எதிர்ப்பில்லாப் பாசக
மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மக்களுக்குத் தந்துள்ள சொல்லொண்ணாத் துயரங்களைப் பற்றிப் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். கடைந்தெடுத்த பிற்போக்கு இந்துத்துவா அரசியலாளர்களைத் தவிர மற்றெவரும் இந்நடவடிக்கையை ஆதரித்ததாகத் தெரியவில்லை. அம்பானி போன்ற உலகளாவியத் தொழில் முதலைகள் இந்நடவடிக்கையை இரு கைநீட்டி வரவேற்ற பொழுதே இது யாருக்கான திட்டம் என்பது தெளிவாகி விட்டது.
வங்கிகளின் முன் வரிசையில் வதைபட்டவர்களோ செத்து மடிந்தவர்களோ எவரும் உயர் வர்க்கத்தினர் இல்லை; பதவிகளில் இருப்பவர்களோ மாதச் சம்பளக்காரர்களோ இல்லை; நடுத்தர வர்க்கத்தினர் இதில் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் படிப்பறிவைக் கொண்ட அவ்வர்க்கம் ஏற்கனவே மோடியின் பணமில்லாப் பரிமாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கி விட்டது.
அன்றாடங் காய்ச்சிகளே பெரும் அல்லலுக்கு உள்ளாகி வருகிறார்கள். தினக்கூலியாய் வாரக் கூலியாய் அவர்கள் சம்பாதித்த, வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சேமித்த தொகையைத்தான் மாற்ற அவர்கள் திண்டாடித் திணறிப் போகிறார்கள். அதே போல சிறுதொழில் செய்து பிழைத்து வந்தவர்கள், பெட்டிக்கடைக்கார வகையறா சிறு வணிகர்கள், ஊர்ப்புற ஏழை உழவர்கள் போன்ற அடித்தட்டு மக்களே மீளவதற்கான வழி புலப்படாமல் கண் பிதுங்கிக் கலங்குகிறார்கள். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் வாயற்ற ஊமைகள். பாரதி வருந்திப் பாடுவானே, “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்று. அவர்கள் இவர்கள்தாம். மோடியின் அடாவடியால் “நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து” மடிகின்றவர்கள் இவர்களே. இவ்வாயற்றவர்களின் அழுகைக் குரல் உயர் அரசியல்\அரசுப் பதவிக்காரர்களையோ படித்தவர்களையோ எட்டியதாகத் தெரியவில்லை.
அய்ம்பது நாள்களில் துன்ப துயரங்கள் மாயமாய் மறைந்து விடும் என்றார் செப்படி வித்தைக்காரர் மோடி. ஆனால் அவரது ஆங்கிலப் புத்தாண்டு உரை பணமதிப்பு நீக்கச் சம்மட்டி அடியால் தலை நசுங்கிப் போனவர்களை மீட்டெடுக்க எந்த மாற்று மந்திரங்களையும் உச்சரிக்கவில்லை. அவர் அறிவித்துள்ள சலுகைகள் எதுவும் நொந்து போன மக்களுக்கு ஒத்தடம் கொடுப்பதாகக் கூட அமையவில்லை. ஆனால் மக்கள் தம்பக்கம் என்று அவர் மார்தட்டியது எந்தச் சலனமும் இன்றி அவர் பாதையில் அவர் வீறுநடை போடுவதையே காட்டியது. உத்திரப்பிரதேசத் தேர்தல் பரப்புரையில் உற்ற தோழன் அமித்ஷா உடன்வர அவர் ஆற்றும் உரைகள் அவரை அச்சுறுத்தும் ஆற்றல்களோ தடுத்து நிறுத்தும் தடைக்கற்களோ அறவே இல்லை என்பதையே காட்டுவதாக அமைந்துள்ளன. இடதுசாரிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளால் முடிந்த ஒன்றே ஒன்று, நாடாளுமன்றத்தையும் மக்களவையையும் முடக்குவதுதான். அவை முடங்கிப் போவதைத்தானே இந்துத்துவாப் பாசிசமும் உள்ளூர வாழ்த்தி வரவேற்கிறது.
