தமிழ்த் தேசிய இனத்தின் மீது சுமத்தப்படும் அழிவுத் திட்டங்கள்

மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், பிற பெட்ரோலிய - எரிவளித் திட்டங்கள் என்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரை நிலம் குடையப்படுகிறது. கனிமவளங்கள் சூறையாடப்படுகின்றன.

காவிரிப் படுகையே காணாமல் போகும் அபாயம் காத்திருக்கிறது. கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தை உரு வாக்க இருக்கிறார்கள். 57,345 ஏக்கர் நிலம் 45 கிராமங்களில் கையகப்படுத்தப்படுகிறது.

காவிரிப்படுகையில் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் முன்னமே பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையத்தால் பெருமளவில் நிலமும் நீரும் பாதித் திருக்கும் நிலையில், மேலும் ‘காவிரி பேசின்’ ரிபைனரி என்ற பெயரில், 650 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதுவரை ஒரு மில்லியன் டன் சுத்திகரிப்பு செய்த இந்நிலையம், 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக திறன் உயர்த்தப்பட இருக்கிறது.

தேனி பொட்டிபுரத்தில் ‘நியூட்ரினோ பன்னாட்டுப் பொது ஆய்வகம்’ உருவாக்கப்படுகிறது. நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்யும்போது அப்பகுதியே கதிர்வீச்சு மிக்கதாக மாறும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அடாவடியாக தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் திணிக்கப்படுகிறது.

‘சாகர்மாலா திட்டம்’ என்ற பெயரில் தரைவழிச் சாலைகள், இரயில் பாதைகள், வானூர்தி வழிகள், நீர் வழிச் சாலைகள், துறைமுகங்கள் ஏற்படுத்தப்பட்டு தேசிய இனங்களின் இயற்கை வளங்களும், கனிம வளங்களும் சூறையாடப்பட்டு, பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

நதிகள் இணைப்பு என்ற பெயரில் வடக்கே உள்ள 14 ஆறுகளும், தெற்கேயுள்ள 16 ஆறுகளும், 37 கால் வாய்கள் மற்றும் அணைகள் மூலம் இணைக்கப்பட்டு, ஆறுகள் இணைப்புக்கு முதலீடு செய்த பெரும் முதலாளிகள் அந்த நீரை விற்பனை செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தேசிய இனங்களின் ஆறுகளும் நீராதாரங்களும் பறிபோக இருக்கின்றன.

நீர் உரிமை மறுப்பு, நிலம் பறிப்பு, நீர் விற்பனை ஆகியவை தமிழ்த்தேசிய இனத்தை வதைக்கக் காத்திருக்கின்றன.

தமிழகத்தின் பல பகுதிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மக்கள் வாழ முடியாத நிலப்பகுதியாக காவிரிப் படுகையில் பல பகுதிகள் மாறியிருக்கின்றன. இந் நிலையில், தமிழக நீர், நிலம், ஆறுகள், கனிமவளம் ஆகியவற்றைக் காப்பதற்கு, தமிழக அரசு அல்லது தமிழகத்திலிருந்து டெல்லிக்குச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இயலாத நிலை உள்ளது.

ஒரு தேசியஇனம் என்ற முறையில் தன் தாயகத்தின் மீது, தன் கனிம வளம், இயற்கை வளத்தின் மீது தமிழகம் உரிமை கோர முடியாத நிலை நிலவுகிறது. தேசிய இன அரசுகளை மிக அற்பமாக இந்திய அரசு கருதுகிறது. மரபு மீறி ஆளுநர் மூலம் நேரடியாக நிர்வாகத்தைக் கைக்கொள்ள ஒன்றிய அரசு துடிக்கிறது.

டெல்லியில் “அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவைச் செயலை முடக்கும் துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று உச்ச நீதிமன்றம் 2018 சூலையில் கூறியது. அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரைப் படிதான் துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுவை நிர்வாகத்தை முடக்கி வருகிறார். தமிழ்நாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதுபோன்றே தமிழக நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிட்டு வருகிறார்.

ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதை எதிர்க்கவில்லை; ஏற்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையின் அறிவுரையைக் கேட்காமல், பரிந்துரையைப் பெறாமல் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை ஆளுநரே நியமிக்கிறார். அதிகாரிகளைக் கூட்டி அரசின் வேலைகளையும், திட்டப் பணி களையும் நேரடியாக ஆளுநர் ஆய்வு செய்கிறார். இதைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டினால் 7 ஆண்டு சிறை என்று ஆளுநர் மிரட்டுகிறார்.

