதியினாரால் கூட புரிந்து கொள்ள இயலுமா என்பது சந்தேகமே. 

அவ்வாறு உயர்கல்விக்காக செல்வோரை நாம் இங்கே இந்த பிரச்சினைக்கான தீர்வை விவாதிக்க மூன்று வகைகளில் பிரித்துக் கொள்ளலாம்.

1. தீண்டாமை குறித்த பிரக்ஞையே இல்லாமல் கல்லூரிக்கு வருபவர்கள்

2. ஆற்றாமையை வெளிப்படுத்தும் மனவியல் அமைப்பை பெற்றவர்கள்.

3.அதனைப் பொறுத்துக் கொண்டு, பழகிக் கொண்டோர்.

மேற்கண்ட மூன்று பிரிவினரில் மூன்றாம் வகையினர் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஆனாலும் அவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகுவது உண்மையே. முதல் மற்றும் இரண்டாம் வகையினர் தான் பல்வேறு பெரும் சிக்கல்களுக்கு ஆளாகுபவர்கள்.

இதில் முதல் வகையைச் சார்ந்த மாணவர்கள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறையாக கல்வி கற்கச் செல்லுவோர். நகர்ப்புறங்களில் பொது சமூகத்தின் மத்தியில் வளர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய பெற்றோர்கள் ஏற்கனவே சிறிது மதிப்பிற்குரிய பணியில் இருப்பவர்களாக இருக்கின்றனர். இந்த வகையில் வரும் மாணவர்களின் பெற்றோர், சாதி-தீண்டாமை குறித்து தங்கள் பிள்ளைகளிடம் எதுவுமே பேசி இருக்க மாட்டார்கள். தீண்டாமைக்குக் காரணம் இந்து மதம் என்றே தெரியாமல், தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக பலர் இருந்து விடுகின்றனர். மறைந்த டி.எஸ்.பி விஷ்ணுபி்ரியா அவர்கள் இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கவர். அவரின் பெயர் (விஷ்ணு) எனக்குப் பல நேரங்களில் கடும் மன ஆற்றாமையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. 

இவ்வாறு சாதி, தீண்டாமை ஆகியவை குறித்து எந்த பிரக்ஞையும் இல்லாமல் கல்லூரிகளுக்குள் விடப்படுபவர்கள் கடுமையான உளவியல் தாக்குதல்களை சந்திக்கின்றனர். பார்ப்பனக் குழந்தைகள் தங்கள் பிறப்பு குறித்த பெருமைகளோடு வளர்க்கப்படுகின்றனர். இடைநிலை சாதியினரின் பிள்ளைகளுக்கு அவர்களின் சமூகம் இயல்பாக சாதிவெறியைக் கற்பிக்கின்றது. 

ஆனால் பட்டியல் சாதியில், சற்று படித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள் இது குறித்து எதுவுவே சொல்லித் தரப்படாமல் வளர்க்கப்படுகின்றனர். உண்மையில் அவர்கள் அப்பாவிகளாக வளர்கின்றனர். இவ்வாறான ஒருவர் உயர் கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் விடப்படும் போது கடுமையான உளவியல் நெருக்கடிகள் அவருக்கு ஏற்படுகிறது. ஏன் தனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது என்று அவர்களுக்குப் புரிவதில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர்களின் நிலைக்கு அவர்களே காரணம் என்று பொது சமூகம் அவர்களை குற்றம் சாட்டி விட்டு விடும். இவ்வாறு என்ன ஏது என்று தெரியாமல் அதற்குரிய தீர்வும் தெரியாமல், திக்கற்று நிற்கும் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். அவர்கள் எவ்வளவு பெரிய படிப்பு படித்து இருந்தாலும் அல்லது எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் இந்து சமூகத்தின் இயங்கியலும், பாபாசாகேப் வழியில் அதற்கான தீர்வும் அவர்களுக்கு கற்றுத் தரப்படாமல் போய் இருந்தால் அவர்கள் இருண்ட உலகிற்குள் தள்ளப்பட்டு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அபாயம் எப்போதும் அங்கு இருக்கும்.