பாசக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்தே அதன் குறிக்கோளில் முட்டுக் கட்டைகள் எதுவும் இன்றி முன்னேறி வருகிறது. அதன் இந்துத்துவாப் பாசிசப் போக்கைத் தடுத்து நிறுத்தக் கூடிய எதிர்வினைகள் இந்திய நிலப்பரப்பில் எங்கும் இதுவரை இடம் பெறவில்லை. இதுதான் உண்மை. அவ்வப்பொழுது பெருத்த எதிர்பார்ப்புடன் கிளர்ந்தெழுந்த எழுச்சிகள் அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகராமல் அடங்கிப் போயின. தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு எழுச்சியுடன் திரண்டு அடங்கிப் போகும் ஆதரவு அலைகளையே அவை நினைபடுத்துவதாக உள்ளன. இன்று தமிழ்நாட்டில் ஈழத்தை நினைத்துக் கவலைப்படுபவர்கள் ஏறத்தாழ எவரையும் காணோம். இந்துத்துவா எதிர்ப்பும் அப்படி நீர்த்துப் போகுமோ என்ற கவலையே மேலோங்குகிறது.
திரைப்படக் கல்லூரிப் போராட்டம்
பண்பாட்டுத் தளத்தில் இந்துத்துவாவின் திட்டத்திற்கு நெருக்கடி கொடுக்கக் கூடியதாய் வீறு கொண்டெழுந்த போராட்டம் பூனா திரைப்படக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஆகும். திரைப்படக் கலைக்கு எள்ளளவும் தொடர்பே இல்லாத ஊர்பேர் தெரியாத சவுகானை அங்கு முதல்வராகப் பணியமர்த்தியதை எதிர்த்துத்தான் மாணவர்கள் போராடினார்கள். திரைப்படத்துறையைச் சேர்ந்த புகழ் பெற்றவர்களும் முற்போக்காளர்களும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்தனர்; கலை நிறுவனங்களில் அதிகாரத் தலையீடு கூடாதென்று அனைவரும் வலியுறுத்தினர். எந்தக் குரலும் மோடியின் செவியை எட்டவே இல்லை.
மாணவர்களுக்குப் பல்வேறு வகைகளில் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. உலகத் திரைப்பட விழாவில் அவர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது; நக்சைலட்டுக்ள் நடத்தும் போராட்டம் எனத் திசை திருப்பப்பட்டது; படிப்பு வீணாய்ப் போய்விடும் என மிரட்டப்பட்டது. வீரஞ்செறிந்த நீண்ட நாள் நடைபெற்ற அப்போராட்டம் எந்த வெற்றியையும் ஈட்டாமல் அப்படியே ஓய்ந்து போனது. அப்போராட்டத்தைப் பல்வேறு தளங்களுக்குக் கொண்டு செல்லத் தவறியது யார் குற்றம்? இராதே மாவின் சீடர் கசேந்திர சவுகான் அங்குத் தொடந்து கலைப்பணி ஆற்றி வருகிறார். பூனே மாணவர்களின் போராட்டம் மக்களின் மனதை விட்டு ஏறத்தாழ நீங்கிய நிலைதான்.
கனவுகளில் கரைந்து போன வேமுலா
கடந்த 2016 இன் தொடக்கம் எத்தணை பேர்களுக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை. ஓராண்டு நிறைவுறப் போகிறது. சனவரி 17, 2016. தமிழ்நாட்டுப் பொங்கல் விழாவை ஒட்டிய நாள், தமிழனுக்குப் புத்தாண்டுத் தொடக்கம். தன் கனவையும் தன் தாயின் கனவையும் தன் சமூகத்தின் கனவையும் தன்னுள்ளே ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டு தன் சாவில் தன்சமூகம் விழித்தெழும் என்ற நம்பிக்கையோடு ரோகித் சக்கரவர்த்தி வேமுலா தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட நாள் அதுதான். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நாள அது. முற்போக்கு இளைஞர்களும் மாணவர்களும் கொதித்துக் குமுறிய நாள் அது.