நீதிபதி தீபக் மிஸ்ரா, தனது தீர்ப்பில் “கூட்டுப் பொறுப்புடன் அமைச்சரவை எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கு உரிய முக்கியத்துவம் தராமல் ஆளுநர் தடையாய் இருந்தால் பிரதிநிதித்துவ ஆட்சி என்பது செல்லரித்துப் போகும்” என்று கருத்து தெரிவித்த பிறகும், தேசிய இனங்களின் மாநில அரசுகளை இந்திய வல் லாதிக்க அரசு பாடாய்படுத்துகிறது. இந்திய சனநாயகத்தின் கோரமுகம் உலகுக்கு அப்பட்டமாய்த் தெரிகிறது.

டெல்லி என்ற எஜமானன்

1960-களில் அண்ணா இவ்வாறு எழுதினார் :

“மாநிலங்களிலே ஆட்சிபீடத்தில் அமர்த்தப் படுகிற எவரும் டெல்லி மூலவரின் ஆணைக் குக் கட்டுப்பட்டு அவர்கள் கிழித்த கோட்டைத் தாண்ட முடியாத வகையில் நடந்தாக வேண்டும். எஜமானனாக இருந்து டெல்லி அவர்களை ஆட்டிப்படைக்கும். எடுபிடிகளாக இருந்து குற்றேவல் புரிந்தாக வேண்டும், இவர்கள். அடிக்கொரு முறை காவடி எடுத்து ‘ஐயனே...’ ‘மெய்யனே...’ என்று அகவல் பாடி, தேவைகளை நேரம் பார்த்து, பக்குவமாக எடுத்துக்கூறி, கிடைத்ததைப் பெற்று, இயன் றால் மகிழ்ந்து, இல்லையானால் மனக் குமு றலை மிக ஜாக்கிரதையாக மூடி மறைத்து, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற திருப்தியை வரவழைத்துக் கொள்ள வேண்டும்”

இந்தியாவில் மாநிலங்களின் நிலையை அண்ணாவின் இந்த விவரிப்பைவிடச் சிறந்த முறையில் புரியவைக்க இயலாது.

பிரச்சனை ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்று கருதி நல்லவர்களைத் தேடுவது மக்களுடைய இயல்பு. ஆனால், பிரச்சனை அரசியல் சட்டத்திலேயே இருக்கிறது. அதை எழுதியபோதும், செயல்பாட்டுக்கு வந்தபிறகும் அது பல தேசிய இனங்களுக்கும் எதிராகவே இருக்கிறது. டெல்லி என்பது எசமானனாகவும், மாநிலங்கள் அதற்குக் கீழ் நிலையில் இருந்து கைக்கட்டி நிற்கக் கூடிய வேலைக் காரனாகவும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

அரசியல் சட்டம் எழுதும்போது இருந்த நிலையை கே.வி.ராவ் இவ்வாறு விவரிக்கிறார் :

“காங்கிரசுக்குத்தான் இந்தியா முழுவதும் பேசும் உரிமை உண்டு, மற்றவர்களுக்கு இல்லை என்கிற கருத்து பரவியிருந்தது. எல்லா விவகாரங்களும் காங்கிரசுக் கட்சியின் சொந்த வீட்டு விவகாரமாகக் கருதப்பட்டது... அரசியலமைப்புச் சட்டம் காங்கிரசுக் கட்சியால் இந்தியா மீது திணிக்கப்பட்டது.”

மாற்றுக் கருத்துடையவர்கள் எவரும் தங்கள் கருத்தை வலியுறுத்த வாய்ப்பே இல்லை என்பது மட்டுமன்றி, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்த அன்றைய சூழலில் மற்றவர்களுடைய வாய் திறக்கவே இல்லை.

அரசியல்சட்ட அவையில் இருந்த கே.வி. சந்தானம் இவ்வாறு பதிவு செய்கிறார் :

“பிரிட்டிஷ் அரசை வன்மையாக எதிர்த்து வந்த இந்தியத் தலைவர்கள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கத்துடன் உரு வாக்கிய ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை அப்படியே அடிமைத்தனத்துடன் ஏற்றுக் கொண்ட அசாதாரணமான உண்மையை விளக்குவது சுலபமானது அன்று”

1935-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த இந்திய அரசாங்கச் சட்டத்தை விமர்சித்த காங்கிரசு, அரசியல் சட்டம் எழுதும்போது அதன் பெரும்பகுதியை அப்படியே புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் புகுத்திக் கொண்டது. பல்வேறு தேசிய இனங்களை அடக்கியாள அச் சட்டம் சிறந்ததாகக் காங்கிரசுக்குத் தோன்றியது எனக் கருதலாம்.

பல்தேசிய இன நாடாகிய இந்தியாவுக்கு எழுதப்படும் ஓர் அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கூறுகள் சேர்க்கப்பட வில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்களுக்கு அந்த நோக்கமும் இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைந்த அவை என்று சொல்லக்கூடிய வகையில் அரசியல் நிர்ணயசபை அமையவில்லை. இந்தியாவுக்கு என்று ஒரு கூட்டாட்சி அரசியல் அமைப்பை எழுதுவதாகக் கூறிக் கொண்ட நிலையில், ‘கூட்டாட்சி’ என்ற சொல்லைக் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க மறுத்தனர்.

