என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் வரலாறு திரித்து எழுதப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. அண்மையில் கிடைத்த செய்தியின்படி பதினோராம் வகுப்பு அரசியல் பாடத்திட்டத்தில் இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய உங்கள் கருத்து.

ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக தலைமையிலான ஆட்சி ஒரு சித்தாந்தத்திற்காகச் செயல்படுகிறது. காந்தி தேசத்தைக் கோட்சே தேசமாக ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் அதனுடைய சுருக்கமான வடிவம். இவர்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதினால் அதில் காந்தியின் பெயரே இருக்காது. இதைத்தான் அண்மையில் சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். காந்தியாரின் பெயரே இல்லாமல் காந்தியாரின் படமே இல்லாமல் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆளுநர் மாளிகையில் திரையிடுகிறார்கள். இது உலகிற்கே தெரியும். அவர்கள் ஏன் இதை நீக்குகிறார்கள்.

haja kani 295இந்த நாட்டிற்குப் பெருமை என்று அவர்கள் சொல்வது, இது ரிஷிகள் உருவாக்கிய தேசம், வேத காலத்தில் இந்த தேசம் இப்படி இருந்தது என்பது. இந்த நாட்டினுடைய உண்மையான வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது, இவர்களுடைய இந்தக் கற்பிதங்களைத்தான் அறிந்து கொள்ள வேண்டும், அதை உண்மை என்று நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்சிஇஆர்டி என்பது கல்வியை வடிவமைக்கிற தனித்துவமான அமைப்பு. தனித்துவமுடைய ஜனநாயக அமைப்புகள் அனைத்துமே இவர்கள் ஆட்சியில் சீர்குலைக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டு இவர்களுடைய கிளைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றன. நீதித் துறையாக இருந்தாலும் சரி, தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி எல்லாவற்றின் மூலமும் இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படும் அளவிற்கு சம்பவங்கள் நடக்கின்றன.

புல் புல் பறவையில் ஏறி சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து இந்தியாவிற்கு வந்து போனார் என்று பள்ளிப்பாடத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். புல் புல் பறவையில் ஒரு மனிதர் பயணிக்க முடியுமா? அதுவும் சிறையில் இருக்கும் ஒரு மனிதர் புல்புல் பறவையில் ஏறி டெல்லிக்கு வந்தார் என்பதை வரலாறாகச் சொல்லிக் கொடுப்பவர்கள் காந்தியாரின் போராட்டத்தைக் கசப்பாகத்தான் பார்ப்பார்கள். சுதந்திர இந்தியாவின் கல்விக் கட்டமைப்பை உருவாக்கிய அபுல் கலாம் ஆசாத் அவர்களுடைய பெயர் அவர்களுக்கு ஆகவே ஆகாது. UGC, IIT, IIM, சாகித்ய அகாடமி போன்ற கட்டமைப்புகளை உருவாக்கியவர் அபுல் கலாம் ஆசாத். நவீன இந்தியாவின் கல்விச் சிற்பி என்று அபுல் கலாம் ஆசாத் அவர்களைத்தான் கொண்டாடுவார்கள். அவருடைய பிறந்த நாளை இந்திய அரசு தேசியக் கல்வி நாளாகக் கொண்டாடுகிறது. அவருடைய பெயரையே இவர்கள் நீக்குகிறார்கள் என்றால் இவர்கள் வேறு எதை நீக்க மாட்டார்கள். இவர்கள் நீக்க வந்தவர்கள், நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள்.

ஆகவே பாடப்புத்தகம் என்பது வருங்காலத் தலைமுறையினரின் மேன்மைக்கும், உயர்வுக்கும், நல்லிணக்கத்திற்கும், சமாதான சமத்துவமான வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வடிவமைக்கக் கூடிய பாடங்கள் எல்லாம் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களை, தலித்துகளை, கிறித்தவர்களை இந்த நாட்டின் எதிரிகள் என்று படிக்கின்ற மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது அவ்வாறு நம்ப வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப் படுகின்றன. இது ஹிட்லரின் பாணி. ஹிட்லர், ஜெர்மானிய இனம் மட்டும்தான் மேன்மையானது, அதற்கு மட்டும்தான் ஆளும் தகுதி உண்டு என்பதை எது பேசுகிறதோ அதுதான் சரியான கல்வி முறை என்று சொன்னார். அதைத்தான் இவர்கள் செய்து வருகிறார்கள். வெறுப்பு அரசியலின் வித்தைகளைக் கல்வியின் மூலமாக மாணவர்கள் மனங்களில் விதைக்க நினைக்கிறார்கள். அதனுடைய விளைச்சலாகத்தான் இந்தப் பாடங்களை நாம் பார்க்க முடியும்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையையும் சில நாள்களுக்கு முன்னர் ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது. அதைப் பற்றிய உங்களுடைய கருத்து.

மாணவர்களுக்குத் தரக்கூடிய பிரீ மெட்ரிக் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை நிறுத்தினார்கள். அதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சரியான பதிலடி கொடுத்தார். நாங்கள் எல்லாம் கோரிக்கை வைத்தோம். இது ஏழைகளுடைய கல்வியை இருளாக்கக் கூடிய செயல். தமிழ்நாட்டில் பயன்பெறக்கூடிய மாணவர்கள் ஏராளமானோர் இருந்தார்கள். அதேபோல் இந்தியா முழுவதுமே பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தக் கூடியவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள்தான் முதல் இடத்தில் இருந்தார்கள். இது நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களுடைய உயர்நிலைக் குழுவும் ரங்கநாத் மிஸ்ரா அவர்களுடைய ஆணையமும் தங்களுடைய ஆய்வு முடிவுகளில் தந்த பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தக் கூடியவர்களாக முஸ்லிம்கள் இருந்ததால் அவர்களுக்கு இந்த உதவித் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். இவர்கள் அதானி அம்பானிகளுக்கு இந்த நாட்டை அர்ப்பணிப்பதற்காக வந்தவர்கள். ஏழை எளியவர்களின் கல்வியைப் பற்றிச் சிறிதும் கவலையற்றவர்கள். அதனால் மிகுந்த கல் நெஞ்சத்தோடு அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் திட்டத்தை ரத்து செய்தார்கள். ஆனால் நீங்கள் நிறுத்தினாலும் நாங்கள் கொடுப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதை நாம் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும்.

- பேராசிரியர் ஹாஜாகனி

நேர்கண்டவர்: மா.உதயகுமார்

Pin It