நேரு பல்கலைக் கழகம் தொடங்கிப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அப்பொழுதும் என் தாய்த்தமிழகத்தில் பெரிதாக எந்நிகழ்வும் இடம் பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேமுலாவின் கடிதத்திற்கு அறிவுலகக் கோமான்கள் விதந்தோதி விளக்கவுரை எழுதினார்கள். ஆனால் எல்லாமே மெல்ல மெல்ல அடங்கிப் போயிற்றே! வேமுலாவின் சாவிற்கு யார்யார் காரணமாய் இருந்தார்களோ அவர்கள் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லையே! போராட்டச் சூட்டில் விடுப்பில் சென்ற துணைவேந்தர் அப்பா ராவ் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் அனைத்து அதிகாரங்களுடன் தொடர்கிறார்; பண்டாரா தத்தாத்திரேயா மோடி அரசில் அமைச்சராகப் பவனி வருகிறார். என்.சுசீல் குமார் அகில பாரத விசுவ இந்து பரிசத்தின் நம்பிக்கை நட்சத்திர நாயகராய்த் திகழ்கிறார்.
மேற்கண்டோர் அனைவர் மீதும் மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்த பொழுது தாழ்த்தப்பட்டோர்\பழங்குடியினர் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அதன் பின் அவர்கள் எவர் மீதும் எந்த நடவடிக்கையும் தொடரப்படவில்லை; வேமுலாவிற்கு நீதி வேண்டிப் போராடிய மாணவர்கள் மீதுதான் காவல்துறையின் கடுமையான வன்முறை ஏவி விடப்பட்டது; இருபத்தைந்து மாணவர்களும் இரண்டு பேராசிரியர்களும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். கீழ்வெண்மணியை நினைவுபடுத்தும் நிகழ்வு அது. அப்பொழுதும் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டு நியாயம் கேட்டோர் தண்டிக்கப்பட்டனர்.
பெரும் நெருப்பாகாத சிறுபொறி
2016இல் வேமுலாவின் அலையோடு சேர்ந்தடித்த அலை கன்னையா குமாரின் அலை. பீகாரில் எளிய குடும்பத்தில் பிறந்து தம் அறிவாற்றலால் டெல்லி சவர்கலால் நேரு பல்கலைக் கழகத்தைச் சென்றடைந்தவர் அவர். இடதுசாரி அரசியலாலும் அம்பேத்காரிய தலித் அரசியலாலும் ஈர்க்கப்பட்டு அதனூடே வளர்ந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பவர். காசுமீர் மக்களுக்காகக் குரல் கொடுத்ததால் அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. காசுமீர் மாணவர்களோடு அவரையும் கைது செய்தது டெல்லிக் காவல்துறை. தன்னெழுச்சியாய் எழுந்தது மாணவர் போராட்டம். நேரு பல்கலைக் கழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வேமுலா தற்கொலையும் கன்னையா குமார் கைதும் ஒரு புதிய போராட்ட அலையை உருவாக்கின. கருத்துரிமையின் மீது கை வைத்ததற்கு எதிரான கண்டனப் பேரலை அது. காலப் போக்கில் எல்லாமும் அப்படியே வடிந்து போனது நம் வரலாற்றுச் சோகம்.
கன்னையா குமாரும் காசுமீர மாணவர்களும் தேசத்துரோக வழக்கை நீதிமன்றத்தில் எதிர் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுத்த பேராசிரியர்களும் பல்வேறு அதிகார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் ஒரு நல்ல விளைவு நேரு பல்கலைக் கழகத்தில் பிரிந்து கிடந்த இடதுசாரி மாணவர் அனைவரும் ஒன்றுபட்டனர் என்பதே ஆகும். மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி மாணவர்களே வென்றுள்ளனர். ஆனாலும் அங்கேயும் இந்துத்துவா ஆற்றல்களின் கை ஒவ்வொரு நாளும் ஓங்கிக் கொண்டுதான் வருகிறது என்பதை நினைவிலிருத்த வேண்டும்.