மூன்றாம் பிரிவினர் பலரை நாம் வாழ்க்கையில் சந்தித்து இருப்போம். அவர்கள் தீண்டாமை குறித்து அறிந்து இருப்போர். ஆனால் அதற்கான தீர்வை நோக்கி இன்னும் முழுமையாக சென்று அடையாதோர். பொதுவாக ரோகித் வெமுலா போன்ற போராளிகளாக அறியப்படுபவர்கள். அநீதிகளுக்கு எதிராகப் போராடும் குணம் கொண்டோர். மேலும் பல வகை சித்தாந்தங்களை சார்ந்தோரும் இவ்வகை இளைஞர்களை தொடர்ந்து குழப்பி இருப்பார்கள். இவ்வாறான இளைஞர்களும் மன உளைச்சலுக்கு (Anxiety) ஆளாகும் தன்மை கொண்டவர்களாக உள்ளனர்.

ஆக இவ்வாறாக பட்டியல் சாதிகளைச் சார்ந்த மாணவர்களும், பொது சமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஊழியர்களும் இந்து சமூகத்தின் தாக்குதலுக்குப் பலியாக வேண்டி இருப்பது நிகழ்கால உண்மையாகும். 

இவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அல்லது அவர்கள் குழந்தைகள் கல்வி கற்கச் செல்லும் இடங்களில் அவர்களை தற்காத்துக் கொள்ள ஒரே தீர்வு 'பாபாசாகேப் வழங்கிய பௌத்தம்' மட்டுமே. சமத்துவ சமுதாயம் என்பது கல்வி, பொருளாதாரம், அதிகார பகிர்வு, பொதுவுடமை என்று பல கூறுகளைக் கொண்டது. இந்த பல்வேறு கூறுகளும் அனைவருக்கும் பொதுவானது. இதற்காக சமூகத்தை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு சமூகத்தின் அனைத்து அங்கத்தினருக்கும் உள்ளது.

ஆனால் தீண்டாமை என்பது பட்டியல் பிரிவு மக்களுக்கானது மட்டுமே. அதனை அவர்கள் தன்னந்தனியாக தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாத்திகமே தீர்வு என்று பேசுவோர் தீண்டாமைக் கொடுமை தாங்காமல் டெல்லியில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் கல்லூரிக்கு சென்று, அதனை 'தீண்டாமையை ஏவுவோருக்கு' சொல்ல இயலுமா எனில் முடியாது. அந்தப் பிரச்சனையை பட்டியல் சாதி மாணவர்கள் தனியாகத் தான் சந்திக்க வேண்டி உள்ளது. 

ஆக நிலை இவ்வாறு இருக்கும் போது தீண்டாமையினால் பாதிக்கப்படுவோர் அதற்குரிய தீர்வை நோக்கி தாங்களாகவே நகர வேண்டியுள்ளது. 

Buddha 470வரலாற்று உண்மைகளின் படி இந்தியாவில் உள்ள பட்டியல் பிரிவினர் அனைவரும் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தவர்கள் என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டில் பௌத்தர்களுக்கும், பார்பனியத்துக்கும் நடந்த போரில் வீழ்த்தப்பட்டோர் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு தீண்டாதகாதவர்களாக ஆக்கப்பட்டனர். தம்ம கொள்கைகள் முற்றிலும் மக்கள் மனங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் பௌத்த தொடர்புடைய மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் முற்றிலும் அருவருக்கத் தக்கதாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்டது. 

எடுத்துக்காட்டாக விகாரம் என்றால் அசிங்கமாக என்று தற்காலத்தில் பொருள்படுகிறது. இந்த விகாரமாக என்ற வார்த்தை புத்த விகார்களை அசிங்கப்படுத்தவே உண்டாக்கப்பட்டது. இவ்வாறாக புத்த கலாச்சாரத்தைச் சார்ந்த அனைவரும், அனைத்தும் இழிவாக மாற்றப்பட்டது. இதுவே பின்னாளில் தீண்டாமையாக உருமாறியது. மேலும் நான்கு வர்ண இந்து மதத்தில் ஐந்தாவதாக அவர்ணா (வர்ணமற்றோர்) இணைக்கப்பட்டனர். இவர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தப்பட்டது. அந்த இடைவெளியைக் காக்கும் பொறுப்பு சூத்திரர்களுக்குத் தரப்பட்டது. அந்தப் பொறுப்பை செவ்வனவே இன்று வரை 'கவுரவக் கொலைகள்' மூலம் அவர்கள் செய்து வருவது நாம் அறிந்ததே.