பேராசிரியர் கே.டி. ஷா இவ்வாறு குறிப்பிடுகிறார் :

“There will have to be equality of states powers and funtions as between the several members, which I wish to ensure by this amendment by adding the word, federal...”

“கூட்டாட்சி உறுப்பு மாநிலங்களிடையே அதிகாரம், வேலை ஆகியவற்றில் சமத்துவம் இருக்க வேண்டும், இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘பெடரல்’ (கூட்டாட்சி) என்ற சொல்லைச் சேர்க்கும் திருத்தத்தைச் செய்ய வேண்டும்.”

என்று கே.டி.ஷா கூறியதை அரசியல் நிர்ணய அவையில் ஏற்க மறுத்துவிட்டனர்.

அசோக் சந்தா தம் ‘Federalism in India’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார் :

“மாநில அதிகாரத்துக்கு இவ்வளவு இழிவு எந்த அரசியல் சட்டத்திலும் இல்லை, 1935-ஆம் ஆண்டு சட்டத்திலும் கூட..!”

(There is no derogation of the state authority in any other constitution not even in 1935-Act)

நாடாளுமன்றத்தில் எஸ்.என்.மிஸ்ரா இவ்வாறு குறிப்பிட்டார் :

“இந்தியாவில் ‘மாநிலங்கள்’ (States) என்பவை கிடையாது. அவையெல்லாம் மத்திய அரசின் எஸ்டேட்கள்தான்”.

1950-இல் இந்திய அரசியல் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அச்சட்டம், அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

‘கூட்டாட்சி’ என்ற சொல் கூட இல்லாத ஒரு அரசியல் சட்டத்தை வைத்துக்கொண்டு, ‘கூட்டாட்சி இந்தியா’ பற்றி அனைவரும் பேசிப்பேசி புளகாங்கிதம் கொள்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்பு தேசிய இனங்கள் பற்றி பரிசீலனைக்குக் கூட ஏற்கவில்லை.

கிரன் வில்லி ஆஸ்டின்,

“ஒரே கட்சி உள்ள நாட்டில் ஒரே கட்சியினர் நிறைந்த அவையாக அரசியல் நிர்ணயசபை இருந்தது”

என்று குறிப்பிடுகிறார்.

1935-ஆம் ஆண்டு சட்டப்படி வாக்குரிமை அளிக்கப் பட்டவர்கள் 14ரூ மட்டுமே. அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினர்களால் அரசியல் சட்ட அவைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், 93 பேர் சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் முஸ்லிம் பிரதிநிதிகள். முஸ்லிம் லீகு இந்திய விடுதலைக்குப் பிறகு அதில் பங்கேற்கவில்லை.

1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த படுகொலைகள் காரணமாக எவரும் மாகாண சுயாட்சி பற்றி வாயே திறக்கவில்லை.

1931 காந்தி வட்டமேசை மாநாட்டில் கூட்டாட்சி முறையை வலியுறுத்தியிருந்தார். அதன்படி கூட்டாட்சி முறை ஏற்கப்பட்டது.

ஆனால், அதன் பண்புகள் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு, “தோற்றத்தில் கூட்டாட்சி, ஆனால் நடைமுறையில் ஒற்றையாட்சி” என்ற ஒரு புது வகையான அரசியல்சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியா என்ற பல்தேசிய இன நாட்டிற்கு ஒத்துவராத ஒரு அரசிய லமைப்பு முறையை வரைவு செய்து ஏற்றனர்.

இதைத்தான் கே.சி.வியர், ‘அரைகுறைக் கூட்டாட்சி’ (Quasi Federal) என்று அழைக்கிறார்.

கூட்டாட்சி போலத் தோற்றமளித்து, உன்மையில் ஒற்றையாட்சியாகவும், திடீரென்று முழுமையான சர்வாதி காரியின் அதிகாரங்களுடன் கூடியதாக மாறும் இயல் புடனும் செயல்படும் இந்திய அரசியலமைப்பை ‘பாசாங்குக் கூட்டாட்சி’ (Feigning Federal) என்று அழைப்பது மிகவும் பொருத்தமானது.

இந்தியக் கூட்டாட்சியின் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்திய காஷ்மீர் விவகாரம்

2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீருக்கு அளிக்கப் பட்டிருந்த சிறப்புத் தகுதியை உறுதி செய்கின்ற அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது.