திரிக்கப்படும் வரலாறு
அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் துணைவேந்தர் தொடங்கி அதிகார மய்யங்களுக்கு இந்துத்துவா ஆதரவாளர்களையே பாசக அரசு பணியமர்த்தி வருகிறது. கலை, பண்பாட்டு மய்யங்களில் தன் ஆதரவாளர்களை அது திட்டமிட்டு நிரப்பி வருகிறது. வரலாறு, தொல்பொருள் ஆய்வு மய்யங்களில் பணியாற்றிய இடதுசாரிகள் நடுநிலை ஆய்வாளர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டு அவற்றைக் காவிமயமாக்குவதில் அது வெற்றி கண்டுள்ளது. அதனுடைய விளைவுகள் இப்பொழுதே தெரியத் தொடங்கிவிட்டன.
ஹரப்பா மொகஞ்சதாரோ நாகரிகங்களில் வேதகால அடையாளங்கள் மும்முரமாகத் தேடப்படுகின்றன. சரசுவதி ஆற்றைக் கண்டு பிடிப்பது முடுக்கி விடப்பட்டுள்ளது. அதே சமையம் கீழடி அகழ்வாய்வு முடக்கப்பட்டு விட்டது. கீழடிக் கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்றை மாற்றி எழுத நம்மைக் கட்டாயப்படுத்துகின்றன என்கின்றார் தலைசிறந்த வரலாற்றாய்வாளர் ரோமிலா தாப்பர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் வரலாற்றையும் தெற்கிலிருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் நேரும். அஃது இந்துத்துவா கட்டமைக்கும் வரலாற்றைத் தகர்க்கும். அதற்கஞ்சியே கீழடி அகழ்வாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அதை வண்மையாகக் கண்டித்துள்ளார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் சனவரி 5, தி இந்து இதழில் ‘கிடப்பில் போடப்படுகிறதா கீழடி?’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளார். எதிர்ப்புகள் அறிக்கை, கட்டுரைகளோடு நின்றுபோய் விடுகின்றனவே!
காவி மயமாகும் கல்வி
எல்லாவற்றிற்கும் மேலாய்க் கல்வியின் அடிப்படையையே தகர்க்கும் தெளிவான திட்டத்துடன் மோடி அரசு களம் இறங்கி உள்ளது. அதன் தேசியக் கல்விக் கொள்கைத் திட்டம், 2016 எந்தப் பாசாங்கும் அற்ற இந்துத்துவா கல்விக் கொள்கைத் திட்டம் ஆகும். தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியனுக்கும் கல்விக்கும் எள்முனை அளவுத் தொடர்பும் கிடையாது. ஓய்வு பெற்ற மய்ய அரசின் சவுளித் துறைச் செயலாளர் அவர். அவரைப் போலவே அதன் அய்ந்து உறுப்பினர்களில் நால்வர் அரசின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அய்ந்தாவது உறுப்பினர் ஜே.எஸ். இராஜ்புத் ஒளிவு மறைவற்ற ஆர்.எஸ்.எஸ்காரர்.. இவர் கடந்த வாசுப்பேயி ஆட்சிக் காலத்தில் தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி அவையின் தலைவராக இருந்தவர். அவரும் அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோசியும் கல்வியைக் காவி மயமாக்க ஆடிய ஆட்டத்தை மறக்க முடியுமா?
கல்விக் கொள்கையை வகுக்கக் கல்வியாளர்களே அற்ற ஒரு குழுவை அமைத்தது உலக வரலாற்றிலேயே இதுதான் முதன்முறையாக இருக்கவேண்டும். தன்னைக் கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற அப்பற்ற பாசிச வெளிப்பாடு இது. அதற்கேற்பவே இங்குப் பெரிய எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லையே? தமிழ்நாட்டுத் திராவிட இயக்கங்களோ இடதுசாரி இயக்கங்களோ எந்தத் தீவிர எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லையே? குறைந்த எண்ணிக்கையலான கல்வியாளர்களும் ஆசிரியர்களுமே இதை எதிர்த்துக் குரல் எழுப்பினர். இதற்கிடையில் மனித மேம்பாட்டுத்துறை அமைச்சராயிருந்த சுருதி ராணி மாற்றப்பட்டு பிரகாஸ் ஜவடேகர் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார். சுப்பிரமணியன் அறிக்கை இப்பொழுதைக்குக் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் பொருள் அரசு பின்வாங்கி விட்டது என்பது அன்று. பாரிய எதிர்ப்பே இல்லாத பொழுது அது எதற்குப் பின் வாங்குகிறது?
