யோகேஸ்வரி என்ற 13 வயது வேலைக்காரப் பெண்ணைப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் 'பொங்கு தமிழ்' கணேசலிங்கத்திற்கு எதிரான வழக்கு 3.10.05ல் யாழ்ப்பாணத்தில் நடந்தது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல பெண்கள் அமைப்புக்கள் இந்த வழக்கில் யோகேஸ்வரிக்கு நீதி கேட்டுப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். பெண்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கணேசலிங்கத்திற்கு வரும் எதிர்ப்பால், நீதிபதி திருமதி ஸ்ரீநிதி அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இன்னும் விடுதலை தர மறுத்திருக்கிறார்.

யோகேஸ்வரிக்கு ஆதரவு கொடுக்க வழக்கு மன்றத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான பெண்கள் 'காமுகனுக்குத் தணடனை கொடு, யோகேஸ்வரிக்கு நீதி கொடு' என்ற கோஷங்களுடன் போயிருந்தார்கள். இநதச் செய்தி மேற்கு நாடுகளையடைந்தபோது, யாழ்ப்பாணப் பெண்கள் நீதிக்குப் போராட வந்த விடயம், உலகம் பரந்துவாழ் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பெருமையைத் தந்தது. இன, நிற, வேறுபாடின்றித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

கணேசலிங்கத்திற்கு வாதாடும் ஸ்ரீகாந்த், முதற்தடவை வழக்கு மன்றத்தில் நடந்து கொண்ட மாதிரி இம்முறையும் மனித உரிமை அமைப்புக்களைச சாடியது மட்டுமல்லாமல் யோகேஸ்வரிக்காகப் பரிந்து வந்து போராடும் பெண்களையும் சாடினாராம்.

போராட வந்திருக்கும் பெண்களின் குரல்கள் வலிமையானவை. தெளிவானவை. இதுவரைக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று பெண்கள் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கணேசலிங்கத்தை வெளியே விடவேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இன்று நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததும் பெண்கள் அமைப்புக்களிலிருந்து கண்டன அறிக்கைகள் வருவதும் ஸ்ரீகாந்துக்குப் அதிருப்தியை உண்டாக்கியிருக்க வேண்டும் என்பதன் எதிரொலி அவர் குரலில் பிரதிபலிக்கிறது.

வழக்கில் சம்பந்தப்பட்ட விடயத்தைத் திரிபுபடுத்துவதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது என்பதையுணர விடாத அகங்காரம் அவரின் செயல்களிலும் பேச்சிலும் பிரதிபலிக்கின்றன. யோகேஸ்வரி போன்ற ஏழைப் பெண்கள் ஆறு வயதில் அரைப் பட்டினி காரணமாக ஒரு வீட்டில் வேலைக்கமர்வதும் காமுகர்களால் துன்பப்படுத்தப்படுவதும், எங்கள் சமுதாயத்தில இனி நடக்கக் கூடாது; யோகேஸ்வரி போன்ற குழந்தைகளின் வாழ்க்கை மலர முதலே கசக்கியெறியும் கணேசலிங்கம் போன்றோர் எங்கள் சமூகத்தில உயர்மட்ட உத்தியோகங்கள் செய்வதும் ஒரு சமூகத் துரோகம். இளம் தலைமுறையை மாசுபடுத்துபவர்கள் இவர்கள்.

இவைகளையுணர்ந்த பெண்கள் போராடுகிறார்கள். இதை ஸ்ரீகாந்த் தாறுமாறாக எடைபோடுவது தர்மமல்ல. போராட வந்த பெண்களை வைவதால் வழக்கைத் திசை திருப்ப விடக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து போராடும் பெண்களைப் பற்றிச் ஸ்ரீகாந்த போன்றவர்கள் மரியாதைக் குறைவாகப் பேசலாம்; அது பெரும்பாலான ஆண்களின் இயல்பு. ஆனால், பெண்ணடிமைத்தனத்திறகும், சமுதாய மாற்றத்திறகும் நியாயத்திற்கும் போராடும் பெண்கள் இவற்றைப் பொருட்படுத்தக்கூடாது.

ஒரு பெண்ணின் வாழ்க்கை ஆரம்பிக்க முதலே, அவள் வாழ்க்கையைச் சீர்குலைத்ததைச் சில அரசியல் ‘பிரமுகர்கள்' பிழையென்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கணேசலிங்கத்தின் சார்பில், அவரைக் காப்பாற்ற பெரிய தர்க்கங்களைப் போடுவார்கள். யோகேஸ்வரியைக் கேவலப்படுத்துவார்கள். அந்த ஏழைக்குக் கெட்ட பெயர் கொடுக்கும் வதந்திகளையெல்லாம் பரப்புவார்கள்.