நள்ளிரவில் இணையத் தொடர்பு, வெளிஉலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. ‘தீவிரவாதத் தாக்குதல்’ என்று கூறி முன்னமே புனிதப் பயணிகள் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்கள். காஷ்மீர் அரசியல் தலைவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கோகாய் தலைமையி லான அமர்வு கூடத் திடீர் விடுப்பு எடுத்து இருந்தது. இதன்மூலம் இந்திய நீதித்துறையின் அரசியல் உள்ளீடு என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறு 370-ஐ ஏற்றுக் கொள்வது என்ற நிபந்தனையின் பேரில்தான் இந்தியா வுடன் இணைந்திருக்க காஷ்மீர் ஒப்புதல் தந்தது.

“பாதுகாப்பு, தகவல் தொடர்பு, நிதித்துறை, வெளியுறவு ஆகியவை தவிர காஷ்மீர் தொடர்பாக எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும் காஷ்மீர் சட்டமன்றம் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அச்சட்டம் காஷ்மீருக்குப் பொருந் தாது” என்று அரசியலமைப்புச் சட்டம் கூறு 370 கூறுகிறது.

ஆனால், இச்சட்டப்பிரிவையே நீக்கி, காஷ்மீரின் சிறப்புத் தகுதியை அழிக்கும் முன்மொழிவை அமித்ஷா செய்தார்; இதை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

ஒரே உத்தரவில், அரசியலமைப்புச் சட்டம் அளித் திருந்த உறுதி, உத்தரவாதம் எல்லாம் காணாமல் போயின.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இல்லாமல், மாநில அரசின் பெயரால், மத்திய அரசின் முகவராக நியமிக்கப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுடன், குடியரசுத் தலைவரின் ஒரே ஒரு உத்தரவு அரசியல் அமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தபட்டிருந்த சிறப்புத் தகுதி மட்டுமின்றி, காஷ்மீரின் மாநிலத் தகுதியையும் ஒழித்துக் கட்டியது.

ஜம்மு-காஷ்மீர் ‘சட்டமன்றம் பெற்றிருக்கும் யூனியன் பிரதேசம்’ என்றும், லடாக் அதுவும் இல்லாத ‘யூனியன் பிரதேசம்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக வழியில் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மகபூபா முப்தி, பாரூக் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ நீக்கிவிட்டால் இந்தியா காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பதே பொருள்.

அனைத்து மாநிலங்களுக்கும் சுதந்திரத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட உறுதியின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் காஷ்மீர் கொண்டிருந்த அதே தகுதியை வழங்குவதற்குப் பதிலாக, சிறப்புத் தகுதியை காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புத லின்றி, நாடாளுமன்றத்தில் விவாதமுமின்றி, ஒரே உத்தர வில் ஒழித்துக் கட்டியிருக்கிறது இந்திய ஜனநாயகம்.

இந்திய அரசு, அதன் உறுப்புகளான மாநிலங்களை உள்ளாட்சிகளைவிடக் கேவலமாக நடத்தி வருகிறது.

இங்கு, பிறநாடுகளில் தேசிய இனங்களின் போக்கு எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து எனப்படும் ‘ஐக்கிய இராஜ்யம்’ என்ற அமைப்பிலிருந்து விடுபடுவதற்காக, சுதந்திரம் கோரி ஸ்காட்லாந்து ஸ்காட்டிஷ் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறது.

2014 செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்தில் மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிந்து போவதற்கு 45ரூ பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். 55ரூ பேர் பிரிட்டனிலிருந்து பிரிய வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததால் ஸ்காட்லாந்து பிரிட்டனின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது. “மீண்டும் வாக் கெடுப்பு வேண்டும்” என்று 2017-இல், முதல்வர் நிக்கோலோ சர்ஜன் ஸ்காட் லாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். மீண்டும் ஸ்காட்லாந்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

1999-இலேயே ஸ்காட்லாந்துக்கு என்று தனி நாடாளு மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து மக்கள் அடிமைப் பட்ட நிலையில் இல்லை. ஆனாலும்கூட, தாங்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில், தங்களின் உரிமைகள் முழுமையாக இருக்கவேண்டும் என்ற கருத்தோடு, ஸ்காட்லந்து தனிநாடு கோருகிறது.

தங்களுடைய தேசிய இறையாண்மையை மீட்டெடுப் பதற்காக ஸ்காட்லாந்து பிரிந்து செல்வது என்று முடி வெடுத்து, 2019-ஆம் ஆண்டில் மீண்டும் கருத்து வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து தீர்மானித்திருந்தது. இங்கிலாந்து இதை சட்டவிரோதமாகக் கருதவில்லை. ஒரு தேசிய இனத்தினுடைய அடிப்படையான உரிமையாகவே அது கருதுகிறது.

ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கட்டலோனியா 32,114 ச.கி.மீ பரப்பும், 75,04,881 மக்கள் வகையும் கொண்ட ஒரு தேசிய இனம். 2017-இல், ஸ்பெயின் விதித்தத் தடையையும் மீறி, பிரிந்து செல்வது பற்றிப் பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதில் 90ரூ மக்கள் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளித்தனர். இக் கோரிக்கையை எழுப்பும் கட்டலோனியாவும் தனி நாடாளுமன்றத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், இக் கோரிக்கையை ஸ்பெயின் ஏற்க முடியாதென்கிறது.

ஸ்காட்லாந்தும், கட்டலோனியாவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களைப்போல மத்திய அரசின் முன்னிலையில், புழக் கடையில் நின்று சோற்றுக்குக் கதறும் பிச்சைக்காரனைப் போல இல்லை. ஆனாலும், தாங்கள் ஒரு தேசியஇனம் என்ற வகையில் தங்களுக்கு எது சிறந்தது என்று பரிசீலித்துக் கோரிக்கையை வைக்கின்றன. இந்தியாவில் இதற்குப் பெயர் தேசவிரோதம், தீவிரவாதம்.

ஒரு தேசிய இனம் தன் இறையாண்மையைப் போற்று வதை உலகம் ஏற்கிறது; சுயநிர்ணய உரிமையைக் கைக் கொள்வதை உலக அமைப்புகளும், பிரகடனங்களும் ஏற்கின்றன.

அடுக்கடுக்கான தாக்குதல்கள்

‘ஒரே நாடு, ஒரே கொடி’ என்ற தேசியஇன அடையாள அழிப்புத் திட்டத்தை பாஜக அரசு முன்வைத்திருக்கிறது. திட்டக்குழுவை நீக்கிவிட்டு ‘நிதிஆயோக்’ என்னும் அமைப்பை இந்துத்துவத் திட்டத்தை நடைமுறைப் படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வந்திருக்கிறது.

ஆற்றுநீர் பகிர்வுத் தீர்ப்பாயங்களை அழிப்பதற்குச் சட்டத்திருத்தம் செய்திருக்கிறது. மாநிலங்கள் அவையின் ஏற்பு இல்லாமலே சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அனைத்து நதிநீர்த் தீர்ப்பாயங்களையும் ஒழித்துக்கட்டிவிட்டு, இந்தியா முழுவதற்கும் ஒரே தீர்ப்பாயம் என்ற பெயரில் தேசிய இனங்களுக்குச் சொந்தமான ஆறுகளைக் கையகப் படுத்த முயற்சிக்கிறது.

மாநில அமைச்சரவை செய்யவேண்டிய வேலைகளை ஆளுநர் ஆய்வு என்ற பெயரில் மத்திய அரசே நேரடியாக கைக்கொள்கிறது. தேசிய மருத்துவ ஆணைய மசோதா என்ற பெயரில் மருத்துவத் துறையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. கல்வி, பொதுப் பட்டியலில் இருப்பதைப் பயன்படுத்திக் கல்வித்துறையை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது, இந்திய அரசு. இந்தியா முழுவதற்கும் தகுதித்தேர்வு முறையைப் புகுத்தி தொழிற் கல்வியையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வருகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மாநிலத்தின் பொது விநியோகத் திட்டத்தை சிதைக்கிறது. மாநிலங்களின் நிதி ஆதாரத்தைக் குலைக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரியைப் புகுத்தியது. மாவட்ட நீதிபதிகளுக்கு அகில இந்தியத் தேர்வு என்று அறிவித்து கீழமை நீதிமன்றங்களிலும், வடஇந்தியர் களையும், இந்துத்துவத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர் களையும் நிரப்பும் வேலையை நிறைவேற்ற முயற்சிக்கிறது.

இந்திய மக்களாட்சியில் தேசிய இன உரிமைகள் பாதுகாக்கப்படுமா?

பதினெட்டு வயதான அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால் இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாகக் கருதுவதும், அனைவருடைய உரிமைகளையும் வாக்குச் சீட்டு மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நம்புவதும் தவறானது. அது ஈழமானாலும், இந்தியாவில் தமிழக மானாலும் தங்களுடைய தேசிய இன உரிமையை, அடையாளத்தை, மொழியை, தாயகத்தைப் பாதுகாத்துக் கொள்ள வாக்குச் சீட்டு என்பது பயன்படாது.

2009-இல் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவாத அரசை எதிர்த்து ஈழத் தமிழர் களால் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுபோலவே, ஈழத்தமிழர் படு கொலைக்கு எல்லா வகையிலும் உதவி செய்த இந்திய அரசை, தமிழக மக்கள் தங்களுடைய வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி எதுவுமே செய்யமுடியவில்லை.

2017 மார்ச் 30-ஆம் தேதி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில், இந்தியக் கப்பல் படைத் தலைவர் சுனில் லம்பா, “இந்தியா அனைத்து உதவிகளையும் ஈழப்போரில் இலங்கை அரசுக்குச் செய்தது” என்று பதிவு செய்தார்.