நரமாமிச வெறியர்கள்
ஒடுக்கப்பட்டோர் போராட்ட வரலாற்றில் எப்படிக் கீழ்வெண்மணியும் கைலாஞ்சியும் மறக்கப்பட முடியாத பெயர்களோ அப்படியே மோட்டோ சமதியாலா என்ற பெயரும் எப்பொழுதும் நினைவில் நிறுத்தக் கூடிய பெயராகி விட்டது. குசராத் மாநிலம் உனா வட்டத்தில் அமைந்திருந்த சின்னஞ் சிறிய ஊர் அது. இங்குத்தான் சூலை 11 அன்று நான்கு தலித் இளைஞர்கள் மாட்டை அடித்துக் கொன்று தோல் உரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். உயர்சாதி நிலவுடைமையாளர்களின் செத்த மாட்டுத் தோல் உரித்துப் பிழைப்பு நடத்தும் அப்பாவி இளைஞர்கள் அவர்கள்.
மேலாடையைக் களைந்து சங்கிலியால் காரில் பிணைத்து அவர்களை உனா நகர் வரை இழுத்து வந்துள்ளனர் ஈவிரக்கமே அற்ற கொடியவர்கள். அங்குள்ள காவல்நிலையத்திற்கு மிக அருகில் வைத்தே மீண்டும் மீண்டும் அவர்களைத் தாக்கியுள்ளனர். புனிதப் பசுக்களைக் காப்பாற்றப் புதிதாக அவதாரம் எடுத்துள்ள கௌ ரக்சா சமிதியினரே மனிதச் சதைகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி மகிழ்ந்து கொண்டாடிய அந்தப் புண்ணியவான்கள். மாட்டு மாமிசத்தை மறுத்து மனித ரத்தத்தைக் குடிக்கும் புதிய வகை இரண்டு கால் விலங்குகள்; நரமாமிச வெறியர்கள்.
மோடியின் குசராத்தில் தங்களைக் கேள்வி கேட்க யாருமில்லை என்ற கொழுப்பேறிய திமிரில் தாங்கள் நடத்திய கோரதாண்டவத்தைப் படம் பிடித்து இணையத்திலும் உலாவரச் செய்தனர் அந்த மனித விலங்குகள். இதைக் கண்ணுற்ற தலித் மக்கள் அஞ்சி ஒடுங்கவில்லை; மாறாகக் கடும் சினத்தில் கொதித்தெழுந்தனர். ஜிக்னேஸ் மேவானி என்ற வீரம் செறிந்த தலித் இளைஞர் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் இனி மேல்சாதி நிலவுடைமையாளர்களுக்குச் செத்த மாடு தூக்கமாட்டோம், தோலுரிக்க மாட்டோம் என்று சூளுரைத்தனர். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது அவர்கள் போராட்டம். ஆனால் அப்பொழுதும் அசராதிருந்த மோடி பல நாள்கள் கழித்து தலித்துகளைத் தாக்குவதென்றால் தம்மை முதலில் தாக்கிவிட்டுப் பின்னர் அவர்களைத் தாக்குங்கள் என்று நாடக வசனம் பேசினார். அதற்குள்ளாகவே அப்போராட்டக் கனல் குளிர்ந்து போயிருந்தது.
ஜிக்னேஸ் மேவானி தலைமையில் ஏற்பட்ட எழுச்சி இந்தியா முழுவதும் போராட்ட அலைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தமிழ்நாட்டுத் திருமாவளவன் தொடங்கி உத்திரப் பிரதேச மாயாவதி வரை அனைவரும் ஒன்று திரண்டிருக்க வேண்டும். அப்படி ஒற்றுமைப்பட்டிருந்தால் இந்துத்துவாவினருக்கு அது பெரிய எச்சரிக்கையாய் அமைந்திருக்கும். இவர்களுக்கோ அவரவர் தேர்தல் கணக்குகள்தாம் முதன்மையானவை. திருமாவளவனுக்கு இந்துத்துவாவினருடன் சோரம் போன பஸ்வான்தான் உற்ற தோழர்.