பெண்மை தெய்வீகமானது. ஓரு உயிரின் ஆக்கத்திற்கும் பாதுகாப்பிறகும் ஒரு தாய் இன்றியமையாதவள். பூமியைத் தாய் என்று வணங்குகிறோம். ஏனென்றால், இவ்வுலகத்தைத் தாங்கி நிற்பவள் அவள். உலகம் மாசுபட்டால் அப்பூமியில் எதுவும் வளராது. ஒரு பெண் மாசுபட்டால் அவள் வாழும் சமுதாயம் மாசுபடும். ஒரு பெண் தனிமையாக வாழ்வதோ அல்லது ஏழையாகப் பிறந்ததோ கணேசலிங்கம் போன்றோரின் இச்சையைத் தீர்ப்பதற்காகவல்ல. 

ஓரு பெண் இரவிற் தனிமையாகப் போகுமளவுக்குச் சுதந்திரமில்லாவிட்டால் அந்த நாட்டில் யாருக்கும் சுதந்திரமில்லை என்றார் மகாத்மா காந்தி. ஆனால் ஏழை வேலைக்காரிகளுக்குப் பகலிலும் பாதுகாப்பில்லாமற் செய்கிறார்கள் கணேசலிங்கம் போன்றவர்கள். அந்தச் சுதந்திரத்திற்காகப் போராட எல்லாப் பெண்களும் ஒன்றுபடுதல் இன்றியமையாதாது.

'கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மௌனமாய்ச் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்' என்றார் மார்ட்டின் லூதர்கிங்.

ஓரு 13 வயதுப் பெண் 40 தடவைகள் இந்த கணேசலிங்கத்தின் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி, அந்தத் துயர் தாங்காமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்.

இன்று உலகம் பரந்து வாழும் தமிழ்த்தாய்கள், தங்களின் குழந்தைகளின் நிலையில் யோகேஸ்வரியை வைத்துப் பார்க்க வேண்டும். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தத் தாயும், அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியமான உடல், உள வளர்ச்சியில், படிப்பில், முன்னேற்றத்தில் பாதுகாப்பில், முழுக்கவனமும் செலுத்துகிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு, யோகேஸ்வரியின் நிலை வந்தால் நீதி கேட்டு உலக நீதி மன்றங்களுக்கும் போகத் தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

உலகம் பரந்து வாழும் தமிழ்த் தாய்களே, யோகேஸ்வரிக்கு நியாயம் கேட்டுப் போராடும் யாழ்ப்பாணத்து, ஒட்டு மொத்தமாகச் சொல்லப் போனால், இலங்கைப் பெண்களுக்கு ஆதரவு கொடுப்பது எங்களின் தார்மீகக் கடமையல்லவா? மவுனமாக இருப்பது பாலியல் கொடுமை செய்தவனை ஆதரிப்பதற்குச் சமமில்லையா?

யோகேஸ்வரி போன்ற ஏழைப் பெண்களின் அடிப்படையான மனித உரிமையைத் துவம்சம் செய்த கணேசலிங்கம் போன்றவர்களைக் காப்பாற்ற ஒரு சிலர் சொல்லும் விளக்கங்கள் மிகவும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

'அவர் (கணேசலிங்கம்) உள்ளுக்கு இருப்பதால் மனைவி, மக்கள் வெளியிற்போக முடியாமலிருக்கிறது' என்று அனுதாபப்படுபவர்களிடம் அவரை நம்பி வந்த அந்த ஏழைப் பெண்ணுக்கு அவர் செய்த கொடுமை கொஞ்சமும பரிதாபத்தை உண்டாக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படியானவாகளின் நடத்தை, மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது. 

மனித உரிமை அமைப்புக்களால் அவளுக்காக வழக்காட வந்திருக்கும் திரு ரமேடியஸ் அவர்களுக்கு ஆதரவைக் கொடுப்பது மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்திருக்கும் யாவரினதும் கடமையாகும். இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைப் பெண்களின் குரல்கள், யோகேஸ்வரிக்காகப் போராடும் இலங்கைத் தமிழ்பெண்களுடன் இணையும என்று எதிர்பார்க்கிறோம்.

தர்மம், நியாயம், நீதி, மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அநீதிக்குக் குரல் கொடுக்க விரும்பினால் உங்கள் கண்டனங்களை நீதிபதிக்கு அனுப்பி வையுங்கள். அதேபோல், திரு ரமேடியஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க விரும்புவர்கள் பின்வரும் விலாசத்திற்கு அனுப்புங்கள்

Mr. Ramedious, 
Centre for Human rights and development,
131 (Old no 2) David Rd,
Jaffna, 
Sri Lanka

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 

Pin It