இந்திய உளவுத்துறைதான் தமிழினத் துரோகி கருணாவை ஊட்டி பங்களாவில் வைத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தயார் செய்தது. இறுதிக்கட்டப் போரின்போது, தமிழக மக்கள் ஈழப் போரைத் தடுத்து நிறுத்தும்படி மன்றாடினர். ஆனால், “போர் நிறுத்தம் கோருவது எங்கள் வேலை இல்லை” என்று இந்தியா கூறிவிட்டது. மாறாக ஈழப்போரில் சிங்களப் பேரினவாத அரசு வெற்றியடைய அனைத்து உதவிகளையும் இந்தியா செய்தது.

2009 மே பதினெட்டாம் நாள் இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்சே ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இதழுக்கு இவ்வாறு செய்திப் பதிவு செய்தார் :

“இந்தியாவின் போரையே நாங்கள் நடத் தினோம்... இப்போரில் நாம் வெல்வதற்கு இந்தியாவின் உதவியும், அனுசரணையும் மிகவும் அவசியமானதாக இருந்தது. இந்தியப் பிரதமருக்கும், காங்கிரசுக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் நாம் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்... இந்தியா நினைப்பதையும், விரும்புவதையும் செய்வதைக் காட்டிலும், வேறு முக்கியமான கடமை எனக்கு இருக்கவில்லை” என்று ராஜபக்சே பதிவுசெய்தார்.

ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு இந்தியா, ஆயுதம், தொழில்நுட்பம், ஆழ்கடல் கண்காணிப்பு, உளவுத் தகவல் பரிமாற்றம், இராணுவப் பயிற்சி என்று பல்வேறு வகை களில் உதவி செய்தது. 2008-இல் ஈழப்போரை நடத்து வதற்கு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன், பிரணாப் முகர்ஜி ஆகியோரும், சிங்களத் தரப்பில் கோத்தபாய ராஜபக்சே, லலித் வீரதுங்க, பசில் ராஜபக்சே ஆகியோரும் உள்ள குழு போரை நடத்தியது.

சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியது. ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஈழத்தில் படு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பீடு செய்ய வழிவகுத்தார். தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகள் போரை நிறுத்தத் தீர்மானம் கொண்டுவந்தபோது, போரைத் தடுக்க வேண்டாம் என்று இந்தியா ஈழப்படுகொலையைத் தடையில்லாமல் நடத்த ஆவன செய்தது.

இலங்கையும், இந்தியாவும் ஜனநாயக நாடுகள் என்றே அறியப்படுகின்றன. இந்த இரண்டு ஜனநாயக நாடுகளிலும் தேசிய இனப் படுகொலையை எதிர்த்து, வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது?

வாக்குச்சீட்டு வலிமையற்றது

கடந்த 16.11.2019 அன்று இலங்கை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், இனப்படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சே 52.25ரூ வாக்குகள் பெற்று, பெருவெற்றி அடைந்தார்.

தமிழர்களும், தமிழ் முஸ்லிம்களும் இனப்படுகொலை செய்த மகிந்த ராசபக்சே, அவருடைய தம்பி கோத்தபய ராஜபக்சே ஆகியோரை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தனர். ஆனால், தமிழர்களை இனப்படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சேவுக்கு பெருமளவில் சிங்களர்கள் ஆதரவு தெரிவித்து, அவருக்கு வெற்றி வாய்ப்பை அளித்தார்கள்.

2009 முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது, குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே, அப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் அவருடைய தம்பி கோத்தபய ராஜபக்சே. இப்போது கோத்தபய குடி யரசுத் தலைவராகவும், அவருடைய சகோதரர் மகிந்த ராஜ பக்சே பிரதமராகவும் பதவியேற்றுள்ளனர். இவர்களுக்குக் கிடைத்த வெற்றிக்குக் காரணம் தமிழர்களைப் பெரு மளவில் இனப்படுகொலை செய்தார்கள் என்பதுதான்.

எப்படிப் பார்த்தாலும், இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதியில் இருக்கக்கூடிய தமிழர்களும், தமிழ் முஸ்லிம் களும் 30 சதவீதத்தைத் தாண்டவில்லை. அவர்கள் இலங்கையின் நிரந்தரச் சிறுபான்மையினர். ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் ஒரு நாட்டில், நிரந்தரச் சிறுபான்மை யினராக உள்ள இவர்கள் தங்களுடைய வாக்குச் சீட்டின் மூலமாக எந்த அரசியல் மாற்றத்தையும் பெற்றுவிட முடியாது; தேர்தலில் வாக்குரிமையைப் பயன்படுத்துவதன் மூலமாக எப்போதும் தங்களுடைய உரிமைகளைப் பாது காத்துவிட முடியாது.