அறிவுலகம் மீதான வன்முறைகள்
இவ்விடத்தில் அறிவுலகத்தின் மீதும் இந்துத்துவா ஆற்றல்கள் தொடுத்த வன்முறைத் தாக்குதல்களையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று கொலைகள்; மூன்றுமே தெளிவான திட்டமிடலுடன் ஒரே பாணியில் நிறைவேற்றப்பட்ட கொலைகள். இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இளைஞர்களால் இம்மூவருமே ஒன்று கண்டாற்போல் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுளனர். ஆண்டுகள் கடந்த பின்னரும் இம்மூன்று வழக்குகளிலுமே இதுவரை இன்னும் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. ‘இந்து தர்மத்தை’ இழிவு படுத்துகின்றவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்தானே?
முதல்கொலை 2013 ஆகசுட்டில் நடைபெறுகிறது. அது மருத்துவர் நரேந்திர தபோல்கர் கொலை; மராட்டிய மாநிலத்தில் மருத்துவப் பணியோடு மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர். மராத்தா மாநிலப் பல்கலைக் கழகத்திற்கு ‘பாபா சாகிப் அம்பேத்கர் பல்கலைக் கழகம்’ என்னும் பெயர் சூட்ட வேண்டும் என்று போராடியவர். போதாதா கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் ? கொலையாளிகள் யாராக இருக்கக் கூடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அது காங்கிரசு ஆட்சிக்கால இறுதிப் பகுதியில் நடந்தது.
இரண்டாவது கொலையும் அதே மராட்டிர மாநிலத்தில்தான் நடந்தது. பழியானவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் கோவிந்து பன்சாரே ஆவார். அரசியல், தொழிற்சங்கப் பணிகளோடு சாதி ஒழிப்புப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டவர். ‘சாதிமறுப்பு, மதமறுப்பு ஆதரவுத் திருமண மய்யம்’ எனும் அமைப்பை உருவாக்கிப் பல சாதி, மத மறுப்புத் திருமணங்களை நடத்தியவர். எல்லாவற்றிற்கும் மேலாய் இந்துத்துவா வெறியர்களின் பொய்க்கதையாடல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியவர். ‘சிவாஜி யார்?’ என்னும் அவரது நூல் இரண்டு இலக்கப் படிகள் விற்று சங் பரிவாரங்களை அஞ்ச வைத்தது. இதற்கு மேலும் அவரை விட்டு வைத்தால் தங்களுக்கு ஆபத்து எனக் கருதிய காந்தியைக் கொன்ற கூட்டம் அவரைத் தீர்த்துக் கட்டியது.
மூன்றாவது கொலை கர்நாடக மாநிலத்தில் நடந்தது. கொல்லப்பட்டவர் கன்னடத்தின் ஆகப்பெரும் அறிவு ஆளுமைகளில் ஒருவரான பேராசிரியர் எம்.எம். கல்புர்கி. கன்னடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். தம் ஆய்வுக்காகச் சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இந்து மதத்தின் சடங்கு வழிபாடல்களையும் மூடநம்பிக்கைகளையும் சாதி ஏற்புகளையும் கடுமையாகச் சாடியவர். தோழர் பன்சாரேவுடனும் “மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன்,” என்று முழங்கிய எழுத்தாளர் யூ.ஆர். அனந்தமூர்த்தியுடனும் நெருக்கமான நட்பைப் பேணியவர். விட்டு வைக்குமா இந்து மதவெறிக் கூட்டம்? மருத்துவரையும் தோழரையும் கொன்ற அதே பாணியில் தீர்த்துக் கட்டியது.
