மீண்டும் ஒரு போராட்டக் களமாக மாறி நிற்கிறது தமிழ் மண்! இம்முறை, நாட்டின் தலைவாசல் எடுத்திருக்கும் தவறான முடிவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருப்பது தமிழ்நாட்டின் எளிய சிற்றூரான நெடுவாசல்!

பா.ஜ.க., சார்பில் பல அரிய கருத்துக் கருவூலங்களைத் தொடர்ந்து அள்ளி அள்ளி வழங்கி வரும் எச்.ராஜா, இந்தப் பிரச்சினை குறித்தும் திருவாய் மலர்ந்திருக்கிறார் - இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாரும் பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள் என்று. ஆனால், போராட்டக்காரர்களைப் பார்த்து அதே பா.ஜ.க-வினர் கேட்கும் கேள்வி என்னவெனில், “இந்த நீரகக் கரிமத் (Hydro Carbon) திட்டத்தைத் தமிழ்நாட்டில் மட்டுமா கொண்டு வருகிறோம்? இந்தியா முழுக்க 31 இடங்களில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, தமிழ்நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுவது போல ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்பது.

 neduvasal protest

பா.ஜ.க-வினரின் இந்தக் கேள்வியிலேயே எச்.ராஜாவின் குற்றச்சாட்டு எவ்வளவு தவறு என்பதற்கான சான்றும் அடங்கியுள்ளது.

ஆம்! இந்த நீரகக் கரிமத் திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் கொண்டு வரப்படவில்லை. நாடு முழுக்கப் பல்வேறு இடங்களிலும் கொண்டு வரப்பட இருக்கிறது. ஆக, இப்பொழுது நடப்பது வெறும் தமிழர் உரிமைப் போராட்டம் இல்லை. இதே போல் நாடெங்கும் பாதிக்கப்படவிருக்கும் 31 பகுதிகளைக் காக்கத் தொடங்கப்பட்டிருக்கும் மொத்த இந்தியாவுக்கான போராட்டம்! நாங்கள் வெறும் தமிழர்களுக்காக மட்டும் போராடவில்லை. நாடு முழுக்க உள்ள இந்தியர்கள் எல்லாருக்காகவும்தான் போராடுகிறோம். சாதி, சமயம், மொழி, இனம், மாநிலம் என்ன அத்தனை எல்லைகளையும் கடந்து மொத்த நாட்டுக்காகவும் போராடும் நாங்கள் பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள் என்றால் உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் யார்? எப்பொழுது பார்த்தாலும் இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதலை மூட்டும் விதமாகவே பேசி வரும் சமயவெறியர்களா?...

இல.கணேசன் அவர்கள், “ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும் என்பது வடமொழிப் பழமொழி!” என்கிறார். “ஒரு குடும்பத்துக்காக, அதன் உறுப்பினர் ஒருவரைத் தியாகம் செய்யலாம்; ஒரு கிராமத்துக்காகஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்; ஒருவனது ஆன்மாவுக்காக முழு உலகத்தையும் தியாகம் செய்யலாம்” என்கிற விதுரநீதியையே கொஞ்சம் மேல்பூச்சோடு சொல்லியிருக்கிறார் அவர். அந்தப் பூச்சுவேலையை நீக்கி விட்டுப் பார்த்தால், “நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் மாநிலத்தையே காவு கொடுக்கலாம்” என்பதுதான் அதன் உண்மையான பொருள்.

இந்த அரிய பேருண்மையை எடுத்துரைத்ததற்காக, இல.கணேசனாரைத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். என்னைக் கேட்டால், ஐயா அவர்களுக்குத் தமிழர்கள் நாம் நன்றி நவிலக் கடமைப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்வேன்.

பா.ஜ.க-வின் கட்சிக்காரர்கள் முதல் அதன் ஆதரவாளர்களான பொதுமக்கள் வரை எல்லோருமே இந்தத் திட்டத்தால் எந்தப் பாதிப்புமே இருக்காது எனக் கதை அளந்து கொண்டிருக்க, இல.கணேசன் அவர்கள் மட்டும்தான் ‘மாநிலத்தையே தியாகம் செய்ய வேண்டிய அளவுக்குப் பூதாகர அழிவைத் தருகிற திட்டம் இது’ என்பதை இப்படி வெளிப்படையாகப் போட்டு உடைத்திருக்கிறார்! அதற்காக நாம் அவருக்கு நன்றி கூறத்தானே வேண்டும்?