கோத்தபய ராஜபக்சே, “எனக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் என்பக்கம் வாருங்கள். ஒரே இலங்கையை உருவாக்க வேண்டும்” என்று கூறி பௌத்த, சிங்கள இன ஆதிக்கத்தை ஏற்கும்படி அழைக்கிறார். ஈழத்தில் சிங்களக் குடியேற்றங்கள் விரைவாக நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. 2000 கோயில்கள் வரை உடைக்கப்பட்டுள்ளன. 90 சதவீதம் வாக்குகளைப் பெற்ற கோத்தபய சிங்களமயமாக்கலை விரைவுபடுத்தியிருக்கிறார்.

ஈழத் தமிழர்கள் தங்கள் வாக்குச்சீட்டு மூலமாக எதைச் சாதிக்க முடிந்தது? அதைப்போன்றே, இந்தியாவில் தமிழர்களின் நிலை என்ன?

8 கோடிப் பேர் கொண்ட தமிழகம், ஐரோப்பாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட ஜெர்மனிக்கு நிகரானது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக உறுப் பினர்கள் நிரந்தரச் சிறுபான்மையினர். இந்தி, சமஸ்கிருத, ஆரிய, இந்துத்துவ வெறியுணர்வு கொண்ட 225 மக்களவை உறுப்பினர்களின் கட்சி கடந்த ஒற்றுமைக்கு முன்பு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதையும் சாதிக்க முடியவில்லை. 8 கோடிப் பேர் தமிழர்கள் இருந்தாலும்கூட, இந்திய நாடாளுமன்றத்தில் தேசிய இனங்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை நிறைவேற்றும் போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் தங்கள் இருப்பின் மூலமாக, சனநாயக மற்ற நடப்புகளுக்கு ஒரு சனநாயக அங்கீகாரத்தை வழங்கிவிடுகிறார்கள்.

இதைத்தவிர, தமிழகம் தங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்களை டெல்லிக்கு அனுப்புவதன் மூலமாக எதுவும் சாதித்துக் கொள்ள முடியவில்லை. எந்த விடயத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக் கிறார்கள்? எந்த இழந்துபோன உரிமையை மீட்டிருக் கிறார்கள்? அல்லது எந்த உரிமைப் பறிப்பைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்?

இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தபோது அதை இயக்கிக் கொண்டிருந்த இந்தியாவிடம் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், ஒட்டுமொத்த மக்களும் போரை நிறுத்த ஆவன செய்யுமாறு தொடர்ந்து வேண்டுகோள் வைத்தனர்.

ஆனால் இந்தியா “போர் நிறுத்தம் கோருவது எங்கள் வேலை இல்லை” என்று கூறி விட்டது.

போர் முடிந்த பிறகு, ஐக்கிய நாடுகள் அவை, “ராஜபக்சே உள்ளிட்டோரைப் போர்க் குற்றவாளிகள்” என்றது. அதை இந்தியா ஏற்கவில்லை.

“நடந்தது இனப்படுகொலை” என்று உலகம் குற்றம் சாட்டியது; அதையும் இந்தியா ஏற்கவில்லை.

போர்க்குற்றவாளிகளும், இனப்படுகொலையாளர்களு மான சிங்கள ஆட்சியாளர்களைச் சர்வதேச அரங்கில் தொடர்ந்து காப்பாற்றும் வேலையை இந்தியா செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தால் எதைச் சாதிக்க முடிந்தது? இனப்படுகலைக்கு உள்ளாகி அனைத்தையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு என்ன சாதித்துக் கொடுத் திருக்கிறோம்? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், ஈழத் தமிழர்களைக் காக்கவேண்டுமென்று இன்றளவும் வேண்டுகோள்களை மட்டும் தமிழகத் தலைவர்கள் வைப்பதன் நோக்கம் என்ன?

 இந்தியாவில் தேசிய இனங்களின் பிரச்சனைக்கு இந்திய அரசியல் சட்டத்துக்குள் தீர்வு இல்லை. தீர்வு அரசியல் சட்டத்துக்கு வெளியில்தான் இருக்கிறது.

உலகின் மிக நீண்ட அரசியல் சட்டமான இந்திய அரசியல் சட்டம், இந்தியாவில் சாதி இருப்பதை ஏற்கிறது; மதங்கள் இருப்பதை ஏற்கிறது. ஆனால், ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் சமமான மக்கள் தொகை யைக் கொண்டிருக்கக்கூடிய தேசிய இனங்கள் இருப்பதை ஏற்கவே இல்லை. தேசிய இனங்களின் இருப்பையே ஏற்காத இந்திய அரசியல் சட்டத்தை ஒரு ‘சனநாயகச் சட்டம்’ என்று கூறுவது நகைப்புக்குரியது. அது ஒரு ‘சனநாயக மறுப்பு ஆவணம்’ ஆகும்.