ஒருபுறம் ஆட்சியில் இருப்போரின் நல்லாசியுடன் இந்துத்துவா அமைப்புகள் வன்முறை வெறிச்செயல்களை நிகழ்த்திக் கொண்டிருக்க இன்னொருபுறம் அறிவுலகின் மீதான அரசுப் பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அரசைக் குற்றத் திறனாய்வு செய்வோர் மீது தேசத்துரோக முத்திரை மிக எளிதாகக் குத்தப்படுகிறது. இல்லையெனில் நக்சைலட் தொடர்பு என்ற புனைவு சுமத்தப்படுகிறது. எழுந்து நடமாடவே முடியாதவர்; சக்கர நாற்காலியால் மட்டுமே இயங்குகின்றவர்: 90% மாற்றுத் திறனாளி; அப்படியான பேராசிரியர் சாய்பாபவை உச்சநீதி மன்றம் வன்மையாகக் கண்டித்தும் கூட மீண்டும் மீண்டும் கைது செய்தது மராத்திய பாசக அரசு. 2014ஆம் ஆண்டு ஒரு முறையும் 2016இல் ஒரு முறையும் கைது செய்தது. பிணை தர மறுத்து மாதக் கணக்கில் தனிக் கொட்டடியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது. அவர் செய்த பாவமெல்லாம் நக்சலைட் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்களைச் சிறப்பு அதிரடிப் படையினர் சித்திரவதை செய்ததைக் கண்டித்துதான்.
பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானியை நாம் மறந்தாலும் ஆளும் பாசக அரசு மறப்பதில்லை. அப்சல் குரு வழக்கில் நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்ட நேரு பல்கலக் கழகப் பேராசிரியர். அப்சல் குருவோடு சேர்ந்து அவர் குரலவளையையும் அப்பொழுதே நெருக்கியிருக்க வேண்டும். நீதிமன்றம் காப்பாற்றி விட்டது. அதனால் என்ன? குரல்வளையை நெரிக்க முடியாவிட்டாலும் குரல் கொடுப்பதைத் தடுக்க அரசின் கையில் தேசத்துரோகக் குற்றச்சாட்டுச் சட்டம் இருக்கிறதே! நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கன்னையா குமாரை அடுத்து இவரும் கைது செய்யப்பட்டார். கிலானி தொடர்ந்து காசுமீர மக்களுக்குக் குரல் கொடுப்பதைப் பாசக அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அறிவுலகம் தன் மீதான தாக்குதலை எதிர்கொள்ளும் முறை தாக்குதலை விடக் கவலை அளிப்பதாக உள்ளது. கல்புர்கி கொலையை அடுத்து சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தாங்கள் பெற்ற பரிசை அகாடெமிக்கே திருப்பி அளித்து தங்கள் எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்தனர். அதையொட்டி அனைத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஒன்றாகத் திரண்டு எழுந்திருந்தால் அஃதொரு வலுவான எதிர்ப்பாக அமைந்திருக்கும். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து போராட்டத்தை வலுவிழக்கச் செய்தது. இந்துத்துவா இங்குதான் உரம் பெறுகிறது.
வலுப் பெற்று வரும் வலதுசாரிப் போக்கு
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள நிகழ்வுகள் வெறும் நினைவுபடுத்தலுக்காய்ச் சுட்டிக் காட்டப்படவில்லை. அந்நிகழ்வுகள் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்தப்படவில்லையே என்ற வருத்தத்தோடும் அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டுக் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும்தான் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சங்பரிவாரக் கும்பல் தன் செல்வாக்கைப் பரப்பவும் நிலைநாட்டிக் கொள்ளவும் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றி வருகின்றது. அண்மையில் கோவையில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்த ஒருவன் தனிப்பட்ட காரணங்களுக்காய்க் கொலை செய்யப்பட்டதை வாய்ப்பாக்கி இந்துத்துவா அமைப்புகள் ஆடிய வன்முறை ஆட்டத்தை மறக்க முடியுமா? இந்துத்துவாவின் போக்குச் சரியாக மதிப்பிடப்பட்டு முறியடிக்கப்படாவிட்டால் அது முழுப் பாசிசமாய் வடிவெடுப்பது விரைந்து நிறைவேறும்.
