poondi refugee camp 1

வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை.

புயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் அளவை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளன. அப்படி ஒரு நாளில் நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது வர்தா புயல்.

அரசு வேரோடு சரிந்த மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தை தர முயற்சிக்கிறது. நமக்கு இப்படி எல்லாமும் முழுமையாக இல்லாவிட்டாலும் நடந்து கொண்டுள்ளன.

ஆனால் ஈழத் தமிழர் முகாம்களின் நிலை முற்றிலும் வேறாக உள்ளது. புயல் வந்து போய் ஒரு வாரமாகியும் இப்போது வரை கும்முடிப்பூண்டி ஈழத் தமிழர் முகாமில் எந்தப் பணியையும் இதுவரைக்கும் அரசு நிர்வாகம் தொடங்கவேயில்லை.

poondi refugee camp 2

கூரைகளாலும் சிமிண்ட் ஓடுகளாலும் வானம் மறைத்த வீடுகள், இன்னும் சரியாகச் சொன்னால் கூடுகள்தான் அவை. அனைத்தும் பெயர்ந்து நாசமாகிவிட்டன. பெரும்மரங்கள் வீடுகள் மேல் விழுந்து கிடப்பவை அப்படியே கிடக்கின்றன. அவர்களாகவே எவ்வித உபகரணங்களுமின்றி தங்களால் இயன்ற அளவில் அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். இத்தனை மனித வளம், கருவிகள் இருந்தும் நாம் மீளவில்லை எனும்போது அவர்கள் நிலையை விளக்க வேண்டியதில்லை.

இப்போதுவரை பெயருக்கும் மின்சாரம் இல்லை. அதனால் குடிக்கவும் தண்ணீர் இல்லை. இரவு முழுதும் வனவாழ்வு போல் இருண்ட வாழ்வு. புயல் பாதிப்பால் எங்கும் வேலையில்லை. குடும்பத்தைத் தெருவில் விட்டு வேலை தேடிப் போகவும் வழியில்லை. அதனால் அரிசி பருப்புக்கும் வழியின்றி பசியில் கிடக்கின்றனர் நம் தொப்புள் கொடி உறவுகள். இத்தனையையும் அரசும் அந்த மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனையளிக்கிறது. உணவு உறைவிடம் தண்ணீர் எதையும் பெற இயலாமல் யாரையும் அணுகிப் பயனில்லாமல் அம்மக்கள் தவிக்கிறார்கள்.

இதை அரசே மீட்டுக் கொடுக்க நாம் ஒன்றுபட வேண்டியுள்ளது. அதைச் செய்கிற போதே இப்போதைக்கு அம்மக்களுக்கு அரிசி பருப்புத் தேவைகளை நாம் முடிந்தளவு திரட்டி அவர்கள் அதுவரை பசியில்லாது காக்க வேண்டும் எனக் கருதுகிறோம்.

தமிழர்களே நம் சொந்தங்களின் பசியாற்ற அரிசி பருப்பு திரட்டிக் கொடுங்கள். நாம் சேர்ந்து போய் அவர்களிடம் ஒப்படைப்போம். அரிசி மட்டுமல்ல மளிகைப் பொருட்கள் எதுவானாலும், கொசுவிரட்டி, மெழுகுவர்த்தி என இயன்றதைச் செய்யலாம். எதுவானாலும் அங்கே ஆயிரம் குடும்பங்கள் உள்ளன என்பதை நினைவில் கொண்டு செய்ய வேண்டும். அதனால்தான் அரிசி பருப்பை மட்டும் குறிப்பிட்டுக் கேட்கிறோம்.

எங்களோடு தொடர்பு கொண்டு ஒப்படையுங்கள். இரண்டொரு நாளுக்குள் திரண்டால் நல்லது. கொடுக்கச் செல்லும் போது நீங்களும் வாருங்கள். தனிப்பட்ட முறையில் நேராகப் போய்ச் செய்பவர்களும் செய்யுங்கள். ஆனால் அவர்களைக் காப்பதே முக்கியம்.

poondi refugee camp 3

எங்களோடு தொடர்பு கொண்டு அரிசி, பருப்பு இயன்றளவு தந்துதவுமாறு உரிமையுடன் வேண்டுகிறேன்.

கூட்டமைப்பில் அங்கம் வகித்துள்ள அமைப்புகள் இந்தப் பணியில் இணைந்து கொள்ளுமாறும் தனிப்பட்ட முறையில் திரட்டத் தொடங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
கொளத்தூர் தா.செ.மணி
தலைவர்,
தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு


தொடர்புக்கு:

கரு. அண்ணாமலை
எண், 5 கே கே சாலை
எம் ஜி ஆர் நகர்
சென்னை 600078
9444011124, 9444311124


வங்கிக் கணக்கு விவரம்:
karu Annnamalai
bank of India
k k Nagar
AC No 801310100008013 IFCO 8013