ஒரு மனிதனின் உடலில் உயிர் இருப்பதைப்போல, ஓர் இனத்தின் இறையாண்மை அமைகிறது. உயிரற்ற உடலும் இறையாண்மையற்ற இனமும் ஒன்றுதான். அந்த இன இறையாண்மை சுயநிர்ணய உரிமையாக (Right to self Determination) வெளிப்படுகிறது.

ஓர் இனம் தன்னுடைய சமூக, பொருளாதார, அரசியல் கதிப்போக்கைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் அந்த உயரிய அதிகாரத்திற்குப் பெயரே ‘தன்தீர்வு (தன் தீர் மானிப்பு) உரிமை’ அல்லது ‘சுயநிர்ணய உரிமை’.

சுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு தேசிய இனம் உதிரியான உரிமைகளைப் பெற்று இருந்தாலும், அது ஓர் அடிமைப்பட்ட இனமே.

இந்தியாவில் இன்று 18-க்கும் குறையாத தேசிய இனங்கள் இருக்கின்றன. ஜோசப் வி. ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

இன்று இந்தியா ஒரே முழுமை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஒரு புரட்சிகர எழுச்சி ஏற்படும்போது, தனக் கென்று தனிப்பட்ட மொழிகளையும், கலாச் சாரங்களையும் கொண்டவையும், இதுவரை அறியப்படாத பல தேசியஇனங்கள் அரங்கில் தோன்றும் என்பதில் ஐயமில்லை"

நாம் ஒரு தேசிய இனம் என்று எந்த தேசிய இனமும் உணராத அளவிற்கு, மிக இலாவகமாக பிழைப்புவாத அரசியலை பல்வேறு தேசிய இனத் தலைவர்களும் கையாண்டு வருகிறார்கள்.

எட்டு கோடி மக்களைக் கொண்ட தமிழகத் தமிழினம் தன் தாயக நிலப்பரப்பையும், பொதுமொழியையும், ஒரு பொருளியல் வாழ்வில் விளைந்த பண்பாட்டையும், தாம் ஓர் இனம் என்ற உளவியலையும் கொண்டிருப்பதால் இது ஒரு தேசிய இனம்.

தமிழ்த் தேசிய இனம் முதலில் கைக்கொள்ள வேண்டியது தன்னுடைய இறையாண்மை மீட்டெடுப்பு அரசியலைத்தான். சுயநிர்ணய உரிமைக்கான போராட் டங்களை தமிழ்த் தேசிய இனம் முன்னெடுக்க வேண்டும்.

இது இந்தியாவில் உள்ள ஒடுக்கப்படும் அத்தனை தேசிய இனங்களுக்கும் பொருந்தும். பிற நாடுகளில் தலைவர்கள் தேசிய இனப் பிரச்சனையை எப்படிக் கையாண்டார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

மார்க்சு, ஏங்கல்சு, இலெனின், ஸ்டாலின் உள்ளிட்டோர் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை முதலில் அங்கீகரித்தார்கள்.

ஒரு தேசிய இனத்தின் பெரும் ஜனநாயக உரிமையான சுயநிர்ணய உரிமையைக் கைக்கொண்ட ஒரு தேசியஇனம் பிரிந்து போகலாம், அல்லது பிற தேசிய இனங்களோடு சேர்ந்தும் வாழலாம். அதைத் தீர்மானிக்கும் இறை யாண்மையை அந்த இனமே பெற்றிருக்கிறது.

இந்தியா ஒரு பல்தேசிய இன நாடு. இங்கு ஒடுக்கும் தேசிய இனமாக இந்தி தேசிய இனம் இருக்கிறது.

இந்தி தேசிய இனத்தில் ஏழை, எளியவர்கள், பாட்டாளிகள் உண்டு. ஆனால், ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள ஆளும் வர்க்கமே ஒடுக்குதலைச் செய்கிறது.

அனைத்துத் தேசிய இனங்களும் சுயநிர்ணய உரிமை அல்லது தன் தீர்மானிப்பு உரிமை பற்றிய புரிதலைப் பெற வேண்டும். இந்தியப் பெருநாட்டில்,ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான போராடங்களைத் தொடங்க வேண்டும்.

தன் இறையாண்மையை மீட்டெடுக்கப் போராடும் அதேநேரம், பிற தேசிய இனங்களின் போராட்டங்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். இதற்கு நீண்டகாலம் பிடிக்கலாம். ஆனால், தேசிய இனங்களுடையப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அதில்தான் இருக்கிறது.

விடுதலை பெற்ற தேசிய இனக் குடியரசுகளின் கூட் டமைப்பாக இந்தியா மாறவேண்டும்!

பேராசிரியர் த. செயராமன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

Pin It