இந்துத்துவாவின் சட்டப்பைக்குள் பொதுச் சிவில் சட்டம் போன்ற பல சட்டங்கள் அடுத்தடுத்து வெளிவரக் காத்திருக்கின்றன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையையும் அதன் மற்ற நடவடிக்கைகளோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டும். உலகக் கார்ப்பரேட்டுகளுக்குத் துணைபுரிவதின் மூலம் அது உலகப் பிற்போக்கு வலதுசாரி முதலாளித்துவத்தோடு தன்னை வலுவாகப் பிணைத்துக் கொள்கிறது. அமெரிக்காவின் டிரம்பும் இந்தியாவின் மோடியும் ஒரே நேர்கோட்டில் இணைந்து கொள்கிறார்கள். உலகெங்கும் வலதுசாரி அரசுகளே வலுப்பெற்று வருகின்றன. முற்போக்காளர்கள் கவலையோடு நோக்க வேண்டிய நிகழ்வுகள்.
திசையறியா இந்திய முற்போக்காளர்கள்
அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் அங்கு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. இந்தியாவிலோ மோடிக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுக்குறைந்து வருகின்றன. பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராய் வலுவான போராட்டங்கள் எங்குமே இடம் பெறவில்லையே! அதனால்தானே மக்கள் தம்மை ஆதரிப்பதாக மோடி எந்தத் தயக்கமும் இன்றி அறிவிக்கிறார். இவ்வகையில் இந்தியா இடதுசாரிகள் மக்களுக்குப் பெரும் இரண்டகம் செய்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இடதுசாரிகள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள இப்பொழுதைப் போல் எப்பொழுது வாய்ப்புக் கிட்டும்?
இந்தியா முழுவதும் பல்வேறு வகையான தொழிற்சங்களைக் கட்சி அமைப்பின் கீழ் கொண்டிருக்கும் இவர்கள் நினைத்திருந்தால் மோடியை நிலைகுலையச் செய்திருக்க முடியும். கீற்று நந்தன் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருப்பது போல், வங்கி ஊழியர் சங்கம் மட்டுமே போராட்டத்தில் குதித்திருந்தால் போதும், மோடி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பின்வாங்கி இருப்பார். வங்கி ஊழியர்கள் மாநாட்டில் உருப்படியாய் ஏதாவது அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்ததும் ஏமாற்றமாய்ப் போய்விட்டது.
எதிர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலாவது மோடிக்குப் பாடம் கிடைக்குமா என்றால் அதற்கான வாய்ப்புகளையே காணோம். உத்திரப்பிரதேசத்தில் அப்பாவும் மகனும் அடித்துக் கொள்கிறார்கள். மாயாவதியின் தலித் முசுலீம் கூட்டுத் தந்திரம் பலிக்குமா என்று தெரியவில்லை. உபியில் மோடி முழங்குவது போல் மீண்டும் பாசகவே வெற்றி பெற்று விட்டால் இந்துத்துவா பன்மடங்கு வெறியோடு முன் பாயும்.
தமிழ்நாட்டரசியலோ சசிகலா அரசியலாகவும் ஜல்லிக்கட்டு அரசியலாகவும் சுருங்கிவிட்டது. பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்புகள் பற்றியோ வறட்சியில் உழவர்கள் தற்கொலை செய்து கொள்வது பற்றியோ எந்தக் கட்சியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. போராட்டத் திசையே தடம் மாறிப் புரண்டுள்ளது. இடதுசாரிகளும் தலித் தலைவர்களும் ஜல்லிக்கட்டிற்கு வரிந்து கட்டுவது ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே’ என்ற பாடலைத்தான் நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டிலும் சரி ஒட்டுமொத்த இந்தியாவிலும் சரி மோடி அரசியலை எதிர்கொள்ளத் தெரியாத் திணறும் நிலையே நிலவுகிறது.
இளைஞர்கள்தாம் இதை மாற்றி அமைக்க வேண்டும்; இருண்ட சூழலில் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். முற்றி மோதும் முரண்பாடுகள் புதிய பாதையைத் திறக்கும்.
- வேலிறையன்