கேரள முதல்வர் தலைக்கு 1 கோடி! இதை மட்டும் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளரான சந்திரவாட் பேசவில்லை.

"குஜராத்தில் எப்படி 2000 முஸ்லிம்களைக் கொன்று இரத்தங்களை ஓட விட்டோமோ, அதே போன்று இன்னும் பல பழிவாங்குதல்கள் இருக்கும்." என்றும் தைரியமாகப் பேசியுள்ளார். இந்தப் பேச்சுக்கு அங்கிருந்த பல்லாயிரம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஜெய் ராம் என்றும் கோஷமும் போட்டுள்ளார்கள். ( source - Hindustan Times 03/03/17)

கலவரக்காரர்களின் பிரதிநிதிகள் அனைவரும் சுகபோகமாக தங்களது துவேஷக் கருத்துகளை வெளிப்படையாக சொன்னாலும் எந்த கேள்விக்கும் உள்ளாக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு கல்லூரி மாணவன் நியாயமான கேள்வி கேட்டால், அரசியலமைப்பின் ஆக மொத்த குற்றப் பிரிவில் இணைத்து தேசவிரோதியாக மாற்றுகிறார்கள்.

குஜராத்தில் இந்துத்துவ அமைப்புகள் செய்த கொடூரத்தின் அளவையும், அதனால் இன்று வரை அவர்களின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை எழுத்தாளர் சமஸ் 'தி ஹிந்து' பத்திரிக்கையில் பதிவு செய்திருந்தார்.

குஜராத்தில் கலவரம் நடந்த இடத்திற்குச் சென்று மக்களிடம் நேர்காணல் கேட்கும்போது, அங்கு குடியிருந்தவர்களின் வீட்டுக் கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் இரும்பிலேயே இருந்தன. ஏன் இதுவெல்லாம் இரும்பிலேயே இருக்கிறது எனக் கேட்டதற்கு, இங்கே கலவரங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. கலவரம் என்று ஆரம்பித்தாலே பெட்ரோல் குண்டுகள் எங்கள் வீட்டினுள் பாயும். வீடும் முழுக்க சேதமாகி விடும். குறைந்தது, இந்த இழப்பை குறைக்கவே நாங்கள் எங்கள் வீடுகளின் ஜன்னல்களையும் கதவுகளையும் இரும்பினால் செய்திருக்கிறோம் என்றார்கள்.

குஜராத் கோரதாண்டவம் முடிந்து கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் முடிந்து விட்டது. ஆனாலும் அவர்களது வாழ்க்கை இன்றும் பதட்டங்களுக்கு மத்தியில் தான் நீள்கிறது.

இரும்புக் கதவுகள் உபயோகப்படுத்துவது என்ன அவ்வளவு பெரிய பாதிப்பா என்று கேட்பவர்களும் இருக்கக்கூடும். ஆனால், நாம் ஒரு வீட்டை கட்டும் போது அழகான முகப்பு, அழகான கதவு, அழகான டைல்ஸ் என நம் வாழ்க்கைத்தரத்தை எவ்வளவு அழகாக செதுக்கிக் கொள்கிறோம். ஆனால், வீட்டை கட்டும் போதே எப்படி கலவரக்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவது என யோசிக்கும் சூழ்நிலையைத் தான் மோடி குஜராத்தில் வளர்ச்சியாகக் கொண்டு வந்துள்ளார்.

நாட்டின் பிரதமரே ஆர்.எஸ்.எஸ், உடைய முதன்மைப் பிரச்சாகராக செயல்படும்போது அவர்களுக்குக் கீழுள்ள மந்திரிகளும் இதுபோன்று பேசுவது இயல்பு தானே. கேட்டுக் கொள்ளுங்கள்... இந்த நாட்டிற்குப் பெயர் தான் ஜனநாயக நாடு.

- அபூ சித்திக்

Pin It