ஆனால், அதே நேரம், இல.கணேசன் அவர்கள் தியாகம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்! நாட்டுக்காகச் செய்வதற்குப் பெயர்தான் தியாகம். உங்கள் சித்தேஸ்வர ராவும், அதானியும் கொள்ளை லாபத்தில் குளிக்க வேண்டும் என்பதற்காகச் சோறு போடும் நிலத்தைக் கூறு போட்டு விற்பதற்குப் பெயர் தியாகம் இல்லை. அது, இந்த நிலத்தையே உணவுக்காக நம்பியிருக்கிற மக்களுக்குச் செய்யும் துரோகம்! பல கோடி மக்கள் விடுதலை பெறச் சில ஆயிரம் பேரின் உதிரத்தைக் கேட்டார் நேதாஜி அன்று! ஆனால், இரண்டொரு பண முதலைகள் கொழுக்கப் பல்லாயிரம் பேரின் வாழ்வாதாரத்தைப் பலி கேட்கிறீர்கள் நீங்கள் இன்று! நீங்கள் செய்யச் சொல்வதற்குப் பெயர்தான் தியாகம் என்றால் அன்று நேதாஜி செய்யச் சொன்னதற்குப் பெயர் என்ன ஐயா?...

அதே நேர்காணலில் தொடர்ந்து பேசிய இல.கணேசன் அவர்கள், “நலத்திட்டங்களுக்கு நிலம் தர மாட்டோம் என்றால், அவற்றை நாங்கள் என்ன வானத்திலா நடத்த முடியும்?” எனக் கேட்டிருக்கிறார். உண்மையிலேயே அவர் கூறுவது போல இது பெரிய நன்மை பயக்கும் திட்டம் என்றால், தியாகம் செய்வது பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், அந்த அளவுக்கு வளைகுடா நாடுகளில் இருப்பது போன்ற மாபெரும் எண்ணெய் வயல்களா இங்கு புதைந்திருக்கின்றன? இல்லையே! அப்படி இருந்திருந்தால், அரசே இந்த ‘நலத்’ திட்டத்தைக் கையிலெடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

ஏனெனில், அரசே களமிறங்குகிற அளவுக்குப் பெரிய அளவிலான வளம் ஒன்றும் இங்கு கொட்டிக் கிடக்கவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே ‘சிறிய வயல்கள் கண்டுபிடிப்புக் கொள்கை’யின் (Discovered Small Field) கீழ்தான். தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதாயம் தருகிற அளவுக்குச் சிறிதளவு இயற்கை வளம்தான் இந்த 31 இடங்களிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால்தான் நீங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனியாருக்குக் கொடுத்து விட்டார்கள். இப்படிச் சொல்வது நான் இல்லை. அரசுத் தரப்பிலேயே கூறப்படும் விளக்கமே இதுதான்!

ஆக, குறிப்பிட்ட காலக் கட்டத்துக்கு (ஆகக்கூடி 30 ஆண்டுகள்) மட்டுமே ஆதாயம் தருகிற ஒரு குறுகிய காலத் தொழிலுக்காக, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டுமானாலும் வளங்களை வாரி வழங்கக்கூடிய தொழிலை ஒரேயடியாக அழித்துப் போடுவதற்குப் பெயரா நலத்திட்டம்? ஓரிரு தனி ஆட்களின் ஆதாயத்துக்காக இப்படி நாட்டுக்கும் மக்களுக்கும் மண்ணுக்கும் பல்லாயிரங் கோடிக்கணக்கான சிறு உயிரினங்களுக்கும் ஒரேயடியாகப் பேரழிவைத் தருகிற திட்டத்தைத் திணிக்கிற நீங்களா வளர்ச்சிக்குப் பாடுபடுகிறவர்கள்? அப்படிப்பட்ட ஒரு பேரழிவு நடந்துவிடாமல் காக்கத் துடிக்கும் நாங்களா வளர்ச்சிக்கு எதிரானவர்கள்? தப்பித் தவறிக் கூட இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி விடாதீர்கள்! வெளிநாட்டுக்காரர்கள் கேட்டால் கைகொட்டிச் சிரிப்பார்கள்.

அடுத்து, பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள். “இந்தத் திட்டத்தை எதிர்க்கிற அரசியல் கட்சியினர் என்ன அறிவியல் அறிஞர்களா? என்ன அருகதை இருக்கிறது அவர்களுக்கு இதை எதிர்க்க?” எனக் கேட்கிறார்.

எச்.ராஜா சொன்னதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் போன்ற கடுமையான சொற்களுக்குப் பதிலாக மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அரசியலாளர்கள் எனும் நாகரிகச் சொல்லைப் பயன்படுத்துகிறார், அவ்வளவுதான்.