இவ்வாறான தீண்டாமையிலிருந்து விடுபட சமூக ஆய்வாளர் பாபாசாகேப் அம்பேட்கர் முன்வைத்த தீர்வு இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதே. வேற்று மதத்தைச் சார்ந்தோரை இந்துக்கள் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ நினைக்க இயலாது என்பது அவர்களின் மத இயங்கியல். இந்த இயங்கியலின் படி பௌத்தத்தை மீள்கட்டமைப்பு செய்யும் போது அல்லது இந்துகளுக்கு இணையான பௌத்த பண்பாட்டை உருவாக்கும் போது தீண்டாமை தானாக மறையும் என்பது பாபாசாகேபின் சமூக விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். இது குறித்து கூடுதலாக அறிய அவரின் எழுத்துக்களை நேரடியாகப் படித்து நாம் புரிந்து கொள்ளலாம். 

இப்போது உயர் கல்வி நிறுவனங்களில் தலித் மக்களின் பிரச்சனைக்கு வருவோம். இங்கே சாதி், தீண்டாமை ஆகியவற்றைப் பற்றி தங்கள் குழந்தைகளிடம் எதுவும் பேசாமல் அவர்களை அப்பாவியாக கல்லூரிக்கு அனுப்புவது, ஆயுதம் இல்லாமல் அவர்களைப் போருக்கு அனுப்பவது போலவாகும். அது மோசமான விளைவுகளை உருவாக்கும், உருவாக்குகிறது. 

ஆகவே தீண்டாமைக்கான தீர்வாக இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என்ற திட்டத்தை நாம் இனியும் தாமதிக்க எந்த அவசியமும் இல்லை. உயர் கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் சிறப்பாக ஒளிர ஒரே வழி அவர்களுக்கு அனைத்தையும் வெளிப்படையாகக் கற்பிப்பது மட்டுமே. கூடுதலாக தீண்டாமையிலிருந்து அவர்களை காத்துக் கொள்ள பௌத்தம் ஏற்கச் செய்வது மட்டுமே. அதுவே அவர்களுக்கு நேர்மறை சிந்தனையைத் தரும். எதிர்த்துப் போராடும் கட்டமைப்புகளைத் தரும். உதவிகள் பெற்றுத் தரும். உயர்வு தாழ்வு மனப்பான்மைகளில் இருந்து விடுவிக்கும். மனரீதியான ஆறுதலை, பலத்தை வழங்கும். மாறாக இது குறித்து உங்கள் குழந்தைகளிடம் ஏதும் பேசாமல், இந்துவாக அவர்களை இருத்தி வைத்துக் கொண்டு, அப்படியே அவர்களை கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ அனுப்பவது ஆபத்தானது. இந்துவாக இருந்து கொண்டே வேறு வகைகளில் சம மதிப்பைப் பெற்று விடலாம் என்பது வெற்று நம்பிக்கை. இது நமது வாழ்வியல் அனுபவமாகும்.

காலில் ஒரு புண் இருக்கிறது என்றால், அதனை உரிய மருந்து போட்டு ஆற்றுவது தான் நியாயமானது, அறிவுப்பூர்வமானது. மாறாக ஒரு சாக்ஸ் அணிந்து அதன் மேல் ஷூ போட்டுக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்பது காலை அழுகிய நிலைக்குத் தள்ளி, பின் கால்களை மருத்துவ ரீதியாக வெட்டி எடுக்கும் நிலைக்கு மாற்றி விடும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டியது. ஆகவே தீண்டாமைக்கான உரிய மருந்தை  பாபாசாகேப் வழியில் மக்களுக்கு அளிப்போம்.

- டாக்டர் சட்வா

Pin It