ஒரு திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்தால், அந்தத் திட்டம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டியதுதான் பொறுப்பில் இருப்பவர்களின் கடமை. மாறாக, எதிர்ப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றியே இவர்கள் மீண்டும் மீண்டும் கருத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ‘தங்கள் திட்டத்தை எதிர்க்கிற அனைவருமே அரசுக்கு எதிரான குறிப்பிட்ட சிலர்தானே தவிர, பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை’ என்கிற ஒரு பொய்யான தோற்றத்தை இவர்கள் கட்டமைக்க முயல்கிறார்கள். மக்களான நாம் இந்த உள்நோக்கத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு இவர்கள் பயன்படுத்தும் தீவிரவாதிகள், தியாகம், அருகதை போன்ற சில சொற்களை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது அறிவீனம்!

ஐயா சொல்வது போல், அரசியலாளர்கள் ஒன்றும் அறிவியல் அறிந்தவர்கள் இல்லைதாம். ஆனால், அரசியலாளர்கள் என்கிற முறையில் இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கே இன்று வரை பா.ஜ.க., தரப்பினரால் சரியான விடை அளிக்க இயலவில்லையே! இன்னும் அறிவியலாளர்கள் வேறு களத்தில் இறங்கினால் ஆளுங்கட்சிப் பரப்புரைப் பீரங்கிகளின் நிலைமை என்னாகும்? எடுத்துக்காட்டாக, அண்மையில் சீமான் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபொழுது,

“எரிபொருள் இருந்தால்தானே சமைக்க முடியும்?” என்று கேட்டார் செய்தியாளர் ஒருவர். “சரி... இருக்கிற விளைநிலங்களையெல்லாம் அழித்துவிட்டு எடுக்கிற அந்த எரிபொருளை வைத்து எதைச் சமைப்பீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார் சீமான். இன்று வரை அதற்குப் பதில் இல்லை.

ஏன், அரசியலாளர்கள் மட்டும் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? தவறான ஒரு திட்டத்தால் நாடு பாதிக்கப்பட்டால் அவர்களும் அதனால் பாதிக்கப்படப் போவதில்லையா? அப்படியிருக்க, அவர்களுக்கு மட்டும் திட்டத்தை எதிர்க்கும் உரிமை எப்படி இல்லாமல் போய்விடும்? இந்த நாட்டின் குடிமக்கள், கேள்வி கேட்கும் உரிமை உள்ளவர்கள் என்பதை விட வேறென்ன அருகதை வேண்டும்?

சரி, ஒரு பேச்சுக்காக அரசியலாளர்களுக்கு அந்த அருகதை இல்லை என்பதாகவே வைத்துக் கொள்வோம். “அணு உலைகள் ஆபத்தானவை! அவற்றை மூட வேண்டும்!” என இந்தியா எங்கும் உள்ள அணு அறிவியலாளர்கள் எத்தனையோ பேர் தொடர்ந்து ஆண்டுக்கணக்காக எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்களே! நாடெங்கும் பரப்புரை கூடச் செய்கிறார்களே! அவர்கள் பேச்சைக் கேட்டு நீங்கள் என்ன நடவடிக்கையை இதுவரை மேற்கொண்டு விட்டீர்கள்? அறிவியல் அறிஞர்களே கூறி விட்டார்களே என்று ஆட்சிக்கு வந்தவுடனே அணு உலைகளையெல்லாம் இழுத்துப் பூட்டி விட்டீர்களா?

ஆக, அருகதையுள்ளவர்கள் அறிவு சார் வாதங்களை முன்வைத்தால் அவர்களை மதிப்பது கிடையாது. அறிவுக்குத்தான் மதிப்பில்லையே என்று அறப் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தால் எந்த அருகதையில் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்பது! இதற்குப் பெயர்தான் மக்களாட்சியா பொன்னார் அவர்களே?

ஆக மொத்தம், இந்த ஒரு திட்டத்தில்தான் எத்தனை எத்தனை பொய்கள்!!!...

சாணவளி (மீத்தேன்) என்பதே ஒரு வகை நீரகக் கரிமம்தானாம். (நாங்கள் சொல்லவில்லை, அறிவியல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்). அவரைக்காய், கொத்தவரங்காய், பீர்க்கங்காய் எல்லாவற்றுக்கும் காய் எனப் பொதுப்பெயர் இருப்பது போல் சாணவளி (ஓர்க்கரிமம்), ஐங்கரிமம் (Pentane), அறுங்கரிமம் (Hexane) போன்ற பல கரிமங்களுக்குப் பொதுப் பெயர் நீரகக் கரிமம். இது அடிப்படை அறிவியல் உண்மை! ஆக, சாணவளித் திட்டத்துக்கு மக்களிடையில் எதிர்ப்பு என்றதும் நீரகக் கரிமத் திட்டம் எனப் பெயரை மாற்றி மீண்டும் புறவாசல் வழியே நெடுவாசலுக்குள் நுழைக்கப் பார்ப்பது முதல் பொய்!

இப்படி, பழைய கள்ளையே மொந்தையை மட்டும் புதிதாக மாற்றிக் கொண்டு வந்து வைத்துவிட்டு “சாணவளி எடுப்பதற்குத்தான் நீரழுத்த உடைப்பு முறை (Hydraulic fracturing) பயன்படுத்தப்படும். இந்த நீரகக் கரிமத் திட்டத்தில் அதற்கு வேலை இல்லை” என முழுப் பூசணிக்காயை அந்தக் கையகல மொந்தையிலேயே சேர்த்து மூட இவர்கள் முயல்வது இரண்டாவது பொய்!

இந்தத் திட்டத்தைப் பொறுத்த வரையில் எரிவளியைத் தோண்டி எடுப்பது, அதற்கு விலை தீர்மானிப்பது, சந்தைப்படுத்துவது, வருமானம் அடையப் போவது அத்தனையும் இதில் ஈடுபடத் துடித்துக் கொண்டிருக்கும் 22 நிறுவனங்கள்தாம். (அவற்றில் நான்கே நான்குதாம் அரசு நிறுவனங்கள் மற்ற அனைத்தும் தனியார் நிறுவனங்கள்தாம்). மற்றபடி, இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கப் போவது வெறும் உரிமத் தொகையும், சிறிதளவு பங்கும்தாம். உண்மை இப்படி இருக்க, இது ஏதோ அரசுத் திட்டம் என்பது போல நாட்டு நலத்திட்டம், சமூக வளர்ச்சித் திட்டம் எனவெல்லாம் இவர்கள் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருப்பது இன்னொரு பொய்!

மிஞ்சி மிஞ்சிப் போனால் 30 ஆண்டுகள் மட்டுமே செயல்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்தை ஏதோ காலகாலத்துக்கும் பணமழையைப் பொழிந்து நாட்டையே செல்வச் செழிப்பாக்கி விடக்கூடிய திட்டம் போல இவர்கள் ஊதிப் பெருக்குவது மற்றுமொரு பொய்!

உழவர்கள், கிழவர்கள், பெண்கள், பிள்ளைகள், அறிவியலாளர்கள், அரசியலாளர்கள் என அத்தனை பேரும் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்க, ஏதோ சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இதை எதிர்க்கிறார்கள் என இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது மேலும் ஒரு பொய்!

இவை எல்லாவற்றையும் விடப் பெரியது... சாணவளித் திட்டம் கைவிடப்பட்டதாக முறையற்ற வகையில் ஓர் அறிவிப்பை இவர்கள் வெளியிட்டது! அது பொய் கூட இல்லை, கபட நாடகம்! (அந்த அறிவிப்பு வந்தவுடன் நாம் அனைவருமே வரவேற்றபொழுதும் தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒரு குரல், “இதை நம்ப முடியாது! திட்டத்தைக் கைவிடுவதாயிருந்தால் அரசு அதை முறையாக அறிவிக்க வேண்டும்” எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்தக் குரலுக்குரியவர் வைகோ! கடைசியில் அவர் சொன்னதுதான் உண்மையாயிற்று. அதற்காக “அன்றே சொன்னார் அறிஞர்” என்று பாராட்டத் தேவையில்லை. ஆனால், இந்தப் பிரச்சினைக்காகத் தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வரும் அவரை இழிவுபடுத்தாமலாவது இருக்கலாம் இல்லையா? ஆனால் நம்மவர்களோ, நன்றி கிலோ எவ்வளவு எனக் கேட்கிறார்கள்!).

இப்படி, தலைமுடி முதல் கால் நகம் வரை பொய்களாலேயே ஒப்பனை செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காகத்தான் நம்பி நாட்டைக் கொடுக்கச் சொல்கிறார்கள் இந்த நல்லவர்கள்! கொடுப்பதும் கொடுக்காததும் அந்தந்த நில உரிமையாளர்களின் தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது; கூடாது! ஆனால், திட்டம் தொடங்கும்பொழுதே இத்தனை பொய்கள் என்றால், தொடங்கிய பின்?... இதனால் உழவுக்கோ சுற்றுச்சூழலுக்கோ எந்த ஆபத்தும் வராது என இவர்கள் சொல்பவையெல்லாம்?...

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It